பேசும் கை

.

ஜப்பானிய எழுத்தாளர் யசுநாரி கவபத்தாவிற்கு1968ம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருது பெற்றபிறகு அவர் எதையும் எழுதவில்லை. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. நேர்காணல்கள் எனத் தொடர்ந்து பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் இலக்கியப் படைப்புகள் எதையும் அவரால் எழுத இயலவில்லை. 1972ம் ஆண்டு கவபத்தா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

அவரது கடைசிக்கதை One Arm. இந்தச் சிறுகதையில் ஒரு பெண் தனது வலது கையைக் கழட்டி ஒரு ஆணிடம் தருகிறாள். அவனுக்கு முப்பது வயதிருக்கலாம். தனியாக வாழுகிறான் அவனது கடந்தகாலம் பற்றிய குறிப்புகள் எதுவும் கதையில் இல்லை. ஆனால் அவனது நிகழ்காலம் கடந்தகாலத்தின் நீட்சியாக இருப்பதை உணர முடிகிறது

அந்த மனிதன் துண்டிக்கப்பட்ட வலதுகையைத் தனது வீட்டிற்குக் கொண்டு போகிறான். கை அவனுடன் பேசுகிறது. பெண்ணின் கையை அணைத்துக் கொண்டு உறங்குகிறான். கதையின் முடிவில் அவளது கையிற்குப் பதிலாகத் தனது கையைக் கழட்டி தர முன்வருகிறான்.

வியப்பூட்டும் இந்தக் கதை House Of Sleeping Beauties And Other Stories தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

உறங்கும் அழகிகளின் இல்லம் நாவலின் தொடர்ச்சியாகவே இந்தக் கதையைக் கருதவேண்டும். ஒருவகையில் அந்த நாவலில் இடம்பெறாத. ஆனால் இடம்பெறத் தகுதியான இன்னொரு அத்தியாயம்.

சர்ரியலிசத்தன்மை கொண்ட இந்தச் சிறுகதையைக் கவபத்தா நிஜமான நிகழ்வைப் போலத் துல்லியமாக. கவித்துவமாக எழுதியிருக்கிறார்.

ஒரு எழுத்தாளரின் முதற்கதை போலவே அவனது கடைசிக்கதையும் முக்கியமானதே.

அந்தப் பெண் ஏன் தனது வலதுகையைக் கழட்டி தர முன்வருகிறாள் என்பதற்குக் கதையில் எந்தக் குறிப்பும் இல்லை. அவளுக்குப் பெயர் கிடையாது. ஆனால் அவள் ஒரு கன்னிப்பெண் என்பதைப் பற்றி ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அவளிடம் கையைப் பெறுகிற மனிதனுக்கும் பெயரில்லை. அவளுடன் இரவைக் கழிக்க வந்தவன் போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது.

’I can let you have one of my arms for the night,’ என்ற பெண்ணின் வாசகம் கருணையா, அன்பா, அல்லது சலிப்பில் உருவானதா. தன்னைப் பொம்மை போலத் தான் அந்தப் பெண் உணருகிறாளா. இதுவரை எந்த ஆணும் பெறாத அரிய பரிசு தான் துண்டிக்கபட்ட கையா.

இந்தப் புள்ளியை கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதனை விரித்துத் தனது நாவலாக எழுதியிருக்கிறார்.

Memories of My Melancholy Whores என்ற அந்த நாவலில் கவபத்தாவிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

கவபத்தாவின் உறங்கும் அழகிகள் நாவலில் வரும் முதியவர்களைப் போலின்றி மார்க்வெஸ் தனது நாவலில் 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதியவரின் கதையைச் சொல்கிறார். அந்தக் கிழவர் தனது பிறந்தநாள் பரிசாக இளம் கன்னியுடன் ஒரு இரவைக் கழிக்க விரும்புகிறார்.

பண்பாடு மற்றும் வாழ்க்கை குறித்த புரிதலில் கவபத்தாவின் முதியவரும் மார்க்வெஸின் முதியவரும் வேறுபடுகிறார்கள். மார்க்வெஸின் நாவலில் வரும் முதியவர் தனது 90வது வயதில் முதன்முறையாகக் காதலை உணருகிறார். அந்த உறவைத் தொடர முனைகிறார். ஆனால் கவபத்தாவின் நாவலில் வரும் முதியவர் மரணத்தை ஒரு பெண்ணாகக் கருதுகிறார். அவரது உறக்கம் ஒரு குறியீடே,

கவபத்தா நாவலில் “for an old man who was no longer a man, to keep company with a girl who had been put to sleep was ‘not a human relationship.’” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இது தான் கதையின் மையப்புள்ளி. மார்க்வெஸ் நாவல் உறவைத் தொடர விரும்பும் கிழவரின் கதையாக நீளுகிறது.

ஒரு கை சிறுகதையில் அந்தப் பெண் தனது வலதுகையைக் கழட்டித்தர ஒரு சிரமமும் அடையவில்லை. தான் அணிந்துள்ள உடையைக் கழட்டுவது போல எளிதாகக் கையைக் கழட்டி தருகிறாள். அந்தக் கையை அடையாளம் காணுவதற்காகத் தனது மோதிரம் ஒன்றை அணிவிக்க விரும்புகிறாள். ஆகவே இடது கையில் அவள் அணிந்துள்ள மோதிரத்தைக் கழட்டி துண்டிக்கபட்ட வலதுகையில் மாட்ட நினைக்கிறாள். அதைச் செய்ய அவளால் முடியவில்லை. கிழவர் அதற்கு உதவி செய்கிறார்.

அந்த மோதிரம் அவளது கன்னித்தன்மையின் அடையாளம். அதைப் பற்றிக் கதையில் அவள் பேசுகிறாள். தனது அன்னையின் நினைவாகத் தான் அணிந்து கொண்டுள்ள மோதிரம் என்கிறாள். துண்டிக்கப்பட்ட கையைத் தனது மடியில் வைத்துக் கொள்கிறான் அந்த மனிதன். தனது கோட்டினுள் மறைத்து கையை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகிறான். அப்போது வழியில் மாட்டிக் கொள்ளக் கூடுமோ என்று பயப்படுகிறான். ஆகவே நடந்தே செல்கிறான்.

அவள் தனது கையை ஒரு இரவிற்கு அவனுக்குத் தருவதற்கும் பணம் எதையும் பெறவில்லை. அவள் யார். எதற்காக இப்படி ஒரு நாடகம். கையைத் துண்டிக்கும் போது ஒரு துளி ரத்தம் சிந்தப்படவில்லையே.

செயற்கை கையைக் கழட்டித் தருவது போல இயல்பாகத் துண்டித்துவிடுகிறாள். அவள் இப்படி நடந்து கொள்வது இது தான் முதல்முறை என்பது போலவும் தெரியவில்லை.

அந்தக் கை தன்னுடன் பேசுமா என்று அந்த மனிதன் கேட்கிறான். அது ஒரு கையாக மட்டுமே இருக்கும் என்கிறாள். ஒரு வேளை அந்தக் கை பேசும் என்றால் நான் பயப்படுவேன் என்றும் சொல்கிறாள். வலது கை அவளுடன் முன்னதாகப் பேசியிருக்கிறதா. அவள் அறிந்தே பேசும் கையை அவனிடம் தருகிறாளா. வாசிப்பவனின் மனதில் கதை விரிந்து கொண்டே செல்கிறது

அந்த மனிதனுக்குப் பெண்ணின் கையே போதுமானதாக இருக்கிறது. கதையில் துண்டிக்கப்பட்ட. கை பேசுகிறது.. அந்தப் பெண்ணின் நினைவுகள் எதுவும் கையிடமில்லை. கதையின் முடிவில் அவன் தனது கையைப் பெண்ணின் கைக்கு மாற்றாகத் தர விரும்புகிறான். ஒரு கை ஆணாகவும் ஒரு கை பெண்ணாகவும் வாழ விரும்புகிறான் என்று வைத்துக் கொள்ளலாம்.

அப்படி வாழும் ஒருவனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது இன்னொரு வியப்பூட்டும் கதையாக உருவாகிறது.

ரோடின் செய்த கை சிற்பத்தைக் கவபத்தா ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். அந்தக் கை தான் இந்தக் கதையை எழுதக் காரணமாக இருந்திருக்கும். ஓவியம் மற்றும் சிற்பங்களின் மீது கவபத்தா தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது நாவல் ஒன்றில் மார்க் சாகல் ஓவியத்தைத் தீவிரமாக ரசிக்கும் நெசவாளர் தனது ஆடைவடிவமைப்பில் சாகலின் ஓவியப்பாணியைக் கொண்டு வருவார். அதே செயலாகவே இந்தச் சிறுகதையைப் புரிந்து கொள்கிறேன்.

கோகலின் மூக்கு கதையில் இது போல ஒரு மனிதனின் மூக்கு தொலைந்து போகிறது. அதை தேடி ஒருவன் அலைகிறான். அது குறியீட்டு கதை என்பதை நேரடியாக உணரமுடிகிறது. ஆனால் கவபத்தா கதையில் கையை துண்டித்து அந்த பெண்ணே தருகிறாள்.  நாட்டுப்புறக்கதை ஒன்றில் பஞ்சகாலத்தில் ஒரு தாய் தனது விரல்களை துண்டித்து பிள்ளைகளுக்கு உணவாக கொடுத்தாள் என்று படித்திருக்கிறேன். அது துயரத்தின் வெளிப்பாடு. கோவில்களில் கை, கண்மலர் என்று பொம்மை செய்து வேண்டுதல் வைப்பார்கள். அது நேர்ச்சை. இந்தக் கதையில் இடம்பெறுவது அது போன்ற சடங்கும் இல்லை.

தனக்குப் பதிலாக தனது கையை அந்தப் பெண் அவனுடன் இரவை கழிக்க அனுப்பி வைக்கிறாள். அவனது இரவு கதையில் விவரிக்கபடுகிறது. ஆனால் ஒற்றை கையுடன் உள்ள அவளது இரவு கதையில் இல்லை. வாசிப்பவனே அதை உணருகிறான்.  அவளது கையின் அழகு பற்றி அவளுக்கே பெருமையிருக்கிறது. அதையும் கதையின் ஒரு வரி உணர்த்துகிறது.

கவபத்தாவின் கதைகளில் இப்படி சிதறும் பெண் உடலை திரும்ப திரும்பக் காண முடிகிறது.

கதையின் துவக்கத்தில் அந்தப் பெண் தனது துண்டிக்கப்பட்ட கையை முத்தமிடுகிறாள். கதையின் முடிவில் அந்த மனிதன் அதே கையை முத்தமிடுகிறான். இரண்டும் முத்தங்களும் ஒன்றில்லை.

“When I’m with a man, I’m always sizing myself up- weighing the part of me that wants to become a woman against the part of me that is afraid to. Then I fell miserable and even more lonely” என்று அவரது The Scarlet Gang of Asakusa நாவலில் ஒரு பெண் குறிப்பிடுகிறாள். ஒரு கை சிறுகதை இதே மனநிலையின் வெளிப்பாடுதான்.

மிகக் குறைவான சித்தரிப்பின் மூலம் ஒரு சிறுகதையை எவ்வளவு கச்சிதமாக, விநோதமாக உருவாக்கிவிட முடியும் என்பதற்கு இக் கதை சிறந்த உதாரணம். ரோடின் செய்த சிற்பம் போல எழுத்தில் உருவாக்கபட்ட சிற்பம் என்றே இக்கதைச் சொல்வேன்.

••

0Shares
0