பேச்சின் வாலைப் பிடித்தபடி..


எங்காவது போய் பேசிக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி பலவருடமாக என்னை இலக்கற்று ஏதேதோ இடங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், தோழர்கள், பேராசிரியர்கள், எளிய மனிதர்கள் என்று பலருடனும் பேசி விவாதித்து சண்டையிட்டு கழித்த பகலிரவுகள் என்னளவில் மிக முக்கியமானவை.



இன்று அந்த இடங்களைக் கடந்து செல்கையில் இங்கே நின்று கொண்டு தானா அத்தனை மணி நேரம் பேசியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இடம் சூழல் பசி மறந்து பேசிய பொழுதுகளும் மனிதர்களும் சிதறிப்போய்விட்டார்கள். ஆனால் அந்த இடங்கள், அதன் தனிமை, காற்றில் படிந்து போன நினைவுகள் அப்படியே இருக்கின்றன.


சூடான தேநீரைப் பகிர்ந்து கொண்டு இலக்கியம், பெண்கள் , சினிமா, அரசியல், சமூகமாற்றம் என்று பேசிக் கடந்த பொழுகளின் வழியே நான் அடைந்தவை ஏராளம். ஒவ்வொருவரும் தன்னளவில் உலகைப் பார்ப்பதற்கும் புரிந்து கொள்ளவும் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பலருடன் என்ன பேசினேன் என்பது இன்று துல்லியமாக நினைவில் இல்லை. ஆனால்  சந்தித்த இடங்கள், நபர்கள்  ஈரம் மாறாமல் மனதில் பதிந்து போயிருக்கிறார்கள்.


தமிழகத்தின் எல்லா முக்கிய பேருந்து நிலையங்களிலும் தந்திபேப்பரை விரித்து தரையில் படுத்த உறங்கிய பெருமை எனக்குண்டு. அரைமணி நேரம் சந்தித்து பேசிக் கொள்வதற்காக ஆறுமணி நேரம் பயணம் செய்திருக்கிறேன். அவமானங்கள் துரத்தல்கள், கேலிப்பேச்சுகள் எதைப்பற்றியும் கவலையின்றி பேசிப்பேசி அறிந்து கொண்டவை ஏராளம்.


பேச்சின் தீவிரம் எந்த இடத்தையும் மறக்க செய்துவிடக்கூடியது என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். விழுப்புரம் பேருந்து நிலையத்தின் மூடப்பட்ட கழிப்பறை ஒன்றின் வாசலில் உட்கார்ந்தபடியே ஒரு இரவு முழுவதும் நானும் கோணங்கியும் எதையெதையோ பேசியிருக்கிறோம் என்பது இதற்கொரு சிறு உதாரணம்


இன்று நகரவாழ்வின் நெருக்கடி இரண்டு மனிதர்கள் பேசிக் கொள்வதற்கான வெளியை சுருக்கிவிட்டது. எல்லா இடங்களிலும் கண்காணிப்பின் விழிகள் உற்று நோக்குகின்றன. பத்துமணிக்கு மேல் இரவில் நடமாடுவது குற்றமாகிவிட்டது. பொது இடங்களில் உரக்க பேசி விவாதிப்பது கண்டிக்க கூடியதாகியிருக்கிறது. செல்போன் மற்றும் இணையம் வந்தபிறகு ஒருவரையொருவர் சந்திப்பதற்கான தேவை மிகவும் அருகி போய்விட்டது.


ரயில் நிலையங்களும் எனக்குமான தொடர்பு மிக விசித்திரமானது. சிறுவயது முதல் இன்றுவரை ரயிலை காணும் போது விவரிக்கமுடியாத  சந்தோஷம் ஏற்படுகிறது. ரயிலில் பயணம் செய்யும் போது கூட அந்த சந்தோஷம் உருவாவதில்லை. மாறாக ரயிலை வேடிக்கை பார்ப்பதில் தான் அதிக ஆனந்தம் உருவாகிறது.


பத்து வயதில் சாத்தூரில் இருந்த எங்கள் தாத்தா வீட்டின் பின்புறம் ரயில் தண்டவாளமிருந்தது. ஒவ்வொரு ரயில் வரும் போது பின்வாசலில் நின்றபடியே ரயிலில் செல்பவர்களில் எவராவது கையசைக்கமாட்டார்களா என்று ஆசையோடு டாட்டா காட்டிக் கொண்டு இருப்பேன். அரிதாக என்றாவது ஒரு நாள் எவராவது கையசைப்பார்கள். ஆனால் சட்சட்டென பார்வையை துண்டித்து செல்லும் ரயில்பெட்டிகளின் ஜன்னல்கள் வியப்பூட்டுபவை. நிமிசநேரத்திற்குள் பெட்டிக்குள்ளிருந்த சில ஆண் பெண் உருவங்கள், முறுக்கு விற்பவன் என்று மனது எதையெதையோ கண்டிருக்கிறது.


என் தனிமையை பகிர்ந்து கொண்டதில் ரயில்நிலையங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. விருதுநகரில் குடியிருந்த போது  வாரம் ஞாயிற்றுகிழமை சந்திப்பது என்று முடிவு செய்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தவறாமல் நானும் கவிஞர் தேவதச்சனும் ரயில் நிலையத்தில்  சந்தித்து உரையாடினோம்.


காலை ஒன்பது மணிக்கு துவங்கும் பேச்சு வளர்ந்து செல்லத்துவங்கும். ரயில்வே கேண்டியனில் மதியம் சாப்பிட்டுவிட்டு இரவு பதினோறு மணிக்கு அவர் கோவில்பட்டி செல்லும் வரை பேச்சு தொடரும். அவரை அனுப்பிவைத்துவிட்டு தனியே அதே ரயில்நிலைய பெஞ்சில் உட்கார்ந்திருப்பேன்.


காலையிலிருந்து பேசிய சொற்கள் பிளாட்பாரமெங்கும் சிதறிக்கிடப்பது போன்றிருக்கும். தூரத்தில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்தபடியே யாரும் வராத பிளாட்பாரத்தின் பெஞ்சில் அமர்ந்திருப்பேன். சில வேளைகளில் என்ன விளையாட்டு இது எதற்காக இப்படி பேசி மாய்ந்து போகிறோம் என்று தோன்றும். ஆனால் அவரது பேச்சின் ஆழம் மெல்ல மனதில் வேர்விடத்துவங்கி புதிய புரிதல்களும் சந்தேகங்களுமாக வளர்ந்து அடுத்த ஞாயிறுவரை காத்திருக்க விடாமல் இரண்டு நாட்களிலே அவரை சந்திக்க செல்லவைக்கும்.


கோவில்பட்டியிலும் ரயில் நிலையம் சந்திப்பிற்கான வெளி.
பேச்சு பழகதுவங்கியதோடு ரயில் நிலையத்தின் பகல்பொழுதும் பழக துவங்கியது. ரயில் நிலையத்திற்கு பயணம் செய்ய வருகின்றவர்களை விடவும் அதை சார்ந்து வாழ்கின்றவர்கள் அதிகம் என்று அப்போது தான் அறிந்து கொண்டேன். அதிலும் பகல்நேரங்களில் ரயில் நிலையங்கள் கொள்ளும் நிசப்தமும் தனிமையும் எல்லா ஊர்களிலும் ஒன்று போலவே இருக்கின்றன.


ரயில் நிலையங்கள் தோறும் வேப்பமரங்களும், துங்குமூஞ்சி மரங்களை வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒரே போல பல ரயில்நிலையங்களிலும் இருக்கின்றன. அது போலவே ரயில் நிலைய பெஞ்சுகள். நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த சிமெண்ட் பெஞ்சுகள் ஒன்று போலவே இருக்கின்றன.


ஒரு ஞாயிற்றுகிழமை வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக போனில் தேவதச்சன் என்னிடம் சங்க கவிதைகளை வாசிக்கும் போது  இயற்கை நமக்கு மிக அருகாமையில் இருப்பது போல உணர்வது எதனால் என்று கேட்டார். அன்றைய பேச்சை அதிலிருந்து துவங்கலாம் என்பதற்கான ஜாடை அது. நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன். ஆனால் எதற்காக என்ற காரணம் தெரிந்து கொண்டதில்லை என்பதால் அவரது பேச்சின் மீது மிக ஆர்வமாக இருந்தேன்.


தேவதச்சனின் உரையாடலை எப்போதுமே நேரடியாக துவக்க கூடியவர் இல்லை. விளையாட்டாக ஏதாவது ஒரு சினிமா பற்றி பேசத்துவங்கி மெல்ல பேச்சை அங்கிருந்து தனக்கு விருப்பமான தளத்திற்கு மாற்றிக் கொள்ளக்கூடியவர்.


அன்றைக்கு ரயில் நிலையத்தில் வெயில் மங்கியிருந்தது. யாருமில்லாத இரண்டாவது பிளாட்பாரத்தின் தனித்த பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தபடியே அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். தொலைவில் மேய்நது கொண்டிருந்த எருமை மாடும் அதன் அருகாமையில் பறக்கும் தும்பிகளும், தூரத்து வீடுகளும், குவிந்து கிடந்த இரும்பு துண்டுகளும், புழுதி பறந்து கொண்டிருக்கும்மண்பாதையும் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது


நான் இருந்த பிளாட்பாரத்தில் ஒரேயொரு பிச்சைகாரன் மட்டுமே படுத்துகிடந்தான். அவனது அலுமினிய தட்டு நிறைய தண்ணீர் பிடித்து அருகில் வைக்கபட்டிருந்தன. ஈ கடிக்காமல் இருப்பதற்காக அவன் தன் கால்களை பழைய துணி ஒன்றால் சுற்றியிருந்தான். மரத்தில் அமர்ந்த காகம் ஒன்று விட்டுவிட்டு கத்திக் கொண்டிருந்தது.


சங்க இலக்கியத்தில் வரும் பெண் ஏன் பிரிவிற்கு இவ்வளவு துவண்டு போகிறாள். அந்த பெண்ணை அறிந்து கொள்வதால் நமது காலத்தில் ஏதாவது பிரயோசனமிருக்கிறதா என்று கேட்டார். நான் உடனே சங்க காலத்து பெண்ணிற்கு இன்றைக்கு உள்ள பெண்ணிற்கும் இடையில் தோற்ற அளவிலான மாற்றங்களை தாண்டி மனஅமைப்பில் என்ன மாறுதல் வந்துவிட்டிருக்கிறது. பிரிவை பெண்கள் உணர்வதற்கும் ஆண்கள் உணர்வதற்கும் எப்போதுமே வேறுவகையான சாத்தியங்கள் தான் இருக்கின்றன.


இன்றைய பெண்ணிற்குள்ளும் சங்க இலக்கியத்தில் வரும் பெண்ணின் அக நெருக்கடியே இருக்கிறது. அது காதலனைத் தேடி சந்திக்க வேண்டும் என்ற சுயஆசை என்று மட்டும் எடுத்துக் கொள்ளமுடியாதது. காதலன் உடனிருந்த போதும் வெளிப்படுத்த முடியாத தனது அக தவிப்புகளை வெளிப்படுத்துவதற்கே பிரிவை அவள் இத்தனை ஆழமாக வெளிப்படுத்துகிறாள் என்று புரிந்து கொள்ளலாம் இல்லையா என்று கேட்டேன்.


சிரித்தபடியே அப்படியானால் அவர்களுக்குள் உள்ள காதல் முக்கியமில்லை என்கிறீர்களா என்று கேட்டார். ஏதாவது ஒன்றை சார்ந்து தான் பெண் தனது அக உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. காதலை தவிர வேறு எந்த வழிமுறையிருக்கிறது. ஆணோ பெண்ணோ காதலின் வழியாக தன்னை மறுஉருவாக்கம் செய்து கொள்கிறார்கள். ஒருவகையில் இது ஒரு ரகசிய விளையாட்டு என்று கூட சொல்லலாம்.


காதலின் பிரிவும் சேர்வும் எதன் மீது மையம் கொண்டிருக்கிறது என்றால் என்னை பற்றி நீ எப்படி உணர்ந்திருக்கிறாய். உன்னை பற்றி நான் எப்படி உணர்ந்திருக்கிறேன் என்பதை பற்றியதாக தான் இருக்கிறது. ஒரு வேளை இருவருக்கும் அவரவர் தனிமையும் அது குலைபடும் விதமும் முக்கியம் போலும்.



குறிப்பாக பிரிவின் வழியே பெண் திரும்ப திரும்ப உணர்ந்த முயல்வது தனது தனிமையை தான். இது தனக்காக யாருமில்லை என்று சொல்லும் தனிமையில்லை. எவ்வளவு தான் கரைந்தாலும் கரைந்து போகாத பெண்ணின் அகத்தனிமையை தான்.


காதலின் ஏதோவொரு நிமிசத்தில் அந்தத் தனிமை புகை போல கலைந்து போகிறது. அப்போது தன்னிருப்பில் ஒரு ஏகாந்தம் உருவாகிறது. ஆனால் அந்த தருணம் சில நிமிசங்களில் கலைந்து போய்விடுகிறது. மீண்டும் தன் தனிமைக்கு திரும்பிவிடுகிறாள் பெண். இரவைப்பற்றியும் பிரிவால் வாடும் மனதையும் பற்றி திரும்ப திரும்ப பேச காரணம் பிரிவல்ல தனிமையே. உலகின் தனிமை தன் தனிமையை விட பெரியதல்ல என்று சொல்வதே அதன் நோக்கம்.


தனிமையை அளவிடுவதும் முடிவு செய்வதும் எளிதானதில்லை. காதல் தனிமையை அழிப்பதும் அதிகமாக்குவதுமான முரணான செயலாகவே இருக்கிறது. ஆகவே சங்க இலக்கியத்தின் பெண் தன்னுடைய தனிமையைப் பற்றிய நூற்றுக்கணக்கான குறிப்புகளாகவே காதல்பாடல்களை பாடியிருக்கிறாள் என்றேன்


எங்கள் உரையாடலின் நடுவே தெற்கு நோக்கி செல்லும் ரயில் ஒன்று வந்து நின்று பயணிகள் ஏறியிறங்கி கடந்து சென்றார்கள். காகம் ஒன்று பிளாட்பாரத்தில் இறங்கி நின்று கத்தியது. தொலைதூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் கலைந்து போயிருந்தன. ஒரு சைக்கிள்காரன் காற்றில் உடைகள் அலைபட தூரத்தில் சென்று கொண்டிருந்தான். ஊதா நிறத்தில் பை கொண்ட ஒரு ஆளும் பத்து வயது சிறுமியும் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கி கொண்டிருந்தனர்.  அடுத்த ரயில் வரும் வரை பிளாட்பாரம் காலியாக இருந்தது


தேவதச்சனும் நானும் எழுந்து தேநீர் அருந்துவதற்காக நடந்தோம். ரயில்வே ஸ்டேஷனில் உள்ள தேநீர்கடைகள் உலகம் முழுவதும் ஒன்றாகவே இருக்கின்றன. ஒரே சூட்டில் தான் எல்லா இடங்களிலும் தேநீர் வழங்கபடுகிறது. அது தேநீர் என்று நிறத்தை வைத்து முடிவு செய்வதை தவிர்த்து வேறு வகையில் கண்டுபிடிக்கவே முடியாதபடி எப்படி தேநீர் தயாரிக்கிறார்கள் என்ற ஆச்சரியத்துடன்  குடித்தோம்


பாதி தேநீரில் அவர் நம்ம மௌனி மாதிரி யாராவது பாரீன் ரைட்டரை வாசிச்சி இருக்கீங்களா என்று கேட்டார். மிக எளிமையான கேள்வி. ஆனால் அப்படி யாரை வாசித்திருக்கிறேன் என்று உடனடியாக மனதில் தோன்றவில்லை. மௌனி போல யார் இருக்கிறார்கள் என்று மனதில் தேடியபடியே யோசிச்சி சொல்றேன் என்றபடியே காதலை மௌனி ஏன் இத்தனை தெய்வாம்சபடுத்துகிறார் என்று கேட்டேன்.


அதற்கு தேவதச்சன் அது அவருடைய பிரச்சனை மட்டுமில்லை. தமிழ் இலக்கியத்தில் மரபாக காதலை தெய்வாம்சமான நிலையில் வைத்து பூஜிப்பது இருக்கதானே செய்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஜீ.நாகராஜனும் அருணகிரி நாதரும் ஒரே ஆள் தான். அருணகிரி நாதர் மதத்திற்குள்ளாக தன்னை நிறுத்திக் கொண்டு தனது இச்சைகளை பாவம் என்று அறிவித்து சரணாகதி அடைந்துவிட்டார்.


ஆனால் நாகராஜனுக்கு அது பாவமில்லை. பொதுவில் இச்சையை கொண்டாடுவது என்பது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள பட முடியாதது. உடனே குற்றமனப்பாங்கு உருவாகி விடும். கடவுள் பாவம் என்று எதையாவது போட்டு இச்சையை மறைந்துவிடுவோம். நாகராஜன் இச்சையை அனுமதிக்கிறார். அதன் முட்டுசந்துகளில் அலைந்து திரிகிறார். ஆச்சரியம் என்னவென்றால் தமிழ் வாசகனுக்கு இரண்டு பேருமே சரி என்று தோன்றுகிறது. இது போன்ற விஷயங்களில் வாசகர்கள் முடிவு செய்வதை விடவும் பகிர்ந்து கொள்வதே போதும் என்று நினைத்துவிடுகிறார்கள் என்று சொன்னார்.


தேநீர் கடையின் வாசலில் நின்றபடியே பேசிக் கொண்டிருந்தோம். பிளாட்பாரத்தில் வெயிலேற துவங்கியிருந்தது. தனது கைப்பையிலிருந்து வெற்றிலை எடுத்து போட்டுக் கொண்டபடியே தொலைவை கையை நீட்டி ஏன் தொலைவு எப்போதுமே மயக்கம் தருவதாக இருக்கிறது. இதே இடத்தை அங்கே போய் இருந்து பார்த்தால் ஏற்படும் மயக்கம் இங்கே இருக்கும் போது வருவதில்லை. நமக்கு எதற்காக தொலைவு இத்தனை மயக்கத்தை உருவாக்குகிறது.


உண்மையில் தொலைவு என்பது என்ன?  நாம் இருவருக்கும் இடையில் வயது ஒரு நீண்ட தொலைவாக உள்ளது. நமக்கும் இயேசுநாதருக்கும் இடையில் பெரிய தூரமிருக்கிறது. மணிமேகலைக்கும் என் எதிர்வீட்டு பெண்ணிற்கும் இடையில் பல நூற்றாண்டு தூரமிருக்கிறது. இப்படியே மாறிமாறி தோன்றியும் அழிந்தும் உள்ள தொலைவுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள். என்றபடியே நடக்க துவங்கினார்.


நிஜம்தானில்லையா? தொலைவு என்பது வெறும் இடம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை. ஏன் அது பலநேரங்களில் கவனம் கொள்ள மறந்து போகிறது. இருவரும் பேசாமலே நடந்து சென்று அதே ரயில் நிலைய பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.


அவராகவே பேச்சைத் தொடர்ந்து தொலைவு என்பது ஒரு இடைவெளி. அது நமது இருப்பை முதலில் விரிவடைய வைக்கிறது. அது போலவே இந்த இடைவெளி  உண்மையான சுதந்திரம் தருகிறது. எல்லா இடைவெளியும் எதிலிருந்தோ நம்மை துண்டிக்கிறது. அதனால் தான் பிடிக்கிறதோ என்னவோ?


எனக்கும்  திருவள்ளுவருக்கும் இடையில் நீண்ட தொலைவு இருக்கிறது. ஆனால் ஒரு வாசகம் அல்லது ஒரு சொல் அந்த தொலைவை அழித்துவிடுகிறது. திருவள்ளுவர்  தோளில் கைபோட்டுக் கொண்டு நடக்கும் நண்பராகிவிடுகிறார். நிஜத்தில் தொலைவை உருவாக்குவதும் அழிப்பதுமான விளையாட்டினை இலக்கியம் திரும்ப திரும்ப நடத்துகிறது என்கிறேன். இல்லை நாமாக அப்படியொரு மயக்கம் கொண்டுவிடுகிறோம். தொலைவு எதனால் சிருஷ்டிக்கபடுகிறது. மனதால் தானே.


இருவரும் பேசிக் கொள்ளாமலே இருந்தோம். நான் தேவதச்சனின் கவிதையொன்றில் இடம் பெற்றுள்ள காகிதத்திற்கும் ஒவியத்திற்குமான இடைவெளியில் என்றொரு வரியை நினைவுபடுத்தினேன். அவர் இதை எப்படி வாசகர்கள் எதிர்கொள்வார்கள். அனுபவமாவது என்ற ஒரு வழியை தவிர கவிதையை உள்வாங்கிக் கொள்ள வேறு வழிகள் இருக்கிறதா என்று கேட்டார்.


எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. எல்லா கவிதைகளும் அனுபவமாக கூடியது தானே என்றேன்.


அப்படியில்லை. அனுபவமாகிறது என்றால் அதில் வாசிப்பவரின் பங்களிப்பு முக்கியப்படுத்தபட்டுவிடுகிறது. சுய பங்களிப்பு அல்லது இருப்பு இல்லாத விஷயங்களை அனுபவம் என்று பொதுவில் நாம் சேர்ந்து கொள்கிறோமா?
ஒரு கவிதையை புரிந்து கொள்ளும் போது அது ஏன் ஒருமிக்கபட்டு வெண்ணை போல திரட்டப்பட்டுவிடுகிறது. கவிதை ஒரு கலைடாஸ்கோப் போல பல்வேறு துண்டுகளால் பல்வேறு வண்ணங்களை தரக்கூடியது.  அதை ஏன் டார்ச்லைட் வெளிச்சம் போல ஒன்றாக நினைக்கிறோம்.


தனித்த சொற்களை ஒன்றோடு ஒன்று பின்னி கவிதை உருவாகிறது ஆனால் வாசகன்  சொற்களை முக்கியம் கொள்வதில்லை. சொற்களின் வழியாக கடந்து செல்லும் உணர்ச்சிகளையும் பலநேரங்களில் முக்கியம் கொள்வதில்லை. மாறாக ஒட்டுமொத்த கவிதை தரும் அனுபவம் என்ற ஒற்றை நோக்கினை மட்டுமே முன்வைக்கிறானே அது சரியானது தானா என்று கேட்டார்


எல்லா கவிதைகளும் அப்படி வாசிக்கபடுவதில்லை. கவிதை தண்ணீரை போல எல்லா பக்கமும் திறந்திருக்கிறது. உள்ளே பிரவேசிக்கவும் கடந்து செல்லவும் அனுமதிக்கிறது. தண்ணீரின் உள்வெளி என்பது என்ன? தண்ணீருக்குள் இருக்கும் போது தண்ணீரிலிருந்து நாம் பிரிந்தும் சேர்ந்தும் ஒரே நேரத்திலிருக்கிறோம் இல்லையா?


கவிதை வாசித்தலில் வழியே நாம் அன்றாட உலகை முதலில் கைவிடுகிறோம். அதன் பிறகு உலகியல் சார்ந்த நினைவுகளையும் அதை உணர்த்தும் சொற்களையும் கைவிடுகிறோம். பல நேரங்களில் கவிதை இயல்பு உலகை போன்ற ஒரு உலகை உருவாக்குகிறது. ஆனால் அது இயல்பு உலகல்ல.


கவிதையின் வாசகன் ஒவ்வொரு கவிதைக்கும் அதற்கான வாசித்தலை கொண்டிருக்கிறான். ஆனால் கவிதையை பற்றிய எண்ணங்களை உருவாக்க வேண்டும் அல்லது அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உருவாகும் போது ஒட்டுமொத்தமாக சாக்கில் போட்டு கட்டுவது போன்று கவிதையின் அத்தனை நுண் உணர்ச்சிகள், வெளிப்பாடுகள் யாவையும் சுருக்கி கருத்தாக்குவதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறான்.


அர்த்தமற்ற சொற்களுக்கு கவிதையில் உருவாகும் முக்கியத்துவம் போல ஒரு நாளும் உரைநடையில் முக்கியத்துவத்தும் உருவாவதில்லை.  கூண்டின் கதவு திறந்து புலியே வெளியே வா என்ற வரியை வாசிக்கும் கவிதை வாசகன் அது புலியை குறிக்கவில்லை என்று முடிவு செய்து அதை குறியீடு, உவமை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறான்.  இதே வரி உரைநடையில் வரும் போது புலியை மட்டுமே குறிக்கிறது என்று முடிவு செய்கிறான். ஏன் உரைநடை வாசகனாக தன்னை மாற்றிக் கொள்ளும் போது இது போன்ற நுண்வாசிப்புகள் மறைந்து போய்விடுகின்றன என்றேன்.


பேச்சு தாவித் தாவி அங்குமிங்குமாக சென்று கொண்டிருந்தது. சங்க இலக்கியம் துவங்கி லத்தீன் அமெரிக்க இலக்கியம், இந்திய சரித்திரம், மணிமேகலை. உள்ளுர் விவசாயிகளின் மரபான அறிவு திறன் என்று அலைந்து நீண்டது. பேச்சின் ஊடாகவே பகல்மறைந்து மாலையாகி, மாலையும் கடந்து இரவானது. ரயில் நிலையங்கள் இரவில் அதிக இயக்கம் கொள்கின்றன.


கடைசி பாசஸ்சர் ரயில் போகின்ற வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் எழுந்து கொள்ளும் போது பதினோறு மணியிருக்கும். காலை ஒன்பது மணிக்கு துவங்கி இரவு பதினோறு மணி பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். இது தான் நடைமுறை. இப்படி நாலைந்து ஆண்டுகள் நானும் தேவதச்சனும் வாரத்திலுல் ஒரு நாளை பேசுவதற்கும் விவாதம் செய்வதற்கும் கழித்திருக்கிறோம்.


ஏதோவொரு வகையில் அந்த உரையாடலின் வழியே தான் எழுத்து இலக்கியம் சகமனித உறவு, சமூக பிரச்சனைகள் என யாவும் புரிந்து கொள்ள துவங்கியது.
**


சமீபத்தில் ஈரோடு சென்றிருந்த போது பின்னிரவு வரை நண்பர்களோடு அறையில் உரையாடிக் கொண்டிருந்தோம். எங்காவது தேநீர் அருந்தலாம் என்ற ஆசையில் யாவரும் உறங்கி கொண்டிருந்த ஈரோட்டின் வீதிகளில் நடந்து கொண்டிருந்தோம். அடைத்து சாத்தப்பட்ட கதவுகளுக்கு பின்னால் மனிதர்கள் அன்றாடபாடுகள் மறந்து உறங்கி கொண்டிருந்தார்கள். எங்களுக்கு உறக்கத்தை விடவும் பேச்சு பிடித்திருந்தது. பேச்சின் வாலை பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டேயிருந்தோம். தேநீர் குடித்தோம். வீடு போய் உறங்க வேண்டும் என்று எவருக்கும் விருப்பமில்லை. உடல்அசதியால் பிரிந்து மறுநாள் காலை பத்து மணிக்கு திரும்பும் பேச துவங்கியிருந்தோம்.


எவ்வளவு பேசினாலும் இன்னும் பேசி தீராத விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அதற்கான நண்பர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். என்றாலும் என் முதல் விருப்பம் எப்போதும் தேவதச்சனோடு தானிருக்கிறது. காரணம் அவரது கேள்விகள்,  உரையாடல்கள் தான் என்னை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது..


**



 

0Shares
0