மரபினைத் தொடரும் கலை

திருவாரூரை சேர்ந்த டாக்டர் ஆர். திருநாவுக்கரசு அவர்களின் ஒவியக்கண்காட்சி இரண்டு வாரங்களுக்கு  முன்பாக சென்னையின் விநயாசா  கலைகாட்சியகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தேன்.


துவக்கவிழாவில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒவியரான ஆர்.பி. பாஸ்கரன் அவர்களை சந்தித்தேன். அவரது ஒவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமகால இந்திய ஒவியர்களில் பாஸ்கரனும் ஆதிமூலமும் இரு பெரும் ஆளுமைகள். அவரது தோற்றமே அவரது ஆளுமையின் தனித்த வடிவமாக இருந்தது.


சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி, ஒவியர்கள் மனோகர், விஸ்வம், அரஸ், மற்றும் நண்பர்கள் மனுஷ்யபுத்திரன், சுந்தர புத்தன் , ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், ஒவியக்கல்லூரியை சேர்ந்த இளம் ஒவியர்கள் என்று அந்த நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.


பொதுவாக மருத்துவர்களின் அக்கறைகளும் ஈடுபாடும் அவர்களது துறை சார்ந்தே  அதிகம் இருக்கின்றன. ஆர்.டி இதில் விதிவிலக்கானவர். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் நாட்களிலே இவர் கும்பகோணம் ஒவியக்கல்லூரிக்கு தினமும் சென்று ஒவியங்களை கற்றிருக்கிறார். சுயமாக ஒவியம் வரையத்துவங்கி  கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒவியங்கள் தீட்டிவருகிறார்.


இவரது ஒவியங்கள் ம்யூரல்கள் (murals.) எனப்படும் நீண்ட சுவரோவியங்கள் வகையை சேர்ந்தவை. அதிலும் திருவாரூர் கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் தான் இவரது ஆதர்சம். அந்த ஒவியமரபின் நவீன வடிவம் போலவும், அதன் மாறாத தொடர்ச்சி போலவும் இவரது ஒவியங்கள் உள்ளன. பல ஆண்டுகாலம் திருவாரூர் கோவில் ஒவியங்களை நுட்பமாக அவதானித்து அதே நிறம், உருவம் மற்றும் நுணுக்கங்களைத் தனது ஒவியங்களிலும் உருவாக்குகிறார். நூற்றாண்டின் தொடர்ச்சி இவர் வழியாக மீள்உருக் கொள்வதே இந்த ஒவியங்களின் சிறப்பம்சம்.தனது மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டருக்கு எதிராக ஒவியம் வரைவதற்கான அறை கொண்ட ஒரே மருத்துவர் இவரே.  நாளின் பெரும்பகுதியை ஒவியம் வரைவதற்கும் இலக்கியம் உலகசினிமா, இசை என்றும் தேர்ந்த ரசனைக்குமாக செலவழிக்கிறார். தமிழகத்தின் முக்கிய இலக்கியவாதிகள், ஒவியர்கள் அனைவருடன் நட்பாக பழகக்கூடியவர். தன்னை போன்றே கலை ஆர்வம் கொண்ட நண்பர்கள். மருத்துவர்களை ஒன்று சேர்த்து குழுவாகவும் செயல்படுகிறார். 


இன்னொரு பக்கம்  மருத்துவ துறையிலும் தமிழகம் அறிந்த சிறந்த அறுவை சிகிட்சையாளராகவும் இருக்கிறார். தூரிகை பிடித்த விரல்கள் என்பதால் அறுவை சிகிட்சைகளை நுட்பமாக செய்யமுடிகிறது என்று நண்பர்கள் சொல்வதுண்டு.


நான் திருவாரூர் கோவிலின் சுவரோவியங்களை கண்டிருக்கிறேன். பிரகார மண்டபத்தின் விதானத்தில் உள்ளது. அதன் மஞ்சள், பச்சை, காவிச் சிவப்பு, நீல நிறமும் நுட்பமான அலங்காரங்களும் கோடுகளின் துல்லியமும் வியக்கவைப்பவை. கோவில் ஒவியங்களின் தனித்துவம் அதன் நிறக்கலவை. இயற்கையான வண்ணங்களை பயன்படுத்தி வரையப்பட்டவை. அந்த ஒவியங்களில் இடம் பெற்றுள்ள ஆண் பெண் உருவங்களின் முகபாவங்களும், நளினமும் மாபெரும் கலை நிகழ்வு ஒன்றினை அருகில் இருந்து பார்ப்பது போலவேயிருக்கும்.


பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால ஒவியங்களாக இந்த சுவரோவியங்கள் முசுகுந்த மகாராஜாவைப் பற்றியது. குரங்கு முகம் கொண்ட அரசன் என்று பொருள்படுவதே முசுகுந்த அரசன். குரங்கு முகம் கொண்ட அரசன் பற்றிய கதைகள் நம்மைப் போலவே சீனாவிலும் இருக்கின்றன. காசியை ஆண்ட முசுகுந்தா என்ற மன்னனை பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. திருவாரூரில் உள்ள கோவிலுக்கு வான் உலகிலிருந்து தியாகராஜர் திருவுருவம் எப்படி பூமிக்கு கொண்டுவரப்பட்டது என்பதை விளக்ககூடிய புராணீக கதையை இந்த ஒவியங்கள் விவரிக்கின்றன.


ஒவியர் திருநாவுக்கரசு அதே வண்ணங்களை பயன்படுத்தி அதே காட்சிகளை கேன்வாஸில் வரைந்திருக்கிறார். நாயக்கர் கால ஒவியங்களின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதானதில்லை. அதற்கு நுட்பமான அவதானிப்பும் அசாத்தியமான உழைப்பும் தேவை. இரண்டும் ஆர்டியின் ஒவியங்களில் கைகூடி காணப்படுகிறது.


தமிழக நுண்கலைவரலாற்றை அறிந்து கொள்ள நினைப்பவர்கள் திருவாரூர் கோவில் ஒன்றினை மட்டும் முழுமையாகவும் நுணுக்கமாகவும் கண்டறிந்தால் கூட போதும். சோழர்களின் கலைகோவில்களில் திருவாரூர் மிக முக்கியமானது.  அது  ஒரு மாபெரும் கலைகாட்சியகமாகவே உள்ளது. அதை காண்பதற்கு சில மணிநேரமோ சிலநாட்களோ போதாது.


பொதுவாக கோவில்கலைகளை காண்பதற்கு பொறுமையும் தீவிர ஈடுபாடும் தேவை. சிற்ப வரிசைகளை நின்றபடியே பார்த்து கடந்து போய்விட முடியாது. சில கோவில்களில் சிற்பங்கள் தரையில் அமர்ந்தோ, முழங்காலிட்டோ பார்க்கும் நிலையில் தானிருக்கின்றன. சில கோவில்களில் ஒவியங்கள் பிரகார மண்படத்தின் விதானத்திலிருக்கின்றன. அந்த சிற்பங்கள் எதை குறிக்கின்றன என்று கண்ணால் பார்த்து புரிந்து கொள்ள முடியாது. அதன் நின்ற கோலம் மற்றும் முத்திரைகள், குறியீடுகள், அதன் சங்கேதங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆழ்ந்த வாசிப்பும், தொடர்ந்த அக்கறையும் தேவை.


கோவில் ஒவியங்களை நிமிர்ந்து, தரையில் படுத்தபடியும், உடலை வளைத்தும் காண வேண்டியிருக்கிறது. ஒரே நேர்கோட்டில் கண்அளவில் உள்ள காட்சிகளை தவிர மற்றவற்றை நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. கண்படும் காட்சிகளில் கூட ஆண் பெண் சிற்பங்கள் என்பதை தாண்டி பெரிய அக்கறைகள் இல்லை. திருவாரூர் கோவிலில் உள்ள தொன்மையான இசைக்கருவிகளாக பஞ்சமுக வாத்தியம், பாரி நாயனம்  போன்றவற்றை வாசிப்பதற்கு இன்று ஆட்கள் எவருமில்லை. 


இசை, ஒவியம், சிற்பம், கட்டிடக்கலை, தேர். தெப்பம், கோவில் ஒழுங்குகள். தேவாரப்பாடல்கள், திருவிழா என்று திருவாரூர் கோவிலின் பின்னே கலையின் உன்னதங்கள்  ஒன்று சேர்ந்திருக்கின்றன.


தமிழக கோவில் கலைமரபுகள் பற்றிய எளிமையாக, அதே நேரம் நுட்பமான தகவல்கள். விளக்கங்களுடன் புகைப்படங்கள், சித்திரங்களுடன் இணைந்த ஆதாரபுத்தங்கள் இன்றும் தமிழில் எழுதப்படவில்லை. அதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.


கோவிலில் உள்ள யாழி சிற்பத்தை  பார்க்கும் சிறுவர்கள் இது என்ன டைனோசரா என்று கேட்கிறார்கள். அந்த அளவில் தான் நாம் அவர்களுக்கு கலையை அறிமுகம் செய்து வந்திருக்கிறோம். 


பராம்பரிய கலைமரபின் தொடர்ச்சியை கைவிடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய அக்கறையும் அவசியமும் சமகால கலைமுயற்சிகளுக்கு தேவை. சீன ஒவியம், ஜப்பானிய ஒவியம் என்று அந்தந்த தேசங்களின் கலைமரபிலிருந்தே நவீன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் அந்த மரபின் தொடர்ச்சியிலிருந்து அதிகம் துண்டிக்கபட்டிருக்கறோம் என்பதே நிஜம்.


மரபிலிருந்து தன் கலைவெளிப்பாட்டினை நவீனமாக உருவாக்குகிறார் என்ற வகையில் டாக்டர் ஆர். திருநாவுக்கரசின் ஒவியங்கள் பாராட்டுக்குரியவை.


***

0Shares
0