மகிழ்ச்சியின் பெயர்

Borsch. The Secret Ingredient என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

யெவ்ஹென் க்ளோபோடென்கோ என்ற சமையற்கலைஞர் போர்ஷ் என்ற சூப்பின் ரெசிபிகளைக் கண்டறிய முயலும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘

இதில் உக்ரேனிய உணவுப்பண்பாட்டினையும் அதன் வரலாற்றையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்

இறைச்சி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பீட்ரூட் கொண்டு சமைக்கப்படும் போர்ஷ் சூப் உக்ரேனியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. எல்லா விசேசங்களிலும் அவர்கள் போர்ஷ் தயாரிக்கிறார்கள்.. உக்ரேனியர்களை ஒன்றிணைக்கும் இந்த சூப்பை பல்வேறு விதங்களில் சமைக்கிறார்கள். அதன் வரலாற்றையும் சமைக்கும் விதத்தையும், ரகசிய சேர்மானங்களையும் அறிந்து கொள்ள யெவ்கென் நீண்டதொரு பயணத்தை மேற்கொள்கிறார்,

தனது பயணத்தின் இறுதியில் உக்ரேனின்  தேசிய அடையாளமாக போர்ஷ் எப்படி மாறியது என்பதை யெவ்ஹென் அறிந்து கொள்கிறார்.

தனது பயணத்தில் போர்ஷ் தயாரிப்பதில் தேர்ந்த  சமையற்கலைஞர்களைச் சந்தித்து எவ்வாறு இதனைச் சமைக்கிறார்கள் என்பதைக் கண்டறிகிறார். சமையற்கூடங்கள் நவீனமாகியிருப்பதையும் உணவுக்கலன்கள் மாறியிருப்பதையும்  படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். பலரும் முதன்முதலாக போர்ஷ் சாப்பிட்ட நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆற்று நீரில் சமைத்த போர்ஷ், மீன், பாலாடை, வாத்து இறைச்சி,  மற்றும் விஸ்கி, தேன் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட போர்ஷ் எனப் பல்வேறு விதமான போர்ஷ் சூப் தயாரிப்பினை படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்

ஷாட்ஸ்க் ஏரியின் அருகே பிளாக் போர்ஷ் என்று அழைக்கப்படும் சூப் தயாரிக்கப்படுகிறது. இதில் காட்டுப்பன்றியின் இரத்தத்தைச் சேர்த்துத் தயாரிக்கிறார்கள். டினிப்ரோ ஆற்றின் தெற்குக் கரையில், மீன், அல்லது மாட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியினைக் கொண்டு போர்ஷ் தயாரிக்கப்படுவதைக் யெவ்ஹென் காணுகிறார்

துவக்க காலத்தில் பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த சூப்பில் எதையெல்லாம் புதிதாகச் சேர்த்து புதிய சுவையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை யெவ்ஹென்  அறிந்து கொள்கிறார்.

ஒரு காட்சியில் எந்த வகைப் பாத்திரத்தில் எந்த நிலவு நாளில் இதனைச் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் விளக்குகிறார்.

இன்னொரு காட்சியில் செர்னோபில் அணுஆயுத அழிவிற்குப் பின்பு அந்த நகரின் அழிந்த காட்சிகளையும் அங்கே செயல்படும் அணுமின் நிலைய உணவகத்தையும் பார்வையிடுகிறோம். அங்கே தொழிலாளர்களுக்காகப் போர்ஷ் சூப் தயாரிக்கப்படும் முறையினையும் அறிந்து கொள்கிறோம்

இத்தனை விதமாகச் சமைக்கப்படும் போர்ஷ்களில் எது உண்மையான உக்ரேனிய சூப்.

அனைவரும் சொல்லும் விஷயம். எப்படிச் சமைத்தாலும் போர்ஷ் சூப் சுவையாகவே இருக்கிறது. அதை உண்ணும் போது மகிழ்ச்சியாக உணருகிறோம். என்பதே

போர்ஷ் என்பது உணவின் பெயரில்லை. அது மகிழ்ச்சியின் பெயர் என்கிறார் யெவ்ஹென். பெரிய நகரங்களிலிருந்து சிறிய குடிசை வீடு வரை போர்ஷ் சூப் ஆசையாகத் தயாரிக்கப்படுவதைக் காணும் போது அது நிஜம் என்பதை உணருகிறோம்

உக்ரேனியர்கள் போரால் பிரிந்து கிடந்த போதும் ருசியால் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்கிறார் யெவ்ஹென்.

சூப்பை தனித்துவமாக்கும் ரகசிய பொருட்களைக் கண்டறிய முயலும் யெவ்ஹென் உண்மையில் கண்டறிவது  காலம் காலமாக மனிதர்கள் தொடர்ந்து வரும் சுவை மற்றும் விருப்பங்களையே.

0Shares
0