பெயரும் நினைவும்

அமெரிக்க உரைநடைக்கவிதையில் குறிப்பிடத்தக்கவர் ரஸல் எட்சன். இவரது கவிமொழியும் கருப்பொருட்களும் வசீகரமானவை. அபத்தமும் விசித்திரமும் கொண்ட உரைநடைக்கவிதைகளை எழுதுகிறார்.

ரஸல் எட்சனின் தந்தை ஒரு கார்டூனிஸ்ட். ஆகவே ரஸலும் இளமையில் ஒவியத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

1950 களில் கவிதைகளை வெளியிடத் தொடங்கிய எட்சன். உரைநடை கவிதைகளில் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்.

GODFATHER OF THE PROSE POEM IN AMERICA என்று சிறப்பிக்கப்படும் எட்சன் Appearances, (Thing Press, 1961); A Stone Is Nobody’s, (Thing Press, 1961); The Very Thing That Happens, (New Directions, 1964); The Brain Kitchen, (Thing Press, 1965 ); What a Man Can See, (The Jargon Society, 1969); The Childhood of an Equestrian, (Harper & Row, 1973); The Tunnel: Selected Poems, (Oberlin College Press, 1994); The Tormented Mirror, (U. of Pittsburgh Press, 2000) போன்ற கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்

இவரது கவிதை ஒன்றில் ஒரு மனிதன் தனது தலையில் தலை என்று எழுதி ஒட்டிக் கொள்கிறான். இது போலவே காலில் கால் என்று எழுதிக் கொள்கிறான். தன் உடலை அதனதன் பெயர்களுடன் இணைப்பது அவனுக்கு வேடிக்கையான விளையாட்டு. அவனது தந்தையிடம் தந்தை எனப் பெயர் எழுதிமாட்ட முயல்கிறான். அவரோ தந்தை என்பது தனிநபரில்லை என்கிறார். இது போலத் தான் தாயும். வீட்டில் உணவு தயாராகிறது. அவன் உணவின் மீது டின்னர் என்று பெயர் எழுதி ஒட்டுகிறான். முடிவில் இந்தச் செயல் கடவுள் மீது கடவுள் எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும் என எழுதி ஒட்ட வேண்டும் என்பதுடன் நிறைவு பெறுகிறது.

பெயரிடுதல் என்பது நினைவு கொள்ளுதலின் முதற்படி. வித்தியாசப்படுத்துதல் பெயர்களின் வழியே தான் துவங்குகிறது. பைபிளில் ஆதாம் எல்லா உயிர்களுக்கும் பெயரிடுகிறான். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூற்றாண்டுகள் நாவலில் இது போலப் பொருட்களுக்குப் பெயர் மறந்து போகவே அதனதன் பெயர்களை எழுதி ஒட்டுகிறார்கள்.

பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. ஒரு பறவை தனது பெயரைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. ஒட்டகச்சிவிங்கி தன்னை ஒட்டகச்சிவிங்கி என்று நினைப்பதில்லை. அதைப் பற்றி யோசிக்காமல் ஒட்டகச்சிவிங்கியாகவே இருக்கிறது

கை, கால், கழுத்து, தலை, தந்தை தாய் என்ற பொதுப்பெயர்கள் அடையாளமாகவும் அடையாளத்திற்கு வெளியிலும் இருக்கின்றன. ஒன்றை எழுதுவது என்பது நினைவு கொள்வதன் வடிவமாகும். இந்தக் கவிதையில் வெளிப்படுத்தும் அபத்தம் நமது அடையாளங்கள் குறித்த கேள்வியை எழுப்புகின்றன

இன்னொரு கவிதையில் கல் ஒன்றை எடுத்து ஒளித்து வைக்கும் ஒருவன் கற்கள் நெடுதுயிலில் இருக்கின்றன என்கிறான். அத்தோடு எல்லாக் கற்களும் சிறைப்படுத்தப்பட்டவை என்கிறான். ஒரு கல்லிற்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பதைப் பற்றிய சிந்தனைகளோ, கவலைகளோ கிடையாது. நித்தியத்துவமும் கற்களும் தாயும் மகளும் போன்றவை என்றும் கவிஞன் கூறுகிறான். நமக்குத் தான் வயதாகிறது. கற்களுக்கு வயது கிடையாது. கற்களைக் கையில் எடுத்துக் கொண்டதால் அதைச் சொந்தமாக்கிவிட்டதாக எண்ண முடியாது. கற்கள் யாருக்கும் சொந்தமானவையில்லை. அது நேசிக்கப்படாத மனிதனைப் போலவே எப்போதுமிருக்கிறது என்கிறார் ரஸல் எட்சன்

இன்னொரு கவிதையில் நெருப்பு தனக்கு மிகவும் பசியாக இருப்பதைப் பற்றிப் பேசுகிறது. ஒரு மரக்கட்டையைத் தின்பதன் வழியாகத் தனது பசியை ஆற்றிக் கொள்ள முடியவில்லை என்றும். நெருப்பிற்கும் சிறு தூக்கம் உண்டு என்றும் கவிதை நீள்கிறது

தன் முன்னே நிற்பதைக் காட்ட முடியாது எனக் கண்ணாடியால் மறுக்கமுடியாது என்றொரு வரியை எட்சன் எழுதியிருக்கிறார். உதிரும் இரண்டு இலைகளைக் கையில் பிடித்துக் கொண்ட ஒருவன் தானே ஒரு மரம் என்கிறான் இன்னொரு கவிதையில்

ரஸல் எட்சனின் உலகம் கனவுவெளி போலவே இருக்கிறது. சல்வதோர் டாலியின் சர்ரியலிச ஓவியங்களைப் போலவே எட்சன் கவிதைகள் எழுதியிருக்கிறார். அன்றாட உலகில் எவையெல்லாம் பலவீனமாகக் கருதப்படுகிறதோ அவை எல்லாம் இவரது கவிதையில் பலசாலியாக மாறுகின்றன. ஒரு முயல் ஒரு மனிதனைக் கொல்கிறது. புற்கள் ஆவேசமாகச் சண்டையிடுகின்றன. அமைதியான அம்மாவின் முதுகில் ஒரு முகம் தோன்றுகிறது. மரத்தால் செய்யப்பட்ட தலை கொண்ட ஒரு மனிதன் வாழுகிறான். நிறையக் கைகள் இருந்தால் தான் ஒரு குடை போலாகிவிட முடியும் என்கிறான் வேறு ஒரு மனிதன். கடிகார முள் ஒருவனது கழுத்தை வளைத்துக் கொள்கிறது

அன்றாட உலகை விசித்திரமாக்குவதன் வழியே அது உருவாக்கிய சலிப்புத் தன்மையும் பயன்பாடும் விலகிப் போகிறது. மேலும் தினசரி வாழ்க்கைக்குள் நாம் அறியாத ரகசியங்கள். புதிர்கள். அபத்த நிகழ்வுகள் கலந்திருக்கின்றன என்பதையும் உணர முடிகிறது.

சமையலறையைத் தனது கவிதைகளில் ஒரு முக்கியக் குறியீடாக ரஸல் எட்சன் மாற்றுகிறார். நிறையக் கவிதைகளில் சமையலறையின் உலகம் முதன்மையாகச் சித்தரிக்கபடுகிறது

அது போலவே கடிகாரங்களும் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. கடிகாரம் 12 எண்களைக் கொண்டிருப்பதையும் தனக்குப் பத்து விரல்கள் மட்டுமே இருப்பதையும் ஒப்பிட்டு ஒருவன் தான் கடிகாரத்தை விடவும் குறைந்தவன் என்று நினைக்கிறான். தனது இரண்டு கண்களையும் சேர்த்துக் கொண்டால் தனக்கும் பனிரெண்டு வந்துவிடும் என்று சொல்கிறான். வேறு கவிதையில் ஒருவனின் கைக்கடிகாரம் அவனது மணிக்கட்டில் உருகிப் போகிறது

இன்னொரு கவிதையில் ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்ட எல்லாச் சொற்களும் உதிர்ந்துவிடுகின்றன. புத்தகம் வெற்றுகாகிதங்களால் உருவாக்கப்பட்டதாக மாறிவிடுகிறது. உதிர்ந்த சொற்களுடன் முற்றுப்புள்ளிகள். ஆச்சரியக்குறிகள். கேள்விக்குறிகள் யாவும் உதிர்ந்து கிடக்கின்றன. தனித்துக் கிடக்கும் ஒரு கேள்விக்குறிக்கு என்ன அர்த்தம் என்று கவிதை கேட்கிறது. அதில் வெற்றுக்காகிதங்கள் ஆபத்தானவை. அதில் எவையும் எழுதப்படக்கூடும் என்றொரு அவதானிப்பும் சொல்லப்படுகிறது

ரஸல் எட்சனை படிக்கும் போது கவிதை ஒரு மாயத்திரவம் போல எதையும் உருமாற்றிவிடுவதை உணருகிறோம். வேறு ஒரு கவிதையில் ஒரு பையன் வீட்டின் மூலையாக மாறிவிடுகிறான் என்ற வரியைப் படித்தபோது அதிலிருந்து விடுபட முடியவேயில்லை

ஒரு பொம்மை தயாரிப்பவன் தனக்கென ஒரு பொம்மை மனைவியை உருவாக்கிக் கொள்கிறான். அவளோ ஒரு பொம்மை குழந்தையைப் பெறுகிறாள். அவர்கள் ஒரு பொம்மை வீட்டில் வசிக்கிறார்கள். அங்கே சில பொம்மை ஆண்டுகள் கடந்து போகின்றன என்றொரு கவிதையிருக்கிறது.

ஒரு மனிதன் ஒரு வாகனத்தை மணந்து கொள்வதாக வேறு ஒரு கவிதை துவங்குகிறது. இந்த ஒற்றை வரியின் வழியே வாகனம் குறித்த நமது புரிதல் சட்டென மாறிவிடுகிறது.

ஒரு பெண் ஒரு கிழவரைப் பெற்றெடுத்தாள் என இன்னொரு ஒரு கவிதையில் சொல்லப்படுகிறது. ஒரு பெண் தவளையைப் பெற்றெடுக்கிறாள். கனவு ஒரு நாடகமேடை போலாகிறது. தொட்டிலில் போடப்பட்ட குழந்தை திடீரென மரத்துண்டாகிவிடுகிறது. உறக்கத்தில் ஒரு முதியவரின் உடல் அதன் எல்லைகளை அறியாமல், உருகி வழியும் மெழுகு போல. தரையில் .சொட்டுகிறது இப்படி முடிவில்லாத விசித்திரங்களின் தொகுப்பாகக் கவிதைகள் காணப்படுகின்றன

காலத்தின் அடையாளத்தை உருமாற்றுவதும் நித்தியத்துவத்தின் குரலை ஒலிப்பதையும் எட்சனின் கவிதைகளில் காணமுடிகிறது யதார்த்த உலகினையும் மொழி வழியாக உணரும் அனுபவத்தையும் எதிர்நிலை கொள்ளச்செய்யும் இவர் இரண்டிற்குமான முரணை முன்வைக்கிறார். ஆகவே இவரது கவிதைகளில் அபத்தமும் கேலியும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகின்றன

புனைகதை வழியாக யதார்த்தம்மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. கவிதையோ கனவு நிலையை. மனதின் ஆழ்நிலையிலிருந்து வெளிப்படும் மொழிதலை முன்னெடுக்கிறது. கவிதையால் பேச முடியாது. உணர்த்த மட்டுமே முடியும் என்கிறார் எட்சன்

POETRY IS ALWAYS LOOKING FOR A LANGUAGE BECAUSE IT IS NOT NATURAL TO LANGUAGE AS FICTION IS. என்கிறார். இந்த மதிப்பீடு தான் அவரது கவிதைகளின் ஆதாரப் புரிதல்

•••

0Shares
0