மறுக்கப்பட்டவனின் குரல்

அலெக்ஸி ஜெர்மன் இயக்கி 2018ல் வெளியான ரஷ்யத்திரைப்படம் Dovlatov . இந்தப்படம் எழுத்தாளர் செர்ஜி டோவ்லடோவ் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறது.

1971 ஆம் ஆண்டில் லெனின்கிராட்டில் நடக்கும் கதையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார்.

செர்ஜியின் படைப்புகளை எதையும் வெளியிட அன்றைய லியோனிட் ப்ரெஷ்நேவின் அரசு அனுமதி அளிக்கவில்லை.

அந்த நாட்களில் படைப்புகளை அரசின் எழுத்தாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்ற சட்டமிருந்தது. அவர்களே தணிக்கை துறையாக செயல்பட்டார்கள்.  செர்ஜி இதற்காகத் தணிக்கை அதிகாரியினைச் சந்தித்துத் தனது கையெழுத்துப் பிரதிகளை வெளியிட அனுமதி கேட்கிறான். அது ஒரு குப்பை. தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான கதை என்று அனுமதி தர மறுக்கிறார்கள்.

இலக்கிய இதழ்களின் நிராகரிப்புகளால் டோவ்லடோவ் ஒரு தொழிற்சாலை செய்தித்தாளில் பத்திரிகையாளராக வேலை செய்கிறான். அந்த இதழின் ஆசிரியர் சுரங்கத் தொழிலாளி ஒருவன் கவிதை எழுதுகிறான் என்று அவனைச் சந்தித்து நேர்காணல் செய்துவரும்படி உத்தரவிடுகிறார்

சுரங்கப்பணியில் எதிர்பாராமல் இரண்டாம் உலகப் போரின் போது இறந்து போன குழந்தைகளின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்களா எனக் கவிஞன் அதிர்ச்சி அடைகிறான் செர்ஜியும் அதிர்ச்சியாகிறான். காதலின் துயரமே தன்னைக் கவிதையாக்கியது என்று சொல்லும் கவிஞன் அதை வெளியே சொல்லமுடியாது என்றும் கூறுகிறான்.

இன்னொரு காட்சியில் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளக் கோகல், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி. புஷ்கின் போன்று வேஷம் அணிந்தவர்கள் வருகை தருகிறார்கள். அவர்களிடம் தன்னைக் காஃப்கா என்று அறிமுகம் செய்து கொள்கிறான் செர்ஜி. அதிகாரத்தின் கெடுபிடிகள் புகழ்பெற்ற ரஷ்ய இலக்கிய ஆளுமைகளைக் கூட வெறும் பிம்பமாக எப்படி உருமாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகக் காட்டுகிறார்கள்.

தூங்கும் மகளைத் தோளில் போட்டபடியே பனியில் செர்ஜி நடந்து வரும் காட்சி மிக அழகானது. ஒரு இரவு விருந்தில் ஜோசப் பிராட்ஸ்கி தனது கவிதை ஒன்றை வாசிக்கிறார். பலரும் அதைப் பாராட்டுகிறார்கள். அந்த விருந்தில் ஜாய்ஸின் பெயரை ஒரு மதுவகை என்று ஒரு பெண் நினைத்துக் கொள்கிறாள். கவிதைகள் குறித்தும் எழுத்தாளர்களின் எதிர்காலம் குறித்தும் கலைஞர்கள் படம் முழுவதும் பேசிக் கொள்கிறார்கள்.

செர்ஜி தனது மனைவி எலெனாவினை பிரிந்து தாயுடன் வசிக்கிறான். அடிக்கடி தன் மகள் கத்யாவை தேடிச் சென்று சந்திக்கிறான். அன்பு செலுத்துகிறான். தந்தைக்கும் மகளுக்குமான உறவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவில் விளாதிமிர் நபகோவின் லோலிதா நாவல் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டன. ஒரு காட்சியில் அப்படி நபகோவ். மற்றும் சோல்செனிட்சன் புத்தகங்கள் ரகசியமாக விற்பனையாவதை செர்ஜி அறிந்து கொள்கிறான். அந்த விற்பனையாளனை மிரட்டி யார் யார் ரகசிய புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்று கணக்கு எடுத்து வரும்படி சொல்கிறான்.

படம் முழுவதும் சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட கலைஞர்கள் எப்படி அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டார்கள் என்பதே விவரிக்கப்படுகிறது.

டோவ்லடோவ்வின் ஆறுநாட்களுக்குள் கதை நிறைய விஷயங்களைப் பேசுகிறது. குறிப்பாகத் தணிக்கை துறையின் கெடுபிடிகள். தற்கொலை செய்து கொள்ளும் எழுத்தாளன். ஓவியக்கலைஞர்களின் ரகசிய வாழ்க்கை. தடைசெய்யப்பட்ட புத்தகங்கள். எழுத்தாளர்களைப் பின்தொடரும் உளவாளிகள் என்று நெருக்கடிகளுக்குள் சிக்கிய கலைஞர்களின் வாழ்க்கையை டோவ்லடோவ் விவரிக்கிறது.

டோவ்லடோவ்வின் தாய் ஒரு நடிகை. அவர் ஒரு ஆர்மீனியர். தந்தை ஒரு யூதர். ஆகவே எது தனது அடையாளம் என்ற குழப்பம் டோவ்லடோவ்வை ஆக்கிரமித்திருந்தது. தந்தை புகழ்பெற்ற நாடக இயக்குநர் என்பதால் இளமையிலே டோவ்லடோவிற்கு இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு உருவானது.

தந்தையின் மரணத்திற்குப் பிறகு 1944லிருந்து அவர் தனது தாயுடன் லெனின்கிராட்டில் வசித்து வந்தார். அந்த நாட்களில் பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் வார பத்திரிகைகளில் வேலை செய்தார். சில காலம் புஷ்கின் அருங்காட்சியகத்தின் வழிகாட்டியாகவும் வேலை செய்திருக்கிறார்.

ஆன்டன் செகாவின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்த டோவ்லடோவ் அவரைத் தனது ஆசானாகக் கருதினார்.

டோவ்லடோவ்வின் படைப்புகளைத் தணிக்கை துறை அனுமதிக்கவில்லை என்பதால் ரஷ்யாவை விட்டு வெளியேறி பனிரெண்டு ஆண்டுகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழ்ந்தார்.. அங்கேயும் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். Pushkin Hills போன்ற அவரது நூல்கள் அமெரிக்காவில் வெளியாகிப் புகழ்பெற்றன.

டோவ்லடோவ் ஒரு விசித்திரமான எழுத்துமுறையைக் கொண்டிருந்தார். அதாவது ஒரு வாக்கியத்தில் ஏற்கனவே பயன்படுத்திய வார்த்தையின் அதே எழுத்துடன் தொடங்கும் இன்னொரு வார்த்தையை அவர் பயன்படுத்த மாட்டார். அதாவது எம்மில் ஒரு வார்த்தை துவங்கினால் அந்த வாக்கியத்தில் இன்னொரு எம்மில் துவங்கும் வார்த்தை வரவே வராது. இப்படி வித்தியாசமான எழுத்துமுறையைக் கொண்டிருந்தார்.

இந்தப் படம் ரஷ்யாவில் டோவ்லடோவ் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கிறது. முன்பின்னாகச் செல்லும் திரைக்கதை. IDA படத்தின் ஒளிப்பதிவாளர் லூகாஸ் ஸாலின் மிகச் சிறந்த ஒளிப்பதிவு படத்திற்குத் தனியழகினைத் தருகிறது. . . டோவ்லடோவ் கதாபாத்திரத்தில் மிலன் மரிக் சிறப்பாக நடித்திருக்கிறார்

புத்தகம் வழியாக மட்டுமே அறிந்திருந்த ரஷ்யக் கவிஞர்கள். எழுத்தாளர்கள் திரையில் தோன்றி உரையாடுவதைக் காணுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அதற்காகவே இந்தப் படத்தை ரசித்துப் பார்த்தேன்.

0Shares
0