மணலின் நடுவே

William Stanley Merwin எனப்படும் w.s. மெர்வின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர். இவரது Sand என்ற சிறுகதை இரண்டேபக்கங்கள் கொண்டது. அபாரமான இச்சிறுகதை உலகச் சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

மணல்கடிகாரம் ஒன்றினுள் நிரப்பட்ட மணலிலுள் எப்படியோ ஒரு எறும்பு பிறந்து விடுகிறது. அதற்கு வெளியுலகம் என்ற ஒன்றே தெரியாது. மணல்துகள்களை தனது சகோதரர்களாக  நினைக்கிறது. மேலிருந்து கீழாக, பின்பு கீழிலிருந்து மேலாக எதற்காக இப்படி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என  குழம்பிப் போகிறது.

தன்னை எதற்காக மணல்துகள்கள் இப்படி இடித்து தள்ளுகின்றன. தன்னை போல அவை சுதந்திரமாக நகர முயற்சிப்பதில்லையே என யோசிக்கிறது. கண்ணாடிகுடுவைக்கு வெளியே உலகம் இயங்கிக் கொண்டிருப்பதோ, அங்கே எறும்புகளால் சர்வ சுதந்திரமாக உலவ முடியும் என்றோ அதற்கு தெரியவில்லை.

முடிவில்லாமல் அது மணல்துகள்களுடன்  இழுபட்டபடியே இருந்தது, தன்னை சுற்றிய மணல்துகள்களை  கணக்கிட முயன்று தோற்றுப்போனது

தான் தனியாக இருக்கிறோம் என்பதைக் கூட எறும்பு உணரவில்லை. என்பதுடன் கதை முடிகிறது

இக்கதையை வாசித்த கணத்தில் அதிர்ந்து போனேன். இது எறும்பின் கதையில்லை. நம் கதை. நவீன மனிதனின் கதை. மணல்துகள்களுக்குள் கலந்து போய்விட்ட ஆனால் விழிப்புணர்வு கொண்ட எறும்பு போல தானே எழுத்தாளனும் இருக்கிறான். தான் வேறு என உணரத்துவங்குகிற ஒருவனின் தத்தளிப்பை இவ்வளவு அழுத்தமாக இரண்டே பக்கங்களில் சொல்லமுடிவது மெர்வின் எழுத்தாற்றலே.

அன்றாட உலகைப் பற்றிய சித்திரத்தை இக்கதை மாற்றிவிட்டது.

இந்த நெருக்கடிக்குள்ளிருப்பது எப்படி விடுதலை பெறுவது.  எறும்பு தான் உயிருள்ள, சிந்திக்கும் உயிரி என உணரத்துவங்கியது தவறா. அப்படி உணர்ந்து கொண்டாலும் மணல்துகள்களுடன் தான் இழுபட வேண்டுமா. அன்றாட வாழ்க்கை என்பது அலைக்கழிக்கபடுவது மட்டும் தானா

காலம் தான் கதையின் மையம். மெர்வின் மணல்கடிகாரத்தை  குறியீடாகவே தேர்வு செய்திருக்கிறார்.

தன்னையும் மணல்துகள் என எறும்பு நினைத்துக் கொள்வது தான் கதையின் உச்சம். ஆனால் அதற்குத் தன்னை போல ஏன் மணல்துகள்கள் சுயவிருப்பத்தின்படி நடப்பதில்லை எனப்புரிவதில்லை.

மணல்கடிகாரத்தின் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டு விலகி ஒதுங்கிக் கொள்ள முயற்சிக்கிறது. வேகமாக கீழிறங்கும் மணல்துகள்களை எண்ண முயற்சிக்கிறது. தப்பிக்க முடியாத நெருக்கடி என்பார்களே அதற்கு இந்த எறும்பே சரியான உதாரணம்.

கவிஞர் என்பதால் W. S,Merwin  இக்கதையை கச்சிதமாக எழுதியிருக்கிறார்.

மெர்வினின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். முற்றிலும் புதிய கவிமொழியுடன் வியப்பூட்டுகின்றன.

இணைப்பு

https://www.poemhunter.com/i/ebooks/pdf/w_s_merwin_2004_9.pdf

0Shares
0