மழைப்பயணி.

புதிய சிறுகதை

••

பைக்கை தள்ளிக் கொண்டு ராதிகா சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.. இப்படி வழியில் பைக் ரிப்பேர் ஆகிவிடும் என்று அவள் நினைக்கவில்லை. ராதிகாவிற்கு இருபத்திநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. கறுப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தாள். நீல நிற ஜீன்ஸ். மெலிந்த உடல்வாகு.

கௌகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்லும் அந்த மலைப்பாதையில் ஆள் நடமாட்டமில்லை. நீண்டு வளைந்து செல்லும் பாதையில் மஞ்சள் வெயில் மினுங்கிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தின் மாலைநேரம் பேரழகு மிக்கது. அந்தப் பாதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றையொன்று துரத்திச் சென்று கொண்டிருந்தன

மெக்கானிக் ஷாப் அருகில் எங்கேயிருக்கிறது என்று தனது செல்போனில் தேடினாள். நெட்வொர்க் இல்லை என்று போன் காட்டியது. டிரக், லாரி எதுவும் கூடக் கண்ணில் படவில்லை. மலையைக் கடந்து சென்றுவிட்டால் நிச்சயம் ஏதாவது பெட்ரோல் பங்க் கண்ணில் படும் என்று தோன்றியது.

சென்னையிலிருந்து ஷில்லாங்கிற்குத் தனி ஆளாகப் பைக்கில் போய் வரலாம் என்ற யோசனை ஆறுமாதமாகவே இருந்தது. இதற்கு முன்பு அவள் தனியே ஸ்ரீநகர், ஹம்பி, அஜந்தா, கல்கத்தா எனப் பைக்கில் பயணம் செய்திருக்கிறாள். ஏன் மேகாலயாவைத் தேர்வு செய்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.

மழைக்காலத்தில் பைக்கில் பயணம் செய்து ஷில்லாங் வரை போய்வர வேண்டும் என்று அவள் திட்டமிட்டாள். மழைக்காலத்தில் பொதுவாக யாரும் பயணிக்கமாட்டார்கள். வலுவாக மழை பெய்தால் சாலை இணைப்பு துண்டிக்கபட்டுவிடும். சிலவேளை மழை பகலிரவாகத் தொடரும். நாலைந்து நாட்கள் கூட மழை விடமால் பெய்து கொண்டிருக்கும் என்பதை அறிந்திருந்தாள்.

மழையின் ஊடாகப் பயணிப்பதற்காகவே மழைக்கோட்டு மற்றும் தேவையான குளிராடைகள், கைஉறைகள் காலணிகள் வாங்கியிருந்தாள். பழைய ஹெல்மெட்டில் சிறிய விரிசல் இருந்தது என்பதால் புதிய ஹெல்மெட் கூட வாங்கிக் கொண்டாள்

அவள் படித்த வார இதழ் ஒன்றில் ஷில்லாங்கில் நீலநிறமுள்ள ஒரு வீட்டின் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதன் வாசலில் ஒரு சிறுமி கையில் பலூன் ஒன்றுடன் நின்றிருந்தாள். அந்த வீடு மலைச்சரிவில் தனியே கட்டப்பட்டிருந்தது. அந்த வீடு அவளை வா வாவென அழைப்பது போலவே தோன்றியது. அது யாருடைய வீடு என்று எந்தக் குறிப்பும் அதில் காணப்படவில்லை. பலூன் வைத்திருந்த சிறுமியையும் அந்த வீட்டினையையும் காண வேண்டும் என்பதற்காகவே அவள் பைக்கில் பயணிக்க விரும்பினாள்.

அவள் தனது முந்தைய பயணங்களில் பெரும்பாலும் பெட்ரோல் பங்கில் தான் இரவு தங்கினாள். பெட்ரோல் பங்கில் ஒரு ஒரமாகப் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு ஆள் உறங்குவதற்கான சிறிய கூடாரத்தை விரித்து அதற்குள் படுத்துக் கொள்வாள். சில நேரம் சிறிய விடுதிகளில் அறை எடுத்துக் கொள்வதும் உண்டு.

மேகலாயா பயணம் புறப்படும் முன்பாகவே டெக்கதலான் ஷாப்பிற்குச் சென்றிருந்தாள். மலையேற்றம் செய்யும் சித்தார் தான் அந்தக் கடையைச் சிபாரிசு செய்திருந்தான். சாகசப்பயணம் மேற்கொள்கிறவர்களுக்குத் தேவையான சகல பொருட்களும் அங்கே கிடைக்கும் என்று சொன்னான்.

முதன்முறையாக ஸ்ரீநகர் செல்லும் போது ராதிகா அப்படி எதையும் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பயணம் நிறைய இடர்பாடுகளை உருவாக்கியது. பாதியில் திரும்பிவிடலாமோ என்று கூடத் தோன்றியது.

தனியே பைக்கில் செல்லும் பெண்ணைக் காவலர்கள் நடத்தும் விதம் மிக மோசமாகவே இருந்தது. மூன்று இடங்களில் அவள் நிறுத்தப்பட்டுக் காவலர்களால் விசாரிக்கப்பட்டாள். அவளிடம் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை எல்லாமும் இருந்தது. ஆனாலும் காவலர்கள் அவளை மோசமாகவே நடத்தினார்கள்.

சாலையில் தனியே செல்லும் பெண் என்றாலே அவள் மோசமானவள் என ஏன் நினைக்கிறார்கள் என்று அவளுக்குக் கோபமாக வந்தது. ஆரம்பத்தில் இரண்டு காவலர்களிடம் சண்டையிட்டாள். பிறகு அவர்களிடம் சண்டையிட்டு ஒருபயனுமில்லை. பொய் சொல்ல வேண்டியது தான் என்று முடிவு செய்து தான் ஒரு டாகுமெண்டரி பிலிம்மேக்கர் என்று சொல்லுவாள்.

பெரும்பான்மை காவலர்களுக்கு அது என்ன வேலை என்று புரியாது. சினிமாவா என்று கேட்பார்கள். ஆனால் அதிகம் சோதனை செய்யமாட்டார்கள்.

ஒரு இடத்தில் மட்டும் அவள் போதை மருந்து கடத்துகிறாளா என்பதற்காக அவளது பை மற்றும் உடைகளைச் சோதனை செய்தார்கள். அவள் வைத்திருந்த மெடிகல் கிட்டிலிருந்த ஊசியை எடுத்து வந்து எதற்காக இந்த ஊசி கேள்விகேட்டார்கள். காய்ச்சல் வந்தால் போட்டுக் கொள்வதற்கு என்று அவள் சொன்னதை இன்ஸ்பெக்டர் நம்பவில்லை. அவளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துப் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தபிறகே அவளை விட்டார்கள்.

ஆனால் இரண்டு வருஷம் பைக்கில் தனியே சுற்றி அவளுக்கு நிறைய அனுபவங்கள் உருவாகியிருந்தன.

என்ஜினியரிங் கல்லூரி முடித்தவுடன் அவளது தோழிகள் பலரும் ஐடி வேலைக்குச் சென்றுவிட்டார்கள். அவளுக்கும் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவள் வேலைக்குப் போகவில்லை.

அவள் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று வேலைக்குச் செல்வது. சம்பாதிப்பது. திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது. இரண்டாவது விரும்பிய இடங்களுக்கெல்லாம் பயணம் செய்வது, உலக அனுபவம் பெறுவது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு வேலைக்குப் போவது அல்லது திருமணம் செய்து கொள்வது. அதுவும் காதல் திருமணம் செய்து கொள்வது.

அவள் கல்லூரியில் படித்த நாட்களில் திவாகர் மீது காதல் கொண்டிருந்தாலும் படித்து முடிப்பதற்குள் அவன் அமெரிக்கக் கனவில் இருப்பவன். தனக்குச் செட் ஆக மாட்டான் என்று நன்றாகவே தெரிந்துவிட்டது. அவளாகவே அவனை விட்டு விலகினாள். அதற்காகத் திவாகர் பெரிதாகக் கவலைப்படவில்லை. அவன் உடனே ரேஷ்மாவோடு நெருக்கமாகப் பழக ஆரம்பித்து விட்டான்.

அவள் கல்லூரியில் சேர்ந்த முதலாண்டு மட்டும் காலேஜ் பஸ்ஸில் போய் வந்து கொண்டிருந்தாள். அதன்பிறகு அவளது அப்பாவிடம் தனக்கொரு புல்லட் வேண்டும் என்று கேட்டாள். அதைக் கேட்டதும் அவளது அப்பா சிரித்தார்.

அம்மா தான் கோபம் கொண்டு கத்தினாள்

“பொம்பளை பிள்ளைக்கு எதுக்குப் பைக். ஸ்கூட்டி வாங்கிக் குடுங்க“

“அதெல்லாம் உன்னை மாதிரி ஹவுஸ் ஒய்ப் ஒட்டுறது. எனக்குப் பைக் தான் வேணும்“

`பைக் தானே வாங்கிட்டா போச்சு“ என்றார் அப்பா.

“சொன்னா கேளுங்க. அதை மட்டும் வாங்கிக் குடுக்காதீங்க. அடிபட்டு கைகால் போயிட்டா அப்புறம் அவளை ஒரு பய கட்டிகிட மாட்டான்“ என்றாள் அம்மா

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது “ என்றார் அப்பா

“அவ பொம்பளை பிள்ளைங்கிறதை மறந்துராதீங்க“ என்றாள் அம்மா

“உலகம் மாறிகிட்டு இருக்கு சாந்தா. நீ தான் அதைப் புரிஞ்சிகிட மாட்டேங்குறே“ என்றார் அப்பா

“செல்லம் கொடுத்து கொடுத்து அவளைக் கெடுத்து வச்சிருக்கீங்க. காலேஜ்க்கு போறதுக்குப் பஸ் வருதுல்ல. அதுல போனா என்ன குறைச்சல்“

“அதான் பிடிக்கலைன்னு சொல்கிறாளே“

“அதுக்காகப் புல்லட் கேக்குதா. அவ திமிருக்கு எல்லாம் நீங்களும் சேர்ந்து ஆடாதீங்க“

“சரி வாங்கிக் கொடுக்கலை போதுமா“ என்று அம்மாவைச் சமாதானப்படுத்தினார் அப்பா.

அப்பாவின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து கொண்டு போவதற்குக் கூட . அம்மா பயப்படுகிறவள். பெரும்பாலும் ஷேர் ஆட்டோவில் தான் பயணம் செய்வாள். அப்பா இல்லாமல் அவள் வெளியூர் போய் வந்ததில்லை. கோடை விடுமுறைக்குத் தாத்தா ஊருக்குப் போவதாக இருந்தால் கூட அப்பா தான் கொண்டு வந்துவிட்டுப் போவார். திரும்பி வரும்போது நீயும் ராதிகாவும் வந்துவிடுங்கள் என்று சொன்னாலும் அம்மா கேட்க மாட்டாள்.

உயரமான இடங்களுக்குப் போனால் அம்மாவிற்கு மயக்கம் விடும். பேருந்து வேகமாகப் போனால் வாந்தி எடுத்துவிடுவாள். யாராவது கோபமாகச் சண்டை போட்டால் தலைவலி வந்துவிடும். இவ்வளவு ஏன் டிவி நியூஸில் இடியுடன் மழை பெய்யப்போகிறது என்று சொன்னால் உடனே ஜன்னல்களை மூடி விடுவாள். யார் சொன்னாலும் இரண்டு நாட்களுக்கு வீட்டு ஜன்னலைத் திறக்கமாட்டாள். அம்மா அப்படித்தான்.

ஆனால் ராதிகா அப்படியே அம்மாவிற்கு நேர் மாறானவளாக வளர்ந்திருந்தாள். அப்பா தான் அதற்குக் காரணம். ஐந்து வயதிலே அவளைக் கராத்தே படிக்க வைத்தார். ஸ்கேடிங் கற்றுக் கொள்ளச் செய்தார். அவரே நீச்சல் சொல்லிக் கொடுத்தார். கியர் உள்ள சைக்கிள் வாங்கிக் கொடுத்து பள்ளிக் கூடம் போய் வரச் சொன்னார். அவர்கள் பள்ளியில் அப்படி ஒரு சைக்கிளைக் கொண்டுவரக்கூடாது என்று தடைவிதித்தார்கள். ஆனால் அப்பா இதற்காகப் பள்ளி முதல்வரிடம் சண்டைபோட்டு அனுமதி வாங்கிக் கொடுத்தார்.

புது வீடு கட்டிய போது அவளுக்காக மாடியில் அறை ஒன்றை கட்டிக் கொடுத்தார். வீட்டின் வெளியே இருந்து மாடிக்குப் போவதற்குப் படிகள் வைத்தார்.

“யாராவது பிரண்ட்ஸ் வந்தா ப்ரீயா மாடிக்கு போயிட்டு வரட்டும்“. என்று அம்மாவைச் சமாதானப்படுத்தினார்

அந்த மாடி அறையில் அவளுக்கென ஒரு ம்யூசிக் சிஸ்டம். கம்ப்யூட்டர். உடற்பயிற்சி கருவிகள் எல்லாமும் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் அவளுக்குப் பள்ளி துவங்கி கல்லூரி வரை நண்பர்கள் உருவாகவேயில்லை. அவளது ரசனை வித்தியாசமாக இருந்தது. அவளது கனவுகள் போல ஆசைப்படும் ஒருத்தியை அவள் சந்திக்கவேயில்லை. குறைந்தபட்சம் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டும் ஒருத்தியைக் கூட அவள் அறியவில்லை.

அவளோடு படித்த பெண்களில் பெரும்பாலும் மார்க் வாங்குவதையும் சினிமா கிரிக்கெட் பார்ப்பதையும் பற்றியே பேசக் கூடியவர்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே விஷயம் ஹோட்டலில் போய் விதவிதமான அசைவம் சாப்பிடுவது மட்டும் தான். அதை ராதிகா விரும்பவில்லை.

அவள் புதுப்புது உணவங்களைத் தேடிப்போய்ச் சாப்பிடுவாள். சில நேரம் அப்பாவையும் அழைத்துக் கொண்டு போவாள். ஒரு சமோசா சாப்பிடுவதற்காகப் பத்து மைல் போய் வந்திருக்கிறாள். அம்மாவிற்கு ஹோட்டல் சாப்பாடு என்பதே பிடிக்காது. எந்த ஹோட்டலுக்கு வந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு சப்பாத்தி என்று தான் கேட்பாள். ஆனால் அப்பா அப்படியில்லை புதிய ருசிகளை அறிந்து கொள்வார். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்.

அப்பா எப்படி இது போன்ற கட்டுப்பெட்டியான அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார் என்று அவளுக்குப் புதிராகவே இருந்தது.

அப்பா ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் வேலை செய்திருக்கிறார். பின்பு ஊர் திரும்பி சொந்தமாகப் பிளாஸ்டிக் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கம்பெனி விஷயமாக அடிக்கடி வட இந்தியாவிற்கு அப்பா போய்வருவது வழக்கம். அப்பாவிற்கு நிறைய நண்பர்கள். ஆனால் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தால் அம்மாவிற்குப் பிடிக்காது என்பதால் கிளப் ஒன்றில் உறுப்பினராகியிருந்தார்.

மாலையில் அங்கே சென்று நண்பர்களைச் சந்திப்பார். டென்னிஸ் விளையாடுவார். சந்தோஷம் மிகுதியாக இருந்தால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்களுடன் சேர்ந்து அப்பாவும் பாடுவார். அப்பா பாடும் போது மட்டும் அம்மாவின் முகத்தில் மெல்லிய சிரிப்புப் படர்ந்திருக்கும். அந்த நிமிஷத்தில் அம்மா பேரழகுடன் இருப்பாள்.

ராதிகாவிற்குத் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் சிறுவயதிலிருந்தே ஆர்வமில்லை. தலையில் வைத்துக் கொள்ள அம்மா பூ கொடுத்தாலும் வைத்துக் கொள்ளமாட்டாள். கோவிலுக்கு அழைத்தால் போக மாட்டாள். வீட்டில் விளக்கேற்று என்று சொன்னால் கேட்க மாட்டாள். அம்மா அவளைத் தடிமாடு, ராங்கி பிடித்தவள் என்று கண்டபடி திட்டுவாள்.

ராதிகா எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் காலை நான்கு மணிக்கு அப்பா அவளைப் பைக்கில் அழைத்துக் கொண்டு ஏலாங்குன்றுக்கு அழைத்துக் கொண்டு போனார்.

குன்றின் அடிவாரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் மலையேறினார்கள். பாறைகளாக உருண்டு கிடந்தது. முறையான படிகள் கிடையாது. பாறைகளைப் பிடித்துப் பிடித்து மேலேறி நடந்தார்கள். ஒரு மணி நேரத்தின் பின்பு உச்சிக்கு வந்த போது சூரியன் வானில் ஒளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். உற்சாகத்தில் ராதிகா சப்தமிட்டாள். அப்பாவும் அவளும் நீண்ட நேரம் சூரியனைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்கள்.

கீழே இறங்கி வரும்போது பாறையில் கால் சறுக்கி ராதிகா விழுந்துவிட்டாள். கை கால்களில் சிராய்ப்பு. கால்விரல் ஒன்றில் எத்தி ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பா தனது கைக்குட்டையை வைத்துத் துடைத்துவிட்டார். பதற்றப்படவேயில்லை.

வீடு திரும்பிய போது அம்மா பதற்றமாகி அழுதாள். உடனே மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்றாள். அப்பா அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. டிஞ்சர் வச்சி துடைச்சா போதும்“ என்றார்

“அவ பொம்பளை பிள்ளை அதை மறந்துராதீங்க“ என்று அம்மா கத்தினாள்

அப்பா அதைக்கேட்டு சிரித்தபடியே சொன்னார்

“அவளும் உன்னை மாதிரி இருக்கணும்னு சொல்றயா“

“பொம்பளை பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும். இவ எதுக்கு மலையேறணும். இவளுக்கு அங்கே என்ன வேலை“

“உன்னையும் ஒரு நாள் மலை உச்சிக்கு கூட்டிகிட்டு போறேன். அப்புறம் நீயே புரிஞ்சிகிடுவே“ என்றார் அப்பா

அம்மாவிற்கு உடனே தலைவலிக்க ஆரம்பித்தது. அவசரமாக டைகர்பாமை தேடி எடுத்துத் தேய்த்துக் கொண்டாள்

ராதிகா தனியே சினிமாவிற்குப் போவதற்கு அப்பா அனுமதித்தார். அவளை உள்ளூர் நூலகம் ஒன்றில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். அவள் பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது அவளையும் அம்மாவையும் ஒரு மாத காலம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் டெல்லி என அழைத்துக் கொண்டு போனார்.

டெல்லியில் போய் ஆர்கிடெக்சர் படி என்று அப்பா சொன்னதை அம்மா ஏற்கவில்லை. உள்ளூர் இன்ஜினியரிங் காலேஜில் தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். அம்மாவை அவர்களால் சமாதானப்படுத்த முடியவில்லை, அம்மாவின் விருப்பத்திற்காகவே உள்ளுர் இன்ஜினியரிங் காலேஜில் ராதிகா சேர்ந்திருந்தாள்

அம்மாவின் கோபத்திற்காகப் புல்லட் வாங்குவதைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தி அப்பா நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் மாலை அவளை ராயல் என்ஃபீல்டு ஷோ ரூமிற்கு அழைத்துக் கொண்டு போனார்.

புதிய புல்லட் 350 சிசி வண்டியை அவளுக்காகப் பதிவு செய்து வைத்திருந்ததைக் காட்டினார்.

அவளுக்குப் பைக்கை தொட்டுப் பார்ப்பதை விடவும் அப்பாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அந்த நிமிஷத்தில் அப்பா மிகுந்த அழகோடு இருந்தார். அவரது கையை இறுக்கிப்பிடித்துக் கொண்டாள்.

அவளது பெயரிலே புல்லட்டை பதிவு செய்து வாங்கிக் கொடுத்தார். அவர்கள் கோவிலுக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சாமி கும்பிட்டுவிட்டு அதே பைக்கில் வீடு திரும்பிய போது அம்மா அவர்களிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.

“உங்க அம்மாவைச் சமாதானப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு“ என்று அப்பா அவளிடம் ரகசியமாகச் சொன்னார்

தான் பைக்கை வேகமாக ஒட்டமாட்டேன். அம்மாவோடு வாரந்தோறும் கோவிலுக்கு வருவேன், தலைபின்னி பூவைத்துக் கொள்வேன் என்று நிறைய வாக்குறுதிகளை அளித்து அம்மாவைச் சமாதானம் செய்தாள்.

பின்பு ஒரு ஞாயிற்றுகிழமை அம்மாவை தன் பைக்கில் உட்கார வைத்து பஜாருக்கு அழைத்துக் கொண்டு போனாள். அம்மா பயத்தில் அவள் தோளை இறுக்கிப் பிடித்திருந்தது அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

புல்லட் வந்தபிறகு அவளது உலகம் மாற ஆரம்பித்தது. அதிகாலையில் எழுந்து வெளியே போய்வரத் துவங்கினாள். இரவு பதினோறு மணிக்கு வெளியே சென்று வந்தாள். அப்பாவும் அவளும் ஒருமுறை பைக்கிலே ஊட்டி வரை போய் வந்தார்கள். ஒரு நாள் அதிகாலை பைக்கை எடுத்துக் கொண்டு கிராமப்பாதை வழியாகவே நீண்டதூரம் போய் வந்தாள். பின்னொரு நாள் பைக்கில் தனியே பழனிக்கு போய் வந்தாள்.

அவளது கல்லூரியில் அவள் ஒருத்தி தான் புல்லட் வைத்திருந்தாள். அது பெரும்பான்மை பேராசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் ரமாதேவிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே அவள் இன்டர்னல் மதிப்பெண்ணை மிகவும் குறைத்துப் போட்டு அவளைப் பெயிலாக்கினாள்.

என்ஜினியரிங் காலேஜ் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அந்த நாட்களில் திடீரென அவளுக்கு வைல்ட் லைப் போட்டோகிராபி மீது ஆர்வம் வந்தது. அப்பா வைத்திருந்த கேமிராவை எடுத்துக் கொண்டு வார இறுதிகளில் காட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.

புல்லட்டில் மலைப்பாதையில் பயணம் செய்வது பேரனுபவம். பசுமையின் சாறு வழிந்தோடும் சிறுபாதைகளில் ஒற்றை ஆளாக அவள் செல்லும் போது தனக்கு இறக்கைகள் முளைத்திருப்பது போலவே அவள் உணர்ந்தாள்.

காடு அவள் படித்து அறிந்தது போலில்லை. அது புதிராகவும் வியப்பாகவும் இருந்தது. ஆயிரமாயிரம் புது விஷயங்கள் காட்டிலிருந்தன. அரியவகைப் பறவைகளைத் தான் முதலில் புகைப்படம் எடுத்தாள். அந்தப் புகைப்படங்களை அப்பா பாராட்டி சந்தோஷப்பட்டதோடு பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கும்படி உற்சாகப்படுத்தினார்

அவள் எடுத்த புகைப்படம் ஒன்று நூறு ரூபாய் பரிசு பெற்றதோடு பத்திரிக்கையின் பின்னட்டையிலும் வெளியாகியிருந்தது. அப்பா அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. நூறு இதழ்களை விலைக்கு வாங்கித் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் கொடுத்து வந்தார். அவளது கல்லூரியில் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்பு ஒரு நாள் அப்பா கிரிதரன் என்ற வைல்ட் லைப் போட்டோகிராபரை சந்திக்க அழைத்துக் கொண்டு போனார். கிரிதரன் ஒரு பள்ளி ஆசிரியர். ஆனால் முப்பது ஆண்டுகளாக வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்து வந்தார். அவரது புகைப்படங்கள் சர்வதேச அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எளிய மனிதராக இருந்தார். அவர் ராதிகாவின் புகைப்படங்களைப் பார்த்துப் பாராட்டியதோடு நிறைய ஆலோசனைகள் சொன்னார்

அவரது ஆலோசனையின் படியே அப்பா அவளுக்குப் புதிய கேனான் டிஜிட்டல் கேமிரா ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அந்தக் கேமிராவும் பைக்கும் ஒன்று சேர்ந்தவுடன் அவள் நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிட ஆரம்பித்தாள்.

கர்நாடகாவின் ஸ்ரீரங்கபட்டினம் அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்குச் சென்று ஒரு வார காலம் தங்கி புகைப்படம் எடுத்தாள். பின்பு குவாலியர் அருகிலுள்ள குனோ வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்று பத்து நாட்கள் புகைப்படம் எடுத்தாள். ஒரு ஆண்டு முழுவதும் அவளது பயணங்கள் காட்டை நோக்கியே இருந்தன. திடீரென ஒரு நாள் காலை தனது கேமிராவை பீரோவில் வைத்து பூட்டிவிட்டு வெறுமனே பைக்கில் கிளம்பினாள்

எங்கே போவது என்று மனதில் திட்டமேயில்லை. தனுஷ்கோடிக்கு அவள் போய்ச் சேர்ந்தபோது விடிகாலையாக இருந்தது. கலைந்து கொண்டிருக்கும் இருட்டில் ஒற்றை ஆளாக நின்றபடியே அவள் கடல் அலைகளின் ஒயாத சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவனும் நாயும் தொலைவில் தெரிந்தார்கள். புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு வரவில்லை.

அன்று முழுவதும் தனுஷ்கோடியிலிருந்தாள். சிறிய உணவகம் ஒன்றில் சாப்பிட்டாள். மறுநாள் வீட்டிற்குத் திரும்பி வரும் போது நீண்ட தூரம் போய் வர வேண்டும் என்ற ஆசை மனதில் வேர்விட்டது

அப்பாவிடம் இதைப்பற்றிச் சொன்ன போது அவர் எங்கே போகத் திட்டம் வைத்திருக்கிறாள் என்று எதையும் கேட்கவில்லை. மாறாக நீ இரண்டு மாதம் உடம்பையும் மனதையும் தயார் படுத்திக்கோ என்று மட்டுமே சொன்னார்

அம்மாவிடம் தான் கல்லூரி ஆய்விற்காகப் பெங்களூர் போவதாகச் சொல்லி விட்டு முதன்முறையாகத் தனியே ஸ்ரீநகர் நோக்கி பயணம் செய்தாள்.

இருபத்தியெட்டு நாட்கள் தொடர் பயணம். நாள் முழுவதும் பைக்கில் போய்க் கொண்டேயிருப்பது புதிய அனுபவமாகயிருந்தது. விதவிதமான மனிதர்கள். ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த பயம் மெல்ல வடிந்து போனது. கிடைத்த இடத்தில் தங்கிக் கொண்டாள். ஏடிஎம் தேடி பணம் எடுத்துக் கொண்டாள். சொற்ப பணம் மட்டுமே கையில் வைத்துக் கொண்டாள். பெரும்பாலும் இரவில் பயணம் செய்யவில்லை. ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பைக்கை கிளப்பிவிடுவாள். வழியில் அவளைப் போல நீண்ட தூரம் செல்லும் இரண்டு இளைஞர்களைச் சந்தித்தாள். அவர்கள் ஒன்றாக உணவு அருந்தினார்கள். ஒன்றாக ஒரு மலைப்பாதை முழுவதும் பயணம் செய்தார்கள். செல்போன் கேமிராவில் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

இன்னொரு இடத்தில் போதையில் இருவர் அவளிடம் வம்பு செய்தார்கள். கோபத்தில் ஒருவனை ஹெல்மெட்டால் அடித்தாள். அவர்கள் பயந்து ஒடிப்போனார்கள். இன்னொரு முறை ஒரு டெய்லர் வீட்டில் இரவு தங்கியபோது பையில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் திருடுபோனது.

பயண வழியில் இரண்டு இடங்களில் அவள் உடல்நலமற்றுப் போனாள். லோக்கல் மருத்துவரைத் தேடிப் போய்ச் சிகிச்சை எடுத்துக் கொண்டாள். நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை அப்பாவை அழைத்துப் பேசுவாள். அவர் “ஏதாவது உதவி வேண்டுமா“ என்று மட்டுமே கேட்பார். ஸ்ரீநகர் போய்ச் சேர்ந்தபோது ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போலிருந்தது. ஒரு நாள் முழுவதும் அறையில் உறங்கினாள். மறுநாள் காலை எழுந்து உள்ளூர்வாசி போலச் சுற்றினாள். எங்கும் ராணுவத்தினர். சூடான இஞ்சி டீயை குடித்தபடியே சாலையில் கடந்து செல்லும் ஆட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கை புதியதாக இருந்தது.

இந்த வாழ்க்கை தன் அம்மாவிற்குக் கிடைக்காதது. தன் பாட்டி யோசிக்கவே யோசிக்காதது. ஆனால் இது ஒன்றும் பெரிய சாதனையில்லை. விருப்பத்தின் படியே வாழுவது எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது.

ஸ்ரீநகரிலிருந்து திரும்பி வரும் போது அவள் அவசரம் காட்டவேயில்லை. வேண்டுமென்றே சிறிய நகரங்களுக்குள் சென்றாள். விதவிதமான உணவு வகைகளைத் தேடி ருசித்தாள். வழியிலிருந்த பள்ளிக்குச் சென்று மாணவர்களுடன் பேசினாள். அவள் நினைத்தது போல உலகம் பயமுறுத்தக்கூடியதில்லை. கொடூரமானதில்லை. மோசமான மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பயந்து வீடு தான் உலகம் என்று முடங்கிக் கிடக்கமுடியாதே.

இருபத்தியெட்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது அம்மா அவள் மெலிந்துவிட்டதாக வருத்தப்பட்டாள் அப்பா அவளிடம் கதை கேட்பது போல அவளது பயண அனுபவங்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிறகு அவளது கைகளைப் பற்றியபடியே சொன்னார்

“தைரியம் தான் வாழ்க்கை. நீ எவ்வளவு தைரியமா இருக்கிறயோ அவ்வளவு சாதிக்க முடியும். பயந்து ஒடினா உலகம் உன்னைத் துரத்திகிட்டே தான் இருக்கும். விலை கொடுத்து வாங்குற எந்தப் பொருளாலும் நீ அடைஞ்ச சந்தோஷத்தை தர முடியாது. இந்த உலகத்தில நிறைய விஷயங்களுக்கு விலையே கிடையாது. அந்த அழகை ரசிக்க மனசு வேணும் பாப்பா“

அப்பா அவளைப் பாப்பா என்று அபூர்வமாகத் தான் அழைப்பார். அன்று அவளைப் பாப்பா என்று அழைத்தது அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

நீண்ட தூரப்பயணம் செல்வதற்கு முறையாகத் திட்டமிட வேண்டும். பருவகாலம் ஒத்துழைக்க வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைவிடவும் அப்பாவிடம் கேட்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே அவளாக ஆன்லைனில் பார்ட்டைம் வேலை ஒன்றை எடுத்துக் கொண்டாள். அந்த வேலையிலிருந்து கிடைத்த பணத்தில் தான் அடுத்த முறை பயணம் போக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அதைப்பற்றி அப்பாவிடம் சொன்ன போது அவர் “இது தான் பயணம் கற்றுத்தரும் பாடம்“ என்று சொல்லிச் சிரித்தார்

மழைக்காலத்தில் வீட்டின் ஜன்னல்களைக் கூட அம்மா பூட்டிவைத்துவிடுவது தான் அவளை மேகலாயா நோக்கிப் போவதற்குத் தூண்டியிருக்கக் கூடும். அதைப் பயண வழியில் தான் உணர்ந்தாள். அவள் ஆறு நாட்களின் பயணமுடிவில் தான் மழையை எதிர்கொண்டாள். அவள் கேள்விப்பட்டது போலில்லை அந்த மழை. அசுரவேகம். பல்லாயிரம் அம்புகள் ஒரு சேரபாய்வது போல மழைத்துளிகள் அவள் மீது பட்டன. இரண்டு மழைத்துளிகளுக்குள் இடைவெளியில்லை, அடர்த்தியான மழை. பெருங்காற்றும் சேர்ந்து கொண்டது. சாலையே தெரியவில்லை. அவளால் பைக்கை ஒட்ட முடியவில்லை.

ஒரு பஸ் ஸ்டாப்பின் நிழற்குடை ஒன்றினுள் பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டாள். பூமியைப் புரட்டித் தள்ளிவிடுவதைப் போல மழை வேகம் கொண்டது. நான்குமணி நேரம் அதே இடத்தில் நின்றிருந்தாள். மழை லேசாக வெறிக்க ஆரம்பித்தவுடன் பைக்கை எடுத்து மீண்டும் பயணிக்க ஆரம்பித்தாள். ஒரு விடுதியைத் தேடிக் கண்டுபிடித்து அறை எடுத்துக் கொண்டாள். இரவெல்லாம் மழை பெய்தது. மறுநாள் வெளியே வரமுடியவில்லை.

மழை நிற்காது என்று விடுதி மேலாளர் சொன்னார். அறை ஜன்னல் வழியே மழை பெய்வதைப் பார்த்தபடியே இருந்தாள். பெயரறியாத சிறிய ஊரில் இப்படி ஒரு விடுதியில் தங்கியபடியே பெருமழையை வேடிக்கை பார்ப்பது வாழ்வில் ஒருமுறை தான் கிடைக்கும் அனுபவம் என்று பட்டது.

இரண்டு நாட்கள் மழை நீண்டது. பின்பு மழை வெறித்தபோது அவள் பயணத்தைத் துவங்கினாள். துலக்கி வைத்தது போல வீடுகள் சாலைகள் அத்தனையும் வசீகரமாகயிருந்தது. ஈரக்காற்றோடு அவள் பயணித்தாள். தூரத்து வீடுகளிலிருந்த சிலர் அவளுக்குக் கையசைத்தார்கள். இனிமையானது உலகம் என்று மகிழ்ந்தபடியே அவள் பைக்கில் சென்றாள் .

இதன் மூன்றாம் நாள் நான்கு மணியளவில் ஷில்லாங்கை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தான் பைக் ரிப்பேர் ஆனது

அவளாகச் சரிசெய்ய முயன்றாள். பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. வேறு இடமாக இருந்தால் மெக்கானிக்கை போன் செய்து வரவழைத்துவிடுவாள். இங்கே நெட்வொர்க் வேலை செய்யவில்லை. ஆகவே உருட்டிக் கொண்டு நடந்தாள்.

நீண்ட சாலையில் தனியே செல்லும் அவளுக்கு விருப்பமான ஹாலிவுட் திரைப்படமான “On the Road” நினைவிற்கு வந்தது. Jack Kerouac எழுதிய அந்த நாவலையும் அவளுக்குப் பிடிக்கும்.

மலைப்பாதையில் பைக்கை உருட்டிக் கொண்டு நடப்பது கஷ்டமாகயிருந்தது. மெல்ல மாலைவெயில் வடிந்து இருட்ட ஆரம்பித்தது. இன்னும் எவ்வளவு தூரம் இப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை. எரிச்சலாக வந்தது. பைக்கை ஒரமாக நிறுத்திவிட்டு செல்போன் சிக்னல் கிடைக்கிறதா என்று மறுபடியும் பார்த்தாள். ஆனால் சிக்னல் இல்லை. பசி வேறு எடுத்தது. எங்கோ தொலைவில் புகை வருவது போல நாசியில் உணர்ந்தாள். எந்தப்பக்கம் என்று சுற்றிலும் பார்த்தாள். புகை வருவதற்காக இடம் தெரியவில்லை.

மலைப்பாதையின் அடுத்த வளைவினைக் கடந்து பைக்கை தள்ளிக் கொண்டு போனபோது தொலைவில் சிறிய விளக்கு வெளிச்சம் தெரிந்தது. பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த வெளிச்சம் வரும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பக்கத்தில் தெரிந்த அந்த வெளிச்சம் நடக்க நடக்கப் போய்க் கொண்டேயிருந்தது. அது ஒரு வீடு. ஒரு கிழவர் தனியே வசித்து வந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை.

சைகை மொழியிலே தனது பைக் ரிப்பேர் ஆகிவிட்டது என்று தெரியப்படுத்தினாள். அவர் இரவில் அங்கே தங்கிக் கொள்ளும்படி சொன்னார். வேறுவழியில்லை. அந்தக் கிழவருடன் இரவில் அவரது குடிசையில் தங்கிக் கொண்டாள். சூடான ரொட்டிகள் செய்து சாப்பிடுவதற்குக் கொடுத்தார்.

காலை அவள் தூங்கி எழுந்து கொள்வதற்குள் அவர் நடந்து போய்ப் பக்கத்திலிருந்த ஒரு மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அந்த மெக்கானிக் பைக்கை சரிசெய்து தரும்வரை கிழவர் கூடவே இருந்தார். இரண்டு மணி நேரத்தின் பின்பு பைக் சரியானது. அவள் கிளம்பும் போது அந்தக்கிழவருக்குப் பணம் கொடுத்தாள். அவர் வாங்க மறுத்துவிட்டார்.

அவள் பைக்கில் ஷில்லாங்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தபோது அவர் மலைப்பாதையில் நின்று கையசைத்தபடியே இருப்பது தெரிந்தது.

திரும்பி வரும்போது அந்தக் கிழவர் வீட்டிற்கு இன்னொரு முறை போக வேண்டும். அத்தோடு ஏதாவது பரிசுப்பொருள் வாங்கித் தரவேண்டும் என்று தோன்றியது.

ஷில்லாங்கிற்கு வந்து சேர்ந்தவுடன் அப்பாவிற்குப் போன் செய்தாள்

அப்பா அன்பான குரலில் கேட்டார்

“எப்படியிருந்தது ட்ரிப் ஒண்ணும் பிரச்சனையில்லையே“

“எவரிதிங் ஒகே. வழியெல்லாம் நல்ல மழை“ என்றாள்

எப்போ திரும்பிவருகிறாள் என்று ஒரு வார்த்தை கூட அவர் கேட்கவில்லை. அவளாகச் சொன்னாள்

“தேங்ஸ்பா“

“இது என்ன புதுப்பழக்கம்“ என்று அப்பா சிரிப்பது கேட்டது

அந்தச் சிரிப்பு மழையை விடவும் அழகாக இருந்தது

••

22.10.20

0Shares
0