மதுரையில் ராபர்டோ ரோசலினி

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் நாயகராகக் கொண்டாடப்படுகிறவர் ராபர்டோ ரோசலினி. ரோம் ஓபன் சிட்டி, பைசான். ஸ்ட்ரோம்போலி போன்ற படங்களை இயக்கியவர்.

இவர் இந்தியாவினைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். India, Matri Bhumi என்ற அந்த ஆவணப்படத்தில் தமிழகத்தின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில் காட்சிகள். வீதியில் யானை வருவது. காந்தி கிராமத்தின் செயல்பாடுகள். காவிரி ஆறு. ஸ்ரீரங்கம் போன்றவை மிக அழகாகப் படமாக்கபட்டுள்ளன. இன்று அந்தக் காட்சிகளைக் காணும் போது வியப்பாக இருக்கிறது.

ராபர்டோ ரோசலினியின் தமிழக வருகையைப் பற்றி யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.

UNDER HER SPELL என்ற தலைப்பில் DILEEP PADGAONKAR ரோசலினியின் இந்திய வருகை மற்றும் அவர் எடுத்த ஆவணப்படம் பற்றிச் சிறப்பான புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் அபூர்வமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன

**

ரோசலினி மீது பெருமதிப்புக் கொண்ட நடிகை இங்கிரிட் பெர்க்மன் தானாக முன்வந்து அவரது படத்தில் நடித்தார். ரோசெலினியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் இங்கிரிட் நடித்திருக்கிறார். பின்பு இங்கிரிட்டை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரோசலினி.

1956-ல் ஹாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பை ஏற்று இங்கிரிட் பெர்க்மன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அது ரோசலினிக்குப் பிடிக்கவில்லை. அவர்களின் திருமணஉறவில் விரிசல் ஏற்பட்டது. பிரிந்து வாழ்வது என முடிவு செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் இந்தியப்பிரதமர் நேருவைச் சந்தித்தார் ரோசலினி. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை. மாற்றங்களை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையைப் பகிர்ந்து கொண்டார்.

நேரு உடனடியாக அந்த விருப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். வெளியுறவுத்துறையைச் சேர்ந்த ராகவன் பிள்ளை ரோசலினியோடு தொடர்பு கொண்டு அவரது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். ராகவன் பிள்ளையைப் பற்றி ரோசலினி மிக உயர்வாக எழுதியிருக்கிறார்.

ரோசலினி இந்த ஆவணப்படத்திற்கு எழுதுவதற்காகப் பிரெஞ்சு இயக்குநர் த்ரூபோவை அழைத்தார். ஒராண்டு காலம் தன்னால் இந்தியாவில் வந்து தங்கியிருக்க முடியாது என்று த்ரூபோ மறுத்துவிட்டார். ரோசலினி இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்பு படப்பிடிப்பிற்கான இடங்கள். மற்றும் இரண்டு ஒளிப்பதிவாளர்கள். உதவியாளர்கள் எனக் குழு பயணம் புறப்பட்டது.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் தமிழகத்திலுள்ள கலைகள் கோவில்கள் மற்றும் இயற்கை வளங்கள். காந்தி கிராமத்தின் செயல்பாடுகளைப் படமாக்க விரும்பினார்கள்.

காந்தியக் கனவாகக் கருதப்படும் காந்தி கிராமத்தினை விரிவாகப் படமாக்க விரும்பினார். ரோசலினி இதற்காகப் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டுப் பயணம் செய்தார். படப்பிடிப்புக் குழுவினர்கள் முன்னதாக ரயிலில் பயணம் செய்து மதுரை வந்து சேர்ந்திருந்தார்கள்.

மோசமான இந்திய சாலைகள் பற்றிப் புலம்பிக் கொண்டே வந்தார் ரோசலினி. பின்னிரவில் திண்டுக்கல் அருகே அவர்கள் கார் பழுதாகி நின்றுவிட்டது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. விடியும் வரை அங்கே காத்திருக்க வேண்டியது தான் என்று டிரைவர் தெரிவித்தார். ரோசலின் ஆத்திரத்தில் அனைவரையும் திட்டி தீர்த்துவிட்டார்.

மதுரைக்குக் காரைக் கொண்டு சென்றால் மட்டுமே பழுது பார்க்க முடியும். என்ன செய்வது எனத் தெரியாமல் இருளில் தவித்தார்கள். அப்போது ஒரு லாரி அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. உடனே அதைக் கையைக் காட்டி நிறுத்தி உதவி கேட்டார்கள்.

தான் மதுரைப் பக்கம் போகவில்லை. ஆகவே தன்னால் உதவி செய்ய முடியாது என்று லாரி டிரைவர் மறுத்துவிட்டார். பணம் தருவதாகச் சொன்ன போதும் அவர் ஏற்கவில்லை. அத்தோடு தனக்கு நேரமாகிவிட்டது என்று லாரியை கிளப்பினார்.

இதனால் ஆத்திரமான ரோசலினி அந்த டிரைவரை இத்தாலிய மொழியில் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினார். புறப்பட்ட லாரி அப்படியே நின்றது.

தலையை வெளியே நீட்டி லாரி டிரைவர் அது போலத் தானும் இத்தாலியில் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினார். தன்னை ஒருவன் திட்டுகிறானே எனக் கோபம் அடையாமல் இத்தாலிய மொழியில் பேசுகிறான் என்று ஆசையாக அவனை நோக்கி ஒடினார் ரோசலினி.

அந்த லாரி டிரைவர் தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போது ஜெர்மனி யுத்த களத்தில் கலந்து கொண்டதாகவும் பிடிபட்டுப் போர்கைதியாக இருந்த போது இத்தாலிய மொழி கற்றுக் கொண்டதாகவும் சொன்னார். ரோசலினி ஆச்சரியத்துடன் அவரைக் கட்டிக் கொண்டு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்

லாரி டிரைவர் அந்தக் காரை ஒரு கயிற்றில் இணைத்து மதுரைக்குக் கொண்டு சென்றார். மதுரையில் கார் பழுது நீக்க எவ்வளவு நேரமாகும் என்று ரோசலினி விசாரித்தபோது நாலைந்து மணி நேரம் ஆகும் என்றார்கள். அதற்குள் நிச்சயம் சரி செய்ய முடியாது. குறைந்தது ஒரு நாளாகிவிடும் என்று ரோசலினி நினைத்தார். ஆகவே மாற்று ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் இரண்டு மணி நேரத்தில் காரை சரிசெய்து கொடுத்துவிட்டார்கள்.

இந்தியாவை இப்போது தான் புரிந்து கொண்டேன். இங்கே அசாத்திய திறமைசாலிகள் இருக்கிறார்கள். நிச்சயம் இந்தக் காரை இத்தாலியில் பழுது நீக்க ஒரு நாளாகியிருக்கும். இங்கே இரண்டே மணி நேரத்தில் சரி செய்துவிட்டார்கள் என்று ரோசலினி பாராட்டினார். அத்தோடு இந்தியாவில் எவரையும் தோற்றத்தை வைத்து மதிப்பட முடியாது. இத்தாலி தெரிந்த டிரைவர் போல அவர் பார்க்க எளிமையாக இருக்ககூடும் என்றும் தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்

அதுவரை படித்தும் கேட்டும் அறிந்து வைத்திருந்த இந்தியாவைப் பற்றிய எண்ணங்களை அவரது பயணமும் நேரடி அனுபவமும் மாற்றி அமைத்தன. அந்த மாற்றத்தை அவரது ஆவணப்படத்தில் வெளிப்படையாகக் காண முடிகிறது.

இந்தியாவை இணைக்கும் பண்பாட்டுக் கூறுகளை, கலைகளை, மக்களின் எளிய வாழ்க்கையை. இயற்கையின் வனப்பை, பன்முகத்தன்மை கொண்ட இந்திய வாழ்க்கை முறையை அவர் சரியாக உள்வாங்கியிருக்கிறார். படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்

ரோசலினியின் ஆவணப்படத்திற்குத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர் போர்க்கார். கிட்டு எனும் எம்.வி. கிருஷ்ணசாமி திரைப்படப் பிரிவில் பணிபுரிந்தவர். அவர் இத்தாலிக்கு சென்று ரோசலினியை சந்தித்து இத்தாலிய படப்பிடிப்பில் கலந்து கொண்டு அனுபவம் பெற்றவர். அவர் இந்தியாவில் ஆவணப்படம் எடுக்கும் பணியில் ரோசலினியோடு முழுமையாக உடனிருந்து பணியாற்றினார். இவர்களுடன் மும்பையில் பிரெஞ்சு கற்பித்த, ஜீன் ஹெர்மன் என்ற பேராசிரியரும் இணைந்து கொண்டார்.

சாந்திநிகேதனில் பயின்ற, இந்தியக்கலைகள் மற்றும் இசை அறிந்த சோனாலி தாஸ்குப்தா இந்த ஆவணப்படத்தில் இணைந்து கொண்டார். சோனாலி திருமணமானவர் அவரது கணவர் ஹரிசதன் தாஸ்குப்தா திரைப்படத் தயாரிப்பாளர். அவர்களுக்கு ஒரு மகனிருந்தான்.

அழகியான சோனாலியை பார்த்த மாத்திரம் ரோசலினி காதலிக்கத் துவங்கிவிட்டார். அப்போது அவருக்கு வயது 52. இந்தக் காதலைப் பற்றி பத்திரிக்கைகள் மிக மோசமாக எழுதின. சோனாலி இந்தியாவை விட்டு போக முடியாதபடி அவரது பாஸ்போர்ட் முடக்கபட்டது. நேருவின் தலையிட்டால் அப்பிரச்சனை தீர்க்கப்பட்டது. பின்னாளில் அவர்கள் திருமணமும் செய்து கொண்டார்கள். ரோசலினி இறந்த போது அவரது பழைய காதலிகள் மனைவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதை த்ரூபா தனது ஒரு படத்தின் துவக்க காட்சியாக வைத்திருக்கிறார்

நேருவின் ஆலோசனைப் படி பௌத்தம் தொடர்பான இடங்களில் அதிகம் கவனம் செலுத்தினார் ரோசலினி. நாளந்தாவினை படமாக்கினார். டெல்லி, மும்பை, ஒரிசா கர்நாடகா மத்திய பிரதேசம் வங்காளம், பீகார், என்று விரிவான பயணம் மேற்கொண்டு படமாக்கியிருக்கிறார். மைசூர் காடுகளில் யானையைப் படம்பிடித்திருக்கிறார். இந்தப் பயணத்தின் வழியே அவர் இந்தியாவை நெருக்கமாக அறிந்து கொண்டிருக்கிறார்.

மார்ச் 5ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மதுரை வந்தடைந்த படக்குழுவினர் அன்று நாள் முழுவதும் மதுரையைப் படம்பிடித்திருக்கிறார்கள். பாவைக் கூத்து எனப்படும் நிழல் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துபவர்களைக் கண்டுபிடித்து அவற்றைப் படமாக்கியிருக்கிறார்கள்.

ரோசலினி கோபத்தில் மிக மோசமாகத் திட்டக் கூடியவர். இதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருந்தது. இந்த வசைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிட்டு ஒரு நாள் பாதி வழியில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டு என்னால் இனிமேல் பணியாற்ற முடியாது. உங்களுக்குத் தெரிந்த வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டார். அடுத்து நடந்த சம்பவம் கிட்டுவை கலங்க வைத்துவிட்டது.

தனது தவற்றை உணர்ந்த ரோசலினி சப்தமாக அழத்துவங்கினார்.. கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் காட்சி கிட்டுவின் மனதை இளக்கியது. மீண்டும் இணைந்து பணியாற்றத் துவங்கினார்

இந்த ஆவணப்படத்தின் போது ஒவியர் எம் எப் ஹுசைன். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து ஒவியங்கள் வரைந்திருக்கிறார்.

இந்தியாவைப் பற்றி மேற்குலகம் கொண்டிருந்த பிம்பங்களுக்கு மாற்றாக இந்தியாவின் உண்மையான முகத்தைத் தான் காட்ட விரும்புவதாக ரோசலினி தெரிவித்தார். அந்த எண்ணம் இந்த ஆவணப்படத்தில் முழுமையாக வெளிப்படவில்லை. ஆனால் இந்தியா குறித்த புதிய புரிதலை இந்தப் படம் உருவாக்குகிறது என்பது உண்மையே

0Shares
0