மலேசியப் பயணம்

ஒரு வார கால மலேசியப் பயணம் முடித்து இன்று சென்னை திரும்பினேன். பினாங்கு துவங்கி கூலிம்,  சுங்கைசிப்புட்  ரிஞ்சிங், மலாக்கா என ஐந்து நிகழ்ச்சிகள். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரையான நீண்ட தூரக் கார் பயணம். அதுவும் மழையோடு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். எல்லா நிகழ்ச்சிகளிலும் அரங்கு நிரம்பிய கூட்டம். எனது மலேசியப் பயணத்தை நண்பர் பி.எம். மூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இவர் மலேசிய கல்வி அமைச்சகத்தின் தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். எனது நீண்டகால நண்பர்.

கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள். நல்ல அறை. சுவையான உணவு. நண்பர்கள் சந்திப்பு. கலந்துரையாடல் என மூர்த்தி அனைத்தையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது துணைவியாரும் பயணம் முழுவதும் உடனிருந்து அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும். எங்களது பயணத்தில் உடன்வந்து உதவிகள் செய்த நாடகக் கலைஞரும் ஆசிரியருமான விஸ்வா மற்றும் அவரது துணைவியாருக்கும் நன்றி

சுங்கை சிப்புட்டில் சகோதரி செண்பகவள்ளி தனது வீட்டில் சிறப்பான விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அன்பும் நன்றியும்.

நிகழ்வுகளுக்கு இடையில் பினாங்கின் புதிய பாலம், ஜார்ஜ் டவுனில் உள்ள இந்திய மியூசியம். புத்தர் கோவில், தைப்பிங்கில் உள்ள லேக் கார்டன்ஸ், கோலக்கங்சாரிலுள்ள முதல் ரப்பர் மரம், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை, விக்டோரியா பாலம், ஈவூட் புதிய தமிழ்ப்பள்ளி என நிறைய இடங்களுக்கும் சென்று வந்தேன்.

எழுத்தாளர் புண்ணியவான், பாலமுருகன், பச்சைபாலன், தயாஜி எனப் படைப்பாளிகள் பலரையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. கூலிம் நவீன இலக்கியக் களம் சார்பில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஒரு இலக்கிய உரையினையும் ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலை நண்பர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. குமாரசாமி இதனை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து கொடுத்தார். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

மலாக்காவில் நடைபெற்ற நிகழ்வில் எனக்கு நவீன இலக்கியச் செம்மல் என்ற விருதினை வழங்கினார்கள். இதற்கான பதக்கமும் சான்றிதழும் அளிக்கப்பட்டன.

0Shares
0