யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பரமோ நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இப்படம் Netflix ல் காணக்கிடைக்கிறது. இதே நாவலை மையமாகக் கொண்டு கறுப்பு வெள்ளையில் உருவாக்கபட்ட படத்தைப் பார்த்திருக்கிறேன். பெட்ரோ பரமோ லத்தீன் அமெரிக்க நாவல்களில் ஒரு கிளாசிக்.
இப்படத்தின் இயக்குநர் ரோட்ரிகோ ப்ரிட்டோ ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தைக் காண ஆவலாக இருந்தேன். ருல்ஃபோவின் இந்த நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. இன்று வரை அந்த நாவல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
You will hear the voice of my memories stronger than the voice of my death – that is, if death ever had a voice. என்று நாவலின் ஒரு இடத்தில் யுவான் ருல்ஃபோ குறிப்பிடுகிறார். அது தான் நாவலின் திறவுகோல்
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு. அதுவும் ப்ரீசியாடோ நடந்து வரும் முதற்காட்சியில் தொலைவில் புலப்படும் கொமாலாவும் அதன் தனிமையும் வியப்பூட்டும் வகையில் படமாக்கபட்டுள்ளன. இது போலவே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தங்கும் விடுதியில் நடைபெறும் உரையாடல்களும். பெட்ரோ பரமோவின் திருமண நிகழ்வு மற்றும் இரவில் நடந்து செல்லும் காட்சி, காலமாறுதல்களின் வெளிப்பாடு என மிகச்சிறப்பாக, கவித்துவமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
நாவலுக்கு மிக உண்மையாகப் படத்தின் திரைக்கதை உருவாக்கபட்டுள்ளது. நாவலில் இடம்பெறும் வசனங்களை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பெட்ரோ பரமோ நாவலைப் படிக்காதவர்கள் கதையின் போக்கினையும் நிகழ்வுகளையும் புரிந்து கொள்வது கடினம். நாவலைப் படித்திருந்தால் கதையின் முக்கிய நிகழ்வுகள் திரையில் அற்புதமான காட்சிகளாக விரியும் அனுபவத்தை நன்றாக உணர முடியும்.
பெட்ரோ பரமோ தான் கதையின் நாயகன். ஆனால் நாவல் அவனைப்பற்றியது மட்டுமில்லை. அவனது கடந்தகாலம். திருமணம் மற்றும் காதல்கள். அதிகார வேட்கை. மதகுருவின் வாழ்க்கை. கைவிடப்பட்ட மெக்சிகன் நகரத்தின் நினைவுகள் எனப் பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.
நாவலின் களமான கொமாலா ஒரு விசித்திரமான நிலப்பரப்பு. உண்மையில் அது நாவலில் குறியீடாகவே சித்தரிக்கப்படுகிறது. அங்கே காலம் முன்பின்னாக நகர்கிறது. இறந்தவர்கள் வீதியில் நடமாடுகிறார்கள். இயல்பாகப் பிறரோடு உரையாடுகிறார்கள். நடந்து முடிந்து போன நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடைபெறுகின்றன. எவரது நினைவில் எந்தக் காட்சி வெளிப்படுகிறது என்ற தெரியாதபடி கதை சுழலுகிறது.
இறந்து போன தனது அம்மாவின் விருப்பபடி தான் காணாத தந்தையைத் தேடி கோமாலாவுக்கு வருகிறான் யுவான் ப்ரீசியாடோ. அங்கே அவன் காணும் காட்சிகள் சந்திக்கும் மனிதர்கள், நடைபெறும் நிகழ்வுகள் யாவும் விசித்திரமாக உள்ளன. அவன் இருவேறு உலகங்களுக்குள் சஞ்சரிக்கிறான். கொமாலா உண்மையில் இறந்தவர்களின் வசிப்பிடம், உண்மையில் அலைந்து திரியும் ஆன்மாக்களின் நிலம். நாவல் முழுவதும் கடந்த காலத்தின் எதிரொலிகளை நம்மால் கேட்க முடிகிறது. கடந்தகாலத்தின் நன்மையும் தீமையுமே இன்றைய வாழ்க்கையின் போக்கினைத் தீர்மானிக்கிறது என்பதாகவே கதை விரிவு கொள்கிறது.
தண்ணீருக்குள் அடியில் தெரியும் காட்சிகளைப் போலத் தெளிவாகத் தெரியாத அதே நேரம் உணர முடிகிற காட்சிகள் நாவலில் அதிகமுள்ளன. அவற்றைச் சினிமாவாகப் பார்க்கும் போது தெளிவாக, நேரடியாக உணருகிறோம். அது ஒன்றிரண்டு இடங்களில் ஆச்சரியத்தையும் பல நேரங்களில் ஏமாற்றத்தையுமே ஏற்படுத்துகிறது.
நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்குப் படம் ஏற்படுத்தவில்லை. காரணம் நாவலில் உள்ள கொமாலாவின் மௌனத்தை, நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள மாய உணர்வுகளை வாசிக்கும் போது நெருக்கமாகப் புரிந்து கொள்கிறோம் ஆனால் திரையில் அந்த நெருக்கம் உருவாகவில்லை.
உதாரணத்திற்குக் கொமாலா என்பது நரகத்தின் நுரைவாயில் என்கிறது நாவல். நாம் அதைத் திரையில் உணர முடியவில்லை.
புதிர்பாதையினுள் பிரவேசிப்பது போலவே கதையினுள் நாம் பிரவேசிக்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு கதையை விவரிக்கிறார்கள். அந்தக் கதைகள் நிஜமானவை போலவும் அவர்களாக உருவாக்கிக் கொண்ட கற்பனை போலவும் இருக்கின்றன. கைவிடப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு உலகை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது போலவே காட்சிகள் நகர்கின்றன.
நாவலை விடவும் இப்படம் பெண்களைச் சித்தரித்துள்ள விதத்தில் சிறப்பாக உள்ளது. மறக்க முடியாத, தனித்துவமான முகங்கள். குறிப்பாகப் பணிப்பெண் டாமியானா, விடுதி நடத்தும் எடுவிஜஸ், சூசனா போன்றவர்கள் நிகரற்ற அழகுடன், தனித்துவத்துடன் வருகிறார்கள். படத்தில் கொமாலாவின் வீசும் காற்றின் குரலை துல்லியமாகக் கேட்க முடிகிறது. படத்தின் ஒலிப்பதிவு தனித்த பாராட்டிற்குரியது.
Some villages have the smell of misfortune. You know them after one whiff of their stagnant air, stale and thin like everything old. போன்ற நாவலின் வரிகளை வாசிப்பில் தான் முழுமையாக உணர முடியும். காட்சியின் வழியே இதனை உணரச் செய்வது எளிதானதில்லை.