போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்

காலச்சுவடு இதழில் வெளியான எனது புதிய சிறுகதை.

**

வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஒவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். மணலின் நடனம் என்று பெயரிப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கை பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912 முதல் 1919 வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சுற்றியலைந்திருக்கிறான் என்பதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஒவியர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறான் என்பதும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளின் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

போயர்பாக் 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தத்துவவாதி. ஒருவேளை வின்சென்ட்டின் தந்தை தத்துவம் படித்தவராகவே, போயர்பாக்கின் அபிமானியாகவோ இருந்திருக்கக் கூடும்.

போயர்பாக் தான் சிறுவயதிலிருந்தே மதநம்பிக்கையற்றவனாகவே வளர்க்கப்பட்டேன் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறான். ஒரு எழுத்தாளின் கடந்தகாலத்தை அவனது நூலிலுள்ள வரிகளின் வழியாகக் கண்டறிவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. எழுத்தாளர்கள் நினைத்தாலும் அவர்களின் கடந்தகாலத்தை மறைத்துக் கொள்ள முடியாது. அது தண்ணீரைப் போல எப்படியாவது கசிந்து ஒடிவிடும்.

போயர்பாக்கை பற்றிய சுயவிபரக்குறிப்புகளை அப்படித் தான் கண்டறிந்தேன். உண்மையில் அது ஒரு சுவாரஸ்யம். ஒரு புதிரை விடுவிப்பது போன்றது. போயர்பாக் இந்தியாவிற்கு எப்படி வந்தான். யார் அவனை அழைத்தது. எங்கே வந்து இறங்கினான் என்று ஒரு தகவலும் இல்லை.

இந்தியர்களைப் பொறுத்தவரை வெள்ளை நிற தோல் கொண்ட எல்லோரும் வெள்ளைக்காரர்களே. அவர்களுக்கு ஜெர்மனியர், ஐரோப்பியர், ஐரீஷ்காரர்கள், பிரிட்டீஷ்காரர்கள் என்ற வேற்றுமை தெரியாது.

போயர்பாக்கின் முதற்கட்டுரை மூன்று தலைகள் கொண்ட ஒரு மரத்தை பற்றியது. பழைய புத்தகக் கடையில் கிடந்த இந்த நூலை தற்செயலாகப் புரட்டியபோது இந்தக் கட்டுரையைத் தான் பிரித்துப் படித்தேன். அது தான் இந்நூலை வாங்க வைத்தது.

விசித்திரமான புத்தகங்கள் தனது தோற்றத்தில் ஒரு போதும் விசித்திரமாக இருப்பதில்லை. இன்னும் சொல்வதென்றால் குழப்பமான தலைப்புடன் வசீகரமற்ற முகப்பு அட்டையுடன் தானிருக்கும்.

மணலின் நடனம் என்ற இந்த நூலின் அட்டை கருநீலத்தில் இருந்தது. மனிதனின் தலையா அல்லது குதிரையின் தலையா எனப் பிரித்து அறியமுடியாத ஒரு தலை முகப்பு ஒவியமாக இடம்பெற்றிருந்தது. நூல் அச்சிடப்பட்டது பனாரஸில் என்பதைத் தாண்டி வேறு அதிகக் குறிப்புகள் இல்லை.

போயர்பாக்கின் நூலை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த தேநீர் கடையின் பெஞ்சில் அமர்ந்தபடியே புரட்டினேன். புற்றில் பாம்பு இருப்பது தெரியாமல் கையை அருகில் கொண்டு போனால் பாம்பின் சீற்றம் எப்படி வெளிப்படுமோ அப்படித் தான் நூலின் முதற்கட்டுரை என்னைத் தீண்டியது.

கஜார்பாட் என்ற சிறிய கிராமத்தில் மூன்றுதலைகொண்ட மரமொன்றிருந்தது என்றும் அந்த மரத்தை நெருங்கிப் போகக் கிராம மக்கள் பயந்தார்கள் என்றும் அக்கட்டுரை துவங்குகிறது.

ஜான் சாமுவேல் என்ற ஒவியர் அந்த மரத்தை படம் வரைவதற்காகச் சென்ற போது அவருடன் உதவியாளராகப் போயர்பாக் சென்றிருக்கிறான். ஒவியம் வரைவதற்காகப் பொருட்களைச் சுமந்து போவது அவனது வேலை.

எங்கே மரத்தைக் கண்டாலும் போயர்பாக்கிற்கு வியப்பாக இருக்கும்

“மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா“ என்று தோன்றும்

ஜான் சாமுவேலிற்கு இப்படியான எண்ணங்கள் வருவதில்லை. அவர் கிழக்கிந்திய கம்பெனிக்காக இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளை, கோவில்கள். சிற்பங்கள். .கோட்டைகளை ஒவியமாக வரைந்து தர நியமிக்கப்பட்டிருந்தார். சாமுவேலிற்கு எழுபது வயதிற்கு மேலிருக்ககூடும். ஆனால் உடல் முப்பது வயதுக்காரனின் வலிமை கொண்டிருந்தது. அவரால் ஒரு நாளில் முப்பது மைல் வரை நடக்க முடியும். ஒரு போதும் அவர் களைப்படைந்து போயர்பாக் கண்டதேயில்லை.

சாமுவேலின் பலவீனம் பெண்கள். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைத்துணை வேண்டும். எப்படியாவது ஒரு இந்தியப் பெண் கிடைத்துவிடுவாள். சேற்றைப் பூசிக் கொண்டு வெயிலில் உட்கார்ந்திருப்பது போன்றது இந்தியப் பெண்ணோடு கூடும் கலவி என்று ஒருமுறை சொன்னார் சாமுவேல். போயர்பாக்கிற்கு அப்படியான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை. பெண்களை நெருங்கிப் பார்க்கையில் தனது கண்கள் தானே சுருங்கிவிடுகின்றன எனப் போயர்பாக் எழுதியிருக்கிறான்.

சாமுவேல் மிகவும் துல்லியமாகக் காட்சிகளை ஒவியமாக வரையக்கூடியவர். எந்தப் பொருளாக இருந்தாலும் தான் அதை ஒவியமாக்கிவிட்டால் பின்பு அது பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்குச் சொந்தமானதாகிவிடும் என்று சாமுவேல் நம்பினார். ஒருவகையில் அவர் இந்தியாவின் கடைசித் தாவரம் வரை பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் முழுமையாக இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

போயர்பாக்கிற்கு இந்தியா விசித்திரத்தின் பெருநிலமாக இருந்தது. கடவுள்கள். கடவுள்கள். கடவுள்கள். இத்தனை ஆயிரம் கடவுள்கள் எதற்காக இந்தியாவில் இருக்கிறார்கள் என்று அவனால் புரிந்து கொள்ளவேமுடியவில்லை.

இதிலும் ஆண்கள் மட்டுமே வழிபடும் கடவுகள் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டபோது அது புதிராத புதிராக இருந்தது. கடவுள் ஆணா என்ன , அவரை யார் ஆண் பெண் எனப் பிரித்தது. மனிதர்கள் செய்த பெரும்தவறு கடவுளை ஆண் பெண்ணாக வேறுபடுத்தியது தானா.

இந்தியாவில் பெண்கள் ரகசியமாக வழிபடும் கடவுளும் இருந்தார்கள். ஒவ்வொரு கடவுளும் பல நூறு கதைகள் கொண்டிருந்தார்கள். அந்தக் கதைகள் வளர்ந்து கொண்டேயிருந்தன. இந்தியர்களுக்கு மதம் என்பது அணிந்து கொள்ளும் சட்டையில்லை. உடலின் மேல் தோல் போன்று பிரிக்கமுடியாத அம்சம்.

மூன்று தலையுள்ள மரமுள்ள கிராமத்தை காண அவர்கள் கோடைக்காலத்தில். பயணித்தார்கள்

புழுதிபறக்கும் சாலைகள் உலர்ந்து வெறுமையோடிய கிராமங்களைக் கடந்து அவர்கள மாட்டு வண்டி ஒன்றில் பயணித்தார்கள். குறுகலான மண்சாலையது. வழியில் மரங்களேயில்லை. கரடுமுரடான பாதையில் மாட்டுவண்டி குலுங்கி குலுங்கி சென்று கொண்டிருந்தது. தாகமிகுதியுற்ற சாமுவேல் எரிச்சலும் கோபமுமாக மாட்டுக்காரனை வேகமாகச் செல்லும்படி திட்டிக் கொண்டிருந்தார்.

போயர்பாக் வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தான். அவன் எதையும் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. நிதானமாக வண்டி ஒட்டினான். வெயில் அடிப்பதோ, வறண்ட நிலமோ எதுவும் அவனுக்குப் பொருட்டாகவே இல்லை.

போயர்பாக் அந்த மனிதனை ரசித்தான். கற்சிலை போன்ற உறுதியான உடற்கட்டு. பெரிய கண்கள். அகன்ற மீசை. கோரையான தாடி. அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் வெள்ளைக்காரர்களைப் பற்றி அறிந்திருக்கக் கூடும். ஆகவே மௌனமாகவே வந்தான்.

சாமுவேல் சுட்டெரிக்கும் சூரியனை சபித்தபடியே வந்தான். மூன்று தலையுள்ள மரமிருந்த கஜார்பாட் கிராமத்தின் நிர்வாகி ஒருவர் அவர்களை வரவேற்க குடையுடன் காத்திருந்தான். அவனைச் சாமுவேல் பொருட்படுத்தவேயில்லை. வண்டியை விட்டு இறங்கியதும் மரம் எங்கேயிருக்கிறது என்று மட்டும் கேட்டான். மிகப்பணிவுடன் உடலை வளைத்தபடியே படே மியான் தோட்டத்தருகே உள்ளது. அது வெறும் மரமில்லை. கிராமக்கடவுள் என்றான் நிர்வாகி.

“உங்கள் கடவுள் ஏன் மரமாகியிருக்கிறார்“ என்று சாமுவேல் கேட்டதற்கு நிர்வாகி பதில் சொல்லாமல் அசட்டுச் சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தான்.

போயர்பாக் அந்த ஆளிடம் சாமுவேல் அமருவதற்காக ஒரு மரநாற்காலி வேண்டும் என்று கேட்டான். கிராம நிர்வாகி இரண்டு ஆட்களை ஏவி மரநாற்காலி ஒன்று கொண்டுவரும்படியாகச் சொன்னான். சாமுவேலும் போயர்பாக்கும் அந்த மரத்தினை நோக்கி நடந்து போனார்கள். பருத்து உயர்ந்த மரம். மூன்று வேறுபட்ட இலைகளுடன் கிளைகள் வளர்ந்திருந்தன.

கிராம நிர்வாகி சொன்னான்

“மூன்று வேறுபட்ட மரங்கள் ஒரே தண்டில் வளர்ந்திருக்கிறது. அது தான் ஆச்சரியம் “

சாமுவேல் வியப்புடன் அந்த மரத்தை ஏறிட்டு பார்த்தார். மூன்றுவிதமான இலைகள். கிளைகளின் அமைப்பும் வேறுவிதமாக இருக்கிறது. ஒரு மரத்தில் எப்படி மூன்று விதமான இலைகள் உருவாகும். மரத்தை சுற்றிவந்து பார்த்தபோது கிராம நிர்வாகி சொன்னான்

“மரத்தை தொட வேண்டாம்“.

சாமுவேல் அதைப்பொருட்படுத்தவில்லை. மரத்தின் கடினமான பட்டையை உரித்துப் பார்த்தார். நிச்சயம் மரத்தின் வயது நூறை தாண்டியிருக்கும். வாசனை எதுவுமில்லை. இப்படி ஒரு விசித்திர மரத்தை இதன்முன்பு எங்கேயும் கண்டதேயில்லை. மரத்தை எங்கிருந்து வரைவது என்பதற்காகச் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த மேட்டு நிலத்தில் நின்றபடியே வரையலாம் என்று தோன்றியது. இதற்குள் மரநாற்காலி வந்திருந்தது. அந்த நாற்காலியை தூக்கி கொண்டு வந்தவள் ஒரு இளம்பெண். ஆறடிக்கும் அதிகமான உயரம் கொண்டிருந்தாள். உருவிய வாள் போன்ற உடல். சிவப்பு நிற சேலை கட்டியிருந்தாள். சேலையை இடுப்பில் தூக்கிச் சொருகியபடியே அவள் நாற்காலியை அவர் முன்பாகப் போட்டு சேலையால் அதைத்துடைத்துவிட்டு அவரைப் பார்த்து கைகுவித்தாள். சாமுவேல் அவளின் வாளிப்பான மார்பை ஏறிட்டு பார்த்தார். சிறிய பலாக்காயை நினைவுபடுத்தும் மார்பகங்கள்.

தன் மார்பகங்களை வெறித்துப் பார்ப்பதை அவள் அறிந்த போதும் கூச்சமடையவேயில்லை. சாமுவேல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மரத்தை உன்னிப்பாகப் பார்த்தபடியே இருந்தார். இதற்குள் போயர்பாக் வண்டியில் இருந்த பொதியில் இருந்து ஒவியம் வரைவதற்கான ஸ்டாண்ட், வண்ணங்கள் மற்றும் தூரிகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

கிராம நிர்வாகி தயக்கத்துடன் கேட்டான்

“ஸாப் ,எதற்காக இந்த மரத்தை படம் வரைகிறீர்கள்“

சாமுவேல் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. ஆழ்ந்து மரத்தை கவனித்தபடியே இருந்தார். போயர்பாக் அந்தக் கிராம நிர்வாகியின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தான். அந்த ஆள் ஏதோவொன்றை மறைப்பது போலவே தெரிந்தது. சாமுவேல் தனது பென்சிலால் தனது நோட்டில் கோடுகள் வரைய ஆரம்பித்தார். சிறிய நோட்டில் வரைந்துவிட்டு தான் பின்பு கேன்வாசில் அவர் வரைவார். இனி தனது வேலை அவருக்கான உணவு. குடிநீர், வியர்க்கும் போது துடைத்துவிடுவது போன்ற பணிகள் மட்டுமே என்று போயர்பாக் உணர்ந்திருந்தான்.

அந்தப் பெண் போயர்பாக்கை நெருங்கி வந்தாள். நீண்டநாள் பழகியது போல அவனைப் பார்த்து புன்னகைத்தாள். பின்பு அவனுக்குத் தெரியாத மொழியில் ஏதோ கேட்டாள். போயர்பாக் தலையாட்டினாள். அவள் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு போனாள்

கிராம நிர்வாகி அவனிடம் அறைகுறை ஆங்கிலத்தில் சொன்னான்

“இதுவரை இந்த மரத்தை யாரும் படம் வரைந்தது இல்லை. எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு ஏதாவது ஆகக்கூடும்“

என்ன ஆகிவிடும். எதற்காக இந்த எச்சரிக்கை என்று அவனுக்குப் புரியவில்லை. அன்றைய பகல் முழுவதும் சாமுவேல் அந்த மரத்தை வரைந்து கொண்டிருந்தார். மாலையாகி வெளிச்சம் குறையத்துவங்கியதும் நாளை வரைந்து கொள்ளலாம் என்று வேலையைப் பாதியில் முடித்துக் கொண்டார். இதற்குள் அவர்கள் தங்குவதற்காக ஒரு வீட்டினை நிர்வாகி தேர்வு செய்திருந்தான். அது ஒரு குடிசை வீடு. அந்த வீட்டில் இருந்தவர்களை வேறு ஒரு குடிசையில் தங்கிக் கொள்ளச் செய்திருந்தார்கள். போயர்பாக் நினைத்தது போலவே காலையில் நாற்காலி கொண்டு வந்த பெண் இரவில் அவர்கள் குடிசைக்கு வந்திருந்தாள். சாமுவேல் ஒரு நாயை விரட்டுவது போலப் போயர்பாக்கை விரட்டி அடித்தான்.

கிராமநிர்வாகியின் வீட்டு முற்றத்தில் ஒரு கயிற்றுகட்டில் போட்டு போயர்பாக் உறங்கினான். மறுநாள் காலை சாமுவேல் கிராமத்தின் மேற்கே தெரியும் இடிந்த கோட்டை ஒன்றை காண்பதற்காகத் தனியே நடந்து சென்றார். போயர்பாக் எழுந்து கொண்ட போது கிராமநிர்வாகி அவனையும் அந்தக் கோட்டைக்கு எஜமான் வரச் சொன்னதாகத் தெரிவித்தார். சூடு தாங்காமல் போயர்பாக்கின் கண்கள் எரிந்தன. ஒரு குவளை நிறையத் தண்ணீர் குடித்துவிட்டு மேற்கில் இருந்த கோட்டையை நோக்கி போயர்பாக்கும் நடந்தான். இரண்டு மைல் தூரமிருக்கக் கூடும். எந்த மன்னருடைய கோட்டையது என்று தெரியவில்லை. ஆனால் இடிந்து மண்சுவராகியிருந்தது. அந்தக் கோட்டையின் இடிபாடுகளுக்குள் அவன் சாமுவேலைத் தேடினான். அவரைக் காணவில்லை. ஒருவேளை வேறு எதையாவது தேடிப்போயிருக்கக் கூடுமோ என்று இடிந்த நிலையில் நின்றிருந்த ஒற்றைச் சுவர் மீதேறி பார்த்தான். எங்கும் வெட்டவெளி. காலைச்சூரியனனின் வெக்கை.

போயர்பாக் கிராமத்திற்கே திரும்பி வந்தான். சாமுவேலை காணவில்லை. எங்கே போயிருப்பார். அன்று முழுவதும் கிராமவாசிகள் சாமுவேலைத் தேடினார்கள். ஆனால் அவரைக் காணவில்லை. திடீரென ஒரு மனிதர் எப்படி மறைந்து போயிருப்பார். என்ன ஆகியிருக்கும் அவருக்கு. கிராம நிர்வாகி ஒரு வேளை விஷப்பாம்பு ஏதாவது கடித்து இறந்து போயிருக்கக் கூடுமோ என்று தேடிப்பார்த்தான். சாமுவேலின் தடம் கூடக் கண்டறியமுடியவில்லை.

சாமுவேல் ஏன் மறைந்து போனார். எங்கே போயிருக்கக் கூடும். அடுத்த நாள் முழுவதும் போயர்பாக் தேடியும் அறிந்து கொள்ள முடியவில்லை. சாமுவேல் வரைந்த ஒவியம் பாதியில் இருந்தது.

திடீரென மரம் அவனைப் பார்த்துச் சிரிப்பு போல இருந்தது. பிரம்மையா இல்லை உண்மையாகச் சிரித்ததா. மரம் எப்படிச் சிரிக்கும். போயர்பாக் குழப்பமுற்றவனைப் போல அந்தக் கிராம நிர்வாகியிடம் கேட்டான்

“நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். சாமுவேலுக்கு என்ன நடந்தது“

“மூன்று தலையுள்ள மரம் புனிதமானது. அதை வரைய முற்பட்டால் இப்படித் தான் மறைந்து போய்விடுவார்கள். அதைச் சூசகமாக எச்சரிக்கை செய்தேன். ஆனால் எஜமான் அதைக் கண்டுகொள்ளவில்லை “

“முட்டாள்தனமான எண்ணம். மரம் தண்டிக்குமா என்ன “ என்று கோபமாகக் கேட்டான் போயர்பாக்

“யாராவது உங்களை நிர்வாணமாக வரைந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா “எனக்கேட்டான் கிராமநிர்வாகி. இப்போது அவனது குரல் மாறியிருந்தது. அவன் கோபத்தை வெளிப்படுத்துகிறவன் போலப் பேசினான்

“மனிதனும் மரமும் ஒன்றில்லை“ என்றான் போயர்பாக்

“அது உங்களுக்கு.. எங்களுக்கு அப்படிப் பிரிவினையில்லை. மரத்திற்கு நாங்கள் திருமணம் கூடச் செய்து வைப்போம் “என்றான் கிராமநிர்வாகி

“மரத்திற்குத் திருமணமா “எனக் குழப்பத்துடன் கேட்டான் போயர்பாக்

“அதெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. வண்டி தயாராகயிருக்கிறது. நீங்கள் புறப்படலாம்“ என்றான் கிராமநிர்வாகி.

எங்கே போவது. சாமுவேலை காணவில்லை என்று கம்பெனி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தோடு இங்கே நடைபெற்ற விஷயங்களை முழுமையான அறிக்கையாகச் சமர்பிக்க வேண்டும். போயர்பாக் கிராமத்திலிருந்து விடைபெறுவதற்கு முன்பு அந்த மரத்தை ஏறிட்டுப் பார்த்தான். யானையின் காதுகள் அசைந்து கொண்டிருப்பது போல மிதமான வேகத்துடன் கிளைகள் அசைந்து கொண்டிருந்தன.

“இந்தியா கடவுளின் வாழ்நிலம். இதைப் புரிந்து கொள்வது எளிதானதில்லை“ என்று முணுமுணுத்தான்.

இது நடந்த ஏழாம் நாளில் கம்பெனியின் அதிகாரப்பூர்வ ஒவியனாகப் போயர்பாக் நியமிக்கபட்டான். வயிற்றுபோக்கால் சாமுவேல் கஜார்பாட்டில் இறந்து போனதாகக் கம்பெனி பதிவேட்டில் குறிப்பு எழுதினார்கள். அதிலிருந்து போயர்பாக் விசித்திரங்களைத் தேடி காணுவதை வாழ்க்கையாகக் கொள்ளத் துவங்கினான் என்று முதற்கட்டுரை விவரித்தது

••

அந்தக் கட்டுரையை வாசித்து முடித்தவுடன் இது ஒரு கதையா, நடந்த சம்பவமா என்ற குழப்பம் ஏற்பட்டது. கூடவே சாமுவேலுடன் கூடிய பெண் தான் அவரைக் கொன்றிருப்பாளோ என்ற சந்தேகமும் உருவானது. வெள்ளைக்காரனை கொன்றுபுதைத்துவிட்டு கிராம மக்கள் நாடகமாடுகிறார்கள் என்று தான் தோன்றியது. அத்தோடு போயர்பாக் எப்படியிருப்பான். அவனது முகம் எப்படியிருக்கும் எனக் காண வேண்டும் என்ற ஆசையும் உருவானது. நானாக மனதிற்குள் போயர்பாக்கிற்கு உருவம் கொடுக்கத் துவங்கினேன்

போயர்பாக் இந்தியாவினை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறான். இந்தியக்கடவுள்கள் பசி கொண்டவர்கள். அவர்களுக்கு அன்றாடம் முறையாக உணவளிக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். இந்தியக்கடவுகள் அலங்காரப் பிரியர்கள். விதவிதமான பூக்களைச் சூடிக் கொள்பவர்கள். உப்பில்லாத உணவை சாப்பிடக்கூடியவர்கள். கடவுளும் துணையோடு தான் உறங்குவார். இந்தியர்களைப் புரிந்து கொள்ள அவர்களின் கடவுள்களைப் புரிந்து கொள்வதே சரியான துவக்கம் என்று நினைத்துக் கொண்டேன்

போயர்பாக்கின் அடுத்த இரண்டு கட்டுரைகள் காலத்தின் கடவுளையும் காமத்தின் கடவுளையும் தேடிப் போனதாக இருந்தது. அந்தக் கட்டுரை ஒன்றில் ஒருவரி பளிச்சிட்டது

“இந்திய மனது துயரத்தால் நிரம்பியது. அதன் பொருட்டே இவ்வளவு கடவுள்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். “

போயர்பாக் ஒரளவு இந்தியர்களை நெருங்கி வந்துவிட்டான் என்றே தோன்றியது. “காமதேவனாகிய மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருக்கிறான், நுனி முதல் முடி வரை இனிக்ககூடியது கரும்பு. காமம் அப்படியானது தான். காமதேவன் பூக்களை அம்பாக எய்கிறான். காமம் உடலில் அரும்பு பூ. இந்தியர்கள் எல்லாவற்றையும் உருவகப்படுத்துகிறார்கள். அரூபமாக்கிவிடுகிறார்கள். ரகசிய சமிக்ஞைகளைப் போல உருமாற்றி விடுகிறார்கள். “ எனப் போயர்பாக் ஏதேதோ எழுதியிருக்கிறான்.

நூலின் ஆறாவது கட்டுரை தான் மழைக்கோவிலைப் பற்றியது. அது தான் இந்த நூலின் மிகச்சிறப்பான கட்டுரை. அந்தக் கட்டுரையை அவன் பித்தேறிய நிலையில் எழுதியிருக்கிறான் என்பது சொற்களை உபயோகித்துள்ள விதத்தில் தெரிகிறது. வெல்லத்தைக் காய்ச்சும் போது அது பாகு போலாகிவிடும். அப்போது அதை நூல் போல இழுக்க முடியும். அப்படியொரு மொழிநடை.

போயர்பாக்கின் இந்தக் கட்டுரை என்னை உலுக்கிவிட்டது. தார்பாலைவனத்தின் நடுவே முடிவற்ற மணற்பரப்பில் ஆண்டுமுழுவதும் மழைபெய்து கொண்டேயிருக்கும் புராதனமான கோவில் ஒன்றிருக்கிறது. அந்தக் கோவிலின் மீது எப்போதும் மழை பெய்து கொண்டேயிருக்கிறது. என்று தான் அக்கட்டுரை துவங்குகிறது

வாசித்தவுடனே அக்காட்சி மனதில் விரியத்துவங்கியது. எத்தனை அற்புதமான காட்சியது.

அம் மழைக்கோவிலை தேடிச் செல்வது மரணத்தைத் தேடிப்போவது போன்றது. பாலைவன வாசிகளில் சிலருக்கே அந்த வழி தெரியும். அவர்கள் வெளியாட்கள் எவரையும் அங்கே அழைத்துப் போவதில்லை.

போயர்பாக் இதைக் கேள்விப்பட்டபோது அது ஒரு பழங்கதை என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் பாலைவனக் கிராமமான இம்லிபுராவில் சந்தித்த ஆடுமேய்க்கும் கிழவர் சொன்னார்

“யார் சொன்னது கதை என்று. மழைக்கோவில் உண்மையில் இருக்கிறது. பாலைவனம் தான் கடவுளின் வாழ்நிலம். அந்தக் கோவில் கடவுளின் வீடு“

அங்கே என்னை அழைத்துச் செல்ல முடியுமா எனப் போயர்பாக் கேட்டான்

அதற்கு அந்தக் கிழவர் சொன்னார்

“எனக்கு வழிதெரியாது. ஆனால் இரவில் பாலைவனத்தில் இருந்த நாட்களில் அந்த மழையின் ஒசையைக் கேட்டிருக்கிறேன். பாலைவனத்தில் ஒட்டகம் மேய்ப்பவர்கள் அக் கோவிலை அறிவார்கள். “

“அவர்களை எங்குச் சந்திப்பது “எனக்கேட்டான் போயர்பாக்

“சார்பர்திக்குப் போனால் அவர்களைக் காண முடியும்“ என்றார் கிழவர்

போயர்பாக் நம்பமுடியாத விசித்திரமான மழைக்கோவிலை காணுவதற்காகச் சார்பர்தி என்ற பாலைவன கிராமத்தை நோக்கி பயணிக்கத் துவங்கினான். பாலைவனத்தில் அலையும் சூரியன் நாம் நகரில் கிராமத்தில் காணும் சூரியனில்லை. இச்சூரியன் குடிவெறியே அலையும் மூர்க்கனைப் போன்றது. மேகங்களற்ற வானம். கூடி நின்று தங்களுக்குள் வட்டமிட்டுக் கொள்ளும் ரோமம் அடர்ந்த ஆடுகள். மிகத் தாழ்வாகக் கட்டப்பட்ட கல்வீடுகள். குடிசைகள். கிழிந்த துணிகள் முள்செடியில் மாட்டி பறந்து கொண்டிருக்கும் மணல்மேடுகள். தாகத்தில் அலைவுறும் ஒட்டகங்கள். பாலைவனத்தில் திசை அறிவது எளிதானதில்லை. பறவைகளும் விலங்குகளுமே திசை அறிகின்றன. கிழட்டு ஒட்டகம் ஒன்று நோயுற்றுச் சாலையோரம் படுத்துகிடந்தது. அதன் கண்களில் நூற்றாண்டு சோகம்.

காற்றில் பறந்தபடியே மணல் பயணித்துக் கொண்டேயிருந்தது. மணல்கள் இடம்விட்டு இடம் போய்க் கொண்டேயிருக்கின்றன. மரத்தின் இலைகளில் கூட மணல் அப்பியிருக்கிறது. பெரிய தலைப்பாகை சுற்றிய இடையர்கள். போயர்பாக் சார்பர்திக்குப் போன போது கிராமமே காலியாக இருந்தது. பகலில் ஆட்களைக் காணமுடியாது என்பது பாலைவனத்தின் பொதுவிதி. இரவில் தான் கிராமவாசிகள் ஒன்றுகூடுவார்கள். சாப்பிட எதுவும் கிடைக்காமல் இரவு வரை போயர்பாக் காத்திருந்தான். பகலைப் போலவே இரவும் அடர்த்தியாக இருந்தது.

போயர்பாக் சுற்றியலைந்த மூன்று வருஷங்களில் கொச்சையாக இந்தி பேசக்கற்றிருந்தான். அந்த இந்தியில் அவன் பேசியது அவர்களுக்குப் புரியவில்லை. கிராமவாசிகளில் ஒன்றிரண்டு பேர்களே இந்தி அறிந்திருந்தார்கள்

ஒரு ஆள் அவனிடம் கேட்டார்

“நீ கடவுளை நம்புகிறாயா “

போயர்பாக்கிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கடவுள் நம்பிக்கையற்றவனாகவே வளர்க்கபட்டிருந்தான். இந்தியாவில் பயணித்த பிறகு கடவுள் குறித்த ஊசலாட்டம் மனதில் துவங்கியிருந்தது. ஆனாலும் கடவுளை முழுமையாக நம்பத்துவங்கவில்லை. அதைக் காட்டிக் கொள்ளாமல் நம்புவதாகத் தலையாட்டினான்

“கடவுள் இருக்கிறார் என்பதன் அடையாளம் தான் மழைக்கோவில். கடவுளை தவிர வேறு யாரால் பாலைவனத்தின் நடுவே ஆண்டுமுழுவதும் மழையைப் பொழிய முடியும்“ என்று கேட்டான்

“நீங்கள் அந்தக் கோவிலைப் பார்த்திருக்கிறீர்களா“ எனக்கேட்டான்

“கோவிலைக் கண்டதில்லை. ஆனால் மழையின் சப்தம் கேட்டிருக்கிறோம். சீரான மழைச்சப்தம். ஈரக்காற்று. “

“அக்கோவில் எங்கேயிருக்கிறது. என்னை அங்கே அழைத்துப் போவீர்களா“ எனக்கேட்டான் போயர்பாக்

“பாலைவனத்தில் இடத்தை எப்படிச் சொல்வது. உனக்கு அதிர்ஷடமிருந்தால் உன்னால் அக்கோவிலைக் காண இயலும். வழி தவறிவிட்டால் பாலைவனத்திலே இறந்து விடுவாய்“ என்றான் ஒருவன்

“நான் அந்த மழைக்கோவிலை பார்க்க வேண்டும்“ என்று உறுதியான குரலில் சொன்னான் போயர்பாக்

“நாளை இவர்களுடன் பாலைவனத்தினுள் செல். உன்னை ஒரு இடத்தில் விட்டுவிடுவார்கள். நீ தனியாகத் தான் பயணிக்க வேண்டும். கடவுள் உன்னை அழைப்பதாக இருந்தால் அந்தக் கோவிலை கண்டறிந்துவிடுவாய் “

போயர்பாக் அதற்கு ஒத்துக் கொண்டான். பாலைவனக் கிராமத்தில் இரவில் தங்கினான். வானெங்கும் நட்சத்திரங்கள். இவ்வளவு நட்சத்திரங்களை அவன் ஒரு சேர கண்டதேயில்லை. பாலைவனத்தினுள்ள மணலின் எண்ணிக்கையை விடவும் நட்சத்திரங்கள் அதிமாக இருக்கிறதோ என்று தோன்றியது. நல்ல குளிர். போதுமான குளிராடைகள் அவனிடமில்லை. குளிரில் நடுங்கியபடியே உறங்கினான். குழப்பமான கனவுகள். மூன்று தலையுள்ள மரம் அவனைப் பார்த்துச் சிரித்தது.

இருள் கலையாத விடிகாலையில் அவர்கள் பாலைவனத்தினுள் புறப்பட்டார்கள். பனிமூட்டம் மணல் தெரியாமல் பரவியிருந்தது. கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு பயணப்பொதியோடு அவன் நடந்தான். மணல் குளிர்மையேறியிருந்தது. ஒரு நட்சத்திரம் அடிவானில் எரிந்து விழுந்தது. அவர்கள் மௌனமாக நடந்தார்கள். நடுக்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களைப் போல அவர்கள் பாலைவனத்தினுள் சென்று கொண்டிருந்தார்கள்

பாலைவனத்தின் நடுவில் சூரிய உதயத்தைக் கண்டான். அவன் வாழ்நாளில் கண்ட மிக அழகான சூரிய உதயமது. சூரியன் இத்தனை அழகானதா. முதன்முறையாகக் குகை மனிதன் சூரியனை பார்த்தது போல வியப்புடன் அச்சத்துடன் சூரியனை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென அதை வணங்க வேண்டும் போலிருந்தது. மனதிற்குள் சூரியனை வணங்கிக் கொண்டான்.

ஒரு கோடி கதிர்களைப் பூமியை நோக்கி வீசுவது போலச் சூரியன் பொழிந்து கொண்டிருந்தது. வெயில் தான் உண்மையான மழையா. அதைத்தான் மழைக் கோவில் என்கிறார்களா. மழை என்றவுடன் நம் மனது ஏன் எப்போதும் குளிர்ச்சியை மட்டுமே நினைத்துக் கொள்கிறது. வானிலிருந்து பொழியும் வெயிலும் ஒரு வித மழை தானே

இப்படி நினைக்க நினைக்கத் தான் ஒரு இந்தியன் போல யோசிப்பதாகப் போயர்பாக்கிற்குத் தோன்றியது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே வெயில் உக்கிரமடையத் துவங்கியது. சூரியனின் வெடித்த நாக்குப் பூமியிலுள்ளவர்களை அள்ளி தின்ன முயற்சிப்பது போலிருந்தது.

போயர்பாக்கை அழைத்துப் போனவர்கள் ஒரு புள்ளியில் அவனைத் தனியே விட்டார்கள். மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு அவனிடமிருந்தது. தன்னை விட்டு அவர்கள் மறைந்து போகும் வரை போயர்பாக் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த உருவங்கள் மறைந்த பிறகு கானல் மனிதர்கள் நடமாடுவது போலவே பொய்தோற்றத்தை உருவாக்கியது

இப்போது பாலைவனத்தினுள் அவன் தனியன். வேறு மனிதர்கள் ஒருவருமில்லை.

திடீரென அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது

“கடவுள் இருக்கிறாரா இல்லையா “

அவன் தன்னை அறியாமல் சப்தமிட்டான்

“கடவுள் இருக்கிறார். “

ஏன் அப்படிக் கத்தினோம் எனக் கூச்சமாக இருந்தது.

தனித்துவிடப்பட்ட மனிதனுக்குக் கடவுள் இருக்கிறார். கூட்டமாக வாழ்பவர்களுக்குக் கடவுள் விலகியிருக்கிறார் என்று மனதில் தோன்றியது.

எதற்காக இப்போது கடவுளை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் தேடி வந்தது பாலைவனத்தின் மழைக்கோவிலை தானே என்று சுயசமாதானம் செய்தபடியே அவன் உள்ளுணர்வின் வழித்தடத்தில் நடக்க ஆரம்பித்தான்.

நெருக்கடியின் போது மனிதனை அவனது உள்ளுணர்வு சரியாகவே வழிநடத்துகிறது. அதை நம்பாதவன் மட்டுமே மாட்டிக் கொள்கிறான்.

தன்னைச் சுற்றிலும் விரிந்திருக்கும் மணற்பரப்பினுள் ஒணான் செல்வது போல அவன் தனியே நடந்து கொண்டிருக்கிறான். வழிகேட்க இன்னொரு மனிதன் இல்லாமல் போய்விடுகிற தருணத்தில் மட்டுமே மனிதர்கள் இயற்கையிடம் வழிகேட்கிறார்கள். போயர்பாக்கும் அப்படி வழியில் இருந்த ஒரு ஒற்றை மரத்திடம் தான் மழைக்கோவிலுக்குப் போவது எப்படி என்று கேட்டான்

ஒற்றை மரம் கிளையை அசைத்தது. அந்த அசைந்த கிளையுள்ள திசையை நோக்கி நடந்தான். நெருப்பில் விழுந்த புழு போல அவனை வெயில் சுட்டெரித்தது. எவ்வளவு நேரம் நடந்தான் என அறியாமல் சூரியன் அடங்கும் வரை நடந்தான். மழையின் ஒசையோ, ஈரமோ எதுவும் கண்டறியமுடியவில்லை. ஒற்றை மனிதனாகப் பாலைவனத்தின் நடுவே இரவைக் கழித்தான்.

மனிதவாழ்க்கையின் பேரற்புதம் அதுவென்றே உணர்ந்தான். ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் வானை விட்டு மணலில் குதித்து விட்டது போலத் தலைக்கு மிக நெருக்கமாக வந்து போயின. வானை நோக்கி உயரும் பூ போலப் பூமி உயர்ந்துவிட்டதோ என்று தோன்றியது. அந்த இரவு அவனால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. விடிகாலையில் தன்னை அறியாமல் அவன் உறங்கினான். கண்விழித்தபோது பாலை பற்றி எரிந்து கொண்டிருந்தது. விலங்கின் கால் தடங்கள் போன்றிருந்த பாதையைக் கண்டு அதில் நடக்கத்துவங்கினான்

அவனால் நடக்க முடியவில்லை. திடீரென உடல் எடையற்றுப் போனதாக மாறியது. கால்கள் அவன் விருப்பம் போல நடக்க மறுத்தன. கண்களும் விரிய மறுத்தன. அவன் தன் உடலோடு பேசினான். உடலை இயங்கும்படி ஆணையிட்டான். உடல் அவன் குரலை செவிமடுக்கவில்லை. தன் கால்களிடம் அவன் வேண்டினான். கால்கள் அந்தக் கெஞ்சலை கண்டுகொள்ளவில்லை. மணலை வீசி அடிக்கும் காற்று அவனது தலைமுதல் கால் நக இடுக்குவரை மணலை அப்பியது. தான் ஒரு மணல் மனிதன் என்பது போலவே உணர்ந்தான்.

மணல் இரக்கமற்றது. பாலைவனம் கருணயற்றது என்று புலம்பினான். காற்றின் வேகம் அதிகமாகும் போதெல்லாம் அவன் சண்டையிடுகிறவன் போலக் கத்தினான். பின்பு அவன் சப்தம் ஒடுங்கியது. இனி தன் வாழ்க்கை தன்னுடைய கையில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவனைப் போல அவன் கிழே விழுந்தான்

அன்று அவனது கனவில் சாமுவேலுக்காக நாற்காலி கொண்டுவந்த பெண் தோன்றினாள். அவனைக் கைகொடுத்து தூக்கி உடலை சுத்தம் செய்துவிட்டாள். சாமுவேலை என்ன செய்தாய் என்று அவளிடம் கேட்டான் பாயர்பாக். விழுங்கிவிட்டேன் என்று அவள் வயிற்றைக் காட்டினாள். அந்தக் கனவில் சட்டென விழித்துக் கொண்டுவிட்டான்.

இன்னும் விடியவில்லை. பனிமூட்டம் படர்ந்த பாலைநிலம். எழுந்து நடக்க முடியாமல் நடந்தான்

தன் வாழ்வின் கடைசி நாளில் இருக்கிறோம் என்பது உணர்ந்தது. இனி கண்களை நம்பி பயனில்லை என்பது போல அவன் கண்களை மூடிக்கொண்டான்

பார்வையற்ற ஒருவனைப் போல அவன் பாலைவனத்தினுள் நடக்க ஆரம்பித்தான். இந்த அலைக்கழிப்பும் போராட்டமும் அடுத்த இரண்டு நாட்களும் துவங்கின

ஐந்தாம் நாளின் முடிவில் அவன் பாலைவனத்தினுள் திடீரென ஒரு ஒசையைக் கேட்டான்

“அது மழை பெய்யும் ஒசை “

“ஆமாம். மழையே தான் “

“எங்கே பெய்கிறது. எங்கேயிருக்கிறது மழைக்கோவில் “

அவன் வெறிபிடித்தவன் போல ஒடினான்.

சப்தம் வரும் திசையைக் கொண்டு மழையைக் கண்டறியமுடியவில்லை

போயர்பாக் அழுதான். தன்னை மீறி வெடித்து அழுதான். மழைச்சப்தம் வெறும் பிரம்மையா. நினைவுகள் தடுமாறுகிறதா. தான் கேட்டது உண்மையான மழைச்சப்தம் இல்லையா

கண்ணில் வழியும் நீரை மணலை அள்ளி துடைத்தான். இனி இந்த மணல் தான் துணை. இனி இந்தப் பாலை தான் தன்னை வழிநடத்த வேண்டும். அவன் குனிந்து மண்டியிட்டு பாலையை வணங்கினான். பின்பு விலங்கு ஊர்ந்து போவது போலக் கைகளை ஊன்றி நடக்க ஆரம்பித்தான்

திடீரென அவன் மீது ஒரு துளி மழைத்துளி விழுந்தது

அவன் அதைத் தன் விரலால் தொட்டுப் பார்த்தான்

அந்த ஈரம் அவன் மனதை விம்மச் செய்தது

எழுந்து நின்று பார்த்தான்

பெண்ணின் மார்பு போல அரைவட்டமாக இருந்த ஒரு பழைய கோவில் ஒன்றின் மீது மழை பொழிந்து கொண்டிருந்தது. புயலடிக்கும் நாளில் பெய்வது போல உக்கிரமான வேகத்தில் மழை அந்தக் கோவிலை நனைத்துப் பெய்தபடியே இருந்தது . அடர்த்தியான மழை. கோவிலை தவிர வேறு எங்கும் மழையில்லை.

பாலைவனத்தின் பூர்வகுடிகளில் ஒருவனைப் போல அக் கோவிலைக் கையெடுத்து வணங்கினான்

நெருங்கிப் போய் அந்த மழைக்கோவிலிற்குள் போகாமல் வெளியேறும் வழி பார்த்து பின்பு போயர்பாக் நடக்கத் துவங்கினான். அவன் முன்னே பாலைவனம் விரிந்து கிடந்தது

••

அதன்பிறகு போயர்பாக் என்ன ஆனான் என்று கட்டுரை விவரிக்கவில்லை. இந்த நூலை எங்கிருந்து எழுதினான். எப்போது இந்தியாவை விட்டுப் போனான் என்று எதுவும் தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவிற்கே வந்திராத ஒருவன் எழுதிய புனைவில் இதுவும் ஒன்றா என்றும் எனக்குப் புரியவில்லை.

போயர்பாக்கை ஒரு அந்நியனாக உணர முடியவில்லை. அவன் ஒரு இந்தியன் ஆகிவிட்டான் என்றே தோன்றியது

••

0Shares
0