புதிய குறுங்கதை.
அவன் கிரிகோர் சாம்சாவைப் போலவே சேல்ஸ்மேனாக அதே நிறுவனத்தில் வேலை செய்தான்.
அவர்களது நிறுவனம் துணிவிற்பனை செய்யக்கூடியது. அவனைப் போன்ற சேல்ஸ்மேன்களின் வேலை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதற்கான துணி சாம்பிள்களுடன் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியது.
அவர்களின் முதலாளி கருணையற்றவர். ஊழியர்களின் குரலை காது கொடுத்துக் கேட்காதவர். நிறுவன மேலாளரும் கண்டிப்பானவர். மாதச் சம்பளம் என்ற கடிவாளம் அவர்களை எதையும் பற்றி யோசிக்கவிடாமல் செய்திருந்தது.
கிரிகோர் சாம்சா சில நாட்களாக அலுவலகம் வரவில்லை. நிறுவன ஊழியர்கள் அவனைப் பற்றி தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. விற்பனையை அதிகரித்தல் தொடர்பான கூட்டத்தில் ஒன்றிரண்டு முறை கிரிகோருடன் பேசியதைத் தவிர வேறு பழக்கமில்லை.
அவன் கேட்காமலே ஸ்டோர் நிர்வாகியாக இருந்த பெண் அவனிடம் சொன்னாள்
“கிரிகோர் சாம்சா கரப்பான் பூச்சியாக மாறிவிட்டானாம்“
அதைச் சொன்னவிதத்தில் பயமும் கேலியும் கலந்திருந்தது. அப்படியா என இயல்பாக அவன் கேட்டவிதம் அவளுக்கு ஏமாற்றம் அளித்திருக்ககூடும்.
அவள் மறுபடியும் “கரப்பான்பூச்சியாக“ என்று அழுத்தமாகச் சொன்னாள்
அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. சேல்ஸ்மேனாக வேலை செய்கிறவர்கள் நிச்சயம் ஒரு நாள் கரப்பான்பூச்சியாக மாறிவிடுவார்கள் தான். இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது. அதுவும் கிரிகோர் சாம்சா போல எவருடனும் பேசிப்பழகாத, சதா யோசனையுடன், குழப்பத்துடன் இருப்பவர்கள் பூச்சியாக மாறியதில் வியப்பு எதுவுமில்லை.
இடைவிடாத பயணம், குறித்த நேரத்தில் ரயிலைப் பிடிக்க வேண்டிய கவலை, மோசமான மற்றும் ஒழுங்கற்ற உணவு, வெவ்வேறு நபர்களைச் சந்தித்துப் பொய்யாகச் சிரித்துப் பேசியாக வேண்டிய கட்டாயம் என சேல்ஸ்மேன்களின் வாழ்க்கை நெருக்கடிகளால் நிரம்பியது. மணல் கடிகாரத்தில் மேலிருந்து விழும் மணல் துகளைப் போலத் தன்விருப்பம் இல்லாமலே அவர்கள் வீழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கிரிகோர் சாம்சா செய்ய வேண்டிய விற்பனை பணிகள் அப்படியே இருந்தன. அவனது விடுப்பை எப்படிக் குறித்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. . மருத்துவ விடுப்பு என்றால் கூடக் கடிதம் தர வேண்டும். மருத்துவரின் பரிந்துரை அளிக்கபட வேண்டும். திடீரென கரப்பான்பூச்சியாக மாறிவிட்டேன் என்பதை எந்த அலுவலகமும் மருத்துவக் காரணமாக ஏற்றுக் கொள்ளாது தானே.
கடந்த ஐந்து வருடத்தில் கிரிகோர் சாம்சா ஒருமுறை கூட நோயுறவில்லை. பொய்யாகக் கூட மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை. ஆனால் சலிப்புற்றிருந்தான். மோசமாக சலிப்புற்றிருந்தான். சலிப்பை நோய் என்று சொல்ல முடியுமா. சலிப்பு முற்றும் போது ஒருவன் நிலைகுலைந்து விடுகிறான். கண்ணாடி டம்ளர் மீது அமரும் ஈயால் அந்த டம்ளரைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியுமா என்ன.
கிரிகோர் சாம்சா வீட்டிற்கு நேரில் சென்று பார்த்து வந்த தலைமை எழுத்தர் “கிரிகோர் அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளிருந்தே பதில் தருகிறான், அவனது குரல் மாறிவிட்டது, அவன் நம்மை ஏமாற்றுகிறான் “. என்றே சொல்லியிருந்தார்
பனிக்காலத்தில் ஒருவன் உருமாறிவிடுவது இயல்பு தான். மந்தமான வானிலை மனிதர்கள் மீது சுமையாக படிந்துவிடுகிறது. உருமாறிய சாலைகள். உருமாறிய மரங்கள். நோயுற்ற சூரியன். நினைவுகளை கிளரும் இரவுகள். கடிகாரத்தால் துரத்தப்படும் மனிதனால் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
பூச்சியாக மாறியதற்குப் பதிலாகக் கிரிகோர் சாம்சா ஒரு பறவையாகவோ, குதிரையாகவோ மாறியிருக்கலாம். ஆனால் சமையலறைக்குள் ஒளிந்து திரியும் கரப்பான்பூச்சியாக ஏன் மாறினான். உலகை விட வீடு பாதுகாப்பானது என்பதால் தானா.
உலகின் கடைசி உயிரினம் கரப்பான்பூச்சி என்கிறார்களே. அது நிஜமா. ஒரு காலத்தில் பூமியை ஆண்ட டைனோசர்கள் தான் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் கொண்டுவிட்டதாக சொல்கிறார்களே. அப்படியும் இருக்குமா.
தேவதைகதைகளில் இப்படி இளவரசன் தவளையாக மாறிவிடுவதைப் பற்றிப் படித்திருக்கிறான். அதற்குக் காரணம் சாபம் . ஆனால் இந்த நகர வாழ்க்கையில் சாபம் என்பது நம்பக் கூடியதா.
பரபரப்பான சிக்னலில் காத்திருக்கும் கார்களின் குறுக்கே கடந்து செல்லும் போது நாம் கரப்பான்பூச்சி போல தானே உணருகிறோம். ரயிலைத் தவறவிட்டு காத்திருக்கும் போது கரப்பான்பூச்சியாக தானே மாறிவிடுகிறோம்.
ஒருவன் கரப்பான்பூச்சியாகிவிடும் போது உலகம் மாறிவிடுவதில்லை. அவன் மட்டுமே மாறிவிடுகிறான். உலகம் மனிதனை ஒருவிதமாகவும் கரப்பான்பூச்சியை இன்னொரு விதமாகவும் துரத்தக் கூடியது தானே,
இப்போது அவன் வெறும் கரப்பான்பூச்சியில்லை. கிரிகோர் சாம்சா என்ற பெயருள்ள கரப்பான்பூச்சி. சொந்த வீடு உள்ள கரப்பான்பூச்சி. எல்லாவற்றையும் விட படித்த சிந்திக்கிற சம்பாதிக்கிற கரப்பான்பூச்சி.
ஏன் கிரிகோர் சாம்சா பற்றி இவ்வளவு யோசிக்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை.
அலுவலக ஊழியர்கள் கிரிகோர் சாம்சாவின் வீட்டிற்குப் போய் நலம் விசாரித்து வரப்போகிறார்களா எனத் தெரியவில்லை. உடல் நலமற்றவர்களை விசாரிக்கச் செல்வது போல உருமாற்றம் அடைந்தவனையும் தேடிச் சென்று பார்க்க வேண்டுமா என்ன.
கிரிகோர் சாம்சாவின் வீடு எங்கேயிருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் எவரையும் அவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதில்லை. யாருடனும் நட்பாகப் பழகியதில்லை
உண்மையில் தனது விருப்பங்களை வீடும், உலகமும் புரிந்து கொள்ளாத போது, விரும்பாத விஷயங்களைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது ஒருவன் உருமாற்றம் அடைகிறான்.
கிரிகோர் சாம்சா கரப்பான்பூச்சியாக மாறியது போல அலுவலகத்தில் யார் யார் என்னவாக மாறப் போகிறார்கள் என்று ஒரு ஊழியன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தான். பூச்சிகளாக மாறினாலும் முதலாளியிடம் சம்பள உயர்விற்குப் போராட வேண்டியதே வரும் என்று மற்றொருவன் உரத்த குரலில் சொன்னான்.
ஒரு மனிதனை கால்பந்து போல உருட்டி மிதித்து விளையாடுவது மிகவும் ஆனந்தமானது என்பதாக அவர்கள் நடந்து கொண்டார்கள்.
நிறுவன ஊழியர்களின் கேலியும் வெறுப்பும் தான் கிரிகோர் சாம்சாவை தேடிப் போய் பார்க்க வேண்டும் என்ற அவனது விருப்பத்தை அதிகப்படுத்தியது. அலுவலக ரிஜிஸ்தரில் இருந்த சாம்சாவின் முகவரியை குறித்துக் கொண்டான்.
அன்று மாலை கிரிகோர் சாம்சா குடியிருக்கும் பகுதிக்கு சென்றான். அந்த வீதி சோபை இழந்து காணப்பட்டது. அங்கிருந்த மரங்கள் கூட அசைவற்றிருந்தன.
பழைய ரயில்வே அட்டவணை புத்தகத்தைச் சலிப்போடு புரட்டிக் கொண்டிருந்த சாம்சாவின் தந்தை “ அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா“ என்று கேட்டார்
“ இல்லை. நானாகவே வந்தேன்“ என்றான்
“ அவனைப் பற்றி அலுவலகத்தில் என்ன பேசிக் கொள்கிறார்கள்“ என்று கேட்டார்
என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.
“ சிறுவயதிலிருந்தே இப்படித்தான் நடந்து கொள்கிறான். நெருப்புக் கோழி தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக் கொள்வது போலத் தேவையற்ற கற்பனைக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறான். குழப்பவாதி. “
கிரிகோர் சாம்சா மட்டும் தான் அப்படியிருக்கிறானா என்ன.
எல்லாத் தந்தைகளும் ஒன்று போலவே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.
கிரிகோர் சாம்சாவின் சகோதரி அவன் வந்திருக்கும் தகவலைச் சொல்வதற்காக மூடப்பட்டிருந்த அறைக் கதவின் முன் நின்றாள்.
கதவைத் தட்டுவதற்கு முன்பு உள்ளே ஏதேனும் ஓசை கேட்கிறதா எனக் கவனித்தாள்.
பின்பு மெதுவாகக் கதவைத் தட்டியபடியே “ உன்னைக் காண அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்“ என்றாள். உள்ளேயிருந்து பதில் வரவில்லை.
மூடிய கதவைப் பார்த்தபடியே நின்றிருந்தான். கிரிகோர் சாம்சாவின் அம்மா அவனிடம் ஆதங்கமாகச் சொன்னாள்
“அந்த அறைக்குள் போகவிடாமல் என்னை தடுக்கிறார்கள். பூச்சியாக மாறியிருந்தாலும் நான் தானே அவனது அம்மா. “
மறுபடியும் கதவை தட்ட வேண்டுமா என்ற தயக்கத்துடன் சகோதரி நிற்பதை கண்ட அவன் சொன்னான்.
“ என்னை அவருக்குத் தெரியாது. நான் கிளம்புகிறேன்“
அவன் புறப்படும் போது சாம்சாவின் சகோதரி “ ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா“ என்று கேட்டாள்
“ எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்“ என்றான்
எதற்காக வாழ்த்து எனப்புரியாதவள் போல குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெறுமனே வாழ்த்துச் சொன்னதற்குப் பதிலாக ஒரு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லியிருக்கலாம். கரப்பான்பூச்சிக்கு என்ன மலர் பிடிக்கும் என்று தெரியவில்லையே என யோசித்தபடியே அவன் வெளியே நடக்க ஆரம்பித்தான்.
•••
காஃப்கா நூற்றாண்டினை முன்னிட்டு அவரது புகழ்பெற்ற ‘The Metamorphosis’ சிறுகதையின் மாற்றுவடிவத்தை எழுத முயற்சித்தேன். கிரிகோர் சாம்சாவின் நிறுவனத்தில் வேலை செய்த இன்னொரு சேல்ஸ்மேன் பார்வையில் அதே நிகழ்வைக் இக்கதை விவரிக்கிறது.