எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத திரைப்படங்களை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. ஏழு திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் என்ற தனிவகைச் சினிமாவை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி.

அவரது காட்சிக்கோணங்களும் ,இசையைப் பயன்படுத்தும் விதமும், பரபரப்பான கதைத்திருப்புகளும் மறக்கமுடியாதவை. எவரது நிர்ப்பந்தத்திற்கும் கட்டுப்படாமல் நான் படங்களை இயக்கக்கூடியவன் என்கிறார் செர்ஜியோ. இவரது தந்தையும் ஒரு திரைப்பட இயக்குநரே.
முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இவரும் இசையமைப்பாளர் எனியோ மோரிகோனும் பள்ளி நண்பர்கள். இவர்கள் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் உன்னதமானவை
எனியோ மோரிகோன் திரையிசை பற்றி இப்படத்தில் குறிப்பிடுவது முக்கியமானது. ஒரு காட்சியில் கதாபாத்திரம் வெளிப்படையாகப் பேசாத விஷயத்தை இசை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை அழகாக விவரிக்கிறார்.

செர்ஜியோ லியோனி பற்றிய ஆவணப்படமானSergio Leone: The Italian Who Invented America 2022ல் வெளியானது. பிரான்செஸ்கோ ஜிப்பல் இதனை இயக்கியுள்ளார். வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தில் செர்ஜியோவின் பிள்ளைகள் அவரைப் பற்றி நினைவுகூறும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பில் குழந்தையாகக் கலந்து கொண்ட நாட்கள் துவங்கி அவரது திரை வாழ்க்கை அதன் வெற்றிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்பு Once Upon a Time in America படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் வரை அவர்கள் நினைவு கொண்டது உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் தாங்கள் செர்ஜியோ லியோனியிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம், அவரைப் போல இன்னொரு இயக்குநர் உருவாக முடியாது என்கிறார்கள்.

செர்ஜியோ லியோனியின் நாயகர்களுக்குப் பெயர் கிடையாது. அவர்கள் அடையாளப்பெயரிலே அறியப்படுகிறார்கள். அவர்களுக்கெனச் சொந்த உலகம் இருக்காது. துப்பாக்கி போல அவனும் ஒரு கருவி மட்டுமே. ஆனால் அவன் ஒரு இசைக்கும் துப்பாக்கி போலச் செயல்படுகிறான். ஆம். அவனது துப்பாக்கியிலிருந்து எழுவது வியப்பூட்டும் இசையே. படத்தில் அவன் அதிகம் பேசுவதில்லை. எதற்கும் பயப்படுவதில்லை. ஒரு இடத்தில் தங்கிவிடுவதுமில்லை. அவன் நிரந்தரப் பயணி போலவே செயல்படுகிறன.

கிளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் டி நிரோ மார்ட்டின் ஸ்கோர்செஸி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், க்வென்டின் டரான்டினோ, ஃபிராங்க் மில்லர், டேரன் அரோனோஃப்ஸ்கி, ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்கள்.
ஏன் இன்றும் செர்ஜியோ லியோனி முக்கியமான இயக்குநராகக் கருதப்படுகிறார் என்பது குறித்தே படம் பேசுகிறது.
அவரது திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் வெஸ்டர்ன் சினிமாவின் நுணுக்கங்கள் குறித்து ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்
லெனின்கிராடு முற்றுகை குறித்து ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று செர்ஜியோ லியோனி ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் படமாக்க விரும்பிய முறை பற்றி இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்கள்.
Once Upon a Time in the West துவக்கக்காட்சியை வியந்து பேசும் இயக்குநர்கள் அது போன்ற ஒரு தலைப்பு காட்சி இதுவரை எந்தப்படத்திலும் இடம்பெறவில்லை என்கிறார்கள். அது உண்மையே.

குதிரைகளின் குளம்பொலி மற்றும் துப்பாக்கிச் சண்டை, பாம்வெடிப்பது போன்றவற்றிற்கான சிறப்பு ஒலிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை இன்னொரு காட்சியில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்கள்.
ஹாலிவுட்டின் வணிக சந்தை அவரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. Once Upon a Time in America படத்தின் நீளம் அதிகமாகவுள்ளது என்று தயாரிப்பாளர்கள் நேரத்தைக் குறைத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது லியோனிக்கு பிடிக்கவில்லை. இப்போது அப்படத்தின் Uncut Version வெளியாகியுள்ளது. 4 மணி நேரம் 10 நிமிஷம் கொண்ட அந்தப்படம் தரும் அனுபவம் நிகரில்லாதது.
செர்ஜியோ லியோனி மறைந்து முப்பது ஆண்டு நிறைவானதைக் குறிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது
ஜுலை 13 .2023