புறக்கணிப்பின் வலிகளும் உதிரும் ஞாபகங்களும்

மணிமாறன்

•••

எனது புதிய நாவல் நிமித்தம் குறித்து தமுஎகச அமைப்பை சார்ந்த இலக்கிய விமர்சகரான விருதுநகர் மணிமாறன் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையிது.

•••

திருமணம், குழந்தைபேறு, சொந்தவீடு இவையே எளிய மனிதர்களின் உயர்ந்த லட்சியமாக இன்றுவரையிலும் பார்க்கப்படுகிறது. இவற்றை அடைவதற்கான வழியொன்றும் எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடுவதில்லை. முயற்சிகள், தோல்விகள், பரிகசிப்புகள் எனத் தினமும் கடந்து வர வேண்டியிருக்கிறது. அதிலும், உரிய காலத்தில் நிகழாத நாற்பது வயதைக் கடந்த பிறகும் கூடத் திருமணம் கைகூடாமல் இருப்பதற்கு எத்தனையோ கல்யாணத்திற்குப் பிறகான நாட்களின் துயரங்கள் சொல்லிப் அடங்காதவை. காரணங்கள் இருக்கலாம். பதின்பருவம் துவங்கி நாற்பதை எட்டுவதற்குள் மனித உடல் அடையும் அவஸ்தையை இன்றும் கூடப் பேசத் தயங்குகின்றன நம்முடைய இலக்கியப் பிரதிகள். தனக்கு நடக்க இருக்கிற திருமணத்தைக் கடைசி நேரத்திலாவது எவரேனும் தலையிட்டு தடுத்து விட மாட்டார்களா? என்கிற துக்கத்தில் ஆழ்கிற மனிதனின் வலியை அனுபவித்துக் கொண்டிருப்பவளே உணர முடியும். அப்படியான மனிதனின் கதையே ”நிமித்தம்” .கதையே எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்திய நாவலான நிமித்தத்திற்குள் தன் உலகினால் புறந்தள்ளப்பட்ட மனிதனின் தீராத வேதனைகள் காட்சிகளாக, வார்த்தைகளாக, அதீத சொற்களாக வாசகனுக்குள் சேகரமாகிறது. நிமித்தத்தின் தேவராஜ் தமிழ்ப்புனைவுலகின் தனித்தவன்.

தேவராஜ் செவிப்புலன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி. இந்தச் சிக்கலால் அவன் அடையும் துயரங்கள், நிராகரிப்புகள் கணக்கிட முடியாதவை. காது கேட்கவில்லை என்பது எளிய இரண்டு சொற்களின் கலவை தான். ஆனால் அதைச் சுமந்து கொண்டு வாழ்கிற போது மட்டும் தான் அதன் வலியும் வேதனைகளும் புரியும். மற்றவர்கள் பச்சாதப்பட்டுக் கடந்து விடுகிறார்கள் அல்லது அவனறியவே கேலி பேசுகிறார்கள். சம்பந்தப்பட்டவன் மட்டும் தனித்துத் துயரக் கடலுக்குள் ஒரு தக்கையைப் போல மிதந்தலைகிறான். கனவுகளுக்குள்ளும், பழைய நினைவுகளுக்குள்ளும் ஊடாடித் திரிகிறான். அவனுடைய ஞாபக மரத்தில் இருந்து இலை இலையாக உதிர்கிறது நினைவுகளும் அவன் அடைந்த வலிகளும். அதற்குள் காதல், நட்பு, புறக்கணிப்பு, வஞ்சகம், சூழ்ச்சி என மனிதர்களின் சகல குணங்களும் வெளிப்படுகின்றன.

தேவராஜின் பால்யம் எல்லோருக்கும் அமைவதைப் போல அமைந்திட தானே. வாய்ப்பில்லை. இந்த உலகம் எப்போதும் குழந்தைகளுக்கானதாக இருப்பதில்லை. பெற்றோர்களுக்கான வயதானவர்களே எஜமானர்கள். இருபது வயதை எட்டுகிற தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து அவர்கள் பதட்டமடைகிறார்கள். அதிலும் ஆண்பிள்ளைகள் என்றால் அந்தப் பதட்டம் கூடிவிடுகிறது. அவன் வேலை, பணம், சொத்து, சுகம் என்கிற புதிய பிரதேசத்திற்குள் நுழைந்தே தீர வேண்டும் எனப் பெற்றோர்களும், ஓடித் தோற்று விட்டால் இருக்கிற இந்த வீடும் போய்விடுமே என்கிற துக்கத்தில் இளைஞர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். பணம் வாழ்க்கையைச் சூதாடிப் பார்த்திடுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. பணமும், அதிகாரமும் நிறைந்திருப்பவர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது. உலகம், உறவுகளையும் கூடப் பணமே தீர்மானிக்கிறது. இதில் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என எவ்வுறவிலும் வித்தியாசமில்லை. தேவராஜின் உறவுகளும் விதிவிலக்கில்லை. அவனுக்கு உற்ற நண்பனாக வாய்த்திட்ட ராமசுப்புவைத் தவிர. யாவருக்கும் நண்பர்களே துக்கத்தைச் சுமக்கிறவர்களாக வழி காட்டுகிறவர்களாக இருக்கிறார்கள்.

நிமித்தத்தின் நில உலகம் வசீகரமானது. இதுவரையிலும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் புள்ளி புள்ளியாக இட்டுச் சென்ற நிலமான விருதுநகர் என்னும் தூசிப்பட்டிணம் இந்த நாவலுக்குள் பிரம்மாண்டமான ரூபம் கொள்கிறது. ஒருவகையில் நிமித்தம் தேவராஜீக்குச் சமமாக அவன் உலவித்தரிந்த வெயில் நிலத்தின் கூறுகளையும் காட்சிப்படுத்துகிறது. தேவராஜின் பார்வையில் எஸ்.ராமகிருஷ்ணனின் மொழியில் தெப்பக்குளமும் அதன் வசீகரமும் நாவலை துவக்கி நடத்துகிறது. விருதுநகரே வெயில் உகந்தாள் பட்டிணம் தாள். வெக்கை மனிதர்கள் மகிழ்ந்து உலவும் நாள் திருக்கார்த்திகை. அன்றைய நாளின் தெப்பக்குளம் தண்ணீர் ததும்பிக் கிடக்கும். அதிகாலை நான்கு மணிக்கே லாரி டியூப்புகளை மிதவைகளாக்கி வயது வித்தியாசமின்றிக் குளத்திற்குள் விழுந்து கிடக்கும் காட்சி வேறு எங்கும் காணச் சாத்தியமற்றது. தேவராஜ் நாவலுக்குள் பலமுறை தெப்பக்குளத்தை அணுகுகிறான். தற்கொலைக்கு முயல்வதற்கு முன் மீன்களுக்கு வைக்கப்படுகிற பூந்திகள் எறும்புகளால் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இன்றுவரை அக்குளத்தின் படிக்கட்டுகளில். தெப்பக்குளம் நிறைந்தால் ஏதாவது ஒரு உயிரை காவுவாங்கிவிடும் என்கிற ஜதீகத்தை யாராவது ஒருவர் இன்றுவரை நிருபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். நம்முடைய தேவராஜிக்கு மரணம் குறித்த அச்சமே வாழ்வெனும் நித்தியத்திற்குள் அவன் துள்ளி விழுந்திட காரணமாகிக் கொண்டேயிருக்கிறது.

எல்லாப் பொருட்களின் மீதும், மனிதர்களின் மீதும் ஞாபகங்களின் ரேகை அழுந்தப் பதிந்திருக்கிறது. அவற்றைத் துடைக்க, துடைக்க அவை புதிய, புதிய காட்சிகளாக வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. தன்னுடைய சொந்த ஊரில் வாழ்ந்து செழித்த பெரும்விவசாயியான பெருமாள் நாயக்கரை பசித்து மனப் பிறழ்வு தோற்றத்தில் பார்த்திட்ட தேவராஜின் நிலை வாழ்க்கையில் எல்லோருக்கும் தான் ஏற்படுகிறது. வெள்ளை அரிசிச் சோறை மட்டும் கவளம், கவனமாக அள்ளி உருட்டி தின்கிற பெருமாள் நாயக்கர் விவசாயம் பொய்த்துப் போன கரிசல்காட்டு விவசாயின் குறியீடு. ஒரு காலத்தில் பஞ்சம் பிழைக்கத் தெலுங்குச் சீமையிலிருந்து வந்திறங்கி கரிசல்காட்டைச் சீர்படுத்திப் பருத்தி விளையும் பூமியாக்கிய விவசாயிகள் கூட்டத்தின் துயரக்காட்சிகளை நம்மை நிலைகுலையச் செய்கின்றன.

புறக்கணிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்திடும் ஒற்றைச் சொல்லை எல்லோரும் பிரோகியப்பதில்லை. அவர்கள் எப்போதாவது தான் வெளிப்படுவார்கள். அப்படியான மனிதர்தான் காந்தியின் சீடராகத் தன்னைப் பாவித்துக் கொள்ளும் ராஜாமணி. அவர் காந்தி விலாஸ் எனும் ஹோட்டலை நடத்துகிறவர். நிமித்தம் நாவலுக்குள் வருகிற ராஜாமணியின் இறுதி ஊர்வலத்தில் ஏன் இவ்வளவு கூட்டம். எங்கிருந்து சாரை சாரையாகக் குறவர்கள் குட்டி குருமானோடு கலந்து கொண்டார்கள். எதற்காக? பசியறிந்து அவர்களுக்குச் சோறிட்டவர். ”உன் பொண்டாட்டி, உங்க அம்மா மட்டும் தான் உன் சாப்பிட்டுல அக்கறை காட்டனும் இல்லே. இந்த ராஜாமணியும் போடுற சாப்பாட்டை அக்கறையாத் தான் போடுவான் என்று கூறுகிறார். ராஜாமணி ஹேட்டலையும் காந்தியின் பக்தராகக் கடைசிவரை கதர்குல்லாவைக் கழட்டாத ராஜாமணியையும் அறியாத விருதுநகர்க்காரர்கள் ஒருவர் கூட இருக்கமுடியாது. குறவர்களும், லோடுமேன்களும், ரிகஷாக்காரர்களும் விரும்பிச் சாப்பிடுகிற கடையாக விருதுநகர் தையல் மார்க்கெட்டிற்குள் ஒடுங்கியிருந்த அந்த ஹேட்டலின் கடையின் ருசி இன்றும் வரையிலும் அந்த நகரின் நாவில் ஒட்டியிருக்கிறது.

அனபும், பரிவும் வெளிப்படும் நொடிகள் பெரும் ஆச்சர்யம் தருபவை. பரிவாக உனக்கு எப்படியப்பா காது கேட்காமல் போனது எனப் பிரியமாகத் தேவராஜிடம் கேட்டவர் ராஜாமணி. தேவராஜ் என முழுப்பெயரை தேவு எனச் சுருக்கி உச்சரித்தாலே போதுமானது தான். அப்படி ”தேவு” என்றழைத்து அவருடன் பிரியமாகயவர் சுதர்சனம். அவருடைய மனைவியும் அவரைப் போலவே அன்பின் உச்சமாக இருக்கிறாரே எப்படி என்கிற ஆச்சர்யம் தேவராஜைப் போலவே வாசகருக்கும் தான் ஏற்படுகிறது. அவர் கோடுகளையும் அதன் மகத்துவத்தையும் உணர்ந்தவர். கோடுகள் வசீகரமானவை மட்டுமல்ல. அன்பானவையும் தான். எனவே தான் ஓவியர் சுதர்சனம் தேவராஜை தன்னுடன் சைக்கிளில் சுமந்தலைகிறார். கோடுகளின் சூட்சுமத்தை அவனுக்குக் கற்றுத்தர முனைகிறார். அவருடைய மனைவியும் தேவராஜை ஓவியக்காரனாக்கிடலாமா என்று முயற்சிக்கிறார்கள்.

வாழ்நாள் எல்லாம் சுடுசொற்களை மட்டுமே பிரயோகிக்கும் அப்பாவை ஒவ்வொரு நொடியிலும் ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கிறது சூழல். ”இத்தனை கழுத வயசாச்சு, சம்பாதிக்கத் துப்பில்ல, தெண்டச்சோறு தின்னுப்புட்டு மாடு மாதிரி உலாத்துது, செவிட்டு முண்டத்திற்குச் சினிமா ஒரு கேடா? எனும் சொற்கள் துரத்திட அவன் அடைக்கலமான கூடுதான் ஓவியர் சுதர்சனம் சாரின் வீடு. அவர் தான் அவனைத் தூத்துக்குடி காதுகேளாதார் பள்ளிக்குப் பிரிண்டிங் டெக்னாலஜி படிக்க அனுப்புகிறார். தாய்மை இல்லாமையைச் சுமந்தலையும் நிமிடங்களைப் போலானதாக எல்லா நேரங்களிலும் வெளிப்படுவதில்லை. ”உனக்குச் செருப்பு வாங்கித்தர அந்த முண்ட யாருட” என்று கேட்ட தாய் தான். அன்பையும், பிரியத்தையும் கொட்டி வளர்த்து தன் பிள்ளையை ஆளாக்கிட முயற்சிக்கும் அந்தத் தம்பதியினரின் பரிவினைக் கண்டு பரவசமடைகிறாள். அங்கயற்கண்ணி டீச்சர் வாங்கித் தந்த நெருப்பைத் தூக்கி கடாசியவள் தான். தன் மகனுடன் அவர்களுடைய வீட்டிலிருந்து திரும்பிய நாளில் ”தேவு உனக்கு முதல்ல ஒரு செருப்பு வாங்கனும்டா” என்கிறாள். மனித மனங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நல் உணர்ச்சிகள் வெளிப்படும் தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அது அவர்களாலும் கூடக் கட்டுக்குள் வைக்க முடியாத மகத்துவங்கள்.

நாவலுக்குள் கனவுலகம் வெளிப்படும் இடங்கள் வாசகப் பரவசத்திற்கானவை. தனித்து விடப்பட்டவர்கள் கனவுலகினில் சஞ்சரிப்பது தவிர்க்க முடியாதுதான். அதிலும் கனவுகளுக்குக் காலமில்லை என்று கண்டுரைக்கிறது நிமித்தம். வாழ்வது குறித்த அச்சமும், எதிர்காலம் குறித்த பயங்களுமே மனிதர்களை நிலைகுலையச் செய்கிறது. தனது விருப்பத்திற்குரிய எதிர்காலத்தையே யாவரும் கனவாகக் காண்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். படைப்பாளி புத்தம் புதிதாகக் கண்டுரைப்பவன் அதனால் தான் எஸ். ராமகிருஷ்ணன் ”கனவு நிகழ்காலத்தில் மட்டும் விரியும் மலர்” அதற்குள் இறந்த காலமோ, எதிர்காலமோ தோன்றுவதில்லை என்கிறார்.

ஒரு மிகச் சாதாரணக் கதையையும் கூட நாவலாக உருமாற்றிட முடியும். நாவல் பரப்பு அதற்கான சகல சாத்தியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நாவலுக்குள் ரூபம் கொள்ளும் வண்டிப்பேட்டை என்னும் மாய உலகம் அசாத்தியமான பதிவாகும். வெயில் திரைப் படத்தில் அரிசிச் சாக்கினை உதறி, உதறி துயரங்களைத் தூசிகளைப் போல விரட்டிக் கொண்டேயிருப்பவர்களை வசந்தபாலன் காட்சிப்படுத்தியிருப்பார். அது வண்டிப்பேட்டையின் ஒரு குறியீடு அதன் விஸ்தாரமான மாய உலகத்தை நிமித்தம் விரிவிரித்துப் பிரம்மாண்டாக்கிக் காட்டுகிறது. வரலாற்றின் பக்கங்களில் சுவடுகளாகத் தேங்கிப் போன அழிந்த வசீகரங்களைப் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்கள். எழுத்தாளர்கள். அப்படியான வசீகரப்பெரு வெளிதான் எஸ். ராமகிருஷ்ணன் பதிவுறுத்தியுள்ள வண்டிப்பேட்டை எனும் மாய உலகம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்தின் துவக்க காலத்திய வண்டிப்பேட்டையும், அதற்குள் இயங்கிய சுற்றுக் கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையும் அதி ரூபமாக நாவலுக்குள் பதிவாகியுள்ளது. ஒரு ராஜாவைப் போல இந்த வண்டிப் பேட்டையைக் கட்டி ஆண்ட கேசவ ரெட்டியார், அவர்களின் வம்சாவழியினர் பஞ்சு பேட்டையையும், நூற்பாலைகளையும் உருவாக்கி வளா்த்தமை குறித்தும் கூட யாராவது எழுதத்தான் வேண்டும். நான் ”நிமித்தம்” நாவலை வாசித்த மறுநாள் இன்றைக்கும் பஞ்சுப்பேட்டையாகவும், பெருமாள் கோயிலாகவும் உருமாறிக் கிடக்கும் அதே வண்டிப் பேட்டைக்குப் போனேன். அந்த ஆண் – பெண் கினற்று நீரைக் குடித்துப் பார்க்கும் ஆவல் தீராதிருந்தது. இதுதான் புணவின் உட்சம் என்பது, புனைவெனும் மாயம் எவரையும் குலைத்துவிடும் சக்தி மிக்கது. நூறு வருடங்களைக் கடந்து விட்ட பிறரும் கூட அந்தக் கிணற்றின் குளிர்ச்சியில் மேல் சட்டை அணியாத பூஞ்சை உடம்புடன் ஒரு முதியவா் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை அது நிமித்தம் நாவலுக்குள் வருகிற தம்மையாவின் வம்சாவழியினராகக் கூட இருக்கலாம் யார் கண்டது.

தேவராஜிக்கு மட்டுமல்ல, பதின்பருவத்து வயதினைக் கடந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் யாவருக்கும் பெண் உடலின் மீதான மோதும் தகித்துக் கொண்டேதான் இருக்கிறது. மனப்பிறழ்வுக்குள்ளான நாள் ஒன்றில் வைத்தியத்திற்காகப் போன இடத்தில் பெண் துணை கிடைத்து விட்டதாக நம்புகிறான் தேவராஜ். காது கேளாத தேவராஜீக்கு காலை இழுத்து நடக்கும் நவோமியுடன் காதல் எல்லாம் இல்லை. ஒரு விதத்தில் ஈர்ப்பு மட்டும் தான். அதுவும் ஒரு இரவில் சோப்புக்குமிழைப் போல உடைகிறது. தேவுவின் முதற்காதலை தியேட்டர் வாசலில் யாவர் முன்னிலையிலும் செருப்பால் அடித்துக் கலைத்துப் போடுகிறார் அவனுடைய அப்பா ஊட்டியில் முகிழ்த்த பெண் உறவை இவன் காதல் என்று நம்பிட அவள் கல்யாணமாகிப் போகிறாள். நாவல் எங்கும் பெண்கள் தேவராஜை புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதனால் தான் தேவராஜீக்கு காசியின் கங்கைப் படிக்கட்டிகளில் ஈரச்சேலையுடன் உலவும் பெண் உடலின் மீது எந்தவித ஈா்ப்பும் ஏற்படாமல் போகிறது. புறக்கணிக்கப்பட்டவர்களின் பெருந்துயரம் தீராக் காமம் தான். நிமித்தம் வெளிப்படுத்தியும், ரகஸியமாகவும் பொதிந்து வைத்திருக்கும் இப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை.

”வீட்ல ஏதாவது பிறாப்ளமா? என்ற போது ”வீடு தான் பிராப்ளம்” என்கிறான் தேவு. தேவராஜ் வீட்டில் கால் பாவுவதில்லை. அலைகிறான். நிமித்தம் ஒரு விதத்தில் அலைச்சலின் கதையும் தான். அலைந்து கொண்டேயிருக்கிறான். ஒவ்வொரு ஏமாற்றமும் அவனை நிலத்தை விட்டுப் பெயர்த்தெறிகிறது. செத்துப் போவதைத் தவிர வேறு வழியி்ல்லை என்று ரயிலேறி கர்நாடகம் போகிறவன், ஊர் திரும்புவதற்கான காசை மட்டும் ரகஸியமாகச் சரிகைப் பைக்குள் பத்திரப்படுத்துகிறான். வயதான ஆச்சிகளின் வழித்துணையாகக் காசிக்குப் போகிறாள். காசியும், கங்கையும், அதன் வாழ்க்கையும், ஆற்றில் மிதக்கும் பிணங்களும் அவனை என்னவோ செய்கிறது. தங்கிவிட வேண்டியதுதான் காசியி்ல் என நினைத்துக் கொள்கிறான். மதுரைக்கும், காசிக்கும், ஊட்டிக்கும் என ஓடிக்கொண்டேயிருந்தாலும் அவன் வீட்டைவது மட்டும் தொடரத்தான் செய்கிறது. இந்த அலைச்சலும், பயணமுமே பெரும் நாவலாக்குகிறது.

நானூறு பக்கங்களாக விரியும் நிமித்தத்திற்குள் காந்தி வருகிறார். தன்னைக் காண வரும் மக்கள் திரளின் மகிழ்ச்சியில் திளைக்கிறார். கூட்டத்திற்குள் வழி தவறிய குழந்தையைப் பத்திரமாக ஒருவரிடம் ஒப்படைக்கிறார். பசித்துக் கிடக்கும் ஊருக்கு மாறுவேடத்தில் வரும் ஜவஹர்லால் நேரு உணவு வழங்கிப் போகிறார். மொரார்ஜி தேசாய் கண்டனம் தெரிவிக்கிறார். அவசரநிலைப் பிரகடணத்தின் கொடூரம் பதிவாகிறது. போலீஸ் ஜீப்பில் விலங்கிடப்பட்டுத் தோழர் சீனிவாசன் இழுத்துச் செல்லப்படுகிறார். விருதுநகர் பொட்டலில் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. கருப்புச் சோலை அணிந்த பெண்கள் கூட்டம் முதன் முதலாகக் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை எனக் கோஷமிடுகிறது….. காலத்தின் புள்ளிகளைத் தொட்டுச் செல்லும் சாத்தியத்தை நாவல்பரப்பு ஏற்படுத்தித் தருகிறது.

நாவலை வாசித்து முடித்த பிறகும் கூட ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்தில் ஓடித் தவிக்கும் அணிலின் காட்சிச் சித்திரம் நம்மை விட்டு அகல மறுக்கிறது. கால்களுக்கிடையேயும், வாகனங்களுக்கிடையேயும் தட்டுத்தடுமாறி மூத்திரக் கிடக்கில் விழுந்து தொலைக்கும் அணில்களது வாழ்க்கை தான் ”நிமித்தம்” அதுவே தேவராஜ் எனும் அணில் மனிதனின் துயர்மிகு பாடலாக வாசக மனதிற்குள் சேகரமாகிறது. வாழ்நாள் முழுக்கப் புறக்கணிப்பின் கசப்பை விழுங்கிச் செரித்த மனிதனின் துயரத்தை சுமந்திட முடியாது தவித்துப் போகிறது வாசகர்களின் மனம் என்பது மட்டும் நிஜம்.

••••

0Shares
0