மும்பையில் சினிமா பேனர்களை வரையும் ஷேக் ரஹ்மான் என்ற ஓவியரின் வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் Original Copy. 2016ல் வெளியாகியுள்ளது.

இதனை ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ளோரியன் ஹெய்ன்சென்-ஜியோப் மற்றும் ஜார்ஜ் ஹெய்ன்சென் இணைந்து இயக்கியுள்ளார்கள். இப்படம் சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றுள்ளது
சென்னைக்கு வந்த நாட்களில் அண்ணசாலையில் வைக்கபட்டிருந்த சினிமா பேனர்களை வியப்போடு பார்த்தபடி நடந்திருக்கிறேன். பிரம்மாண்டமான சினிமா பேனர்களை நின்று பார்த்து சுவரொட்டியிலிருந்து படத்தின் கதையை யூகித்துச் சொல்லும் ரசிகர்களை அறிவேன்.
இரவில் அந்தச் சுவரொட்டிகளின் கீழே வசிக்கும் நடைபாதை வாசிகளையும் பேனர்கள் வரைந்த ஆர்டிஸ்ட்களையும் அறிவேன். இந்த ஆவணப்படம் அந்த நினைவுகளைத் தூண்டிவிட்டது.

சினிமாவிற்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதில் பேனர்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. சாமி படங்களுக்கு வரையப்பட்ட பேனர்களுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வணங்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்குப் பேனர் வைப்பதில் பெரிய போட்டியே இருந்தது. இந்தி, மலையாள, ஆங்கிலப் படங்களின் சினிமா பேனர்கள் மொழி தெரியாத மக்களையும் படம் பார்க்க வைத்தன.
மும்பையின் மையப்பகுதியில் ஆல்ஃபிரட் டாக்கீஸ் உள்ளது. அந்தத் திரையரங்கம் உருவான வரலாற்றையும் அதன் நிர்வாகி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நினைவுகளையும் இந்த ஆவணப்படம் இணைத்தே விவரிக்கிறது.
சினிமா பேனர் வரையும் ஷேக் ரஹ்மான், தியேட்டர் ஆபரேட்டர் நசீர், உரிமையாளர் நஜ்மா, தியேட்டரின் காவலாளி. அரங்க மேலாளர் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஆல்ஃபிரட் டாக்கீஸின் கதையைச் சொல்கிறார்கள்.
திரைப்படப் பேனர்களை வரைவதற்காக ஆல்ஃபிரட் டாக்கீஸிலே ஷேக் ரஹ்மான் வசிக்கிறார். அங்கே வாரம் இரண்டு படங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காக அவரும் அவரது குழுவினரும் பிரம்மாண்டமான பேனர்களைக் கையால் வரைகிறார்கள்.
அவர்கள் வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம். உருவங்களை அளவெடுத்து வரையும் தனித்துவம் மற்றும் அவர்களுக்கான அழகியல் ஆகியவற்றை ரஹ்மான் சிறப்பாக விளக்குகிறார்.
ரஹ்மானின் தந்தை மும்பையின் புகழ் பெற்ற பேனர் ஆர்டிஸ்ட். அவரது காலத்தில் எண்ணிக்கையற்ற சினிமா பேனர்களை வரைந்திருக்கிறார். பள்ளிவயதில் தந்தைக்கு உதவி செய்ய வந்த ரஹ்மான் சினிமா பேனர் மீது ஆர்வம் கொண்டு தந்தையின் உதவியாளராகப் பணியைத் துவங்கியிருக்கிறார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேனர் ஆர்டிஸ்ட்டாகத் திகழுகிறார்.
ரஹ்மானுக்குப் பிடித்தமான இந்தி சினிமா நடிகர் நடிகைகள். சினிமா பேனர் வரைவதில் அவர் உருவாக்கிய புதிய பாணி மற்றும் இளம்தலைமுறைக்கு அந்தக் கலையை அவர் கற்றுத் தரும் விதத்தைப் படம் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது.

மொகலே ஆசம் படத்தின் பேனரைக் காட்டி அதன் கதையைத் தான் எவ்வாறு ஓவியமாக வரைந்திருக்கிறேன் என ரஹ்மான் விவரிக்கும் காட்சி அபாரமானது.
திரையரங்கின் மேலாளர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்துகிறார். அவரைப் போலவே தியேட்டர் உரிமையாளரான நஜ்மா பேகமும் தனது வாழ்வினை சினிமா எந்த அளவு பாதித்துள்ளது என்பதை உண்மையாக விவரிக்கிறார். நஷ்டத்தில் இயங்கிய போது அந்தத் தியேட்டரை மூட மனது வரவில்லை என்கிறார்.
பேனர் வரைவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தனது பிள்ளைகள் படித்தார்கள். வீட்டுவாடகை தரப்பட்டது. அன்றாடச் செலவுகள் யாவும் கவனிக்கப்பட்டன. ஆனாலும் வீட்டில் தனது மனைவி பிள்ளைகளுக்குப் பெயிண்ட் என்றாலே அலர்ஜி. வீட்டில் ஒரு சுவரொட்டி கூட வைக்க விடமாட்டார்கள். தனது இளமைக்காலப் போட்டோ, பழைய சினிமா ஸ்டில்கள், ஓவியங்கள் உள்ளிட்ட தான் வரைந்தவற்றைக் குப்பையாக நினைத்து வீசி எறிந்துவிட்டார்கள். இந்தக் கலையின் மூலம் சோறு சாப்பிடும் அவர்களுக்கே இதன் மதிப்பு தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் ஷேக் ரஹ்மான்
இது ரஹ்மானின் கதை மட்டுமில்லை. இந்தியா முழுவதும் இருந்த சினிமா பேனர் ஆர்டிஸ்ட்டுகளின் கதை. புதிய படம் வெளியாகும் நாளில் இவர்கள் வரைந்து வைத்த பேனர்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த ரசிகர்கள் அதனை வரைந்தவர்களை அறிந்து கொள்ளவில்லை. சினிமா ஓவியங்களை எவரும் ஆவணப்படுத்தவில்லை. சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.
இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் சினிமா தியேட்டர் ஊழியர்கள் ஒன்றாகத் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அது மறக்க முடியாத காட்சி. சினிமா தியேட்டர் என்பது ஒரு தனியுலகம். அதற்குள் உலகம் அறியாத ஒரு வாழ்க்கை தன்போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நவீன ஓவியர்கள் பெரிய கேலரிகளில் கண்காட்சிகள் நடத்தி ஆங்கிலப் பத்திரிக்கைகளால் பாராட்டப்படும் போது அதே திறமையுள்ள பேனர் ஆர்டிஸ்ட்டுகள் கண்டுகொள்ளப்படாமல் போனது துயரமானது எனக் கோபத்துடன் சொல்கிறார் ரஹ்மான்.
சினிமா பேனர்களை வரையும் போது தனக்குக் கிடைக்கும் அகமகிழ்ச்சியே போதுமானது எனக் கூறும் ரஹ்மான் தனது பேனர்களின் மூலம் ஒடாத படத்திற்குக் கூடப் பார்வையாளர்களை வரவழைக்க முடிந்திருக்கிறது என்பதை வேடிக்கையுடன் குறிப்பிடுகிறார்.

இந்தி திரையுலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. புகழ்பெற்ற நடிகர்கள். இயக்குநர்கள் மக்கள் மனதில் அழியாத நினைவுச்சின்னமாக மாறியிருக்கிறார்கள். நவீன வாழ்க்கையின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் வந்தபின்பு சினிமா பேனர் போன்ற மரபான கலைகள் கைவிடப்பட்டன. அதை நம்பிய கலைஞர்கள் மறைந்து போனார்கள்.
மும்பையின் மையப்பகுதியில் இருந்தாலும் இந்தத் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உறங்க இடமில்லாமல் தியேட்டருக்கு வரும் ஆட்கள். சினிமா பார்த்துக் கண்ணீர் சிந்தும் பெண்மணி. நகர நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சினிமா தியேட்டருக்குள் தஞ்சம் புகும் மனிதர்கள் எனச் சினிமா இருளில் தன்னைக் கரைத்துக் கொள்பவர்களைப் படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
பழைய சினிமா போஸ்டர் மீதே புதிய சினிமா போஸ்டரை வரைகிறார்கள். தான் ஆசையாக வரைந்த பேனரை தானே ரஹ்மான் அழிக்கிறார். அவரது பெயரை அவரே அழிக்கும் காட்சி படத்தில் உள்ளது. தங்கள் வாழ்க்கையும் அப்படிபட்டது தான் என்கிறார்.
இந்த ஆவணப்படத்தில் அவர் தனது கடந்தகால நினைவுகளைப் பேசுகிறார். வாழ்க்கை தத்துவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். உறவுகள் ஏற்படுத்திய கசப்பை பற்றி வெளிப்படையாகச் சொல்கிறார். நட்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கடவுளின் சினிமா தியேட்டர் தான் நமது உலகம். நமது வாழ்க்கை, அங்கே படம் ஒடுவது முடிவதேயில்லை. ஒரு படம் முடிந்தவுடன் அடுத்தப் படம் ஆரம்பமாகி விடுகிறது. முடிவில்லாமல் கடவுள் சினிமா காட்டிக் கொண்டேயிருக்கிறார் என்கிறார் ரஹ்மான்.
தான் வரைந்த சினிமா பேனரை தியேட்டரின் முன்பாக உயர்த்திக் கட்டிவிட்டு சற்றே விலகி நின்று பார்வையாளராக அதைப் பார்த்து ரசிக்கிறார் ரஹ்மான். அப்போது அவரது கண்களில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. அது தான் அவரை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இயங்க வைக்கிறது.