புதிய சிறுகதை. செப்டம்பர் 1 , 2024
புதன்கிழமையோடு ஜெயசங்கரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறாள். அதற்கான பிரிவு உபசார விழா விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். விழாவைப் புதுமையாக நடத்த வேண்டும் என்றாள் விமலா. ஆனால் என்ன புதுமை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
ஜெயசங்கரி பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாம் என்ற யோசனையைச் சொன்னது மதுரவன். அவரே அலுவலக விழாக்களில் எடுக்கபட்ட பழைய புகைப்படங்களைத் தேடி அதில் ஜெயசங்கரி உள்ளதாகத் தேர்வு செய்து காட்சிப்படுத்துவதாகச் சொன்னார்.
இந்த யோசனையை எல்லோரும் வரவேற்றார்கள். ஆனால் ஜெயசங்கரி மட்டும் வேண்டாம் என்றாள். பழைய புகைப்படங்களைப் பார்த்தால் குற்றவுணர்வு ஏற்படும் என்று நினைத்தாள். ஆனால் அவளது மறுப்பை அவர்கள் ஏற்கவில்லை.
ஜேஎம்டி டெக்ஸ்டைல் மில்லின் நிர்வாக அலுவலகத்தில் நூற்று முப்பத்தியாறு பேர் வேலை செய்தார்கள். அது மூன்று மில்களுக்கும் சேர்ந்து ஒரே தலைமை நிர்வாக அலுவலகமாக இயங்கியது. அங்கே வேலை செய்த பலரும் மில் ஆரம்பித்த காலத்திலிருந்து பணியாற்றுகிறார்கள். ஆகவே ஆண்டுக்கு இருவரோ மூவரோ ஒய்வு பெற்றுவந்தார்கள்.
சென்ற ஆகஸ்டில் மஹாலிங்கம் ஓய்வு பெற்ற போது மில் நிர்வாகம் சார்பில் அவருக்குத் தங்கக்காசு வழங்கினார்கள். ஆனால் மில்லின் முதலாளி பெரியவர் ராஜேந்திரன் ஜனவரியில் இறந்து போன பின்பு சின்னவர் பிரபாகரன் தங்க நாணயம் வழங்குவதை நிறுத்திவிட்டார். மில் சார்பாக விழா எடுப்பதும் நின்று போனது. ஆகவே ஊழியர்கள் தங்களுக்குள்ளாக விழா ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ஜெயசங்கரிக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் அவளது வீட்டில் எந்த விசேசமும் நடைபெற்றதில்லை. எதற்காகவும் அலுவலக ஊழியர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் அவள் அலுவலக ஊழியர்கள் வீட்டுக் கல்யாணங்களில், கிரகப்பிரவேசத்தில் வந்து மொய் செய்திருக்கிறாள். பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்திருக்கிறாள். ஆகவே அவள் ஓய்வு பெறும் நாளில் பெரிய பரிசு ஒன்றை அளிக்க வேண்டும் என்று அலுவலகத்தில் முடிவு செய்தார்கள்.
அவளிடமே “என்ன வேண்டும்“ என்று கேட்டாள் மாலதி. ஜெயசங்கரிக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. யோசித்துச் சொல்வதாகச் சொன்னாள்.
தெற்கு பஜாரில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ராஜகீதம் உணவகத்திலிருந்து கேரட் அல்வாவும் மைசூர் போண்டா காபியும் ஆர்டர் செய்வதென முடிவு செய்தார்கள்.
முதல் நாள் இரவே வந்து அலுவலகத்தின் இரண்டு சுவர்களிலும் வரிசையாக ஜெயசங்கரியின் பழைய புகைப்படங்களைக் கண்காட்சி போலத் தொங்கவிட்டிருந்தார் மதுரவன். அந்தப் புகைப்படங்களில் அலுவலகத்தில் இருந்த பலரும் இளமையாக இருந்தார்கள். ஒரு கூட்டுக்கனவைப் போலிருந்தது அக்கண்காட்சி.
ஓய்வு பெறும் நாளில் ஒருவர் தனது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜெயசங்கரி தீவிரமாக வேலை செய்தாள். என்றைக்கும் போலவே வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். அன்றைக்கு அவள் பட்டுச்சேலை கட்டிக் கொண்டு வருவாள் என்று நினைத்தார்கள். ஆனால் அவள் எப்போதும் போல அவளுக்குப் பிடித்தமான இளம்பச்சை நிறக் காட்டன் சேலை தான் கட்டியிருந்தாள்.
மதிய உணவின் போது அவளிடம் அன்னமுகப்பு உள்ள வெண்கலக் குத்துவிளக்கு பரிசாக வாங்கியுள்ளதாக மீனாட்சி சொன்னாள். ஜெயசங்கரி “இதெல்லாம் எதுக்கு“ என்று மட்டுமே கேட்டாள்.
அவள் ஆர்வமாக எவ்வளவு பெரியது எனக் கேட்பாள் என மீனாட்சி நினைத்தாள். ஆனால் அப்படிக் கேட்காதது மாலதிக்கு சற்றே வருத்தமளித்தது. ஒருவேளை ஓய்வு பெறுவதை முன்னிட்டு மனதிற்குள் கவலைப்படுகிறாளோ என்று நினைத்துக் கொண்டாள்.
ஓய்வு பெறும்நாளில் மட்டும் மில்லிற்குச் சொந்தமான காரில் கொண்டு போய் வீட்டில் விட்டு வருவார்கள். அதையும் ஜெயசங்கரி வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். தான் கோவிலுக்குப் போய்க் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு பிறகு வீட்டிற்குப் போக நினைப்பதாகச் சொன்னாள்.
இத்தனை வருஷங்களாக அவள் வசந்தம் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து நடந்து தான் மில்லிற்கு வந்தாள். அதுவும் ஒரே பாதையில் தான் நடந்து வருவாள். வீட்டிலிருந்து புறப்பட்டால் பனிரெண்டு நிமிஷத்தில் மில்லிற்கு வந்துவிடலாம். மெயின் கேட் வழியாக அவள் நுழைய மாட்டாள். மரங்கள் அடர்ந்த சைடுகேட் வழியாகவே உள்ளே செல்வாள். இரண்டாவது மாடியில் இருந்தது அலுவலகம். லிப்ட் இருந்தாலும் படியேறியே செல்வாள். அவளது இருக்கை ஜன்னலை ஒட்டி இருந்தது. பெரிய மரமேஜை. எஸ் டைப் நாற்காலி. மேஜையில் முகத்தை மறைக்கும் அளவிற்குக் கணக்கு நோட்டுகள். பைல்கள். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் இருந்தாலும் கணக்கு நோட்டுகள் மறைந்து போகவில்லை.
எப்போதெல்லாம் அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கிறாளோ அதன் மறுநாள் ஒரு மணி நேரம் முன்னதாக அவள் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவாள். அது என்ன பழக்கம் என்று அவளுக்கே புரியவில்லை. ஊழியர்கள் யாரும் வராமல் ஒற்றை ஆளாக அலுவலகத்தில் அமர்ந்திருப்பது அவளுக்குப் பிடிக்கும்.
அவள் ஓய்வு பெறும் நாள் குறித்த கடிதத்தை அவளிடம் ஒப்படைத்த ஸ்டீபன் “தனக்குத் தெரிந்த இடம் ஒன்றில் அவளுக்கு வேலை கிடைக்கும். விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம், ஆனால் சம்பளம் குறைவு“ என்றான்.
“வேலை பார்த்தது எல்லாம் போதும். வீட்ல சும்மா இருக்கப் போறேன்“ என்றாள் ஜெயசங்கரி
“இருந்து பாருங்க. கஷ்டம் புரியும்“ என்று கேலியாகச் சொன்னான் ஸ்டீபன்
அதுவும் உண்மை தான். பகல் என்பது அலுவலகத்திற்கானது. ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பகலை என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. அவளது கணவர் பள்ளி ஆசிரியர் என்பதால் அவர் எப்போதும் தனது அறையில் ஏதாவது படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ இருப்பார். நான்கு ஆண்டுகள் முன்பே அவர் பணிஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கென ஓய்வுபெற்றவர்களின் வட்டம் உருவாகியிருந்தது. அவர்கள் நூலகத்தில் சந்தித்துக் கொண்டார்கள். பூங்காவில் ஒன்றாக வாக்கிங் சென்றார்கள். வாட்ஸ்அப் குரூப் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஓய்வு பெறுவதைப் பற்றி அவள் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஊரிலுள்ள எல்லாக் கோவில்களுக்கும் போய் வந்தால் நேரம் போய்விடும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். மகிழ்ச்சியின் இசைத்தட்டை நாமாகத் தான் ஒடவிட வேண்டும். அது தானாக இசைக்காது என்று அவளுக்குப் புரிந்தது.
ஓய்விற்குப் பிறகு காலை தாமதமாக எழுந்து கொள்ளலாம். டெய்லரிங் மிஷின் சும்மாவே கிடக்கிறது. ஏதாவது டெய்லரிங் செய்யலாம். மதியம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம். தென்காசியில் உள்ள அக்கா வீட்டிற்குப் போய்ப் பத்து நாள் இருந்து வரலாம், நீண்டகாலமாகக் காசிக்குப் போய் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை நிறைவேற்றலாம் என்பது போன்ற சிறிய யோசனைகள் அவளிடமிருந்தன.
ஓய்வு பெறும் நாளில் அவள் வீட்டிலிருந்து புறப்படும் போது வாட்ச் கட்டிக் கொண்டு போக வேண்டாம் என்று நினைத்தாள். அது போலவே வழக்கமாகச் செல்லும் பாதை வழியாகச் செல்லாமல் திலகர் ஸ்கூல் பாதை வழியாகப் போகலாம் என்று நடந்தாள்.
அந்தப் பாதையில் ஒரு டீக்கடை வாசலில் சூடாகச் சமோசா போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசனையை நுகர்ந்தபடியே நடந்தாள். செக்கடி முக்கைத் தாண்டும் போது பழைய வீடு ஒன்றை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஒரு பக்கச் சுவர் மட்டுமே மிஞ்சிய வீட்டைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
வழியில் ஒருவர் தோள்மீது மற்றவர் கைபோட்டபடி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் இரண்டு சிறுமிகளைக் கண்டாள். அப்படி அவள் தோள் மீது கைபோட்டு உறவாடிய ஸ்நேகிதியின் நினைவு வந்தது. சரளா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். அவளும் தன்னைப் போல ஓய்வு பெற்றிருப்பாளோ என்று நினைத்துக் கொண்டாள்.
அவளது தலையை உரசுவது போல இரண்டு குருவிகள் தாழ்வாகப் பறந்து சென்றன. அதன் விளையாட்டினை ரசித்தபடியே நடந்தாள். பறவைகளுக்கும் வயதாகிறது. ஆனால் அதன் சிறகுகள் நரைப்பதில்லை. இனி வானில் பறக்க வேண்டாம் மரமே போதும் என ஒரு பறவையும் நினைப்பதில்லை. பறவைகளிடம் உள்ள உற்சாகத்தை மனிதர்களால் ஒரு போதும் அடைய முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
வழக்கத்தை விட நிதானமாக நடந்து முன் கேட் வழியாக அன்று அலுவலகம் வந்தாள். படியேறும் போது ஒவ்வொரு படியிடமும் இனி நான் வரமாட்டேன் என்று மனதிற்குள் சொல்லியபடியே நடந்தாள். அந்தப் படிகளில் அவளது வயது உதிர்ந்து கிடந்தது. இளம்பெண்ணாக அந்தப் படிகளில் ஏறத் துவங்கியவள் இன்று ஒய்வு பெறும் வயதை அடைந்துவிட்டாள். மில்லினுள் காற்றில் பறக்கும் பஞ்சு போல அவளது இளமைப்பருவம் அங்கே கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து போய்விட்டது.
அவள் அலுவலகத்தில் சேர்ந்த காலத்தில் எல்லோரும் மைப்பேனாவைப் பயன்படுத்தினார்கள். அவளும் வேலைக்குச் சேர்ந்த நாளில் நேவி பேனா ஒன்றை புதிதாக வாங்கிக் கொண்டிருந்தாள். இன்றைக்கு மைப்பேனாக்கள் மறைந்துவிட்டன. ஊதா ஜெல்பேனாக்களைப் பயன்படுத்துகிறாள். அதுவும் அலுவலகமே கொடுக்கிறது. பழைய மைப்பேனா ஒன்று அவள் மேஜை டிராயரில் இருந்தது. பயன்படுத்தாத போதும் அதை வீசி எறிய அவளுக்கு மனமில்லை.
வழக்கத்தை விடவும் அன்றைக்குக் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டபடி அவள் சரிபார்க்க வேண்டிய கணக்குகள். போட வேண்டிய கையெழுத்துகளை வேகவேகமாகச் செய்தாள். மதியம் சாப்பிடும் போது சோறு தொண்டையை அடைத்தது. அவள் சமைத்த சாப்பாடு தான். ஆனால் ருசியே இல்லாதது போலிருந்தது.
அலுவலகத்திற்கு என்று தனியே எந்தக் கொண்டாட்டமும் கிடையாது. இது போல அவர்களாக ஏதாவது கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது தான். அன்றைக்கு ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தவுடன் பிரிவு உபச்சார விழா துவங்கியது.
அக்கவுண்ட்ஸ் மேனேஜர் சங்கரலிங்கம் தான் தலைமை தாங்கினார். அலுவலகத்தின் மேஜைகளை ஒரமாக நகர்த்தியிருந்தார்கள். புறண்டு படுத்த மனிதனைப் போல அலுவலகம் உருமாறியிருந்தது. மேற்குச் சுவரையொட்டி நான்கு மேஜைகளை ஒன்றாக வைத்து வரிசையாகச் சேர்களைப் போட்டு நிகழ்ச்சி நடத்தினார்கள். ஜெயசங்கரி நடுவில் உட்காருவதற்குக் கூச்சப்பட்டாள். அது அவளது முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது. சங்கரலிங்கம் ஜெயசங்கரியின் நேரந்தவறாமை, கடின உழைப்பு பற்றி வியந்து பேசி சந்தன மாலை ஒன்றை அணிவித்தார். அவள் வாங்கிக் கொண்டு நாற்காலியின் ஓரமாக அதை வைத்தாள். அது போன்ற சந்தனமாலையைக் கதர்கடையில் பார்த்திருக்கிறாள். இன்றைக்குத் தான் கைகளில் தொடுகிறாள்.
அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் பாராட்டுரை வழங்கினார்கள். ஆயுதபூஜை விழா ஏற்பாடுகளை எப்படி ஜெயசங்கரி ஒடியோடி செய்வாள் என்பதைப் பற்றிப் பரமசிவம் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். பழனிக்குமார் தான் எழுதிய வாழ்த்துப்பாடல் ஒன்றை வாசித்தார். யார் ஒருவர் பணி ஓய்வு பெறும்போதும் அவரது வாழ்த்து மடல் நிச்சயம் இடம்பெறும். மகேந்திரன் மட்டும் அலுவலகத்திற்குள் ஒரு நாள் பாம்பு வந்த போது ஜெயசங்கரி பயந்து போன நிகழ்ச்சியை வேடிக்கையாக நினைவூட்டினார். அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே ஜெயசங்கரிக்கு மறந்து போயிருந்தது.
அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவளுக்கு வெண்கலக் குத்துவிளக்கை பரிசாக அளித்தார்கள். அதைக் கையால் தூக்க முடியவில்லை. நல்ல கனமாக இருந்தது. ஜெயசங்கரி பேச வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
இதுவரை அந்த அலுவலகத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றில் பார்வையாளராக இருந்திருக்கிறாளே அன்றி மைக் முன்னால் நின்றதில்லை. ஓய்வு பெறும் நாளில் இது என்ன கஷ்டம் என நினைத்தபடியே வேண்டாம் என்று மறுத்தாள்.
ஆனால் சங்கரலிங்கம் விடவில்லை. வேலைக்கு வந்த முதல்நாளில் யாரும் தன்னை வரவேற்கவோ, இப்படி உபசரிக்கவோ இல்லை என்று பழைய நினைவு வந்து போனது . நாளை தன்னைப் பற்றி அவர்கள் நினைப்பார்களா என்று கூடத் தெரியாது. ஆனால் இது ஒரு சம்பிரதாயம். பேசித்தான் ஆக வேண்டும்
அவள் பள்ளியில் படித்த வயதிலிருந்து அன்று வரை ஒருமுறை கூட மைக் முன்னால் நின்றதில்லை. என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. ஆகவே அவள் நாற்காலியை விட்டு எழுந்து கொள்ளும் போது கால்களில் தசைபிடித்துக் கொண்டதைப் போல உணர்ந்தாள். நாக்கு வறண்டு போய் உதட்டை ஈரமாக்கிக் கொண்டாள். திடீரென தான் குள்ளமாகிவிட்டதைப் போல உணர்ந்தாள்.
தனக்குப் பதிலாக யாராவது பேசினால் நன்றாக இருக்குமே என்று கூடத் தோன்றியது. தன் மனதில் பேசுவதற்கு ஒன்றுமில்லையே. என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவள் எழுந்து கொள்ளும் போது ஒரமாக நின்றிருந்த அலுவலக ப்யூன் வேலாயுதம் கண்ணில் பட்டார். அவரது கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. ஏன் அவர் வருத்தப்படுகிறார் என்று புரியாமல் தன் இருக்கையில் நின்றபடியே வேலாயுதம் பேசட்டும். அப்புறம் நான் பேசுறேன் என்று சொன்னாள்.
இதுவரை நடந்த எந்த நிகழ்ச்சியிலும் யாரும் ப்யூன் வேலாயுதத்தைப் பேச அழைத்ததேயில்லை. உண்மையில் அவர் அங்கே வேலை செய்த அனைவரையும் விட வயதில் மூத்தவர். ஓய்வு பெறும் வயதைக் கடந்தும் குடும்பச் சூழல் காரணமாகப் பணியில் தொடருகிறார். அவருக்கு இரண்டு மகள். இரண்டு மகன்கள். எப்படியோ எல்லோரையும் படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்து பேரன் பேத்தி எடுத்துவிட்டார்.
வேலாயுதம் தன்னை ஜெயசங்கரி பேச அழைத்ததை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் தன்னையும் பேச அழைப்பார்கள் என்று காத்திருந்தவர் போல நிதானமாக அவர் மைக்கை நோக்கி நடந்து சென்றார்.
வேலாயுதம் பேச முடியாமல் திணறுவார் என்று அங்கிருந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் மைக் முன்னால் நின்று கண்களை மூடிக் கொண்டு, கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும் என்ற பாரதிதாசனின் பாடலை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்ல ஆரம்பித்தார், பாடல் முடிந்தவுடன் தமிழ் வாழ்க. தமிழர் நலம் பெருக. “ என்று அழுத்தமாகச் சொன்னார்.
அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த வேலாயுதம் எப்படி இவ்வளவு அழகாகக் கவிதை சொல்கிறார். தமிழ் வாழ்க என்கிறார் என அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வேலாயுதம் கண்களைத் திறந்து கொண்டு அவையைப் பார்த்து வணங்கியபடியே சொன்னார்
“என்னையும் ஒரு ஆளா நினைச்சி. இப்படிப் பேசச் சொல்லி கௌரவப்படுத்தின சங்கரி அம்மாவுக்கு நன்றி. உங்க எல்லோருக்கும் என்னோட வணக்கம். இந்த மில்ல எத்தனையோ பெரிய பெரிய நிகழ்ச்சி எல்லாம் நடந்துருக்கு. அதை எல்லாம் எட்ட இருந்து வேடிக்கை பார்த்திருக்கேன். கைதட்டியிருக்கேன். ஆனா இப்படி உங்க முன்னாடி வந்து நின்னு பேசுவேனு நினைச்சி கூடப் பாத்தது கிடையாது. மனசுக்குள்ளே பேசுறதுக்கு எவ்வளோ இருக்கு. ஆனா கேட்க தான் ஆள் கிடையாது.
இந்த ஆபீஸ்ல சங்கரியம்மா ஒரு ஆள் தான் என்னை ஒரு நா கூடக் கோபமா திட்டுனது இல்லே. என் பொறந்த நாள் என்னைக்குனு இந்த அம்மா ஒரு ஆளுக்குத் தான் தெரியும். அன்னைக்கு அவங்க வீட்ல இருந்து பால்பாயாசம் வச்சி கொண்டு வந்து எனக்குக் குடுப்பாங்க.. சங்கரியம்மா மனசு அப்படி.
என் ரெண்டு பையன்களை மட்டும் தான் நான் படிக்க வச்சேன். மத்த ரெண்டு பொம்பளை புள்ளைகளையும் இந்தம்மா தான் பீஸ் கட்டி படிக்க வச்சாங்க. அதுவும் காலேஜ் வரைக்கும். அதை வெளியே சொன்னதேயில்லை. என்னை இவங்க சொல்லவிட்டதுமில்லை. ஆனா இன்னைக்கும் சொல்லாம போனா நான் நன்றிகெட்டவனா ஆகிடுவேன்.
எத்தனையோ தடவை அவங்க கிட்ட நூறு இருநூறு கைமாத்து வாங்கியிருக்கேன். ஒண்ணு ரெண்டு தடவை தான் திருப்பிக் கொடுத்திருக்கேன். நிறைய பணம் கொடுக்க முடியலை. அதை இந்தம்மா கேட்டதேயில்லை.
இவங்க ரிடயர்ட் ஆகிப்போயிட்டா எனக்குத் தான் கஷ்டம். என்னை விடச் சங்கரியம்மாவுக்கு வயசு கம்மிதான். ஆனா என்னைப் பெத்த தாயா நினைச்சி இவங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன்“
என்று அவர் சாமி கும்பிடுவது போல கைகளை உயர்த்திக் கும்பிட்டார். அலுவலக ஊழியர்கள் உறைந்து போய் அமர்ந்திருந்தார்கள். இதை எல்லாம் ஏன் வெளியே சொல்கிறார் என்பது போல ஜெயசங்கரி தலைகவிழ்ந்திருந்தாள்.
யாரும் எதிர்பாராதபடி வேலாயுதம் உரத்த குரலில் “கோயில் என்பதும் ஆலயமே, குடும்பம் என்பதும் ஆலயமே, நாணயம் என்பதும் ஆலயமே நன்றியும் இறைவன் ஆலயமே“ என்ற சினிமா பாடலை பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை ஜெயசங்கரி ரேடியோவில் கேட்டிருக்கிறாள். ஆனால் வேலாயுதம் பாடும் போது அவளை அறியாமல் கண்ணீர் பீறிட்டது.
எவ்வளவு இனிமையான குரல். எவ்வளவு ஆழ்ந்து பாடுகிறார். ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருவர் கூட வேலாயுதத்தைப் பாடச் சொல்லிக் கேட்கவில்லை. எத்தனை பேரின் திறமைகள் இப்படிக் கண்டுகொள்ளாமல் போயிருக்கின்றன. வேலாயுதம் பாடிமுடித்தபின்பும் கைகளைக் கூப்பி அவளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருந்தார்.
அவரது குரல். ஆலயம் என்பதை அவர் உச்சரித்த விதம், அவர் நன்றி சொன்னவிதம் அவளது மனதிற்குள் ஆழமாக ஊடுருவியது. அவள் இனி தன்னால் பேச முடியாது என்பதைச் சைகை காட்டியபடியே எழுந்து அலுவலகத்தை விட்டு நடக்க ஆரம்பித்தாள். மாலதி அவளிடம் ஏதோ சொல்வது கேட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் வேகமாகப் படியிறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
தான் ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதைப் படியிறங்கும் போது ஜெயசங்கரி முழுமையாக உணர்ந்தாள்.
அவளுக்கு அளிக்கப்பட்ட வாழ்த்துமடல், சந்தனமாலை, வெண்கல குத்துவிளக்கைத் தூக்கிக் கொண்டு வேலாயுதம் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். வீடு வரை அவர் நிச்சயம் வருவார் என்று மட்டும் ஜெயசங்கரிக்குத் தோன்றியது.
••••