புயலுக்குப் பின்பு

நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையே முடங்கிப் போனது. நேற்று முழுவதும் மின்சாரத் தடை காரணமாக வீடு இயங்கவில்லை. எனது வீதியே முழு இருளில் மூழ்கிப் போனது.

மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்கள். இடைவிடாத கன மழை. மழையுடன் பலத்த காற்றும் சேர்ந்து கொண்டது. செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் எங்கே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் மேலோங்கியிருந்தது.

அடையாறு,வேளச்சேரி, கோட்டூர்புரம் பகுதியில் வாழும் நண்பர்கள் தங்கள் பகுதியினை வெள்ளம் சூழ்ந்து வருவதைப் பதற்றமாகத் தெரிவித்தார்கள்.

கனமழையில் மின்சார வெளிச்சம் ஒரு பாதுகாப்பு உணர்வை தருகிறது. அதையும் துண்டித்துவிட்டார்களே என்று ஒரு நண்பர் தொலைபேசியில் கவலைப்பட்டார்.

மின்சாரம் துண்டிக்கப்படாவிட்டால் பல இடங்களில் மரம் விழுந்துள்ளதால் உயிர்ச்சேதம் விளையக்கூடும். எனது வீதியிலே மூன்று மரங்கள் விழுந்துவிட்டன. மழைக்குள்ளாகவும் மாநகராட்சி ஊழியர்கள் விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினார்கள். பாராட்டிற்குரிய பணியது.

மழையின் சப்தத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தால் அடிமனதில் கலக்கமே உருவாகிறது. மழை கடந்து போன துயரநினைவுகளை எளிதாகக் கிளறிவிடுகிறது. உலகின் மிகவும் வலிமையான ஆயுதம் தண்ணீர் என்பது உண்மையே.

பகலிலும் வீடு இருட்டாகவே இருந்தது. இரண்டு நாட்களாக புயல் கரையை நோக்கி வருவதை நிமிஷத்துக்கு நிமிஷம் தொலைக்காட்சியில் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தச் செய்திகள் சென்னையில் வசிப்பவர்களை விடவும் ஊரில் இருக்கும் பெற்றோர், உறவினர்களுக்கு அதிக அச்சத்தைக் கொடுத்தது. பிள்ளைகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தொடர்பு கிடைக்காமல் பெற்றோர்கள் ஆழ்ந்த கவலையடைந்தார்கள்.

பின்னிரவில் புயல் புதுவையை ஒட்டிக் கரையைக் கடந்தது என்ற குறுஞ்செய்தியைக் கண்டபிறகு தான் ஆசுவாசம் ஏற்பட்டது. ஆனாலும் காலையிலிருந்து காற்றின் வேகம் குறையவில்லை. நகரின் பல இடங்களிலும் நிறைய வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து நிரம்பியிருக்கிறது. மீட்புப் பணியைத் துவக்கியிருக்கிறார்கள்.  முகாம்களில் தங்க வைக்கபட்டவர்களுக்கு உதவிப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

எங்கள் பதிப்பகத்தின் புத்தகக் குடோனைக் காப்பாற்றுவது பெரிய வேலை.  முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து செய்தோம். அப்படியும் அலுவலகத்தின் ஜன்னல் ஓரமாகத் தண்ணீர் புகுந்து புத்தகக் கட்டுகள் நனைந்துவிட்டன. இரவோடு இரவாகத் தண்ணீர் புகுவதைச் சரிசெய்து புத்தகங்களை மீட்கவேண்டியதாகியது.

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் எனது வீட்டின் முன்பான எண்பதடி சாலையில் மாருதி கார் ஒன்று வெள்ளத்தில் மிதந்து போனதைக் கண்டேன். இடுப்பு அளவு வெள்ளம். மின்சாரமில்லை. குடிநீர் இல்லை. தேவையான உணவுப் பொருட்கள்  கிடையாது. வீட்டுச்சுவர்களில் தண்ணீர் சொட்டத் துவங்கியது. உறக்கமில்லாத இரவுகள். பல இடங்களில் வெள்ளத்திற்குள் மாட்டிக் கொண்டவர்களை மீட்க மிதவைபடகுகள் போய் வரத் துவங்கின. சென்னையை உலுக்கிய  அந்த வெள்ள நாட்களை மறக்கவே முடியாது.

இந்தப் புயல் மழை மனதில் மீண்டும் அந்த அச்சவுணர்வை ஏற்படுத்தியே கடந்திருக்கிறது.

•••

0Shares
0