மகிழ்ச்சியின் முகவரி

கிங் லியரின் மனைவி பெயரென்ன.?

 ஷேக்ஸ்பியர் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு நாவலில் அவள் பெயர் பெர்த் என்று குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை கிங் லியரின் மனைவி இருந்திருந்தால் லியரின் கேள்வியை முட்டாள்தனமானது என்று சொல்லித் தடுத்திருப்பாள். தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று மகளிடம் தந்தை கேட்பது போல தாய் ஒரு போதும் கேட்பதில்லை. அதற்கான தேவையுமில்லை.

 அம்மாவிற்கும் மகளுக்குமான உறவு என்பது வயது வளர வளர மாறிக் கொண்டேயிருக்கிறது. மகள் ஒரு குழந்தைக்கு தாயாக மாறியதும் தனது அன்னையிடம் அதிக நெருக்கம் கொண்டுவிடுகிறாள். அது போலவே முதுமையில் அம்மாவும் மகளும் தோழிகள் போலாகிவிடுகிறார்கள்.

அம்மாவிற்கும் மகளுக்குமான உறவினை அசலான சித்தரிக்கிறது எமி டானின் நாவல் ஜாய் லக் கிளப்.. இந்த நாவலை அதே பெயரில் 1993 ஆம் ஆண்டு திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய நான்கு பெண்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளைப் பேசுகிறது

எமி டான் கதையில் வரும் ஜுனைப் போல அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். சீனக்குடும்பத்தை சேர்ந்தவர்.

எமி தனது தாயின் முந்தைய திருமணத்தைப் பற்றியும் அதன் வழியாகப் பிறந்த குழந்தைகள் பற்றியும் அறிந்து கொண்டார். அந்த சம்பவமே இந்த நாவலின் மையப்புள்ளி. தனது சகோதரிகளைச் சந்திக்க எமி மேற்கொண்ட சீனப் பயணத்தையே நாவலும் விவரிக்கிறது

எமிக்கும் அவரது அன்னைக்குமான உறவு கசப்பானது. இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர். எமியின் காதலனை அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. எமி சுதந்திரமாக இருக்க விரும்பினாள். அதை அவளது தாய் ஏற்கவில்லை.

நூலகத்திலிருந்து எடுத்த புத்தகங்களைத் தவிர வேறு கதை புத்தகங்கள் இல்லாத ஒரு வீட்டில்  எமி வளர்ந்தார். ஆகவே போதுமான அளவு புத்தகங்களைப் படிக்கவில்லை என்ற குற்றவுணர்வு அவருக்குள் இருந்தது.

கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில இலக்கியம் படித்தார். அது அவரது புத்தகம் படிக்கும் ஆசைக்கு வடிகாலாக அமைந்தது. தனது  சொந்த வாழ்க்கையின் உணர்வு, அனுபவங்கள் மற்றும் மனிதர்களைக் கொண்டே அவர் தனது கதைகளை உருவாக்குகிறார்.

1985 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டான் தனது முதல் நாவலான தி ஜாய் லக் கிளப்பை எழுதத் தொடங்கினார் .  இந்த நாவல் அடைந்த வெற்றி சர்வதேச அளவில் அவரைப் புகழ்பெறச் செய்தது

மகிழ்ச்சியின் முகவரியைப் போலிருக்கிறது ஜாய் லக் கிளப். உண்மையில் அதன் ஒளிரும் வெளிச்சத்தின் பின்பாக பெண்களின் வெளிப்படுத்தப்படாத துயரும் வேதனைகளும் படிந்திருக்கின்றன.

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்த நான்கு பெண்களும் , மஹ்ஜோங் விளையாடுவதற்கும், ஒன்று கூடி சாப்பிடுவதற்கும், கதைகள் பேசுவதற்கும் வழக்கமாகச் சந்திக்கிறார்கள்.

தேசம் கடந்த பெண்களின் கடந்தகால நினைவுகளையும் வலிகளையும் படம் மிகவும் அசலாகச் சித்தரிக்கிறது. குறிப்பாக அவர்களுக்குள் உள்ள பிணைப்பு மற்றும் சீனப்பண்பாட்டின் மீது கொண்டுள்ள பிடிப்பு, குடும்பத்தின் மீது கொண்ட கோபத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள். அமெரிக்கா சீனா என இரண்டு வேறுபட்ட பண்பாடுகளின் மோதலையும் படம் சித்தரிக்கிறது

ஜூன்  என்ற இளம்பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். அவள் சுயுவான் வூ என்ற பெண்ணின் மகள், சமீபத்தில் மறைந்து போன சுயுவான் நினைவைப் போற்றும் விதமாகவும் அந்த சந்திப்பு நடைபெறுகிறது. அந்த சந்திப்பின் போது சுயவான் விட்டுச் சென்ற ரகசியம் ஒன்றை  ஜூனிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவளுக்குச் சீனாவில் ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் சுயவான் சீனாவில் இருக்கும் போது பிறந்த பெண் என்று தெரிவிக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் அம்மா மறைத்து வைத்த ரகசியத்தை தேடி ஜூன் பயணம் செய்கிறாள். அந்த பயணத்தில் அவள் அடையும் புதிய உறவும் நெருக்கமும் கண்கலங்கும் விதமாக காட்சிப்படுத்தபட்டுள்ளது.

லிண்டோவின் கதை குழந்தை இல்லாத பெண் படும் கஷ்டங்களை விவரிக்கிறது. பணக்கார பையனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள் லிண்டோ. அவனோ ஒரு விளையாட்டுச்சிறுவன். லிண்டோவின் மாமியார் எப்படியாவது குடும்பத்தின் வாரிசாக ஒரு ஆண்பிள்ளையை அவள் பெற்றுத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். லிண்டோ அதை எப்படி எதிர்கொள்கிறாள். எப்படி குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பித்து வெளியேறுகிறாள் என்பதை விளக்குகிறார்கள்

நான்கு அம்மாக்களின் கதை என்றே இப்படத்தைச் சொல்ல வேண்டும்.

உங்களின் கண்ணீர் உங்கள் துயரங்களைக் கழுவுவதில்லை. மாறாக அது  மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.. ஆகவே நீங்கள் உங்கள் கண்ணீரை விழுங்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண் சொல்கிறாள். உண்மையான அறிவுரை.

எல்லா காயங்களும் நாளடைவில் தன்னை தானே மூடிக் கொண்டுவிடுகின்றன. ஆனால் அதனுள் மறைந்திருக்கும் வலி உலகம் அறியாது என்று படத்தில் ஒரு பெண் குறிப்பிடுகிறாள்

உணவின் வழியாக, விளையாட்டின் வழியாக அவர்கள் தாங்கள் இழந்த கடந்தகாலத்தை மீட்டெடுக்கிறார்கள்  ஒரு தலைமுறைப் பெண் இன்னொரு தலைமுறைப் பெண்ணை குற்றம் சாட்டுகிறாள். அது மாறாமல் தொடர்கிறது. குடும்ப அமைப்பு பெண்ணை எப்படி ஒடுக்கி வைத்திருக்கிறது என்பதை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது. திரையில் அதை நாம் முழுமையாக உணரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரம் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான மகிழ்ச்சியை, விடுதலையைத் தானே எப்படி உருவாக்கிக் கொள்கிறார் என்பதையும் படம் காட்டுகிறது. மகள் தாயைப் புரிந்து கொள்வதுடன் அவளுடன் தோழமையுடம் பழகுவதைச் சித்தரிப்பது தான் படத்தின் தனித்துவம்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீனக்குடும்பத்தின் இளம்பெண்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள் ஆனால் பெரியவர்கள் இன்னமும் மாண்டரின் மொழியில் தான் பேசுகிறார்கள். எப்படியாவது தங்கள் பண்பாட்டுச் சிறப்புகளை, மரபுகளைப் பிள்ளைகளிடம் சேர்த்துவிட வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். பல நேரங்களில் கட்டாயப்படுத்திச் செய்ய வைக்கிறார்கள்.

சொந்த மொழி, சொந்த விளையாட்டு, சொந்த உணவின் வழியே சொந்த தேசத்தில் இருப்பது போன்ற உணர்வை அடைய நினைக்கிறார்கள்.

நான்கு பின்னிப்பிணைந்த கதைகள் வழியே ஒரு தலைமுறையின் வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாக திரையில் காணுகிறோம். இது சீனப்பண்பாட்டின் கதை மட்டுமில்லை. தமிழ் பண்பாட்டின் கதையும் இது போன்றதே. அமெரிக்க தமிழ் குடும்பங்கள் பற்றி இப்படி யாரும் எழுதவும் இல்லை.திரையில் உருவாக்கவும் இல்லை.

இப்படம் பற்றிய விமர்சனம் யாவிலும் இதைப் பார்க்கும் போது எனது அம்மாவை நினைத்துக் கொண்டேன். கண்ணீர் சிந்தினேன் என பெண்கள் எழுதியிருக்கிறார்கள். அது உண்மையான அனுபவம் என்பதை படம் பார்க்கும் போது  நீங்களே உணர்வீர்கள்

0Shares
0