மறைந்திருக்கும் உண்மைகள்

சமகால ஐரோப்பியத் தத்துவவாதிகளில் முக்கியமானவர் ஸ்லாவாய் ஜிஜெக் (Slavoj Zizek) . லாகானிய உளவியல் பகுப்பாய்வுகள், சமகால வாழ்க்கையை வடிவமைக்கும் சித்தாந்தம், முதலாளித்துவம் மற்றும் கற்பனையின் தர்க்கங்கள் குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார் ஜிஜெக். இவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது.

சினிமாவில் நாம்  காணும் காட்சிகளுக்குள் என்னவெல்லாம் ஒளிந்திருக்கின்றன. எது போன்ற பிம்பங்களைச் சினிமா உருவாக்குகிறது என்பதைப் பற்றி இந்த ஆவணப்படத்தில் ஜிஜெக் விவரிக்கிறார். நகைச்சுவை நடிகர்களிடம் காணப்படும் உடல்மொழி போல அவரிடமும் அழகான உடல்மொழி வெளிப்படுகிறது.

படத்தின் துவக்கத்தில் தேவதை கதையில் வருவது போன்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஜிஜெக் விவரிக்கிறார். அதுவும் ஒரு திரைப்படக்காட்சி தான். ஆனால் தான் சொல்லவந்த விஷயத்திற்குப் பொருத்தமான காட்சி என்பதால் அதிலிருந்து தனது சிந்தனையைத் தொடருகிறார்.

ஒரு மனிதன் கைவிடப்பட்ட பெட்டி ஒன்றில் கறுப்புக் கண்ணாடிகள் நிரம்பியிருப்பதைக் காணுகிறான். அதிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து அணிந்து கொள்கிறான். அந்தக் கண்ணாடி நாம் காணும் தோற்றத்தின் பின்னுள்ள உண்மையை அடையாளம் காட்டுகிறது,, அவன் ஒரு விளம்பரத்தைக் காணுகிறான். ஆனால் அதன் உண்மையான நோக்கம் அடிபணி என்பதாக உணர்ந்து கொள்கிறான். இப்படி உண்மையை உணரச் செய்யும் ஒரு கண்ணாடி போல நாம் காணும் திரைக்காட்சிகளுக்குள் மறைந்திருக்கும் உண்மைகளை ஜிஜெக் அடையாளப்படுத்துகிறார்

2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் சோஃபி ஃபியன்னெஸ். தத்துவார்த்த பார்வையை முன்வைக்கும் இந்த ஆவணப்படத்தினைச் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக எந்தக் காட்சிகளை ஜிஜெக் விமர்சனம் செய்கிறாரோ அது போன்ற ஒரு காட்சியினுள் அவரே பங்குபெறுவது சிறப்பாக உள்ளது. குறிப்பாக டைட்டானிக் பற்றிய விமர்சனத்தின் போது படகிலிருந்தபடியே ஜிஜெக் பேசுவது அழகான காட்சி.

திரைப்படங்களின் பின்னுள்ள உளவியலை, ஆராயும் ஜிஜெக் நாம் எதை நம்புகிறோம். எவ்வாறு அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து போகிறது என்பதைப் பல்வேறு ஹாலிவுட் படங்களின் மூலம் விவரிக்கிறார். குறிப்பாக டாக்சி டிரைவர். ஜாஸ், டைட்டானிக் போன்ற படங்களை இது போன்ற கோணத்தில் நாம் அறிந்திருந்திருக்கவில்லை.

சித்தாந்தங்கள் மீது ஏன் நமக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பதை விளக்கும் ஜிஜெக் சித்தாந்தங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்பதை கவனப்படுத்துகிறார். சினிமாவின் வழியே எது போன்ற சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன என ஆராயும் ஜிஜெக் அமெரிக்கச் சினிமா உலகம் முழுவதும் உருவாக்கிய தாக்கத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

தி சவுண்ட் ஆஃப் மியூசிக் திரைப்படத்தினை ஆராயும் ஜிஜெக் அதில் ஆசைகளைப் பற்றிய வரையறை எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.

இயக்குநர் ஜான் போர்டின் The Searchers திரைப்படமும் டாக்சி டிரைவர் படமும் ஒரே கதைக்கருவைக் கொண்டது என எடுத்துக்காட்டி விளக்குவதும் இரண்டின் மைய சரடுகளையும் ஆராய்வதும் சிறப்பாக உள்ளது.

பொழுதுபோக்கு சினிமாவின் வழியே எவ்வாறு அரசியல் கருத்துகள். கலாச்சார பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. நுகர்வு கலாச்சாரத்தை எப்படிச் சினிமா தீர்மானிக்கிறது. வழிநடத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஜிஜெக் வழிகாட்டுகிறார்.

0Shares
0