போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு

சீன எழுத்தாளரான யியுன் லி டால்ஸ்டாயுடன் எண்பத்தைந்து நாட்கள் என்றொரு நூலினை எழுதியிருக்கிறார். இது போரும் வாழ்வும் நாவலை வாசித்த கூட்டு அனுபவத்தைப் பற்றியது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நண்பர்கள் பலரும் ‘ஒன்றாக ஒரு நாவலைப் படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தினை உருவாக்கினார்கள். அதற்காக 1200 பக்கங்களுக்கும் மேலாக உள்ள போரும் வாழ்வும் நாவலை தேர்வு செய்தார்கள். இந்தத் தொடர்வாசிப்பு ஒரு புதிய நிலத்திற்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தை உருவாக்கியது.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் நாவலின் சில பக்கங்களைப் படிக்க வேண்டும். அது குறித்து யியுன் லி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார் என்பது ஏற்பாடு

மார்ச் 18, 2020 அன்று நாவலைப் படிக்கத் தொடங்கி, எண்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 10, 2020 அன்று, கடைசிப் பக்கங்களைப் படித்தார்கள். இந்தக் கூட்டுவாசிப்பு மகத்தான நாவல்களைப் புரிந்து கொள்ளவும் கொண்டாடவும் வழி செய்தது.

இந்த வாசிப்பின் போது டால்ஸ்டாய் எதனால் மகத்தான நாவலாசிரியராகக் கருதப்படுகிறார் என்பதற்கான சான்றுகளாக அவரது நாவலின் வரிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

டால்ஸ்டாயின் மேதமை பற்றிய பலரது பார்வைகளும் உள்ளடங்கிய இந்த நூல் கூட்டுவாசிப்பின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டுகிறது.

டால்ஸ்டாயின் எழுத்து நுட்பங்களை வியந்து சொல்லும் யியுன் லி இந்த நூலின் முகப்பில் The art of writing depends on the art of reading என்ற மேற்கோளைத் தந்திருக்கிறார்.

நல்ல வாசகரால் தான் நல்ல எழுத்துப் பெருமை கொள்கிறது. அவரே எழுத்தின் நுட்பங்களை ஆழ்ந்து அறிந்து ரசிக்கிறார். சுட்டிக்காட்டுகிறார்.

குதிரைகள் பாலத்தைக் கடந்தன எனப் பொதுவாக டால்ஸ்டாய் எழுதுவதில்லை. பாலத்தைக் கடக்கும் குதிரைகளின் குளம்பொலி எப்படிக் கேட்கிறது என்பதை எழுதுகிறார். இந்தத் துல்லியமே அவரது எழுத்தின் சிறப்பு. காட்சிகளைப் போலவே ஒசையும் நாவலில் மிகத் துல்லியமாக விவரிக்கபடுகிறது.

கதாபாத்திரங்கள் கண்ணீர் வடிப்பதால் வாசிப்பவருக்குக் கண்ணீர் வந்துவிடாது. வாசிப்பவரை கண்ணீர் சிந்த வைப்பது எழுத்தாற்றலின் வெளிப்பாடு. டால்ஸ்டாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இந்தக் கலைமேதமையின் காரணமாக வாசிக்கும் நாம் கதாபாத்திரங்களின் அகத்துயரைப் புரிந்து ஆழ்ந்து கொள்கிறோம். கண்ணீர் வடிக்கிறோம். என்கிறார் யியுன் லி.

டால்ஸ்டாய் ஒரு கதையைச் சொல்லும்போது, மலைவாழ்மக்கள் தங்களின் பூர்வீக மலையில் ஏறுவது போல மெதுவாக, சீரான மூச்சுக்காற்றுடன், படிப்படியாக, அவசரப்படாமல், சோர்வில்லாமல் நடந்து கொள்கிறார். அதன் காரணமாகவே அவரது எழுத்து நம்மை அதிகம் வசீகரிக்கிறது என்கிறார் எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக்.

போரும் வாழ்வும் நாவல் ஒரு விருந்தில் துவங்குகிறது. அந்த விருந்தின் ஊடாக முக்கியக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். பிரம்மாண்டமான அந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள். அங்கு வந்தவர்களின் அந்தஸ்து, சமூகப் படிநிலைகள். அவர்கள் பேசும் வம்பு பேச்சுகள். பகட்டான. போலியான உரையாடல்கள். ரஷ்ய உயர்தட்டு வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அந்த ஒரு காட்சியிலே டால்ஸ்டாய் விளக்கிவிடுகிறார்.

இந்த நாவலை ஹோமரின் காவியத்திற்கு ஒப்பிட வேண்டும். அந்த அளவு பிரம்மாண்டமானது என்றும் யியுன் லி குறிப்பிடுகிறார்.

நாவலில் இடம்பெற்றுள்ள சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாகச் சித்தரிக்கபடுகிறார்கள். அவர்கள் நாவலின் வளர்ச்சிக்கு உரிய பங்கினை தருகிறார்கள். இதில் எந்தச் சிறுகதாபாத்திரத்தையும் நம்மால் நாவலை விட்டு விலக்கிவிட முடியாது. ஒன்றிரண்டு வரிகளில் சிறு கதாபாத்திரத்தின் இயல்பை டால்ஸ்டாய் விவரித்துவிடுகிறார்.

டால்ஸ்டாய் 1863 முதல் 1869 வரை போரும் வாழ்வும் நாவலை எழுதினார். இந்தக் காலகட்டத்திற்குள் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். டால்ஸ்டாயின் மனைவி சோபியா குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு அவரது நாவலின் பிரதியை தனித்தனியாக ஏழு முறை நகலெடுத்து திருத்திக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்த நாவலுக்குப் பின்னே சோபியாவின் கரங்களும் மறைந்துள்ளன

போரைப் பற்றி எழுதும்போது, டால்ஸ்டாய் பீரங்கி குண்டுகள் மற்றும் போர் களத்தில் இறந்துகிடக்கும் உடல்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. மாறாக, பீரங்கி குண்டுகள் மற்றும் இறந்த உடல்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் உண்மையாக எழுதுகிறார். அது தான் அவரது சிறப்பு.

Rereading a novel you love is always a special gift to yourself என்கிறார் யியுன் லி. அது முற்றிலும் உண்மையே.

0Shares
0