ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறையாவது ஜென் கவிஞர் மட்சுவோ பாஷோவின் பயணக்குறிப்புகளின் தொகை நூலாகிய Narrow Road to the Interior: And Other Writingsயை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
இதுவரை இந்தத் தொகைநூலை பத்துக்கும் மேற்பட்ட முறை வாங்கியிருப்பேன். ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு நண்பர் வாசிக்கக் கொண்டு போய்த் திரும்பித் தராமல் போய்விடுவார். பிறகு அதன் புதிய பிரதி ஒன்றை விலைக்கு வாங்குவேன். பயணத்தில் தொலைந்து போகும் பொருட்களைப் போலவே இந்தப் புத்தகமும் மாறியிருக்கிறது.
மட்சுவோ பாஷோ (1644-1694) – ஹைக்கூவை ஒரு எளிமையான மற்றும் ஆழ்ந்த ஆன்மீக அழகைக் கொண்ட ஒரு கலை வடிவமாக உயர்த்திய ஜப்பானின் மிகச் சிறந்த கவிஞர் . இவரது ஹைக்கூ கவிதைகளுக்கு நிகரானது அவரது உரைநடை.
எவ்விதமான அலங்காரமும் இன்றி எளிய விஷயங்களை, நிகழ்வுகளை, இயற்கையை நேரடியாக எழுத முற்படுகிறேன் என்றே பாஷோ குறிப்பிடுகிறார். இது எளிய விஷயமில்லை.
உவமைகள், உருவகங்கள் இன்றி இயற்கையை எழுதுவதற்கு ஆழ்ந்த அவதானிப்பும் தனித்துவமான அகப்பார்வையும் தண்ணீரைப் போல இலகுவாக மொழியைக் கையாளும் திறமையும் வேண்டும். அது பாஷோவிடம் கைகூடியிருந்தது. முழுமையற்ற பூக்கள் என எதுவுமில்லை. சிறிய காட்டுப்பூ கூடத் தன்னளவில் முழுமையானதே. அது போன்றதே பாஷோவின் கவிதைகளும்.
ஜப்பானின் குறுக்கே பலமுறை நடந்து திரிந்தவர் பாஷோ. எளிய குடிசைவீடு ஒன்றில் வசித்த பாஷோ தனது சீடன் ஒருவனை உடன் அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணநூலில் ஜப்பானின் வடக்கு மாகாணங்கள் வழியாக அவர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார்.
இந்தப் பதிப்பில் மொழிபெயர்ப்பாளர் சாம் ஹாமில் எழுதிய மட்சுவோ பாஷோ பற்றிய அறிமுகம் மிக முக்கியமானது. பாஷோவின் எழுத்துக்களில் மிக முக்கியமானவற்றைக் கொண்ட முழுமையான ஒற்றைத் தொகுப்பாக இது அமைந்திருக்கிறது
பாஷோவை ஏன் மறுபடி மறுபடி வாசிக்கிறேன். பாஷோ ஒரு ஜென் துறவி. நிகரற்ற கவி. அவர் தனது கவிதையின் வழியாகவும் தனது பயணங்களின் வழியாகவும் வாழ்வின் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கிறார்.
பொருளீட்டுதல் மட்டுமே வாழ்க்கை எனக் கருதும் பொதுப்புத்திக்கு மாற்றாக இந்த வாழ்க்கை நாம் தேடிக்கண்டடைய வேண்டியவற்றின் தொகுப்பு என்பதை அடையாளம் காட்டுகிறார்.
பயன்பாடு என்ற ஒற்றை அளவு முறையைக் கொண்டு எல்லாவற்றையும் மதிப்பீடு செய்வது தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
சங்க காலத்தில் கவிதை பாடுவதற்காகப் பாணர்களும் பாடினிகளும் ஊர் ஊராகப் போயிருக்கிறார்கள். யாசித்துப் பொருள் பெற்று வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் கவிதைகள் தான் இன்று நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அவர்கள் மேற்கொண்ட பயணங்களும் அதன் வழிப்பெற்ற அனுபவங்களும் வாசிக்கக் கிடைக்கவில்லை.
பயணத்தின் வழி பெற்ற அனுபவங்களின் தெறிப்பைக் கவிதைகளில் மட்டுமே காண முடிகிறது.
குறிஞ்சியைப் பாடிய கபிலன் நிச்சயம் தனது பயணத்தில் பெருமழையை எதிர்கொண்டிருப்பான். அந்த மழைநாளின் நினைவு எங்கே போனது. மாங்குடி மருதன் வீடு திரும்பும் போது விடிகாலை நிலவு கண்ணில் படாமலா போயிருக்கும். வெள்ளி வீதியார் வானில் கடைசியாகச் செல்லும் கொக்கின் பாடலை கேட்காமலா போயிருப்பார்.
தமிழ் கவிஞர்கள் மேற்கொண்ட பயணங்கள் எதுவும் எழுத்தில் பதிவு செய்யப்படவில்லை.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாஷோ தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒரு பயணம் என ஆண்டின் எட்டு மாதங்கள் பயணத்தில் கழித்திருக்கிறார்.
தனது பயணத்தில் வழியிலுள்ள பௌத்த ஆலயங்கள், நினைவிடங்களைக் காணுகிறார்.. சில நேரம் பெரு மலைத்தொடர்களையும் தீவுகளையும் மலர்களையும் ஆற்றின் சுழிப்பையும் காணுவதற்காகப் பயணிக்கிறார்.
துணைக்கு ஒரேயொரு சீடன் உடன் வருகிறார். நோயுற்ற நிலையில் அவரும் பாஷோவை தனித்துவிட்டுப் பிரிந்து போகிறார்.
எந்தத் துணையும் நிரந்திரமில்லை என்பதைப் பாஷோ நன்றாக உணர்ந்திருக்கிறார். தனித்துவிடப்பட்டவுடன் தூரம் அதிகமாகிவிடுகிறது. வழி நீண்டதாகிவிடுகிறது. பேச்சுத்துணை இல்லாத பயணம் கனத்த மனதுடன் செல்லும் பயணமாகிவிடுகிறது. சந்தோஷத்தையும் வருத்ததையும் பகிர்ந்து கொள்ள யாருமில்லாத போது சாலையில் தென்படும் பறவைகளும் விலங்குகளும் தோழமை கொண்டதாக மாறுகின்றன. சூரியன் மட்டுமில்லை தானும் மௌனமாகவே இருப்பதாகச் சாமந்தி பூ கூறுவதாக அப்போது தான் பாஷோவால் வெளிப்பபடுத்த முடிகிறது.
இந்தப் பயணங்களின் வழியே பாஷோ ஜப்பானின் ஆன்மாவை அறிந்து கொள்கிறார். அந்தத் தேசத்தின் விவசாயிகள். தொழிலாளர்கள். சுகப்பெண்கள், கலைஞர்கள். போர்வீரர்கள். அதிகாரிகள். மீனவர்கள். கூலிகளை நேரடியாக அறிந்து கொள்கிறார். அத்தோடு பௌத்த சமயம் ஜப்பானில் எந்த அளவு அழுத்தமாக வேர் பிடித்துள்ளது என்பதையும் நேரடியாக உணருகிறார்.
காற்றும் வெளிச்சமும் தண்ணீரும் மரத்தின் கனியைக் கனியவைத்து ருசிமிக்கதாக்குவது போலவே பயணம் பாஷோவை நிகரற்ற கவியாக உருமாற்றுகிறது.
பயண வழியில் பாஷோவை சந்திப்பவர்கள் அவரிடம் கவிதை கேட்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு ஒரு கவிதையை எழுதி தருகிறார். சில நேரங்களில் துணியில் கவிதையை வரைந்தும் கொடுக்கிறார்.
வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண் திடீரென அவரை நிறுத்தி தனக்கு ஒரு கவிதை வேண்டும் என்கிறாள். அவளது அழகை வியந்து கவிதை பாடுகிறார். பாஷோ ஹைக்கூ கவிதையை வாசனை திரவியம் போல உருமாற்றிவிடுகிறார். யாருக்குத் தான் இனிய சுகந்தம் பிடிக்காமல் போகும்.
ஒவ்வொரு முறை இந்த நூலை வாசிக்கும் போது மின்னல் வெளிச்சத்தில் உலகைக் காணுவது போன்ற பரவசம் ஏற்படுகிறது.
பாஷோ பெரும்பாலும் தனது பயணத்தை விடிகாலையில் தான் துவங்குகிறார். இரவு என்பது ஆயிரம் மைல் நீளமானது என்றொரு பழமொழி ஜப்பானிலிருக்கிறது. அதன் பொருள் இரவு முடிவற்றது என்பதாகும்.
மின்சாரம் அறிமுகம் ஆகாத காலத்தின் இரவும் இன்றைய இரவும் ஒன்றல்ல. அன்றிருந்த இரவு மிக நீளமானது. ஆழமானது. புதிரானது.
மின்சாரம் இரவின் ஆழத்தை, வசீகரத்தைக் குறைத்துவிட்டது. இரவின் சுகந்தம் இன்று நுகரப்படுவதில்லை. அதிக வெளிச்சம் இரவை நிர்வாணப்படுத்திவிட்டது.
பாஷோவின் காலத்தில் இரவு மர்மமும் வசீகரமும் தேற்றுதலும் கொண்ட மாயப்பரப்பாக இருந்தது. தீப்பந்த வெளிச்சத்தில் காவல் வீரர்கள் கோட்டையின் மீது நின்று இருளை வெறித்துப் பார்த்தபடியே இருப்பார்கள். கிராமங்கள் முழுமையாக இருளில் மூழ்கியிருக்கும். சாலைகளில் எவரையும் காணமுடியாது. தெருவிளக்குகள் கிடையாது. உள்ளங்கையின் ரேகைகளைக் கூட இருள் மறைத்துக் கொண்டுவிடும்.
இரவெனும் மாயத்திரவம் பெருகியோடி உலகை நிரப்பிவிடும். அதிலும் பனிக்கால இரவுகள் நோயாளியின் மூச்சை போலச் சீரற்று நடுங்கிக் கொண்டிருப்பவை. குழப்பமானவை. பனிக்காலத்தில் காற்றின் ஓலமும் வேகமும் அதிகமாகிவிடும். உறங்கும் மனிதர்களின் கனவிற்குள் குளிர் புகுந்து அவர்களை ஆட்டுவிக்கும். விடிகாலையின் வெளிச்சம் எப்போது பிறக்கும் என மக்கள் காத்திருப்பார்கள்.
சூரியனின் கருணையால் மட்டுமே உயிர்கள் வாழ முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். மனிதர்கள் மட்டுமில்லை. பறவைகளும் விலங்குகளும் கூட இரவிற்குக் கட்டுப்பட்டேயிருந்தன. இந்த உலகிற்குள் தான் பாஷோ பயணம் செல்கிறார். வழியில் தென்படும் இடங்களில் தங்கிக் கொள்கிறார்.
கால் நோக பகலிரவாக நடந்து செல்கிறார். மண்ணையும் மலையையும் மரங்களையும் மனிதர்களையும் காணுகிறார்.
இயற்கையைச் சரியாக அறிந்து கொள்வதில் தான் ஞானம் பிறக்கிறது என்று ஒரு இடத்தில் பாஷோ சொல்கிறார்.
ஒரு பொருளை அதன் பெயரைக் கொண்டு, உபயோகத்தைக் கொண்டு மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதன் உண்மை இயல்பை, தனித்துவத்தை, அறிய விரும்பவேயில்லை
இயற்கையை வகைப்படுத்த நமக்குத் தெரிந்திருக்கிறது. பெயர் வைத்த மாத்திரம் ஒரு பொருளின் ரகசியங்கள் மறைந்துவிடுகின்றன. பெயர் ஒரு அடையாளம் மட்டுமே. புல் ஒரு போதும் தனது பெயர் புல் என்பது குறித்துக் கவலை கொள்வதில்லை. அதற்கு அந்தப் பெயர் முக்கியமும் இல்லை.
மேகங்களுக்குப் பெயர்கள் கிடையாது. அதற்காக மேகங்கள் அர்த்தமற்றவையாக இருப்பதில்லை. கொக்கு என்ற ஒரே பெயரில் எல்லாக் கொக்குகளும் அழைக்கப்படுகின்றன. ஆனால் எல்லாக் கொக்குகளும் ஒன்று போல இருப்பதில்லை. தனக்கென ஒரு தனித்துவமான பெயர் வேண்டும் என மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் கவலைப்பட்டதில்லை.
தோற்ற அளவில் உலகைக் காணுவதும் அப்படியே ஏற்றுக் கொள்வதும் பெரும்பான்மையினருக்குப் போதுமானதாகயிருக்கிறது. ஆனால் ஒரு கவிஞனுக்குப் பெயர்களைத் தாண்டி, அர்த்தம் தாண்டி தோற்றம் தாண்டி பொருட்களையும் மனிதர்களையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு சிறுபொருளும் சிறு நிகழ்வும் அதற்கெனத் தனியான அழகுடன் இருப்பதைக் கவிஞனே கண்டுபிடிக்கிறான். கவிதையின் வழியாகவே உலகம் பிரகாசமடைகிறது. புது அர்த்தம் பெறுகிறது
பாஷோ தனது பயணத்தின் போது எதிர்பாரமல் மழையை எதிர்கொள்கிறார். வாழ்நாளில் எவ்வளவோ முறை மழையைக் கண்டிருந்தாலும் இப்போது எதிர்கொள்ளும் மழை மீதான வியப்பு மாறவேயில்லை. இரண்டு மழைத்துளிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை அவர் காணுகிறார். மழைத்துளியின் அவசரத்தைக் கண்டறிகிறார். காற்றுக்கும் மழைக்குமான உறவைப் பற்றி யோசிக்கிறார். மழையின் மௌனத்தை, குரலைக் கேட்கிறார். மழை வெளியே திரவமாகவும் அகத்தில் புகை போலப் பழைய நினைவுகளைக் கிளரச் செய்வதையும் உணருகிறார். கண் வழியாக மட்டும் மழையை அறிந்து கொள்ள முடியாது என்பதையே பாஷோ நமக்குக் கற்றுத் தருகிறார்.
ஒரு அருவியைக் காணச் செல்லும் பாஷோ ஆர்ப்பரிக்கும் அந்த அருவியில் மலர் ஒன்றில் இதழ்கள் ஒவ்வொன்றாகத் தானே பறந்து விழுவதைத் தனது கவிதையில் பதிவு செய்கிறார்.
அருவியில் தன்னைக் கரைத்துக் கொள்ள முயற்சிக்கும் மலரின் இதழ்கள் போன்றது தான் மனித வாழ்க்கையா. இல்லை மலரின் இதழ்களுக்கு அருவியின் கூச்சல் பொருட்டேயில்லையா.
பேரருவி ஒன்றும் அதில் சேர்ந்து விழும் மலரின் இதழும் மறக்கமுடியாத காட்சிப்படிமமாக மனதில் விரிகிறது.
மலரின் மௌனமும் அருவியின் கூச்சலும் ஒன்று கலந்துவிடுகின்றன. தெறிக்கும் நீர் திவலைகளும் மலரின் இதழ் போல அருவியின் இதழ்கள் தானோ என மனம் யோசிக்கத் துவங்கிவிடுகிறது.
பாஷோ சட்டென அருவியின் பிரம்மாண்டத்தை இடம் மாற்றிவிடுகிறார்.. அருவியும் நிரந்தரமானதில்லை. மலரின் இதழ்களும் நிரந்தரமானதில்லை. இரண்டும் அந்த நிமிசத்தின் அழகில் தான் வசீகரமாகயிருக்கின்றன.
பாஷோவிற்கு மிகவும் பிடித்தமான கவிஞர் டூ பு. (TU FU) 730 களில் வாழ்ந்த டாங் வம்சத்தின் ஒரு முக்கியச் சீனக் கவிஞர் .டூபுவின் தாய் அவர் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார், ஆகவே வளர்ப்புத் தாயால் வளர்க்கபட்டார். தத்துவம் வரலாறு ஆகியவற்றைக் கற்ற டூ பு அரசுப் பதவியில் சேரவேண்டும் என்பதற்காகப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். சீனாவின் குறுக்காக இவர் மேற்கொண்ட பயணங்களும் அப்போது பாடிய பாடல்களும் அவரைத் தனித்துவமிக்கக் கவியாக அடையாளப்படுத்துகின்றன.
பாஷோ தனது பயணத்தில் பல இடங்களில் டூ புவை நினைவு கொள்கிறார். தான் அவரைப் போன்ற மகத்தான கவிஞனில்லை என்று அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறார்.
ஒரு மழைக்காலத்தின் போது ஒரு இடத்தில் கொக்குகள் தண்ணீரில் நிற்பதை பாஷோ காணுகிறார். சட்டெனக் கொக்குகளின் கால்கள் சிறியதாகிவிட்டது போல அவருக்குத் தோன்றுகிறது. காரணம் அவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஒரு நிமிசம் பளிச்சிட்டுப் போன இந்த மயக்கநிலையை மழைக்காலத்தின் தனித்துவமாகக் கருதி கவிதையாக்கி விடுகிறார் பாஷோ.
ஒரு ஆண்டில் எட்டு மாதங்கள் நடந்து சுற்றியலையும் பாஷோ பயணியின் அடிமனதில் தனது சாவு எதிர்பாராமல் ஏதோ ஒரு சாலையில் நிகழக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது என்ற உண்மையைச் சொல்கிறார். நான் அறிந்த பயணிகள் பலரும் இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். நீண்டதூர பயணத்தினை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஒருவன் வீடு திரும்பும் போது அடையும் சந்தோஷம் என்பது எளிய விஷயமில்லை.
இது போலவே பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை எதிர்பாராத ஊரில் சந்திப்பதும் உறவாடுவதும் பாஷோவை அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நண்பர்களே வயதைப் பின்னோக்கி அழைத்துப் போகிறார்கள் என்கிறார் பாஷோ.
நீண்ட மலைப்பாதையில் தனியே பயணம் செய்யும் போது தனது ஒரே துணை காற்று மட்டுமே என்று பாஷோ சொல்வதை நீங்கள் உணர வேண்டுமெனில் ஆள் அற்ற மலைப்பாதையில் ஒருமுறை பயணம் போய்ப் பாருங்கள். காற்றின் தோழமை எவ்வளவு இனிமையானது என்பது புரியும்.
ஒரு இடத்தில் எந்தப் பாதையில் செல்வது எனப்புரியாமல் ஒரு விவசாயியிடம் வழி கேட்கிறார் பாஷோ. அதற்கு விவசாயி நிறையக் கிளைவழிகள் இருப்பதால் வழி சொல்வது எளிதானதில்லை. எப்படியும் வழிமாறிப்போய்விடுவீர்கள். எனது குதிரையைத் தருகிறேன். அதற்கு வழி தெரியும். அது மலையைக் கடந்து சென்று உங்களை இறக்கிவிடும். பிறகு குதிரையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அதுவாக வீடு வந்து சேர்ந்துவிடும் என்கிறார்.
அது போலவே அந்த விவசாயியின் குதிரையில் ஏறி பயணிக்கிறார். பழகிய குதிரைக்கு எந்தப் பாதையில் போக வேண்டும் என்று சரியாகத் தெரிந்திருக்கிறது. மலையைக் கடந்து அவரைக் குதிரை இறக்கிவிட்ட போது வெறுமனே குதிரையைத் திருப்பி அனுப்பிவைக்க மனதின்றி ஒரு பரிசை குதிரையின் கழுத்தில் கட்டி அனுப்பி விடுகிறார்.
பரிசுடன் வீடு நோக்கிச் செல்லும் குதிரையைப் பற்றி ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார்.
கழுத்தில் சிறிய பரிசுடன் வீடு திரும்பும் விவசாயியின் குதிரை என்பது மறக்கமுடியாத காட்சிப்படிமம்.
இன்னொரு இடத்தில் முழுநிலவின் வெளிச்சம் பாறைகளைக் கூட இளகியோடும்படி செய்கிறது. இந்த வெளிச்சம் புத்தரின் பெருங்கருணை என்றே பாஷோ சொல்கிறார். காலைநேரத்து இளவெயில் ஒரு இலையின் மீது ஊர்ந்து போவதையும், இரவில் பெய்த பனியில் நனைந்து நிற்கும் வைக்கோல் வீரனின் ஈரச்சட்டையையும், பௌத்த மடாலயத்தில் இரும்பு பாத்திரத்தில் மழை பெய்யும் போது அழுகுரல் போலச் சப்தம் ஒலிப்பதையும் பாஷோ தனது பயணக்குறிப்பில் பதிவு செய்கிறார். கண்டுகொள்ளப்படாத விஷயங்களின் மீது பார்வையைக் குவியச் செய்யும் பயிற்சியாகவே இவற்றைக் காணுகிறேன்.
மலைப்பிரதேசம் ஒன்றில் ஒரு இடத்தில் இளவரசி ஒருத்தியின் கல்லறையைக் காணுகிறார். எதற்காக இங்கே இளவரசி புதைக்கப்பட்டிருக்கிறார். ஏன் அரச குடும்பத்தைச் சார்ந்த எவரும் அங்கே வந்து போவதில்லை என்று விசாரிக்கிறார். ஒருவருக்கும் அது பற்றித் தெரியவில்லை. கைவிடப்பட்டபின்பு சாமானியனும் இளவரசியும் ஒன்றே என்பதைத் தனது பயணக்குறிப்பில் பதிவு செய்கிறார்.
மலைத்தொடரை முழுமையாகக் காண வேண்டும் என்றால் பறவையின் சிறகுகள் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு குறிப்புச் சொல்கிறது.
இன்னொரு இடத்தில் பாஷோவும் அவரது சீடனும் இரவு தங்குவதற்காச் செல்கிறார்கள். யாருமற்ற இடிந்த கட்டிடமது. வைக்கோலைக் கொளுத்தி நெருப்பு உண்டாக்கி அந்த வெளிச்சத்தில் படுக்கையைத் தயார் செய்கிறார்கள். வைக்கோல் நெருப்பில் அந்த இடம் கொள்ளும் விசித்திர தோற்றம் பற்றி ஒரு கவிதையை எழுதுகிறார் பாஷோ.
இன்னொரு இடத்தில் அவரைத் துறவியென நினைத்த ஒரு வழிப்போக்கன் தானும் அவரோடு புனிதப்பயணம் வருவதாகச் சொல்கிறான். தாங்கள் புனித பயணம் செல்லவில்லை. புனிதங்களைக் கடக்கும் பயணம் மேற்கொள்கிறோம் எனப் பாஷோ புரிய வைக்கிறார்.
ஒரு தீவினை கடந்து போகையில் மீனவன் ஒருவன் முதுகில் வெயில் படத் தனியே அமர்ந்திருப்பதைக் காணுகிறார். சூரியனுக்கு முகம் கொடுத்தபடி அந்த மீனவன் தன்னை ஒரு தாவரம் போல உருமாற்றிக் கொண்டுவிட்டான். அவனது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அவரையும் சந்தோஷம் கொள்ள வைக்கிறது. வெறுமனே அமர்ந்திருத்தல் என்பது சந்தோஷத்தின் வெளிப்பாடு என்று பாஷோ குறிப்பிடுகிறார்.
நிலவும் காற்றும் சூரியனும் மழையும் அவரது நிரந்தர வழித்துணையாக இருக்கிறார்கள்.
நான் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே பாஷோவைப் பின் தொடருகிறேன்.
வண்ணத்துப்பூச்சி தன் கால்களில் காட்டைச் சுமந்தலைகிறது’ எனத் தேவதச்சன் கவிதை வரி ஒன்றிருக்கிறது.
பாஷோ தான் காட்டைச் சுமந்து செல்லும் அந்த வண்ணத்துப்பூச்சி. அவரது பயணக்குறிப்புகளின் வழியே நாம் காணும் வெளிச்சம் நிலவொளி போன்றதே.
23/1/20