பைத்தியக்காரனின் குறிப்புகள் என்ற லூசுன் (lu xun ) கதையை வாசித்திருக்கிறீர்களா.
மிக முக்கியமான சீனத்துச்சிறுகதை. போர்க்குரல் என்ற லூசுன் சிறுகதைத்தொகுப்பில் இக்கதை உள்ளது, இதைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கே.கணேஷ். உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இக்கதை கொண்டாடப்படுகிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதை.
எனக்கு லூசுனைப் பிடிக்கும், காரணம் அவரும் ஆன்டன் செகாவைப்போல ஒரு மருத்துவராக இருந்து எழுத்தாளர் ஆனவர். இருவர் கதைகளிலும் பெண்களே பிரதானமானவர்கள். ஒருவகையில் இவரைச் சீனாவின் செகாவ் என்று சொல்வேன். ஆனால் செகாவிடம் காணமுடியாத இருள்உலகமும் மனிதசீரழிவின் கொடூரமும் லூசினிடம் மிகவும் வெளிப்படையாக காணப்படுகிறது. குருதி உமிழும் புண்ணைச் சுத்தம் செய்யும் மருத்துவம் போன்றதே இவரது சிறுகதைகள்
எட்கர் ஆலன்போவின் சிறுகதைகளில் காணப்படுவது போன்ற இருண்மை உணர்ச்சி கொண்ட விசித்திரமான மனிதர்கள் லூசுன் கதைகளிலும் இடம்பெறுகிறார்கள். இக்கதை இரண்டு சகோதர்கள் பற்றியது. கதை ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போல நிசப்தமாக நகர்கிறது, அதே நேரம் மெல்ல உயர்ந்து பீதோவனின் இசை திடீரென உச்சநிலையை அடைவதைப்போலவே அதன் உச்சநிலையை அடைகிறது. பின்பு கொந்தளிப்பு மட்டுமே மிச்சமிருக்கிறது
ரஷ்ய இலக்கியம் அறிமுகமான அளவிற்கு சீன இலக்கியம் நமக்கு அறிமுகமாகவேயில்லை. கன்பூசியஸ், யுவான் சுவாங், பாஹியான், என்று பொதுவாசகர்கள் அறிந்த சீனத்து ஆளுமைகளின் முக்கியமான படைப்புகள் கூட தமிழில் அதிகம் வெளியாகவில்லை. சமகால சீன இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகம் நாம் கவனம் கொள்வதேயில்லை.
நான் அட்சரம் இதழ் நடத்திய போது சமகால சீன இலக்கியங்கள் குறித்து முக்கியத்துவம் தந்து வெளியிட்டிருக்கிறேன், இந்தியாவைப் போலவே நீண்ட இலக்கியப் பராம்பரியம் உள்ள சீன இலக்கியத்தில் அதன்பழமைக்கும் சமகால இலக்கிய போக்கிற்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
தத்துவம், அரசியல், நுண்கலை, விஞ்ஞானம் என்று சகல துறைகளிலும் முன்னோடியாக விளங்கியவர்கள் சீனர்கள். அதன் பாதிப்பை உலகெங்கும் இன்றும் காணமுடிகிறது. சினிமாவில் சீனாவின் இடம் மிக உறுதியாக இருக்கிறது. சமீபமாக சீனக் கவிதைகள் மற்றும் நாவல்கள் அதிகமாக உலகின் கவனதைப் பெற்றுவருகின்றன
சீன எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் லூசுன் , சிறந்த கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். இவரது சிறுகதைகளின் தொகுதி போர்க்குரல் என்ற பெயரில் தமிழில் வெளியாகி உள்ளது. லூசுன் கதைகளைத் தமிழ்படுத்தியவர் கே. கணேஷ். மிக அருமையான மொழிபெயர்ப்பு அது.
1881ம் ஆண்டில் சீனாவில் பிறந்த லூசுன் சிறுவயதிலே தந்தையை இழந்தவர் வறுமையான சூழல் அவரை முடக்கியது. படிப்பதில் ஆர்வமான அவர் மருத்துவம் படிக்க உதவித் தொகை பெற்று ஜப்பான் சென்றார். மருத்துவம் படித்த நாட்களில் தீவிர இலக்கிய ஆர்வம் கொண்டு பைரன் ஷெல்லி புஷ்கின் தேடி அலைந்து தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். மருத்துவத்தைவிடவும் இலக்கியமே அவரை அதிகம் ஆட்கொண்டது. சிறுவயதில் அவர் கண்ட ஒவியம் ஒன்று அவர் மனதில் எப்போதுமே வலியை உண்டாக்கி கொண்டிருந்தது.
அது ஒரு சீனன் உளவாளி என்று குற்றம சாட்டப்பட்டு கழுத்துவெட்டப்படுவதற்காக மரமொன்றில் கட்டப்பட்டிருக்கிறான். ஜப்பானியப் படை அவனை இரக்கமின்றி கொல்ல நிற்கிறது. சீனர்கள் கூட்டமாக அதை ரசித்து வேடிக்கை பார்க்கிறார்கள். என்பதே அந்த ஒவியம்
இந்த ஒவியம் சீன மக்கள் மிக பிற்போக்கான மனநிலை கொண்டிருக்கிறார்கள். என்பதையே வெளிப்படுத்துகிறது ஆகவே அவர்களை மாற்ற வேண்டியது தனது கடமை என்ற எண்ணம் லூசுனுக்குள்தீவிரமாக உருவானது. அதற்காகவே மருத்துவம் படிக்க சென்றார் ஆனால் மருத்துவத்தை விட்வும் எழுத்து முக்கியம் என்று வாசிப்பின் வழியே லூசுன் தீவிரமாக உணர துவங்கினார்.
தான் ஒரு மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிட்சை செய்வதை விடவும் சிந்தனையாளராக, எழுத்தாளராக இந்த சமூகத்திற்கு சிகிட்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்து தன் மருத்துவப் படிப்பை முடித்தவுடன் லூசுன் பள்ளி ஆசிரியராக சில காலம் பணியாற்றினார். புரட்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை ஊக்கபடுத்தினார்.
1918ம் ஆண்டு அவரது முதல்சிறுகதை பைத்தியக்காரனின் குறிப்புகள் வெளியானது. இது தான் நவீன சீனச்சிறுகதையின் துவக்கம் என்கிறார்கள். அவரின் தாயின் பெயரான லூவை தன்னோடு சேர்ந்து கொண்டு லூசுன் என்று கதைகள் எழுதத் துவங்கினார். இவரது பல சிறுகதைகள் படமாக்கப்பட்டிருக்கின்றன
மனதின் விசித்திரம் அது உருவாக்கி கொள்ளும் கற்பனைகள் மற்றும் பயங்கள். அதுசார்நது உருவாகும் அனுபவம் எப்போதுமே சிலிர்ப்பு தரக்கூடியது.
மனிதர்களின் நற்பண்புகளை நாம் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டேயிருக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் மனிதர்கள் எளிதாக தீமையின் களியாட்டத்திற்குள் தங்களை கரைத்துக் கொண்டுவிடுவார்கள். மனிதன் என்ற தனித்த அடையாளத்தை இழப்பதில் மனிதனுக்கு எப்போதுமே ஒரு உள்ளுற ஆசையிருந்து கொண்டேயிருக்கிறது.
லூசுன் கதை மனிதனின் மனம்கொள்ளும் உன்மத்தநிலையை வெளிப்படுத்துகிறது. கதையை வாசிக்கையில் உலகம் ஒரு பெரிய உணவுமேஜை போலாகியதாக தோன்றுகிறது. கருணை, இரக்கம் என்பதெல்லாம் மனிதர்களின் தற்காப்பு முயற்சிகள் தானோ என்று உள்ளுற ஒரு பதற்றமான குரல் கேட்கிறது.
நாகரீகம் என்று இன்று நாம் நம்பும் நடைமுறைகளின் பின்உள்ள இருண்ட நிகழ்வுகளை இக்கதை நினைவுபடுத்துகிறது. ஒரு கணம் நமது பற்கள் தாடையை விட்டு வெளியே துருத்திக் கொண்டு ஒநாய் போலவது போலவே தோன்றுகிறது
மனிதர்கள் நினைவில் புராதனகாலங்களில் ஆடிய வேட்டையின் ருசி இன்றும் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது. அதன் சாட்சியே இக்கதை
லூசுன் கதைகள் இணையத்தில் நூலகம்.நெட்டில் தரவிறக்கம் செய்துவாசிக்கலாம்.
https://www.noolaham.org/wiki/index.php?title
**