மரங்களின் கடல்

புதிய சிறுகதை

நரேந்திரன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது அலுவலகத்திலிருந்து பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சுற்றுலா அனுப்பி வைக்கபடுவார்கள். இந்த முறை அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான்.

அயோகிகஹாரா என்ற புகழ்பெற்ற வனத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி அந்தக் காட்டின் காணொளிகளைப் பார்த்தான். தற்கொலைக்குப் புகழ்பெற்ற காடு என்றார்கள்..

அவர்கள் நிறுவனத்தில் நேரந்தவறாமை, முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்வது. உரத்த சப்தமின்றிப் பணியாற்றுவது அடிப்படை விதிகளாகும். அவனது மூன்று உயரதிகாரிகளும் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் வந்துவிடுவார்கள். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க மாட்டார்கள். எவ்வளவு நெருக்கடியிலும் கடுஞ்சொல் பேச மாட்டார்கள். ஒரு நாளில் நூறு முறை நன்றி சொல்வார்கள்.

அவர்களின் அலுவலகம் ரெயின்போ டவர்ஸின் பனிரெண்டாவது தளத்தில் இயங்கியது. இருநூறு பேருக்கும் மேலாக வேலை செய்தார்கள். ஆனால் அலுவலகத்தில் ஆள் நடக்கிற சப்தம் கூடக் கேட்காது. அறைச்சுவர்களின் வண்ணம் துவங்கி சுவரோவியங்கள். தொட்டிச் செடிகள் வரை மிகுந்த தனித்துவத்துடன் இருந்தன.

அலுவலகத்தின் நடுவே பெரிய கற்பாறை ஒன்றை வைத்திருந்தார்கள். பணி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது அந்தப் பாறையைச் சுற்றி அமர்ந்து கொண்டு விவாதிப்பார்கள். பிரச்சனையைத் தீர்க்க வேண்டியவர் பாறையைத் தொட்டுக் கொண்டு பேசுவதுண்டு.

வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்கு மனவளப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் முதன்மையானது. மலர் காணுதல். ஆளுக்கு ஒரு மலரைக் கையில் கொடுத்து விடுவார்கள். அவர்கள் அந்த மலரைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு மலரை எவ்வளவு நேரம் கண் அகலாமல் பார்க்க முடியும். ஐந்து நிமிஷங்களே அதிகம். ஆனால் முப்பது நிமிஷங்கள் மலரைப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லுவார்கள்.

இந்தப் பயிற்சியின் ஆரம்பக் காலங்களில் மலரை பார்த்தவுடன் அதன் வாசனை, எதைப் போலிருக்கிறது என்ற எண்ணம். இது போன்ற மலரை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற நினைவுகளே மேலிடும். பின்பு அது மெல்ல வடிந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக மலர் மறைந்து அதன் வாசம் விலகி அதன் நிறமும் வடிவமும் தெரியத் துவங்கும். பின்பு அதுவும் மறைந்து போய்க் காற்றில் லேசாக மலர் அசைவதும் நிற்பதும் புலனாகும். அதுவும் கடந்து போய்ப் பின்பு மலர் என்பது காலத்தின் இதழ்கள் என்பது போலிருக்கும். பின்பு அதுவும் மறைந்து நிலையாமை தான் மலராக உருக்கொண்டிருக்கிறது என்பதை உணர நேரிடும்.

நரேந்திரன் அது போன்ற நேரத்தில் மலரை அல்ல தனது மனதைக் கவனிக்கவும் பழக்கவும் துவங்கினான். ஆழ்ந்து அவதானித்த பிறகு மலர் மெல்ல அவன் முன்னாலிருந்து இடம் மாறி மனதிற்குள் வந்துவிடும். மனதிற்குள் வந்துவிட்ட மலர் வாடுவதேயில்லை.

ஜப்பானிலிருந்து வந்திருந்த அவர்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுகுரு மசூடா ஒரு முறை அவர்களிடம் சொன்னார்

“உதிர்ந்த மலர்கள் தான் வண்ணத்துப்பூச்சிகளாக மறுபிறப்புக் கொள்கின்றன. அதனால் தான் அவை மலர்களைச் சுற்றிவருகின்றன என்பது எங்களின் நம்பிக்கை. கிளைக்குத் திரும்பிவிடும் மலர் தான் வண்ணத்துப்பூச்சி என்றொரு கவிதையிருக்கிறது. “

கவித்துவமான அவரது கற்பனையை நரேந்திரன் ரசித்தான்.

இது போலவே மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்திச்சூரியனை ரசிப்பதற்கும், டம்ளரில் உள்ள தண்ணீரை ஒவ்வொரு சொட்டாக எடுத்து இன்னொரு டம்ளருக்கு மாற்றும் பயிற்சியும் அவர்களுக்கு அளித்தார்கள். இந்தப் பயிற்சிகளில் அவன் மிகுந்த விருப்பத்தோடு ஈடுபட்டான். எளிமையான மனவளப்பயிற்சிகள் அவன் வயதை கரைத்து பால்யத்திற்குள் அழைத்துச் செல்வதை உணர்ந்தான். ஆனால் அவனது அலுவலகத்தில் பலருக்கும் இது போன்ற பயிற்சிகள் பிடிக்கவில்லை. தனிப்பட்ட பேச்சில் அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கேலி செய்தார்கள்.

••

அயோகிகஹாரா என்பதற்கு மரங்களின் கடல் என்று பொருள் என்றார் கானக வழிகாட்டி மசாயா கிச்சினே.

பச்சை நிற தொப்பி அணிந்திருந்தார். சிறிய உதடுகள். நாற்பது வயதுள்ளவர் போலத் தோற்றம் கொண்டிருந்தார். ஆனால் அவரது உண்மையான வயது எழுபத்தியாறு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் காட்டிற்குள் சுற்றிவருகிறார். தற்கொலை செய்து கொண்டு இறந்தவரின் உடலை மீட்கும் பணியைச் சேவையாகவும் செய்து வருகிறார்.

ஃபூஜி எரிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அயோகிகஹாரா மரங்கள் அடர்ந்து அமானுஷ்யமான அமைதி கொண்டிருந்தது.

“இந்தக் காட்டில் எரிமலைக் குழம்புகள் உறைந்து போயிருப்பதால் காந்த சக்தியிருக்கிறது. ஆகவே திசைகாட்டிகள் செயல்படாது“ என்றார் மசாயா

“நாம் டிரக்கிங் போகப்போகிறோமா“ என்று கேட்டாள் ஹரணி.

“இல்லை“ என மறுத்து தலையாட்டியபடியே மசாயா ஆளுக்கு ஒரு கைக்கடிகாரத்தை வழங்கினார்.

“இதை கையில் கட்டிக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் காட்டிற்குள் எங்கேயிருக்கிறீர்கள் என்று நாங்கள் கண்டறிய முடியும். மூன்று நாட்கள் காட்டிற்குள் நீங்கள் தனியே சுற்றிவர வேண்டும். எந்தத் தொடர்பு சாதனமும் எடுத்துச் செல்லக்கூடாது. உங்களுக்கு உணவு வழங்கப்படாது. குடிநீர் வழங்கப்படாது. நீங்களாக உணவையும் குடிநீரையும் தேடிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் கடிகாரத்தின் சிவப்பு வட்டத்தை அழுத்தினால் நாங்கள் மீட்டுவிடுவோம். இது உங்களை நீங்களே கண்டறியும் பயிற்சி. ஆகவே மகிழ்ச்சியோடு ஈடுபடுங்கள்.“

என்று உற்சாகமாகப் பேசினார்.

நரேந்திரனும் அவனது நண்பர்களும் கைதட்டினார்கள். ஆனாலும் மனதிற்குள் அவர்கள் சினிமாவில் பார்த்திருந்த காடும் அதன் திகில் காட்சிகளும் வந்து போயின

“இந்தக் காட்டில் சிங்கம் புலியிருக்கிறதா“ எனக்கேட்டான் பாலசிவம்.

“கரடி மான், நரி, பன்றி, காட்டுமுயல், அணில், மரங்கொத்தி போன்றவை இருக்கின்றன“ என்றார் மசாயா

“வேறு என்ன சிறப்பு“ எனக்கேட்டாள் ஸ்வேதா.

“அதிசயமான வண்ணத்துப்பூச்சிகள் நிறைய இருக்கின்றன. மேல்புறத்தில் கரும்புள்ளிகளுடன் ஆழமான ஆரஞ்சு நிறம் கொண்ட ஃப்ரிட்டில்லரி வண்ணத்துப்பூச்சிகளை நிறையக் காணலாம். அதிர்ஷடமிருந்தால் வண்ணத்துபூச்சி உங்களை முத்தமிடும் “

“ஏன் இந்தக் காட்டில் நிறையப் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்“ என்று கேட்டான் ஸ்ரீதரன்.

“இதன் அழகும் அமைதியும் தான் காரணம் என்கிறார்கள். எனக்கு என்னவோ பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்திக்க முடியாதவர்களே தற்கொலை செய்வதாகத் தோன்றுகிறது. சென்ற ஆண்டில் 105 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதில் மார்ச் மாதம் அதிகம் நடந்துள்ளது “ என்றார் மசாயா

“இப்போது மார்ச் மாதம் தானே“ என்று கேட்டான் ஸ்ரீதரன்..

அவர் சிரித்தபடியே “உங்களுக்கு ஏதேனும் கடன்பிரச்சனை இருக்கிறதா“. என்று கேட்டார் மசாயா

ஸ்ரீதரன் சிரித்தபடியே இல்லை என்று தலையாட்டினான்.

“அழகு தற்கொலையைத் தூண்டுமா“ என்று கேட்டான் நரேந்திரன்

“அழகின் உச்சத்தை நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள். அது ஆபத்தானது. அழகின் நாவு தீண்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். வரலாற்றில் அப்படியான சம்பவங்கள் நிறைய இருக்கிறதே“ என்றார் மசாயா

“என்னால் நம்ப முடியவில்லை“. என்றான் நரேந்திரன்

“நெருப்பும் நீரும் தான் உலகின் நிரந்தரஅழகிகள். அவை நம் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பதில்லை“என்று புன்னகை செய்தார் மசாயா.

••

அவர்கள் பத்து பேரும் சாகச மனநிலையில் அயோகிகஹாரா காட்டிற்குள் ஆளுக்கு ஒரு பக்கமாக நடக்க ஆரம்பித்தார்கள். அடர்த்தியாக மரங்கள் உயர்ந்திருந்தன. சூரிய வெளிச்சம் தரையிறங்கவில்லை. பச்சைமணம் நாசியில் ஏறியது. அரை மணி நேரம் நடந்தபிறகு எந்தப் பக்கம் போவது என்று அவனுக்குத் தெரியவில்லை. கால்கள் அழைத்துச் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தான்.

இரண்டு மணி நேரத்தின் பின்பு பசி எடுத்தது. என்ன சாப்பிடுவது. வேட்டையாட வேண்டுமா. எதை வேட்டையாடுவது. எந்த ஆயுதமில்லையே என்று குழப்பமாக இருந்தது. திடீரெனக் காடு திறந்த வெளி உணவகம் போலத் தோன்றியது.

மீன்களைப் பிடிப்பது எளிது என்று நினைத்து நீரோட்டத்தைக் கண்டறிந்து கற்களைக் கொண்டு மீன்பிடிக்க முனைந்தான். ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடியவில்லை. தனது ஏமாற்றத்தை யாரிடம் காட்டுவது என்றும் தெரியவில்லை.

சட்டென வெயில் மறைந்து மேகம் இருண்டது. சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கே செல்வது எனத் தெரியவில்லை. மரத்தடியில் ஒதுங்கி நின்றான். காற்றும் மழையும் சேர்ந்து கொண்டது. மழையின் சீற்றம் அவனை அச்சப்படுத்தியது. இதுவரை பசுமையின் சின்னமாக இருந்த மரங்கள் இப்போது அச்சத்தின் உருவங்களாக மாறியிருந்தன. மழைவிட்டபிறகு அவன் பசி தாங்க முடியாமல் ஒரு கல்லை கூர்மையாக்கினான். ஏதாவது ஒரு விலங்கை வேட்டையாட வேண்டும். தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ண வேண்டும் என்று நினைத்தான். எவ்வளவு அலைந்த போதும் ஒரு விலங்கும் கண்ணில் படவில்லை. தாகம் அதிகமானது. ஒடும் தண்ணீரை அள்ளிக் குடித்தான்.

ஒரு மரத்தடியில் இளமஞ்சள் நிறத்தில் பேரிக்காய்கள் போல உதிர்ந்து கிடந்தன. அது என்ன பழம் என்று தெரியவில்லை. ஆனால் அதை எடுத்து வேகமாகச் சாப்பிட்டான். லேசான கசப்பாக இருந்தது.

அந்தி வெளிச்சம் மறைந்து இரவு வந்தது. விளக்கு வெளிச்சத்திற்காக அவன் ஏங்கினான். எங்கே உறங்குவது எனத் தெரியவில்லை. பெயர் அறியாத பூச்சிகளின் சப்தம் காட்டின் உன்னதச் சங்கீதமாக ஒலித்தது. ஏதாவது மரத்தில் ஏறிக் கொண்டு உறங்கலாமா என்று நினைத்தான். அவனால் மரமேற முடியவில்லை.

பாறை ஒன்றைத் தேடி கண்டுபிடித்து அதன் மீதேறி படுத்துக் கொண்டான். குளிர்ச்சி அவன் உடல் நரம்புகளில் ஊடுருவி வதைத்தது. காட்டு விலங்குகள் தன்னைத் தாக்கிவிடுமோ என்ற பயம் அவனுக்குள் அதிகமானது. போதும் எனச் சிவப்புப் பொத்தானை அமுக்கி வெளியே ஒடிவிடலாம் என்று நினைத்தான். நடந்த அசதியும் களைப்பும் அவனை அறியாமல் உறக்கத்தில் ஆழ்த்தியது.

திடீரென்று பின்னிரவில் விழித்துக் கொண்டான். வானிலிருந்து அபூர்வமான வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒளிரும் வானைக் காணும் போது அழ வேண்டும் போலிருந்தது. இரண்டு நட்சத்திரங்கள் ஒடி விளையாடிக் கொண்டிருந்தன. விடிகாலையில் அவன் எழுந்து கொண்ட போது தனது இயலாமைகள் குறித்து ஆழமான குற்றவுணர்வு கொண்டிருந்தான். அவனது படிப்பு அவனைக் கைவிட்டிருந்த்து. அவனது பணம் அவனைக் கைவிட்டிருந்தது. உள்ளுணர்வும் உடலின் வலிமையும் மட்டுமே அவனை இயக்கியது.

முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் அவன் சற்று அச்சமின்றி நடந்தான். வழியில் மரத்தில் தாவியோடும் அணில் ஒன்றைக் கண்டான். அதன் கண்களில் பயமில்லை. இரண்டாம் நாளில் அவன் சட்டையைக் கழட்டி அதைக் கொண்டு மீன்பிடிக்கப் பழகியிருந்தான். கற்களை உரசி நெருப்பை மூட்டினான். அது ஏதோ சாகசச் செயல் போலிருந்த்து. மரத்திலிருந்த பறவைகள் ஒலி எழுப்பும் போது உன்னிப்பாகக் கவனித்தான். உலர்ந்த சருகுகள் காற்றில் எழுப்பும் ஒசையின் ரகசியம் அறிந்து கொண்டான்.

வீழ்ந்து பாசிபடிந்து கிடந்த மரங்கள் விநோதச் சிற்பங்கள் போன்றிருந்தன. யாரோ விட்டுச் சென்றிருந்த கிழிந்த சிவப்பு தொப்பி ஒன்றை கண்டெடுத்து அணிந்து கொண்டான். அது அவனுக்கு அவனே பரிசளித்துக் கொண்டது போலிருந்தது.

காட்டிற்குள் நடக்க நடக்க இன்னொரு மனிதனின் சப்தம் கேட்டுவிடாதா என்று ஏக்கம் அதிகமானது. ஒரு மரத்தடியில் மஞ்சளும் சிவப்புமாக நூறு பூக்கள் உதிர்ந்து கிடக்கும் அபூர்வமான காட்சியைக் கண்டான். மனம் விம்மியது. இப்போது மணி எவ்வளவு என்று தெரியவில்லை. பகலும் இரவும் இரண்டு துண்டுகள் மட்டுமே. நத்தை ஊர்வது போலப் பகல் நகர்ந்து கொண்டிருந்தது. காட்டின் இயக்கம் ரகசியமானது. புதிரானது. எனத் தோன்றியது

அன்றிரவு சிறிய குகை போலிருந்த இடத்தினைக் கண்டுபிடித்து அதற்குள் தங்கினான். பசியில் உறக்கம் வரவில்லை. தொலைதூரத்திலிருந்த வீடும் அவனது படுக்கையும் நினைவிற்கு வந்தது.

மூன்றாம் நாள் அவன் காட்டில் எதையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. தரையை மட்டுமே பார்த்தான். மெதுவாக நடந்தான். பாறையடியில் நீலநிற பறவை முட்டைகளைக் கண்டறிந்தான். மூலிகை செடிகளைப் பார்த்தான். ஒடிந்து கிடந்த மரக்கிளை ஒன்றை எடுத்து ஊன்று கோலாக மாற்றிக் கொண்டான். வனத்தை வீடாக்கி கொள்வது எளிதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. பசி தாகம் தூக்கம் மூன்று மட்டுமே அவனை இயக்கியது. மூன்று நாட்களாக அவனது பெயரைச் சொல்லி ஒருவர் கூட அழைக்கவில்லை. இந்தப் பெயர் எதற்கு என்று அவனுக்கே புரியவில்லை.

காட்டில் நடக்கும் போது வழியில் கிடந்தகல் ஒன்றை காலால் எத்தித் தள்ளினான். அது சரிவில் போய் விழுந்தது. இந்தக் கல் எத்தனை ஆண்டுகள் இதே இடத்தில் கிடந்ததோ. அது இடம் பெயர்வதற்கு தான் தனது இந்தப் பயணம் ஏற்பட்டதோ என்று தோன்றியது.

காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து அவன் பாலத்தைக் கண்டுபிடித்தான். மூங்கில் பாலமது. அந்தப் பாலத்தின் நடுவே உறங்குவது என்று முடிவு செய்தான். அந்த இரவில் மேகங்களைத் துரத்திக் கொண்டு வானில் பறந்து கொண்டிருப்பது போல அவனுக்கு ஒரு கனவு வந்தது.

விடிகாலையில் அவனது வழிகாட்டி மசாயா அவனைக் கண்டுபிடித்திருந்தார். அவர்களின் கூடாரத்திற்கு அழைத்துச் சென்று தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்தார். அவன் கொஞ்சம் தேநீர் மட்டும் குடித்தான். அவனைத் தவிர மற்ற ஒன்பது பேரும் இரண்டாம் நாளிலே காட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள். அவன் ஒருவன் மட்டுமே மூன்று நாட்களை கானகத்தில் கழித்திருக்கிறான்.

“எப்படியிருந்தது கானக அனுபவம்“ என மசாயா கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. சிறிய புன்னகை மட்டுமே செய்தான்.

மறுநாள் அவர்களுக்கு நகரின் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைய மதுவகைகள். கடல் உணவுகள். மறுநாள் புறப்படும் போது பரிசுப்பை ஒன்றும் அளிக்கபட்டது. இவை எதுவும் அவனை மகிழ்ச்சிபடுத்தவில்லை. முறிந்த கிளை போலாகியிருந்தான்.

விமானத்தில் வரும் போது அவனை அறியாமல் மரங்களின் கடல் மரங்களின் கடல் என்று முணுமுணுத்துக் கொண்டான்.

விமானம் சென்னையில் தரையிறங்கும் போது “பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேலையை விட்டுவிடலாம்“ என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது. வேலையை விட்டுவிட்டு என்ன செய்வது என்ற கேள்வியே எழவில்லை. அது சரியான முடிவு தான் என்பது போலத் தனக்குதானே தலையசைத்துக் கொண்டான்.

அப்போது வழிகாட்டி மசாயாவின் சிரித்த முகம் மனதில் தோன்றி மறைந்தது.

•••

0Shares
0