ஜெரி டிரிங்காவின் (Jiri Trnka))மூன்று அனிமேஷன் திரைப்படங்களைச் சமீபத்தில் பார்த்தேன்.
இவை Puppet animation வகையை சேர்ந்தவை. 1950களில் வெளியான இவை பெரியவர்களுக்கான அனிமேஷன் படங்கள். பெரியவர்கள் தங்கள் பால்யவயதோடு பொம்மைகளை விட்டு விலகிப் போய்விடுகிறார்கள். அவர்களுக்கு பொம்மைகளை மறுநினைவு கொள்ள வைப்பதே தனது நோக்கம் எனும் டிரிங்கா, கதை கேட்பதில் குழந்தைகள் எப்போதும் ஆர்வமானவர்கள். பெரியவர்களை கதை கேட்க வைப்பது கடினம். ஆகவே தனது பொம்மலாட்ட சினிமாவை ஒரு சவாலான கலைவடிவம் என்கிறார். நிஜமான பொம்மைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள் பிரதான அரங்குகளில் காட்டப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
1912ல் செக்கில் பிறந்தார் டிரிங்கா. அவரது குடும்பமே பொம்மைகள் தயாரிக்க கூடியது. டிரிங்காவிற்கு அம்மா பொம்மைகள் தயாரிக்க கற்றுதந்த போது அவருக்கு வயது ஐந்து. வீட்டில் அவரது தாய்வழி பாட்டி உருவாக்கிய மரப்பொம்மைகளை ஆசையோடு கையில் வைத்துகொண்டு கதை சொல்வதில் ஆர்வம் கொள்ள துவங்கினார். அதனால் படிப்பில் கவனம் செல்லவில்லை. சோப்பு தயாரிப்பு நிறுவனத்தில் சில மாதங்கள் வேலை செய்தார். அதன்பிறகு சில ஆண்டுகாலம் இரும்பு பட்டறையில் பணியாற்றிய பிறகு அவர் தனது விருப்பமான ஒவியத்தில் முழுமையாக ஈடுபடத்துவங்கினார்.
பொம்மலாட்டக்கலைஞர் மற்றும் ஒவியர் என்ற அளவில் அவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் கதைகளுக்காக சித்திரம் வரைவது. புத்தகம் தயாரிப்பது. மரப்பொம்மைகள் செய்வது, பொம்மைகளை கொண்டு குறும்படங்களை உருவாக்குவது என்று தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவர் குழந்தைகளுக்கு உருவாக்கிய சித்திரங்கள் சர்ரியலிச ஒவியர்களுக்கு நிகரானது என்கிறார்கள் கலை விமர்சகர்கள் .
ஷேக்ஸ்பியரின் தி மிட்சம்மர்ஸ் நைட் ட்ரீம் என்ற நாடகத்தை இவர் பொம்மைகளை வைத்து உருவாக்கிய அனிமேஷன் திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றிருக்கிறது.
அனிமேஷன் திரைப்படங்கள் இன்று தொழில் நுட்ப ரீதியாக எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டன. ஆனால் ஆரம்ப கட்ட முயற்சிகளாக மேற்கொள்ளபட்ட கையால் ஆயிரக்கணக்கான சித்திரங்கள் வரைந்து படம் உருவாக்குவதோ. அல்லது டிரிங்கா போல பொம்மைகளை பயன்படுத்தி படம் பண்ணுவதோ இன்று சாத்தியமேயில்லை. டிரிங்கா ஒரு படத்தை உருவாக்க ஒரு நாளுக்கு பதினாறு மணி நேரம் வீதம் ஒன்றரை ஆண்டுகள் உழைத்திருக்கிறார். பொம்மைகளை செய்வதில் அவரது தனித்துவம் அதை பார்த்த மாத்திரத்திலே சிரிக்க வைப்பது. பொம்மையின் தலைகள், மற்றும் கண்களை அவர் எப்போதும் கவனமாக உருவாக்குகிறார். மரபான பொம்மலாட்ட கலையில் பொம்மையை இயக்குவதில் உள்ள விதிகளை தாண்டி இவர் பொம்மைகளை உயிருள்ள மனிதர்களை போலவே அசைவுறச் செய்தார்.
பொம்மைகளின் உதடு அசைவிற்கு ஏற்ப வசனங்கள் பொருந்திப் போவதைப் போல ஒரு போதும் டிரிங்கா படமாக்குவதில்லை. பொம்மைகள் அப்படி பேசுவது தனக்கு உடன்பாடானதில்லை என்கிறார். பெரும்பான்மை படங்களில் ஒரு அரூபமான குரலே கதையை சொல்கிறது. இசை தான் வசனத்தின் வேலையை அதிகம் செய்கிறது. பொம்மைகள் தேர்ந்த நடிகர்களை போல உணர்ச்சிகளை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.
அவரது ஸ்டோரி ஆப் பேஸ் செலோ என்ற அனிமேஷன் படம் ஆன்டன் செகாவின் கதையை அடிப்படையாக கொண்டது. சிமிகோவ் என்ற செல்லோ வாத்தியக்காரனும் பிபுலூவா என்ற பெண்ணும் தற்செயலாக ஏரியில் குளிக்கும் போது சந்தித்து கொள்கிறார்கள்.
சிமிகோவ் ஒரு செல்லோ இசைக்கலைஞன். அவன் ஒருநாள் ஏரியின் அருகில் உட்கார்ந்தபடியே அலுப்பூட்டும் நாளை எப்படி கடந்து போவது என்று சலித்து கொள்கிறான். உடைகளை களைந்துவிட்டு நீந்தி குளிக்கலாம் என்று நினைத்து ஏரியில் இறங்குகிறான். சற்று நீந்தி சென்ற போது ஒரு இடத்தில் பிபுலூவா என்ற அழகான இளம்பெண் தன்னை மறந்து உறங்கியபடியே தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் தோற்றத்தில் மயங்கி அந்த தூண்டிலில் ஒரு பூவை கோர்த்துவிடுகிறான் சிமிகோவ். குளித்து கரையேற நினைக்கும் போது அவனது ஆடைகளை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டது புரிகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏரியின் உள்ளேயே நிற்கிறான்
இன்னொருபக்கம் பிபுலூவா தூக்கம் விழித்து தன் உடைகளை களைந்து ஏரியில் இறங்கி நிர்வாணமாக குளிக்கிறாள். அவள் உடைகளையும் திருடன் திருடி கொண்டு போய்விடுகிறான். இருவரும் நிர்வாணமாக ஏரியின் உள்ளே சந்தித்து கொள்கிறார்கள். என்ன செய்வது என்று புரியவில்லை. ஒருவரையொருவர் கண்டு வெட்கப்படுகிறார்கள். சிமிகோவ் இந்த ஆபத்தில் இருந்து அவளை காப்பாற்ற தனது செல்லோ இசைக்கருவி வைக்கும் பெட்டியினுள் அவள் போய்விடும்படியாக சொல்கிறான். பிபுலூவாவும் அதற்குள் ஒளிந்து கொள்கிறாள்.
இதற்கிடையில் சிமிகோவ்விற்காக ஒரு இசைநிகழச்சியில் யாவரும் காத்துகிடக்கிறார்கள். அவன் எப்போது வருவான் என்று தேடுகிறார்கள். சிமிகோவ்வோ தன் ஆடைகளை திருடிய திருடனை துரத்திக் கொண்டு போய்விடுகிறான். அவனை தேடி ஏரிக்கு வந்த இசைநிகழ்வு ஆட்கள் செல்லோ இசைக்கருவி உள்ள பெட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். அதை மேடையில் வைத்து திறக்கிறார்கள். அதன் உள்ளே நிர்வாணமாக பிபுலூவா செல்லோ போலவே வளைந்து ஒடுங்கி நின்றபடியே உறங்கி கொண்டிருக்கிறாள். அதை கண்டு யாவரும் தன்னை மறந்து வெடித்து சிரிக்கிறார்கள்.
இந்தக் கதையை டிரிங்கா காட்சிபடுத்துவதில் நுட்பமான சாதனைகள் செய்திருக்கிறார். இரண்டு பொம்மைகள் உடைகளை களைவதும், தண்ணீரில் இரண்டு பேரும் சந்தித்து கொள்ளும் காட்சியில் பொம்மைகள் அடையும் வெட்கமும். ஆண்பொம்மை பெண்ணை பார்க்க மறுத்து தலையை திருப்பி கொள்ளும் நளினமும் வெடித்து சிரிக்க வைப்பவை.
தண்ணீரின் சலனமும் ஏரியின் இயல்பும் இசைக்கருவி கேட்க வந்தவர்களும், சிமிகோவை தேடி வரும் இதர இசைக்கலைஞர்களும் தனித்துவமாக உருவாக்கபட்டிருக்கிறார்கள். படத்தின் கடைசி காட்சியில் அந்த பெண்ணின் நிர்வாணம் நேரடியாக காட்சிபடுத்தபடவில்லை. ஆனால் அதன் எதிரொளி பார்வையாளர்களின் மீது காட்டப்படுகிறது.
டிரிங்காவின் கதை சொல்லும் முறை சாப்ளின் படங்களை போலவே உள்ளது. எப்போதும் இசையை மனதில் முடிவு செய்தபிறகே காட்சிகளை உருவாக்குவதாக டிரிங்கா கூறுகிறார்
செக் நாட்டின் கம்யூனிச அரசியலும் அதன் அதிகாரமும் டிரிங்காவின் மீது கெடுபிடிகளும் தடைகளும் உருவாக்கியது. ஆனால் மக்கள் அவரது பொம்மைகளை தங்களது சொந்த குழந்தைகளை போல நேசித்தார்கள். மக்களை மேம்படுத்தவும், நேசிப்பதற்காகவுமே கலைகள் இருக்கின்றன. மற்றபடி அவை அதிகாரத்தை திருப்திபடுத்த வேண்டிய தேவையில்லை என்று நேரடியாக டிரிங்கா அறிவித்தார். அவரது அரசியல் கருத்துகளுக்காக டிரிங்கா அதிகம் தொல்லைபடுத்தபட்டார்.
The Midsummer Night’s Dream நாடகத்தை பொம்மைகளை வைத்து படமாக்க அவர் நான்கு ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டார். நேரடியான வசனங்கள் அதிகமில்லாமல் இசையின் வழியே அவர் காட்சிகளை முன்னெடுத்து செல்வது தனித்துவமாக உள்ளது. இந்த படம் 1959ல் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தையும் விவாத்தையும் பெற்றது. பலர் இது ஷேக்ஸ்பியரை கேலி செய்வது போல உருவாக்கபட்டிருக்கிறது என்று விமர்சனம் செய்தனர். ஆனால் டிரிங்கா இது ஷேக்ஸ்பியரின் நாடகமில்லை. தான் எப்படி ஷேக்ஸ்பியரைப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதையே படமாக்கியிருக்கிறேன் என்றார்
பொம்மாலட்டம் தவிர்த்து புத்தங்களுக்கான சித்திரங்கள் வரைவது. புத்தகங்களை வடிவமைப்பு செய்வது இரண்டிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் டிரிங்கா. குறிப்பாக ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் தேவதைகதைகளுக்கு இவர் வரைந்த சித்திரங்கள் அபராமானவை.
இவரது The Hand என்ற அனிமேஷன் படத்தில் ஒரு சிற்பக்கலைஞர் ஒரு பூக்குவளை ஒன்றை செய்ய முயற்சிக்கிறார். அதை செய்யவிடாமல் திடீரென அவரது ஜன்னலின் வழியே ஒரு ராட்ச கை உள்ளே நுழைந்து தன் விருப்பத்தின்படி மட்டுமே அவர் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. அந்த கையை அவர் துரத்த முயற்சிக்கிறார். ஆனால் அந்தக்கை அவரை மிரட்டுகிறது. தன்னை போன்ற கைகளை மட்டுமே அவர் உருவாக்க வேண்டும் என கட்டளையிடுகிறது. அவர் கையோடு போராடுகிறார். திடீரென கை அவரது டிவியின் வழியே உள்ளே நுழைந்து தனது விருப்பத்தை மறுபடி வற்புறுத்துகிறது. இப்போது அதன் தோற்றம் மாறி எழிலாக உள்ளது. ஆகவே அதன் வனப்பில் மயங்கி கோரிக்கையை ஏற்கிறான். அது அவனை கூண்டில் அடைத்து ஒரு மாபெரும் கையை செய்யும் படி நிர்பந்திக்கிறது. பிரச்சார பதுமை போல தான் ஆவதை உணர்கிறான்.
இந்த அபத்த நாடகத்தை தாங்க முடியாமல் சிற்பி மறுக்கிறான். கை அவனை வதைத்து நசுக்குகிறது. அதிகாரம் ஒரு கலைஞனை தனது பிரச்சார கருவியாக பயன்படுத்த தன்னால் ஆன எல்லா தந்திரங்களையும் உருவாக்குகிறது. அதற்கு அடிபணிபவர்கள் மெல்ல தனது கலைத்திறனை இழந்துவிடுகிறார்கள். அதிகாரம் என்பது நம்மால் எதிர்க்கமுடியாத மாபெரும் கரம். அது எதையும் உடைத்து கொண்டு நமது அந்தரங்க உலகில் நுழையக்கூடியது என்றே படம் சொல்கிறது.
ஜெரி நேரடியாக ஸ்டாலினிச அரசியலை விமர்சனம் செய்தபடமது. இதில் அதிகாரம் எளிய மனிதர்களின் விருப்பங்களை அழித்து சிதைப்பதுடன் அவர்களுக்கு தான் உண்மையாக வழிகாட்டுவதாக பொய்நாடகமாடுகிறது என்றும் வெளிப்படையாக அறிவித்தார். இந்த படத்தை அன்றைய செக் அரசு அரசியல் எதிர்ப்பு படமாக அறிவித்து தடை செய்தது.
படம் வெளியான சில மாதங்களிலே டிரிங்கா இறந்து போனார். கைகள் என்ற அந்தப்படம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செக்கில் தடை செய்யப்பட்டேயிருந்தது. பதினேழு நிமிசங்கள் ஒடக்கூடிய இந்த திரைப்படம் தற்போது டிவிடி வடிவில் காணக்கிடைக்கிறது.
அமெரிக்காவிற்கு வெளியில் நடைபெறும் அனிமேஷன் திரைப்படங்கள் குறித்து அமெரிக்க சினிமா பெரிதும் கவனம் செலுத்துவதோ. கொண்டாடுவதோ கிடையாது. அதனால் புகழின் வெளிச்சம் படமாலே மறைந்து போனார் டிரிங்கா. இன்று அவரது திரைப்படங்களின் தொகுப்பு இணையத்தில் காணக்கிடைக்கிறது. அதில் அவரது மேதமையின் வெளிச்சம் நீக்கமற்று இருப்பதை திரைப்பார்வையாளனால் முழுமையாக உணர முடிகிறது.
கைகள் திரைப்படத்தினை காண இணைப்பு.
https://videosift.com/video/Jiri-Trnka-The-Hand-1965-amazing-stopmotion-animation