பெருநகரப் பாணன்.


இது சென்ற ஆண்டு உயிர்மை இதழில் வெளியான கவிஞர் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரை. இது தற்போது வெளியாகி உள்ள எனது வாசகபர்வம் புத்தகத்தில் உள்ளது.



விளக்கு விருது பெற்றுள்ள கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியை சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். கையை பிடித்து கொண்டு நெருக்கமான மனதுடன் சிரித்தார். அவரது சிரிப்பு அற்புதமானது. அவரோடு பழகிய நினைவுகள் பீறிட்டன. வாசகபர்வத்திலிருந்து இந்த அத்யாயத்தை அதற்காகவே மறுபடி இதில் வெளியிடுகிறேன்


 **
இந்த ஆண்டு சென்னை புத்தக சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கவிஞர் விக்ரமாதித்யனை பார்த்தேன். நண்பர்கள் இளைஞர்கள் புடைசூழ மிதமான போதையும் சிரிப்பாக அலைந்து கொண்டிருந்தார். அருகில் சென்று அண்ணாச்சி என்று அழைத்தவுடன் முகத்தில் பரவசம் மின்ன கைகளை பிடித்துக் கொண்டு உரிமையும் அன்புமாக விசாரித்தார். அடர்ந்து நரைத்த தாடி சற்றே தளர்ச்சியடைந்து போன தோற்றம். எதற்கென தெரியாத படபடப்பு. எப்போதும் போலவே புதிதாக கவிதை எழுத துவங்கியுள்ள இளம் கவிஞர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். 



அண்ணாச்சி நீங்க அப்படி இருக்கீங்க என்று சொன்னவுடன் வெடித்து பீறிட்டது சிரிப்பு. பேசிக் கொண்டிருக்கும்போதே தொலைவில் தெரிந்த இன்னொரு நண்பருக்கு கையசைப்பு. கையில் என்ன புத்தகம் வைத்திருக்கிறேன் என்று வாங்கி பார்க்கும் ஆர்வம். சமீபத்தில் படித்த நாவல் பற்றிய விமர்சனம். புதிதாக வந்துள்ள சிறுபத்திரிக்கைகள் பற்றிய விசாரிப்பு என்று பத்து நிமிசத்திற்குள் அவர் மனதில் இருந்ததை பகிர்ந்து தந்துவிட்டு வேறுசில நண்பர்கள் அழைக்க என்னைக் கடந்து சென்று விட்டார்.



விக்ரமாத்தியனிடம் எனக்கு பிடித்தது அவரது அசலான சிரிப்பு. மற்றும் எப்போதும் தன்னை சுற்றி இளைஞர்களோடும் கொண்டாட்டத்துடனும் உள்ள இயல்பு. நான் அறிந்தவரை தமிழ்கவிஞர்களில் இவரைப் போல இளம்கவிஞர்களை வாசித்து. பாராட்டி, கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட வைக்கும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட கவி வேறு எவருமில்லை. இதை ஒரு கவிஇயக்கமாகவே செய்கிறார் எனலாம்.


அந்த வகையில் நவீன தமிழ் கவிதையுலகின் மிக முக்கியமான ஆளுமை விக்ரமாதித்யன். எப்போதும் என் நினைவுள்ள அவரது கவிதைகளில் ஒன்று.


கூண்டு புலிகள்


நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்


எழுத்தின் மீதான வேட்கையில் சென்னைக்கு வர நினைப்பவர்கள் எவருக்கும் ஆதர்சபிம்பமாக நிற்பது கவிஞர் விக்ரமாதித்யன் உருவமே. காரணம் விக்ரமாதித்யன்  கவிஞராக மட்டுமே வாழ்வது என்ற சவாலில் தன்வாழ்வின் பெரும்பகுதியை கழித்து இன்றும் சென்னையில் தனக்கென தனியாக தங்குமிடம் இன்றி கையில் காசின்றி பெருநகரப் பாணனைப் போல  தன்வீரியம் குறையாமல் கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பை சாத்தியமாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார்.


பத்திரிக்கை அலுவலகங்களில் தற்காலிக வேலைகள், நண்பர்களின் உதவி என்று நிரந்தரமான வருமானம் குறித்து எவ்விதமான உத்தரவாதமும் இன்றி மனைவி பிள்ளைகள் என்று சொந்த வாழ்வின் நெருக்கடிகள் காலைக் கவ்விய போதும் கூட தன் இயல்பை மாற்றிக்கொள்ளாது அதே உற்சாகத்துடன் செயல்பட்டவர் விக்ரமாதித்யன். இருபத்தைந்து ஆண்டுகாலமாக சென்னைக்கு வருவதும் போவதுவமாகயிருக்கிறார். எந்த அறையில் தங்குகிறார். யார் யாரை சந்திக்கிறார் என்பது ஒவ்வொரு முறையும் புதியதாகயிருக்கும்.


அவரது பயணங்களின் பின்னால் உள்ள இடர்களும் சிரமமும் நான் அறிவேன்.  பறவைகள் இளைப்பாறுதலுக்காக வழியில் உள்ள மின்சாரக் கம்பிகளில் அமர்வது போன்றது தான் அவரது சென்னைப்பயணங்கள். சொந்த வலிகள் குறித்து அதிகம் பகிர்ந்து கொள்கின்றவர் இல்லை அவர். அவர் கவிதைகளில் வெளிப்படும் ஆதங்கம் அளவு கூட நேர் பேச்சிலிருக்காது. ஆனால் தன்னை சந்திக்கின்றவர்களை உற்சாகப்படுத்தவதில் அவர் தனித்துவமானவர்.


ஒரு வகையில் வண்ணநிலவன், வண்ணதாசன், கலாப்ரியா, சி.மோகன், கந்தர்வன், துவங்கி,நான், கோணங்கி, ஜெயமோகன், வித்யாசங்கர், லட்சுமி மணிவண்ணன், அஜயன்பாலா, குறுமலைசுந்தரம். சமயவேல், பிரான்சிஸ்கிருபா, சங்கர ராம சுப்ரமணியம். தளவாய் சுந்தரம், பாலைநிலவன்,  முத்துமகரந்தன், மலைச்சாமி, திருபுவனம் சரவணன், கனகசபை, ராஜகோபால், ரமேஷ் வைத்யா. யவனிகா ஸ்ரீராம், கைலாஷ்சிவன், சிவா, அப்பாஸ், ஸ்ரீநேசன் என நீளும் மூன்று தலைமுறை படைப்பாளிகள் அனைவரின் படைப்புகளுக்கும் பின்னால் விக்ராமதித்யனின் நெருக்கமான பகிர்தலும், உண்மையான அக்கறையும் கலந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.


**
கவிஞனாக மட்டுமே வாழ்வது என்பது தமிழ் சூழலில் ஒரு பெரிய சவால். வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு பக்கம் இழுபட மறுபக்கம் கவிதைக்கான உரிய அங்கீகாரம் இன்றியும் படைப்பு சார்ந்த எதிர்வினைகள் , மறுவாசிப்புகள் இன்றி புறக்கணிக்கபட்ட தனிமையில் தள்ளப்படுவதே காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஒரு வேளை தமிழ்பராம்பரியமே இது தான் போலும். கவிஞனாக உரிய கௌவரத்துடனும் சுதந்திரமான மனதோடு எக்காலத்திலும் ஒரு கவிஞன் கூட வாழ்ந்தாக நான் அறியவில்லை.


மனம் நிறைய கவிதைகளுடன் காடு மலை கடல் என நடந்து அலைந்து புரவலனின் இடம் தேடி சென்ற கவிஞர்களை தான் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கவிதை பாட வயதும் இளமையான பெண் உடலும் தடையாக இருக்கிறது என்று முதுமை கொள்கிறாள் ஒளவையார். உலக இலக்கியத்தில் கவிதைக்காக இப்படி உருசிதைவு செய்து கொண்ட கவிஞர் வேறு எவரும் இருப்பார்களா எனத்தெரியவில்லை.


தமிழ் மரபில் கவிஞனாக வாழ்வது விரும்பி ஏற்றுக் கொண்ட சாபம் என்றே தோன்றுகிறது.


கவிஞனாக வாழ்வது என்பது ஒரு எதிர்ப்புணர்ச்சி. தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே வாழ்வை கொண்டு செல்ல முடியும் என்று உயர்நம்பிக்கை. கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பு அர்த்தப்படுகிறது என்ற பேருண்மை.


ஆனால் நடைமுறை வாழ்க்கை சாதாரண மனிதன் மீது சுமத்தும் பிரச்சனைகள், மனத்துயர்கள். வெளிக்காட்ட முடியாத அகநெருக்கடி போல நூறு மடங்கை கவிஞன் மீது அழுத்துகிறது. கற்பனைக்கும் நடப்பிற்கும் இடையில் அலைபடும் பாவை போல சிக்கி தவிக்கிறான் கவிஞன். இத்தனையும் மீறி அவனை முன்னெடுத்து செல்வது  கவிதைக்கான மனநிலை மற்றும் இன்னும் கவிதை மீது அக்கறை கொண்ட நிஜமான வாசகர்கள்.


புதுமைபித்தனில் துவங்கி நேற்று முதல்கவிதை தொகுதி வெளியிட்டவர்கள் வரை பலரும் எழுத்தை நம்பி வாழ்ந்துவிடலாம் என்று சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எப்போதுமே எக்மோர் ரயில் நிலையம் எனக்கு ஒரு பலிபீடம் போல தான் தோன்றும். காரணம் இங்கே வந்து இறங்கி எத்தனையோ கனவுகளுடன் நகருக்குள் வாழவந்தவர்கள் எத்தனை ஆயிரம் கலைஞர்கள். அவர்களில் அறியப்பட்ட சிலரை தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள். புதைசேறு இழுத்துக் கொள்வதை போல சப்தமின்றி சென்னை மாநகரம் வந்தவர்களை தன்னுள் இழுத்துக் கொண்டு விடுகிறதா?.


சென்னையில் தங்க இடமில்லாமல், வேலை இல்லாமல், எழுத்தாளராக , கவிஞராக மட்டுமே வாழ்வது என்று வந்து இறங்குவது பெரும் சாகசம். இந்த சாகசத்தில் என் வாழ்வின் பதினைந்து வருடங்கள் சென்னையில் வீசி எறியப்பட்ட வாழைப்பழத்தோலை போல எந்த முக்கியமும் அடையாளமும் இன்றி கழிந்திருக்கின்றன. ஆனாலும் இந்த வலி, நிராகரிப்பு, வெளிக்காட்ட முடியாத அவமானம் இவை தான் என்னை எழுத வைத்தன. எனக்கான இடத்திற்கான போராட்டத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன.


உலகின் பெரும்கவிஞர்கள் பலரும் கொண்டாட்டத்தை தன்னோடு கூடவே வைத்திருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் மனது  சகலகோடி துயர்களையும் தாண்டி ஒவ்வொரு நிமிசமும் புதிதாக உள்ள வாழ்வினைப் பருகவே முனைந்திருக்கிறது.


லோர்க்காவின் கவிதைகளை வாசிப்பவன் அடையும் நெருக்கம் அவன் வாழ்வை பற்றி அறியும் போது இன்னும் அதிகமாகிறது. பிரெஞ்சு கவிஞனான ழாக் காக்தூ கலகக்கவிஞன் என்ற சிறப்பு அடையாளத்துடன் குடி, கொண்டாட்டம் கலையை மட்டுமே நம்பி வாழ்வது என்று இயங்கிய தீவிரம் இன்றும் அடையாளம் காட்டப்பட்டு வருகிறது.


போராட்டமே உலகம் என்று உரத்து குரல் கொடுத்த பாப்லோ நெருதாவின் வாழ்வில் எத்தனை காதல்கள், எவ்வளவு கொண்டாட்டங்கள். நடனம் இசை குடி பெண்கள் என்று வாழ்வை அவர் ருசித்த விதம் அலாதியானது. அவ்வளவு இசைக்கும் காதலின் பிரிவுகளுக்கும் இடையில் தான் அவர் சமூகவிடுதலைக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்.
**
தமிழ் கவிஞர்களில் விக்ரமாத்தியன் ஒருவர் மட்டுமே தன்னை சுற்றி எப்போதுமே கொண்டாட்டத்தையும் பெரிய இளைஞர் கூட்டத்தையும் உடன் வைத்திருப்பவர். ஒருவகையில் விக்ரமாதித்யனின் சந்திப்பு என்பது கொண்டாட்டத்திற்கான துவக்கமாகவே எவருக்கும் இருக்கிறது.
விக்ரமாதித்யன் வேதாளத்தை சுமந்து கொண்டு திரிவதாக புனைகதை சொல்கிறது. நான் அறிந்த வரையில் கவிஞர் விக்ரமாதித்யன் தான் வேதாளம். எப்போது அவர் விக்ரமாதித்யனாக இருப்பார். எப்போது வேதாளமாக மாறி தன்னை சுமக்கவிடுவார் என்பது சூழலும் விருப்பமும் பொறுத்தது.


எழுத்தாளர்களில் நகுலனுக்கு பிறகு விக்ரமாதித்யன் குறித்தே அதிகம் புனையப்பட்ட கதைகள் உள்ளன. குறிப்பாக விக்ரமாதித்யன் இலக்கிய கூட்டங்களில் நடந்து கொண்ட விதம். தனிப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதில் உருவான நகைச்சுவை, கவிஞர்கள் பற்றிய அவரது பதிலடிகள். அவர் எழுதிய குறுங்கவிதைகள் என்று அவர் ஒரு நாட்டார்தெய்வம் போல எண்ணிக்கையற்ற கதைகளும் கற்பனைகளும் சூழப்பட்டிருக்கிறார்.


அக்கதைகளில் சிறிதளவாவது உண்மையிருக்கும் என்பதே நிஜம். ஆனால் அந்த கதைகள் சுவராஸ்யமானவை. ஒரு எழுத்தாளன் எவ்வளவு பெரிய ஆளுமையாக, எதிர்ப்பு குரல் தரும் கலைஞனாக இருந்திருக்கிறான் என்பதற்கான சாட்சிகள் அவை.


தமிழ் இலக்கியத்தில் அண்ணாச்சி என்ற சொல் விக்ரமாத்தியன் ஒருவரை மட்டுமே குறிக்ககூடியது. பலநேரங்களில் அவரை விட வயதில் மூத்த சிலர் கூட அவரை அண்ணாச்சி என்றே அழைப்பதை கண்டிருக்கிறேன்.


அண்ணாச்சியை பார்த்தேன். அண்ணாச்சி கூட போயிருந்தேன் என்று சொல்லும் இளைஞர்களின் கண்களில் உற்சாகம் வழிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன்.


ஒரேயொரு கவிதையை எழுதி முடித்திருந்த இளைஞனை கூட உலகின் ஒப்பற்ற கவிதையை அடையாளம் கண்டுவிட்ட சந்தோஷத்தை போல பாரட்டி பேசி  சிறப்பிக்க வேறு எவருக்கு மனதிருக்கிறது. விக்ரமாதித்யன் பாராட்டும் தொடர்ந்த அக்கறையும் பலரை கவிஞர்களாக்கியிருக்கிறது.


தன்னை சுற்றிய இளைஞர்களை இவ்வளவு சந்தோஷமாக ஒரு மனிதனால் வைத்திருக்க முடியுமா என்று பொறமை கொள்ளுமளவு உற்சாகி விக்ரமாத்தியன். அதே நேரம் இத்தனை நண்பர்களிருந்தும் பல நேரங்களில் பின்னரவில் படுக்க இடம் கிடைக்காமல் யார் யாருக்கோ போன் செய்து எங்காவது ஒரு அறை தேடிச் சென்று குப்பை படிந்த மூலையில் பையை தலைக்கு வைத்து உறங்கி செல்லும் அடிநிலையும் இவருக்கு மட்டுமே நேரக்கூடியதாக இருக்கிறது.


நானோ. கோணங்கியோ செல்லும் இலக்கற்ற பயணங்களில் கூட எங்களை அறியாத சில தயக்கங்கள், எதிர்ப்பார்ப்புகள் இருக்கும். விக்ரமாதித்யனிடம் அது கிடையாது. உண்மையில் அவர் ஒரு தீராத சஞ்சாரி. கிடைத்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு, மனம் விரும்பிய ஊரில் இறங்கி, கவிஞர்கள், நண்பர்கள் ,இளம்வாசகர்கள் , இலக்கிய பரிச்சயமே அறியாதவர்கள் என்ற பேதமின்றி எவரோடும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் ஆகிவிடக்கூடியவர்.
கவிதை குறைந்தும் அவர் எவரையும் மிரட்சி கொள்ள வைக்கின்றவர் இல்லை. கவிதை எழுவது எல்லோருக்கும் சாத்தியமாகும் ஒரு மனநிலை என்று சொல்வதோடு தான்போகின்ற இடங்களில் எல்லாம் கவிதைகள் சொல்லி எழுத வைத்து நிரூபணமும் செய்கின்றவர். சங்க கால பாணர்களை போல அவர் செல்லுமிடம் எல்லாம் கவிதைகள்  சொல்லப்படுகின்றன.


குடிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்த போதும் எந்த போதையின் உச்சத்திலும் கூட அவர் வழிமாறி போய்விடுவதில்லை. அறியாத நபரை தவறாக ஒரு சொல் பேசிவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் வரையில் குடி என்பது சேர்ந்து உரையாடுவதற்கான பரிமாற்ற பானம் மட்டுமே. குடிக்காதவர்களை அவர் கட்டாயம் செய்வதில்லை. தான் குடிக்க கூடாது என்று மறுப்பவர்களை அலட்சியம் செய்ய தவறுவதுமில்லை.


எனக்கு விக்ரமாத்தியன் என்ற ஆளுமையை பிடிக்கும். அவர் கவிதைகளை ரொம்பவும் பிடிக்கும். அன்னம் வெளியீடாக ஆகாசம் நீல நிறம் என்ற விக்ரமாத்தியனின்  முதல் கவிதை தொகுப்பு நவகவிதை வரிசையில் 1982 ஆண்டு வெளியானது. அன்னம் வெளியிட்ட மிக முக்கியமான பங்களிப்பு இந்த நவகவிதை வரிசை.


இதில் தான் வண்ணநிலவன், கோ. ராஜராம், அப்துல்ரஹ்மான்,மீரா,  முதலியவர்களின் கவிதை தொகுதிகள் வெளியாகின. கல்லுôரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை தேடித்தேடி வாங்கி படித்தேன். விக்ரமாதித்யனை அப்போது அறிமுகமாகவில்லை.


அதன் சில வருடங்களுக்கு பிறகு ஒரு முறை கோணங்கியோடு குற்றாலம் செய்ய புறப்பட்ட போது தென்காசிக்கு ஒரு காலைநேரம் வந்திறங்கினோம். இளமஞ்சள் வெயிலோடு கூடி விட்டுவிட்டு சாரல் அடித்துக்கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தின் அருகில் தான் விக்ரமாதித்யனின் வீடு இருக்கிறது. போய் பார்த்துவிட்டு வரலாம் என்றார். இருவரும் வீட்டை தேடி போனோம்.


கோவிலின் அருகாமையில் ஒண்டு குடித்தனங்கள் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாதி இருள் மங்கிய வீட்டின் உள்ளே சூரியவெளிச்சம் எட்டி பார்ப்பதும் மறைவதுமாக இருந்தது. மின்சாரமற்று போன பகலில் ஒலைவிசிறியால் வீசியபடியே அக்னிநதி நாவலை படித்துக் கொண்டிருந்தார் விக்ரமாத்தியன்.. மெலிந்த உடம்பு.  சீவப்படாத தலை. புகைப்பதற்கான பீடிகள்.தீப்பெட்டி. ஒரு பக்கம் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்து மூடப்பட்டிருந்த உணவு. வீட்டில் வேறு யாருமில்லை. எங்களை பார்த்த மாத்திரத்தில் அவரது முகத்தில் புன்னகை ததும்ப துவங்கியது. மாப்ளே என்று உரிமையுடன் கோணங்கியை அழைத்து அருகில் உட்கார வைத்தார். என்னை கோணங்கி அறிமுகம் செய்து வைத்தவுடன் யோவ் உன்னைதான்யா.. ராமச்சந்திரன் சொல்லிக்கிட்டே இருந்தான். உன் கதை ஒண்ணை பத்தி ரொம்ப நல்லாச் சொன்னான்யா.. அவன் சாதாரணமா யாரையும் பத்தி சொல்லமாட்டான். உன்னை பத்தி ரொம்பச் சொன்னான்யா என்று உற்சாகத்துடன் பேசத்துவங்கினார்.


அவர் சொல்வது வண்ணநிலவனைபற்றி என்று கோணங்கி குறுக்கிட்டு என்னிடம் சொன்னார். என்னுடை சிறுகதை குறித்து வண்ணநிலவன் சொன்ன விஷயத்தை அன்றைய உரையாடலில் நாலைந்து முறை நினைவுபடுத்தியதோடு நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன். எது போன்ற புத்தகங்களில் விருப்பம் அதிகம் என்று விக்ரமாதித்யன் கேட்டார்.


நான் ரஷ்ய இலக்கிய புத்தகங்களை பற்றி சொன்னவுடன் முதல்ல நீ கெஸ்டா பெர்லிங் சாகா படி. சல்மா லாகெர்லெவ்வோட நாவல். மதகுருங்கிற பேர்ல க.நா.சு தமிழ்ல மொழிபெயர்த்திருக்கிறார். அது கிடைக்கலேன்னா தேவமலர் படி. கோணங்கி. உன்கிட்டே ஒளிச்சிவச்சிருப்பியே. அதுல இருந்து எடுத்து படிக்க குடுறா என்று உரிமையோடு சொன்னார்.


கோணங்கியிடம் அப்படியொரு ரகசிய சேமிப்பு அறையிருந்தது. அதில் தமிழில் மொழிபெயர்க்கபட்ட முக்கியமான நாவல்கள் அத்தனையும் இருந்தன. மதகுருவை படிக்க தருவதாக உறுதியாக சொன்னார் கோணங்கி. பின்பு மூவரும் குற்றாலம் புறப்பட்டு சென்றோம். நல்ல சீசன். வழி முழுவதும் தண்ணீர் வழிந்து ஒடிக்கொண்டிருந்தது. அருவியின் பெரும்சப்தம் ஊரை முழ்கடித்துக் கொண்டிருந்தது. மங்குஸ்தான் பழம் விற்பவர்களின் குரல்கள்  கடந்து சென்றோம்.


சித்திரசபைக்கு போய்விட்டு பிறகு அருவியில் குளிக்கலாம் என்றார். சித்திரசபை சிவனின் ஐந்து சபைகளில் மிக முக்கியமானது. அங்கே நாங்கள் சென்ற போது அதிகம் ஆட்கள் இல்லை. அங்கிருந்த ஒவ்வொரு ஒவியமாக விளக்கி சொல்லிக் கொண்டே வந்த போது மரபு இலக்கியங்கள் குறிப்பாக சைவ சித்தாந்த இலக்கியங்களில் அவருக்கு உள்ள புலமையை அறிந்து கொள்ள முடிந்தது.


அருவிக்கு சென்று குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு வந்த போது நடைசாத்தியிருந்தது. கல்துôண்கள் உள்ள பிரகாரத்தில் நின்றபடியே ஈரத்தலையுடன் அவர் திரிகூட ராஜப்ப கவிராயர் எழுதிய குற்றாலக்குறவஞ்சியைப் பற்றி சொல்லத்துவங்கினார். உணர்ச்சி வேகத்தில் ஒரு கவிதையை சொல்லி முடித்து ஆழ்ந்த பெருமூச்சுடன்  அங்கிருந்த சிவனை நோக்கி வணங்கிவிட்டு மௌனமாகிவிட்டார்.


ஈரஉடைகளுடன் பெண்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். குரங்குகள் இரண்டு மரக்கிளையில் ஊசலாடிக் கொண்டிருந்தன. செண்பகபூவை கையில் வைத்து கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.  அருவியின் மீது ஒளிர்ந்து கொண்டிருந்தது சூரியன். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. திரும்பி வருவதற்காக பேருந்தில் ஏறிய போது விக்ரமாதித்யன் இரண்டு வரி கவிதை சொல்லி அதை குறித்து கொள்ளும்படியாக சொன்னார்.


விக்ரமாதித்யனின் பெரும்பான்மை கவிதைகள் அவர் அவ்வப்போது நண்பர்களிடம் சொன்னவை. அவர் சொல்லி இளம் வாசகர்களால் எழுதப்பட்டவை. பயண நேரங்களில் டயரிகளில் குறிக்கபட்டவை. நாலைந்து இளம் கவிஞர்களுடன் ஒன்று சேர்ந்து நீள் கவிதைகள் படைப்பது வரையிலான தடையற்ற மனச்சுதந்திரம் அவருக்கு இருந்தது.
விக்ரமாதித்யன் கவிதைகளில் நான்கு குரல்கள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. ஒன்று கவிஞனாக தான் வாழ்வதின் இடர்பாடுகள் குறித்த ஆதங்கம். மற்றது பெண்கள் மற்றும் பாலுணர்வு குறித்து அடக்கி வைக்கட்ட மனநிலை


மூன்றாவது மரபான தமிழ் இலக்கியம் குறித்த அவரது உயர்வெண்ணம் மற்றும் அது கவனிப்பார் அற்று போய்விட்டதே என்ற கோபம்.  நான்காவது தன்னை சுற்றிய உலகின்  துவேசங்கள். அதிகார நெருக்கடிகள், எதிலும் சார்பு கொள்ள முடியாது தவிக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இந்த நான்கும் பலநேரம் ஒரே கவிதையிலும் வெளிப்படும்.  கவிதை குறித்து அதிக கவிதைகள் எழுதியவர் இவரே.


இவரது கவிதையில் அதிகம் உருவகங்கள், கவித்துவபடிமங்கள் இடம்பெறுவதில்லை. மாறாக இயல்பான அன்றாட மொழியை கவிதையின் மொழியாக உயர்த்துவதே இவரது வெற்றி. அத்தோடு நேரடியான சொல்லும் தன்மை அவர் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது மரபான தமிழகவிதையின் குரல். அத்தோடு தான் ஒரு நவீன கவிஞன் அல்ல. மாறாக தமிழ்மரபின் பாணன் என்று சொல்லிக் கொள்ளும் கவித்துவ வெளிப்பாடு . இவையே விக்ரமாதித்யன் கவிதைகளை திரும்பவும் வாசிக்க வைக்கின்றன.


இவரது கவிதைகள் குறித்து பொதுவான குறையும் அதன் நேரடியான எளிமையான கூறலே. பலகவிதைகள் வெறும் ஸ்டேட்மெண்ட்டுகளாக முடிந்துவிடுகின்றன. சில கவிதைகள் அது உருவாக்கபடும் அதிர்ச்சிக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றது. போதும் என்ற அளவை மீறிய சுய ஆதங்கம். கவிதையின் ஊடாடும் மௌனமின்மை என்பது போன்ற குறைகளை தாண்டி இவரது கவிதைகள் தனித்த வகையாக அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து முக்கியகவிதைகளாக கவனம்பெறுகின்றன..


முறையாக தமிழ் கற்றுக் கொண்டவர் விக்ராமதித்யன். சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள், தனிப்பாடல்கள் வரை தேர்ந்து கற்றவர். அதே நேரம் தமிழின் முக்கிய படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என தேடித்தேடி படிக்கும் இயல்பும் அவருக்கு உண்டு. எனது நாவல்கள் அத்தனைக்கும் வெளியான சில வாரங்களில் படித்துவிட்டு விரிவான விமர்சனம் செய்தவர் விக்ரமாதித்யன்.  ஜெயமோகனும் கோணங்கியும் இதை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.


25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதிவரும் விக்ரமாத்தியனின் கவிதைகள் மொத்த தொகுப்பாகவும் வெளிவந்திருக்கின்றன. சிறுகதைகள் கவிதை குறித்த கட்டுரைகள் தனி நூல்களாக வெளியாகியிருக்கின்றன. விக்ரமாத்தியன் கவிதைகள் குறித்து இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் தேவையுள்ளது.
**
விக்ரமாதித்யனோடு உள்ள என்னுடைய உறவு எண்ணிக்கையற்ற நினைவுகளால் நிரம்பியது. யோசிக்கையில் கடந்து செல்லும் ஒவ்வொரு பயணத்தில் ஏதாவது ஒரு ஊரில் அவரை சந்திக்காமல் இருந்ததேயில்லை என்றே தோன்றுகிறது. திருபுவனத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு நான் போய் இறங்கும் போது உள்ளிருந்து ஈரத்தலையும் சிரிப்பாக வெளியே வந்துநின்றார் விக்ரமாதித்யன். அந்த அளவு இலக்கியமே வாழ்வு என்றலையும் சஞ்சாரி அவர்.


ஒரு முறை பத்தமடையில் உள்ள எழுத்தாளர் தமிழ்செல்வன் வீட்டில் நான் கோணங்கி ஜோதிவிநாயகம் விக்ரமாதித்யன் நால்வரும் தங்கியிருந்தோம். கோடை விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்தார்கள் என்பதால் தமிழ்செல்வன் மட்டுமே தனியாக இருந்தார். நாங்கள் சென்ற போது அவரும் தன் வேலைக்காக கிளம்பி திருநெல்வேலி சென்றுவிட்டார்.


நாங்களாக சமையல் செய்து சாப்பிட்டபடியே இரண்டு நாட்கள் பகலிரவு பாராமல் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்செல்வனின் வீடு அருகே ஆற்றின் படித்துறை உள்ளது. குளிப்பதற்கு மிக அழகான இடம். குளிப்பதும் வீடு திரும்பி பேசுவதுமாக நீண்டது பகல். அன்றிரவு விக்ரமாதித்யன் மிக அதிகமாக குடித்திருந்தார். வீட்டில் இருந்த மாவடு உள்ள ஜாடியை அருகில் எடுத்து வைத்துக் கொண்டு போதையுடன் தான் ஒரு கதை எழுத விரும்புவதாக சொல்லி என்னை எழுதும்படியாக சொன்னார்.


நான் உடனே ஒரு பேடும் பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். மணி பத்தரையிருக்கும். கதையை சொல்ல துவங்கினார். இரண்டு வரிகள் எழுதியிருப்பேன். அதற்குள் திரும்ப படித்து காட்டச் சொல்வார். கதை ஒரு டாக்சி டிரைவரைப் பற்றியது. கதையின் துவக்கத்தில் அவன் திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவிலுக்கு கிளம்புகிறான். திருநெல்வேலிக்குள்ளாகவே ஒவ்வொரு இடமாக நின்று நின்று டாக்சி போகின்றதே அன்றி கதை ஒரு துளி கூட நகரவேயில்லை.


இடையில் அவராக மறைவில் போய் குடித்துவிட்டு வருவார். வந்தவுடன்  ஊறுகாய் சாப்பிடுவார். பின்பு கதையை தொடர சொல்வார். இப்படியாக கதையில் டாக்சி திருநெல்வேலியை விட்டு தாண்டுவதற்குள் விடிகாலை மூன்று மணியாகிவிட்டது. அதற்குள் பதினைந்து பக்கங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது. எனக்கோ துôக்கம் தாங்க முடியவில்லை. அவரும் துôக்கமும் கதைசொல்லும் உற்சாகமும் ஒன்று சேர்ந்திருந்தார்.


முடிவில் பேனாவின் ரீபில் தீர்ந்து போனது. நல்லவேளை தப்பிவிட்டேன் என்பது போல நினைத்து நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்றேன் ஆனால் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த கோணங்கி எழுந்து வந்து பேனா இல்லேன்னா என்ன பென்சில் தர்றேன் என்று புதிதாக ஒரு பென்சிலை சீவி எடுத்து வந்து தந்தார். விடிய விடிய அந்த கதையை எழுதினோம். கதை முடியும் போது தமிழ்செல்வன் வீட்டிலிருந்த ஒரு ஜாடி மாவடு ஊறுகாய்களும் ஒரே இரவில் காலியாகி போயிருந்தது


மறுநாள் காலை கதையை திருத்தம் செய்து தன்னிடம் வாங்கி வைத்துக் கொண்டார். பின்பு அதை எடிட் செய்து காலம் என்ற தலைப்பிட்டு வெளியிட்டதோடு அதை எனக்கே சமர்பணமும் செய்திருந்தார். ஒருவகையில் அந்த நிகழ்வுவேடிக்ககையாக இருந்தாலும் மறுபக்கம் அவருக்குள் இருந்த கதை சொல்லும் உத்வேகத்தை காட்டுகிறது. இதை போலவே கலாப்ரியா நடத்திய கவிதைபட்டறைகள், முன்றில் கருத்தரங்கு. பிரமீளுடன் ஆனா விக்ரமாத்தியனின் நட்பு, கழுகுதமலையில் நடந்த இலக்கிய விவாதம் என்று மனம் ததும்பும் அளவு அவரோடு நட்பும் நினைவும் சாத்தியமாகியிருக்கிறது.
**
விக்ரமாதித்யனின் கவிதைகள் எளிய மனிதர்கள் பால் மிகுந்த அக்கறை கொண்டவை. நடுத்தர வயதில் வேலையற்று போன ஒரு மனிதன் வேலை தேடி குடும்பத்தை பிரிந்து செல்லும் ஒரு அதிகாலையை பற்றிய அவரது கவிதை வலி நிரம்பியது. அந்த கவிதை பல நேரங்களில் என் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு பயணத்திலும் அந்த கவிதையை நினைத்துக் கொள்வேன்.


பொருள்வயின் பிரிவு


அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர்வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஒட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்து கொண்டிருந்தேன்.
மனசு கிடந்து அடித்துக் கொள்ள.


**


இன்றைக்கும் சென்னையின் ஏதோவொரு நண்பர் அறையில் அல்லது இலக்கிய கூட்டத்தில் விக்ரமாதித்யன் கண்ணில் தென்படுவார் என்ற தேடுதல் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. கற்றுக் கொண்ட தமிழ் இவனுக்கு கவிதை எழுத மட்டுமே உதவும் என்றொரு வரியை ஆதங்கத்துடன் விக்ரமாதித்யன் பலவருசத்தின் முன்பாக எழுதியிருந்தார்.  அந்த ஆதங்கம் உண்மையாகிவிடக் கூடாது. தமிழ்கவிகளில் மிக முக்கிய ஆளுமையாகவும் சிறந்த கவியாகவும் அக்கறையோடான நட்பாகவும் மதித்து கொண்டாடப்பட வேண்டியவர் அண்ணாச்சி விக்ரமாதித்யன்.


**

0Shares
0