(இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி மிருகக்காட்சி சாலையில் ஒரு மனிதனை புலி அடித்துக் கொன்றுவிட்டது, அந்த சம்பவத்தைக் காணொளியாக ஒரு நண்பர் அனுப்பி பார்க்கச் சொல்லியிருந்தார்.
நேற்று காலை அதைப் பார்த்த நிமிசத்தில் மனது பாரம் கொண்டுவிட்டது. அப்புலியின் முன்னால் நான் நிற்பதை போலவே உணர்ந்தேன். அந்த மனிதன் புலியின் முன்னால் உயிருக்கு மன்றாடும் காட்சி கண்ணீரை வரவழைத்தது, அது குறித்த பதிவிது)

••••••
அந்த மனிதனின் பெயர் புலிக்குத் தெரியாது, அவன் ஒரு மனிதன், அது போதும் அவனைக் கொல்வதற்கு.
ஆனால் அவனுக்கு மக்சூத் என்றொரு பெயரிருந்தது
வெள்ளைப் புலிக்கு விஜய் என்பது பெயர் என அவனுக்குத் தெரியும்
ஆனால் அதை யார், எதற்காக வைத்தார்கள், ஏன் ஒரு புலிக்கு மனிதன் பெயர் வைக்கபட்டிருக்கிறது, அந்த வெள்ளைப்புலி எங்கே எப்போது பிறந்தது என எதுவும் தெரியாது
அவன் முந்தைய நாள் வரை அதைக் கூண்டில் அடைபட்ட ஒரு விலங்கு என்று மட்டுமே தெரிந்து வைத்திருந்தான்.
இன்றைக்குப் புலிக்கு என்ன ஆயிற்று என அவனுக்குப் புரியவேயில்லை.
புலிக்கும் தனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை
அவன் புலியை வேடிக்கை பார்க்கவே மிருக காட்சிசாலைக்கு வந்திருந்தான்
தடுப்பில் தலையை நீட்டி எட்டிப் பார்த்தபோது ஏதோவொரு உந்துதல் ஏற்பட தடுப்பை தாண்டிப் போய் விழுந்தான்
ஒரு வேளை புலியோடு நட்பு பாராட்ட விரும்பினானா ?
இல்லை கண்களால் பார்த்து மட்டும் புலியை புரிந்து கொள்ள முடியாது என நினைத்தானா ?
புலி அவனை விரும்பவில்லை, மனிதர்களை விட்டு விலகி வாழவே புலி எப்போதும் விரும்புகிறது. அதற்கு மனிதர்கள் தேவையில்லை
ஆனால் மனிதர்கள் அப்படி நினைப்பதேயில்லை, அவர்களுக்குப் புலி தேவைப்படுகிறது, உயிரோடோ அல்லது கொல்லப்பட்டோ.
புலியை மனிதர்கள் நேசிக்கவில்லை, வெறுக்கிறார்கள், தண்டிக்க நினைக்கிறார்கள், குண்டடிபட்டு துடிக்கத் துடிக்கப் புலி சாவதை குரூரமாக ரசிக்கிறார்கள். கொல்வதை வீரமாக நினைக்கிறார்கள்.
உலகளவில் அழிந்து வரும் விலங்கினமாக வெள்ளை புலி உள்ளது.
டெல்லி மிருக்காட்சியில் உள்ள புலிக்கு வயது ஏழு, அது காடறியாத புலி, வேடிக்கை பார்ப்பதற்காகவே வளர்க்கபட்டு வரும் ஒரு மிருகம்
கொல்லப்பட்டவனுக்கு வயது இருபது, அவன் ஏழை, கூலித்தொழிலாளி, ரிக்ஷா ஒட்டுகிறவன் என்கிறார்கள்.
கொல்பவர்களுக்கும் கொல்லப்படுகிறவர்களுக்கும் ஒரு போதும் வயது முக்கியமானதில்லை.
கொல்வதற்கு ஒரு அற்ப காரணம் தேவை, அதுவும் அதிகாரத்திற்குத் தேவையில்லை.
புலிகள் மனிதர்களைப் போலக் காரணம் சொல்லி கொல்பவையில்லை, அவற்றைப் பசியே வழிநடத்துகிறது.
உண்மையில் அந்தப் புலி திடீரென விழித்துக் கொண்டுவிட்டதைப் போலவே நடந்து கொண்டிருக்கிறது, இந்த நாள் வரை தான் வாழ்ந்தது ஒரு திறந்தவெளிச்சிறைச்சாலை, தான் வேடிக்கை பார்க்கபடுகிறோம், யாரோ தருகிற உணவை சாப்பிட்டுவிட்டு காட்சிப்பொருளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனப் புலி விழித்துக் கொண்டுவிட்டதா ?
முந்திய தினம் வரை அது இயல்பாகவே நடந்து கொண்டது என்கிறார் மருத்துவர்,
இயல்பு என்பது அடங்கிப்போவது தானா?
•••
தடுப்பைத் தாண்டி தன்னருகே வந்து விழுந்த மனிதனை நோக்கி புலி நெருங்கி வந்து நின்றது, அவன் பயத்தில் ஒலமிட்டான்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் இப்போது புலியை விடவும் ஆவலாக அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்
அவன் உயிர்பயத்தில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்
யாரோ கல்லெறிந்தார்கள்
எவ்வளவு அறியாமை பாருங்கள், கல்லெறிந்து விரட்டி விட அது என்ன காகமா.
புலி கூச்சலிடும் மனிதர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை, அது தன்முன்னே நடுங்கியபடி பயத்தில் உறைந்து போயிருந்த மனிதனை முகர்ந்து பார்த்தது
அவன் கைகளால் உதறித் தள்ளினான்
எதை முகர்ந்து பார்க்கிறது புலி.
அவன் மனிதன் தானா என்பதையா,
மனிதர்களில் ஒருவன் தானா
இல்லை ஏதேனும் அற்பஉயிரினமா என முகர்ந்து பார்த்தது
மனிதனே தான்,
ஆனால் மனிதனைப் போல வீரத்துடன், கர்வத்துடன் நிமிர்ந்து நிற்கவில்லை.
அவன் நடுங்கிக் கொண்டிருந்தான்
புலியிடம் என்ன சொல்வது, எப்படிப் பேசுவது
புலி அவன் முன்னே உறுதியாக நின்று கொண்டிருந்தது. அதன் நிழல் காலடியில் படர்ந்திருந்தது
நூற்றாண்டுகளாக நடத்திய வேட்டைக்குப் பதிலடி தரப்போகிறது என்பது அதன் உறுதியிலே தெரிந்தது
அந்த மனிதனுக்குத் தான் ஒரு அப்பாவி. ஏழை, எளியவன் என்று புலிக்கு எப்படிப் புரிய வைப்பது எனத் தெரியவில்லை

புலி பேதம் பார்ப்பதில்லை, அதற்கு வேட்டையாடுபவனும் வேடிக்கை பார்ப்பவனும் ஒன்றும் தான்.
சிறிய குற்றம் பெரிய குற்றம் என்பதெல்லாம் மனிதர்களுக்குத் தான்.
புலிகள் மனிதர்களைப் போலத் தந்திரமாக யோசிப்பதில்லை, அதன் உலகில் ஒரே நியதி, பசி தான் அதை இயக்கும் ஒரே விசை.
பசிக்காத நேரத்தில் அதன் தியானஅமைதியை வேறு எந்த மிருகத்திடமும் காணமுடியாது.
விழுந்துகிடக்கும் மனிதனின் முன்னே வயிற்றை எக்கி உடலைச் சிலுப்புகிறது புலி.
அது விளையாட விரும்புகிறதா,
தன் உயிரைக் கொல்வது அதன் நோக்கமில்லையா?
அந்த மனிதன் புலியின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவனைப் போல உயர்த்திய புலியின் கால்களைத் தட்டிவிடுகிறான், மறுதலிக்கிறான்.
சாவதற்கு காத்திருப்பவனின் எதிரிலுள்ள சிறுசெடியில் பசுமையான இலையொன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கிறது
நிர்கதி என்றால் என்னவென்று அவனுக்கு அந்த நிமிஷத்தில் முழுமையாகப் புரிந்து போய்விடுகிறது.
இந்த உலகில் தான் ஒற்றை மனிதன், உதவிக்கு வேறு மனிதர்கள் எவரும் வரப்போவதில்லை.
தன்னைச் சில கேமிராக்கள் உற்றுநோக்கி கொண்டிருக்கின்றன, தனது சாவை படமாக்குவதில் தான் அவை ஆர்வம் காட்டுகின்றன.
மனிதன் சாவது முக்கியமில்லை ஆனால் தடயமற்று செத்துப் போய்விடக்கூடாது, காணொளிக் காட்சிகள் முக்கியம்.
யாரோ இளகிய மனம் படைத்த ஒருவன் ஆர்வத்துடன் தனது செல்போனில் அவனது மரணத்தைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறான்
அவனுக்குப் புலி எப்போது அந்த மனிதனைக் கொல்லப் போகிறது என ஆர்வம் துடிக்கிறது
அவன் தனது செல்போனோடு உணர்ச்சிமயமான அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறான், புலி அமைதியாக நின்று கொண்டிருக்கிறது
உண்மையில் செல்போனில் படம் பிடிப்பவன் சலித்துக் கொள்கிறான்
புலி ஒரு மனிதனைக் கொல்வதற்கு ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறது.
என்ன யோசிக்கிறது புலி, ஒரு நிமிசம் அவன் நினைவில் திரைப்படங்களில் தொலைக்காட்சிகளில் பார்த்த புலிகள் நினைவில் வந்து போகின்றன.
சலிப்போடு அவன் புலியை தனதுசெல்போன் கேமிராவில் பார்த்துக் கொண்டிருக்கிறான், மனது கொல், கொல் எனக் கூச்சலிடுகிறது
யாரோ பயத்தில் கத்துகிறார்கள்.
அது இறக்கப் போகிறவனை நினைத்து அல்ல, எங்கே புலி அவனைக் கொன்றுவிட்டுத் தங்கள் பக்கம் திரும்பிவிடுமோ என்று
அந்த மனிதன் புலியை ஒரு கடவுளாக எண்ணிக் கொள்கிறான், அவன் கண்களில் புலி கடவுளாகவே தெரிகிறது, அவன் மன்றாடுதல் மட்டுமே உயிர்வாழ்வதை அனுமதிக்கும் என்ற உலகின் தொல்சடங்கு ஒன்றை நிகழ்த்த ஆரம்பிக்கிறான்.
அதை விரும்பிச் செய்வதாகக் கூடத் தோன்றவில்லை, உடல் தானே மன்றாடத் துவங்குகிறது.
கைகளைக் கூப்பி அவன் புலியிடம் இந்நாள் வரை மனிதர்கள் நடந்து கொண்ட எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறான்.
ஆனால் புலிகள் மன்னிப்பதற்குப் பழகியவையில்லை, அவற்றை இதுவரை மன்னிப்பதற்குப் பழக்க மனிதர்களால் முடிந்ததேயில்லை.
அந்த உண்மை அவன் முகத்தில் அறைகிறது
அவன் அழுகிறான்.
கடவுளே, கடவுளே. நான் என்ன தவறு செய்துவிட்டேன்
புலிக்கு அழுகையோ, இரக்கமோ, மன்றாடுதலோ எதுவும் புரிவதில்லை.
அது தன் முன்னிருக்கும் உயிரோடு விளையாட விரும்புகிறது
நிதானமாக, என்றோ முடிவு செய்துவிட்ட ஒன்றை உறுதியோடு செயல்படுத்துவது போல அமைதியாக அது தன் கால்களால் அவனைச் சீண்டுகிறது
நகங்கள் அவன் உடலை தீண்டுகின்றன.
அவன் புலியை வணங்குகிறான்.
புலிக்கு ஒன்றை எப்படிப் புரியவைப்பது எனத் தெரியாமல் போன தனது அறியாமையை நினைத்து அழுதபடியே மன்றாடுகிறான்.
அவன் குரல் உடைந்து போயிருக்கிறது
அவன் தன்னை ஒரு மானாக, முயலாக, ஒரு சிறுவிலங்காக நினைத்துக் கொண்டிருக்ககூடுமோ என அவன் உடல் நடுக்கம் காட்டுகிறது
புலி தன் இரையை ருசித்துச் சாப்பிடப்போவதை நினைத்துச் சந்தோஷம் கொள்ளப்போவதை போல நாக்கைச் சுழட்டுகிறது
இவ்வளவு தானா வாழ்க்கை.
அவன் தன் கடந்தகாலத்தை நினைத்துக் கொள்கிறான். எதற்காகப் புலியை வேடிக்கை பார்க்க விரும்பினோம் எனத் தனது துயரவிதியை நினைத்துக் கொள்கிறான்
இத்தனை வருஷ வாழ்க்கையில் இப்படி ஒரு புலியின் முன்பாக உயிருக்கு மன்றாட வேண்டும் என ஒருபோதும் அவன் நினைத்தேயில்லை
ஆனால் கலவரத்திலும், தனித்து மாட்டிக் கொண்ட இரவுகளிலும் தன்னை வீழ்த்த துடிக்கும் ஆணின் முன்னால் எத்தனையோ பெண்கள் இப்படிக் கைகள் குவித்து மன்றாடியிருக்கிறார்களே.
அப்போது ஒரு மனிதன் தானே புலி போல நடந்து கொண்டான் என்பது இவனுக்கு நினைவில் வந்திருக்காது
தான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ஒருவேளை புலி தன்னைக் கொல்லாமல் விட்டிருக்குமோ என்று கூட அவன் ஒரு நிமிசம் யோசித்திருக்ககூடும்.
புலிகளுக்கு ஆண் இறைச்சி, பெண் இறைச்சி எனப் பேதமில்லை தானே
புலிகள் வேட்டையாடுவதை வாழ்க்கையாகக் கொண்டவை என்பதை மனிதர்கள் மறந்து போய்விட்டார்கள்
அவர்களுக்கு நினைவுபடுத்திக்காட்டவே இந்த நாடகத்தைப் புலி நடத்துகிறதோ
எதுவாயினும் அவனைப் புலி கொல்லப்போகிறது.
புலி அடித்துக் கொல்லப்போகும் முதல்மனிதன் இவனில்லை
ஆனால் பகிரங்கமாக இத்தனை நூறு கண்கள் பார்த்துக் கொண்டிருக்க அடித்துக் கொல்லப்படப் போகும் முதல் மனிதன் இவன் தான்
தனது இயல்பை ஒடுக்கிக் கூண்டிலிட்ட மனித குலத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்த விரும்புகிறது
மனிதர்கள் அதைப் புரிந்து கொள்ளப்போவதில்லை
அவர்கள் ஒரு மனிதனின் மரணத்தை வெறும் வேடிக்கையாக நினைக்கிறார்கள், விபத்து என அடையாளப்படுத்திக் கடந்துவிடுவார்கள்.
யாருக்கு ஒரு சாமானியனின் உயிர் முக்கியம்.
நிச்சயம் இதைப்பற்றி இரண்டு வாரங்களுக்குத் தொலைக்காட்சியில் சூடான விவாதங்கள் நடைபெறும்
இறந்தவனின் தந்தை தொலைக்காட்சியில் தோன்றுவார். உலகம் அவர் மீது பரிதாபம் கொள்ளும்
புலி ஏன் தன் மகனைக் கொன்றது என அவரால் புரிந்து கொள்ளவே முடியாது
அதை விடவும் உலகம் ஏன் இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது எனப்புரியாது.
பாதுகாக்கபட வேண்டியர்கள் மனிதர்களாக இல்லை புலிஇனமா என வாக்குவாதம் நடக்கும்.
கவனத்துடன் வேடிக்கை பாருங்கள் என ஆலோசனை சொல்வார்கள்
இளைஞர்கள் பொறுப்பற்றமுறையில் புலியிடம் போய்ச் சாவை தேடிக் கொள்கிறார்கள் என அறிவுரை சொல்வார்கள்
வேடிக்கை பார்க்க போகிறவர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் வழக்கத் திட்டமிடுவார்கள், அதற்குப் பல கோடி நிதி ஒதுக்கபட்டு காண்டிராக்ட் விடப்படும்
புலியிடம் சிக்கியவன் பைத்தியம் என்பார்கள்
இல்லை புலிக்கு தான் பைத்தியம் என்றும் கூறுவார்கள்
எது எப்படியோ உலகம் ஒரு மனிதனை புலி கொல்வதை ரசித்துப் பார்க்கிறது, சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்கிறது.
ஏதேதோ இடங்களில் யார் யாரோ தங்களின் ஒய்வு நேரத்தில் அலுவலகத்தில், வீட்டில், படுக்கை அறையில், பயணத்தில் புலி ஒருவனை அடிக்கும் காணொளியைப் பார்க்கிறார்கள்
அப்போதெல்லாம் ஒரு புலி அவர்கள் கண்முன்னே தோன்றிக் கடந்து போகிறது, சட்டென அது நிஜம் தானா எனத் திரும்பி பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அங்கே புலியில்லை எனத் தெரிய வந்தவுடன் பெருமூச்சுடன் ஆறுதல் அடைகிறார்கள்
ஆனால் நிஜத்தில் கண்முன்னே புலி வருவதை விடவும் மனதிற்குள் ஒரு புலி நுழைவது ஆபத்தானது என அவர்களுக்குப் புரிவதேயில்லை.
மனிதனைக் கொன்ற புலி பல்லாயிரம் மனிதர்களின் சிந்தைக்குள் நுழைகிறது.
அச்சம் என்ற உருவம் எடுத்து உறைந்து கொள்கிறது
இனி மனிதர்கள் எங்கே வெள்ளைபுலியைக் காணும் போதும் அதன் இரையாக நாம் மாறிவிடக்கூடாது என்ற
அச்சவுணர்வோடு அதை எதிர்கொள்வார்கள்
அச்சவுணர்வு மெல்ல வன்முறையாக மாறும்
புலி என்ற ஒன்று இருந்தால் தானே பயம் இருக்கும் என வேட்டையாடிக் கொன்றுவிட முயற்சிப்பார்கள்,
மனிதர்களின் முட்டாள்தனமான பயமும் கற்பனையும் எத்தனையோ உயிர்களைப் பலி கொண்டது போல வெள்ளைப் புலிகளும் கொல்லப்படும்
வரலாறு இதைத் தான் சொல்கிறது
ஆனால் புலியின் முன் கைகூப்பிக் கண்ணீர் விடும் மனிதன் வரலாற்றில் விடுபட்டவன்
எளிய மனிதர்களை வரலாறு கண்டுகொள்வதில்லை
அவர்கள் புலி அடித்துக் கொல்லப்படும் போதும் சம்பவமாக மட்டுமே மாறிவிடுகிறார்கள்.
புலி அடித்து ஒரு பிரபலம் இறந்து போனால் மட்டுமே வரலாற்றில் இடமுண்டு
கற்பனையில் சாவை ஒத்திகை பார்ப்பதை விட அதை எதிர்கொள்வது எவ்வளவு சிரம்ம் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
புலியின் முன்னால் கைகூப்பி மன்றாடும் மனிதன் தன் குரலை உயர்த்தவில்லை
இனிப்பயனில்லையெனப் புலியின் காதுகள் மட்டுமே கேட்கும்படியாகச் சொல்கிறான்
நான் எளிய மனிதன், உன்னைப் போலவே வஞ்சிக்கபட்டவன், நீயே திரும்பி பார்.
இந்த உலகம் என் மன்றாடுதலை வெறுமனே வேடிக்கை பார்க்கிறது, செல்போன் கேமிராக்களில் படமெடுக்கிறது, பயத்தில் ஒதுங்கிநிற்கிறது.
அவ்வளவு தான் என் வாழ்க்கை.
என்னைப் போய் ஏன் உன் பசிக்கான உணவாகத் தேர்வு செய்தாய், வாழ்வதற்காக நான் பட்ட அவமானங்களையும் வலிகளையும் நீ அறிவாயா என மன்றாடுகிறான்.
புலியிடம் சலனமேயில்லை
அதற்குத் தெரியும், மனிதர்கள் மரணத்தின் போது தான் சகல துயரக்கதைகளும் அவிழ்த்துவிடுவார்கள்,
மரணத்தைச் சந்திக்கின்ற துணிவு மனிதர்களுக்குக் கிடையாது.
பெரும்பான்மை மனிதர்கள் கோழைகள், பேச்சு மட்டும் தான் அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது
புலியின் பசி தூண்டப்படுகிறது, அதற்கு இரையை வேடிக்கை பார்க்கப் பிடிக்காது, எதற்காக மனிதனிடம் மட்டும் தான் இப்படி ஒரு விளையாட்டினை நிகழ்த்துகிறோம் என அதற்குப் புரியவேயில்லை,
அவன் புலியின் கண்களில் தோன்றும் விபரீத ஒளியை காண்கிறான், அந்த வெளிச்சத்தை உலகில் மனிதர்கள் கண்டதேயில்லை.
புலி தன் வயிற்றை எக்கி அவன் மீது பாயத் தயாராகிறது,
இனி தன் வாழ்க்கையை ஒப்புக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை தானா
அந்த மனிதன் உலகை திரும்பி பார்க்கவில்லை
புலியை நோக்கி கேமிராவைத் திருப்பு என யாரோ கத்துகிறார்கள்
அந்த மனிதனின காதுகளுக்குள் எந்தக் குரலும் சென்றுசேரவில்லை, அவன் புலியின் மூச்சுகாற்று தன் கைகளில் படுவதை உணர்கிறான்.
சாவின் தொடுதல் இப்படிதானிருக்கும் என்பதை உணர்க்கிறான்,
ஆனால் மன்றாடுதலை அவன் நிறுத்திக் கொள்ளவேயில்லை
சரணம், சரணம், சரணம் என அவன் மனம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது
புலியின் காதுகள் விடைத்துக் கொள்கின்றன
தன்னை இந்நாள் வரை வேடிக்கை பார்த்த மனிதர்களுக்குப் பதிலடி இது தான் என்பது போல அவன் மீது உக்கிரமாகப் பாய்கிறது
அவனைக் கவ்வி இழுத்துப் போகிறது
இப்படி ஒரு மானை, ஆட்டினை புலி இழுத்துப் போகும் காட்சியைத் தொலைக்காட்சியில் எவ்வளவோ முறை கண்டிருந்த போதும் மனிதன் இழுத்துப் போகப்படும் போது மனது பதைபதைக்கவே செய்கிறது,
மனித உயிர் மட்டும் தானா மகத்தானது
புலியின் பற்கள் உறுதியாக அவனைக் கவ்விப்போகின்றன, அவன் துடிக்கிறான்
புலிக்கு அவன் ஒரு மனிதன் என்பது மறந்து போகிறது
இரை, வெறும் இரை மட்டுமே.
அதைப் புசிக்க வேண்டும்.
தீராத பசியை ஆற்றிக் கொள்ளவேண்டும்.
ஒரே எண்ணம் மட்டுமே அதை உந்தித் தள்ளுகிறது.
புலி மனிதனை இழுத்துக் கொண்டு புதரைநோக்கி ஒடுகிறது.
ஏதோ ஒரு கேமிரா அதைப் பின்தொடர்கிறது.
புலி அவனைக் கொல்லப்போகிற காட்சி கிடைக்கவில்லையே என யாரோ சலித்துக் கொள்கிறார்கள்
அவன் இறக்கதுவங்குகிறான்
ஊடகங்களின் பார்வையில்
இந்தியாவின் தலைநகரில் இன்னொரு துயர சம்பவம், இன்னொரு விபத்து நடந்தேறுகிறது
அவ்வளவே,
அவ்வளவு மட்டுமே.
புலி அவனைப் புசிக்கத் துவங்குகிறது,
நிதானமாக, நீண்ட பல காலத்தின் பின்பு ஒரு மனிதனைச் சாப்பிடும் ஆசையோடு அது அவனைக் கிழித்துப் புசிக்கிறது.
பலநூறு கண்கள் புலியை வேடிக்கை பார்க்கின்றன
ஒருவன் கொல்லபடுவதை நேரடியாக இப்படிக் காண்பதற்கு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்
மிருகக்காட்சிசாலை என்ற வேடிக்கை உலகம் ஒரு நிமிசத்தில் வீபரீதஉலகமாக மாறிப்போகிறது
எவரது கற்பனை மிருக்காட்சிசாலையை உருவாக்கியது.
யார் யானைகளைப் பழக்கி சைக்கிள் விட நினைத்தவன்.
எந்த முட்டாளுக்குப் புலியை முக்காலியில் உட்கார வைத்துச் சல்யூட் அடிக்க வைக்க வேண்டும் என்ற யோசனை உருவானது.
எதற்காக மிருகங்களை வேடிக்கை பார்க்கிறோம், புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்கிறோம்,
நிச்சயமாக அவற்றைப் புரிந்து கொள்வதிற்கில்லை.
நாம் மனிதர்கள், இந்தப் பூவுலகின் அதிபதிகள், நம்மை விட உயர்ந்த உயிரினம் எதுவும் உலகில்லை என்ற பெருமிதம் தானே.
மனிதர்களால் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தால் நடுக்கமாக இருக்கிறது

புலி அந்த மனிதனை தூர வீசி விட்டு புதரை விட்டு விலகிப்போகிறது.
பசியை ஆற்றிக் கொண்டுவிட்டது
அவ்வளவு தான், இனி தனது எதிர்காலம் குறித்தோ, அடுத்து நடக்கப்போகிற வன்முறைகள் குறித்தோ அது யோசிக்கவேயில்லை
சாதுவாக, அமைதியாக அது புல் தரையில் நடந்து போய் நிழலில் அமர்ந்து கொள்கிறது
இப்போது அது பசி தீர்ந்த புலி
பாவம் இறந்து போன மனிதன்
இப்போது அவன் பலியான உடல்
அவ்வளவே, அவ்வளவு மட்டுமே.
நிச்சயம் ஒரு புலி இன்னொரு புலியை கொல்வதில்லை, ஒரு யானை இன்னொரு யானையை
வேட்டையாடுவதில்லை
மனிதர்கள் மட்டுமே ஒருவரையொருவர் வேட்டையாடுகிறார்கள்
மனிதர்கள் மனிதர்களை வேடிக்கை பார்க்கிறார்கள், மிருகங்களையும் வேடிக்கை பார்க்கிறார்கள்
பாவம் இறந்து போன மனிதன்
யாரோ செய்த தவறுக்காக அவன் தண்டிக்கபட்டிருக்கிறான்.
பாவம் இறந்து போன மனிதன்
யாரோ சாவதற்குப் பதிலாக அவன் கொல்லப்பட்டிருக்கிறான்
பாவம் இறந்து போன மனிதன்
வேடிக்கை உலகில் வேடிக்கை பார்க்கும் மனிதர்களில் ஒருவனாக இருந்ததற்காகத் தண்டிக்கபட்டிருக்கிறான்
பாவம் அந்த வெள்ளை புலி
அதற்கு மனிதர்களைப் பற்றி இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை
ஒரு பலிக்கு ஒராயிரம் உயிர்கள் காவு வாங்கப்படும் என்று
பாவம் இந்தப் பொதுமக்கள்
சாவைக் கூட வேடிக்கையாக பார்த்து ரசிக்க பழகிவிட்டிருக்கிறார்கள்
என்றாலும் ஒரு மனிதன் கொல்லபட்டிருக்கிறான்
புலி அவனைக் கொன்றிருக்கிறது
மனம் பதைபதைக்கவே செய்கிறது
••
யாரும் இந்த மரணத்திற்குப் பொறுப்பு ஏற்கமாட்டார்கள்
இரண்டே நாட்களில் இதை மறந்துவிடுவார்கள்
இறந்தவனின் தந்தை அந்தப் புலியை என்றாவது திரும்பப் பார்ப்பாரா
இனி அந்தப் புலி மனிதனைக் கொன்றபுலியாக மட்டும் தானே அறியப்படும்
வேறு ஒரு மிருகக்காட்சி சாலையில் அப்பாவின் கையைப் பிடித்து வரும் பையன்
இந்தப் புலி என்னைக் கொன்றுவிடுமா எனக் கேட்கும் போது அப்பா என்ன பதில் சொல்லுவார்
என்றாலும்,
எளிய மனிதர்களின் விதி எப்போதும் இப்படித்தான் முடிகிறது
யாரோ ஒருவன் தடுப்பைத் தாண்டவே செய்கிறான்
ஏதோ ஒரு புலி பலர் முன்பாக அவனை அடித்துக் கொன்று புசிக்கவே செய்கிறது
மன்றாடுதல் நம் காலத்தின் பொது அடையாளமா .
••••
இணைப்பு
White tiger kills youth at Delhi zoo