போர்ஹேயின் வகுப்பறை

அமெரிக்கப் பயணத்தை திட்டமிடும் போதே மிஷிகன் மாநிலத்தில் உள்ள கிழக்கு லான்சிங் பல்கலைகழகத்தை ஒரு முறைப் பார்வையிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன், அங்கே தான் எனது விருப்பத்திற்குரிய எழுத்து ஆளுமை ஜோர்ஜ் லூயி போர்ஹே (Jorge Luis Borges ) 1975ல் கௌரவ டாக்டர் பெற்றார், கவிதை குறித்து அப்பல்கலைகழகத்தில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்,

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் கவிஞர், புனைகதையாசிரியர் என்று கொண்டாடப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹே பார்வையற்றவர், ஆனால் அதை ஒரு தடையாகக் கொள்ளாமல் தொடர்ந்து எழுத்து இலக்கியம் என தீவிரமாக இயங்கியவர், லான்சிங் பல்கலைகழகத்திற்கு வந்து தங்கி அங்கேயுள்ள நூலகத்தைப் போர்ஹே பயன்படுத்தியுள்ளதை பற்றிய குறிப்புகளை வாசித்திருக்கிறேன், அவர் சொற்பொழிவு ஆற்றிய அறையை, அவர் பயன்படுத்திய நூலகத்தை, அவரது கையெழுத்துப் பிரதியை காண வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன்

லான்சிங் பல்கலைகழகத்தின் ஆங்கிலத் துறையில் எனது நண்பர் சொர்ணவேல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார், ஆகவே அவரது வீட்டிற்கு போய் இரண்டு நாள் தங்கியிருந்து போர்ஹே நடமாடிய பல்கலைகழக வெளிக்குள் சுற்றியலைவது என முடிவு செய்தேன்,

சொர்ணவேல் பூனா திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், அயோவா பல்கலைகழகத்தில் திரைப்படத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர், தேர்ந்த ஆவணப்பட இயக்குனர், அவரது தங்கம் திரைப்படம் தமிழக கிராமம் ஒன்றின் வாழ்வினை அசலாகச் சித்தரிக்கும் சிறந்த படம், ஐஎன்ஏ, வில்லு போல நிறைய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார், தற்போது மாணவர்களுக்கு இந்திய சினிமா மற்றும் ஆவணப்படங்கள் குறித்து கற்று தருகிறார், அவரது வீடு பல்கலைகழகத்தின் அருகே தானிருந்தது

லான்சிங் பல்கலைகழகத்தை மையாக கொண்ட ஊர், எங்கு திரும்பினாலும் மாணவர்கள், அமைதியான இயற்கையோடு இணைந்த சூழல், தற்போது கோடை என்பதால் வகுப்புகள் நடைபெறவில்லை,

டெட்ராயிட்டில் இருந்து சொர்ணவேலை காண்பதற்காக காலையில் கிளம்பினேன், அமெரிக்காவின் நகரங்களை விட புறநகரங்கள் அழகானவை, அமைதியானவை, சிறிய பண்ணை வீடுகள் கொண்ட சிறிய கிராமங்களும் ஊடே தென்படுகின்றன, கிராமங்களில் மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவெளி எல்லா ஊர்களிலும் காணப்படுகிறது, அங்கே தான் மக்கள் கூடுகிறார்கள்,

எனது அமெரிக்கப்பயணம் முழுவதையும் காரிலே சென்று கழித்தேன், அது விசித்திரமான அனுபவமாக அமைந்தது, பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக காரில் செல்லும் போது நிறைய சாலைக்காட்சிகளை, சிறிய ஊர்களை, வழிப்பயணிகளை, அடர்ந்த காடுகளைக் காணமுடிந்தது, மான்கள் குறுக்கே வரக்கூடும் என்ற அறிவிப்பு பலகை பல இடங்களில் காணப்பட்டது,

பருத்தமரங்கள் அடர்ந்த சாலையில் இளவெயிலோடு பயணம் சென்று கொண்டிருந்தேன், காற்று அதிகமாகவே இருந்தது, அமெரிக்க வெயில் அதிக உஷ்ணம் கொண்டது, புறஊதாக் கதிர்வீச்சு காரணமாக கைகள், உடல் எரியும்படியாக இருக்கிறது,

டெட்ராயிட் மாநில சாலைகள் சென்னையை போன்றவை, அங்கும் குழியும் மேடுகளும் காணப்படுகின்றன, அந்த மாநிலம் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது, நகரமே கடனில் மூழ்கியுள்ளது என்றார், முன்பு இருந்த மக்கள் தொகையில் கால்வாசி வேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள் என்றார்கள்,

சொர்ணவேலின் வீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, அமைதியான சூழல் கொண்டது, வீடு நிறைய திரைப்படம் தொடர்பான புத்தகங்கள், ஆவணப்படங்கள், உலகத்திரைப்படங்கள், அவரது துணைவியார் அற்புதமாக சமைக்ககூடியவர், பயணத்தின் நடுவே வீட்டு சாப்பாடு கிடைக்கும் தான் அதன் மகத்துவம் புரிகிறது,

நானும் சொர்ணவேலும் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம், பல வருசங்களுக்கு முன்பாக அவரது சொந்த கிராமத்திற்குப் போய் நானும் அவரும் தங்கியிருந்த நினைவுகள் பீறிட்டது,  இரவு அவரும் போர்ஹே தனது பல்கலைகழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளை பற்றி உணர்ச்சிமயமாகப் பேசிக் கொண்டிருந்தார், அத்துடன் தனக்கு போர்ஹேயுடன் நேரடியாகப் பழகிய  ஸ்பானியத்துறை  பேராசிரியர் யேட்ஸ் அறிமுகமானவர் என்று சொல்லி அவர் போர்ஹே குறித்து ஆற்றிய தனியுரை பற்றி விரிவாக சொல்லிக் கொண்டிருந்தார்.

லான்சிங் பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்ட போர்ஹேயின் நேர்காணல் ஒன்றினை முன்னதாக வாசித்திருக்கிறேன், அதில் தத்துவாதிகளுக்கும் இலக்கியத்திற்குமான ஒப்புமைகளைப் பற்றி போர்ஹே அழகாக சொல்லியிருப்பார், அதை நினைவு கூர்ந்தேன், பின்னிரவு உறங்க சென்ற போதும் மனம் விழித்துக் கொண்டேயிருந்த்து,

போர்ஹே சொற்பொழிவாற்றிய அறையை பற்றி நானாக ஏதேதோ கற்பனைகள் செய்து கொண்டிருந்தேன், எனது கல்லூரி வயதில் போர்ஹேயைத் தேடித்தேடி படித்திருக்கிறேன், அவரைப்பற்றி என்றார் போர்ஹே என 200 பக்கங்களுக்கு தனி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறேன், முன்னதாக அதே நூல் ஜோர்ஜ் லூயி போர்ஹே என்ற தலைப்பில் சிறியதாக வெளியானது,

இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதிய ஸ்பானிய எழுத்தாளர் போர்ஹே, அவரது எழுத்தின் அடிநாதமாக ஒலிப்பவை தத்துவம், மெய்தேடல் மற்றும் கவிதையுணர்வு, கலைக்களஞ்சியஙகளை வாசித்து வளர்ந்த போர்ஹே பௌத்தம் குறித்து ஆழ்ந்து அறிந்திருக்கிறார், மணல்புத்தகம்,  கனவுப்புலிகள் என்ற அவரது படிமங்கள் அபாரமானவை, அவரது சிறுகதைகள் கவிஞர் பிரம்மராஜன் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

லான்சிங் பல்கலைகழகம் மிகப்பெரியது, பசுமையான தனித்தனி வளாகங்கள், அதன் ஊடாக நடந்து போவது மயக்கமூட்டும் அனுபவம், காலை பத்து மணிக்கு போர்ஹே சொற்பொழிவு ஆற்றிய அறையைக் காண்பதற்காக அழைத்துப் போனார் சொர்ணவேல்,

அது ஒரு வகுப்பறையைப் போலவே இருந்த்து, அகலமான ஜன்னல்கள், நின்று பேச வசதியான ஒரு போடியம்,  பழமையான கட்டிடம், அறை நிசப்தமாக இருந்தது, போர்ஹே எந்த இடத்தில் நின்று பேசியிருப்பார் என்று நானாகக் கற்பனை செய்து கொண்டேன், அந்த அறையில் உள்ள காற்றில் போர்ஹே பேசிய சொற்கள் கரைந்து போயிருக்கும் தானே, இது போல காலை வெளிச்சம் அவர் மீதும் பட்டிருக்குமில்லையா, இதே மரங்களின் காற்று அவரையும் தொட்டுதானே போயிருக்கும், வார்த்தைகளால் சொல்லமுடியாத ஆனந்தமாக இருந்த்து,

அந்த வெற்றுஅறையை அந்த நிமிசம் நான் முழுமனதோடு நேசித்தேன், ஒரு ஆசானைப் போல நான் நேசிக்கும் படைப்பாளி நின்ற இடமது, அதை விட்டு வெளியே வர மனமில்லை, சொர்ணவேல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார், பிறகு புன்னகையோடு போர்ஹே பயன்படுத்திய நூலகத்தை பார்வையிடுவோம் என்று அழைத்துக் கொண்டு போனார்

லான்சிங் பல்கலைகழக நூலகத்தில் போர்ஹே குறித்து வெளியான அத்தனை புத்தகஙகளும் இடம்பெற்றிருக்கின்றன, அவரது கையெழுத்து பிரதி ஒன்றும் அங்கே பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கிறது, போர்ஹே பார்வையற்றவராக இருந்த போதும் தினம் நாலு மணிநேரம் புத்தகம் வாசிக்க சொல்லி தொடர்ச்சியாக கேட்க கூடியவர், அதற்காக ஒதுப்பட்ட அறை ஒன்றும் அங்கேயுள்ளது,

போர்ஹேயின் புகழ்பெற்ற சீனப்பெருஞ்சுவர் பற்றிய  The Wall and

the Books” யின் கையெழுத்து பிரதி அங்கே பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கிறது, பேராசிரியர் யேட்ஸ் தான் போர்ஹேயின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் முதலாக மொழியாக்கம் செய்தவர், அந்த நட்பு காரணமாகவே அவர் போர்ஹேயை தனது பல்கலைகழகத்திற்கு அழைத்து உறவாடியிருக்கிறார்,
நான் நீண்ட காலமாகத் தேடிக் கொண்டிருந்த போர்ஹேயின் அரிய நூலான Atlas  என்ற புத்தகத்தினை அங்கே பார்க்க நேர்ந்த்து, அதை உடனே ஒரு நகல் பிரதி எடுத்து வைத்துக் கொண்டேன்,

போர்ஹேயின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு இரண்டினை நூலகத்தில் இருந்து வாசிக்க எடுத்து வந்தேன், மதியம் முழுவதும் போர்ஹேயை வாசித்தபடியே இருந்தேன், போர்ஹேயின் ஒவ்வொரு வரியும் பற்றி எரியக்கூடிய தீவிரம் கொண்டது,

மாலையில்  பல்கலைகழக உணவகத்தில் அமர்ந்தபடியே போர்ஹேயின் கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள் என நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்,

இலக்கியவாதிகளை அழைத்து வந்து மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றச் சொல்லி, சில மாத காலம் தங்கும்படி வசதி செய்து தந்து, போதுமான பொருளாதார உதவிகள் செய்து கொடுத்து  அவர்களது கையெழுத்து பிரதிகளை பொக்கிஷம் போல பாதுகாக்கின்றன அமெரிக்க பல்கலைகழகங்கள், தமிழகத்தில் இவையெல்லாம் எட்டாக்கனவுகள்

பல்கலைகழக வளாகத்தினுள் மரங்களின்  ஊடாக நடப்பதற்கு வசதியான அழகான சாலை அமைக்கப்பட்டிருக்கிறது, அதன் ஊடே பேசியபடியே நானும் சொர்ணவேலும் நடந்தோம், ஒரு குட்டி நாய்குட்டியுடன் வயதான பெண்மணி கடந்து போனார், அந்த நாய் என்னை ஏறிட்டு பார்த்தபடியே போனது

எனது அமெரிக்கப் பயணத்தில் போர்ஹே வருகை தந்த இடத்தை பார்த்ததே போதுமானது என்று நெகிழ்வோடு சொல்லிக் கொண்டிருந்தேன், சொர்ணவேல் சிரித்துக் கொண்டபடியே உங்களையும் இதே துறையில் பேச அழைக்க வைக்கிறேன், விரைவில் நடக்கும் பாருங்கள் என்றார்

அதன்பிறகு ஆங்கிலத்துறைக்குச் சென்றோம், வகுப்பறை முழுவதும் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கவிதைகளாக எழுதியிருக்கிறார்கள், சுவரில் அதிகம் ஷேக்ஸ்பியரே தென்பட்டார், போர்ஹே குறித்து வெளியிட்ட சிறப்பு மலரின் பிரதி ஒன்றினை எனக்கு தந்தார் சொர்ணவேல், வலது பக்க  சுவரில் போர்ஹேயின் மேற்கோள் ஒன்று காணப்பட்டது

Any life is made up of a single moment, the moment in which a man finds out, once and for all, who he is.

அப்படியான ஒரு நிமிசம் என் முன்னே மலர்ந்து என்னை உள்வாங்கிக் கொண்டு மூடியது போலவே அன்று நான் உணர்ந்தேன்

லான்சிங் பல்கலைகழகத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு என்று மிகப்பெரிய சேமிப்பு நூலகம் உள்ளது, உலகமெங்கும் வெளியான அத்தனை காமிக்ஸ் புத்தகங்களும் அதற்குள் இருக்கின்றன, முழுமையாக அதை பார்த்து முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்றார்கள், பருந்து பார்வையாக அதைச் சுற்றிய போது தமிழ் காமிக்ஸ் இருக்கிறதா என்று தேடினேன், ஒன்று கூட இல்லை, நூலக பொறுப்பாளரிடம் தமிழ் காமிக்ஸ்களை நானே அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து வந்தேன்

பல்கலை கழகத்தினை விட்டு வெளியே வந்த போது மாலை ஆறரை மணியாக இருந்தது, அமெரிக்காவில் இரவு ஒன்பது மணி வரை பகல்வெளிச்சம் இருப்பதால் எனக்கு இரவு பகல் குழப்பமாக இருந்தது, வீடு வந்து சேர்ந்து இரவிலும் போர்ஹேயை பற்றியே பேசிக் கொண்டிருந்தேன்,

“I cannot sleep unless I am surrounded by books.

என்ற போர்ஹேயின் வரியை நினைவு கொண்டபடியே அவரது நூலை தலைமாட்டில் வைத்து படித்தபடியே என்னை அறியாமல் உறங்கிப்போயிருந்தேன்,

கனவில் போர்ஹே உற்சாகமாக என்னோடு பேசியபடியே புல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார்

அவர் தமிழில் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை

•••

0Shares
0