மழைமான் – வாசிப்பனுபவம்

கலை கார்ல்மார்க்ஸ்

இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு விதமாக உள்ளது. முன்னுரையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ‘ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையின் சாட்சி’ எனக் குறிப்பிடுகின்றார். மேலும், ‘முந்தைய கதைகளிலிருந்து அவரது கதைகள் வேறு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாகவும்’ குறிப்பிடுகின்றார்.

ஆம். அது முற்றிலும் உண்மை தான். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும் பொழுது மனம் எங்கெங்கோ பயணித்து மிதந்தபடியே இருக்கின்றது.

இத்தொகுப்பிலுள்ள #புலப்படாத_பறவை என்ற சிறுகதையைப் படித்திடும் பொழுது, சித்தரஞ்சன் உடன் நானும் பயணப்பட்டேன், இரட்டை வரி காடையைக் காண்பதற்காகக் குலாமோடு சேர்ந்து நானும் அலைந்து திரிந்தேன், ஈரானி வரைந்த சித்திரம் எனக்குள்ளும் ஓவியம் ஒன்றை தீட்டிச் சென்றது, அய்டாவை எப்போது பார்ப்போம் என்று மனம் அடித்துக் கொண்டே இருந்தது.

இக்கதை Jordon’s Courser எனப்படும் அரிய வகை இரட்டை வரிக் காடையைத் தேடிச் சென்ற உண்மை சம்பவத்தின் புனைவு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

சிலர் தேடித்தேடி முயன்றும் அறியப்படாத ஒன்று, வேறு யாரோ ஒருவருக்கு எளிதாகப் புலப்பட்டு விடுகிறது. ஆனால் அவர்களுக்கு அதன் மகத்துவம் தெரிவதில்லை. இக் கதையின் முடிவும் அதையே குறிப்பிடுகின்றது.

#விரும்பிக்_கேட்டவள் என்ற சிறுகதை பி.பி. ஸ்ரீனிவாசஸின் ரசிகை ஒருத்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது. படித்து முடிக்கும் போது மனம் கனக்கிறது. ஏதோ ஒரு நேர்காணலில் எஸ்.ரா. அவர்கள் இக்கதை நிகழ்வு குறித்துக் குறிப்பிட்டது போல் எனக்கு நினைவு. எனினும் இக்கதை படித்த பின்பு மனதில் இருள் ஒன்று வந்து அப்பிக் கொண்டது.

#அவன்_பெயர்_முக்கியமில்லை என்ற சிறுகதையில் ஒரு தம்பதியரின் வாழ்க்கை, படம் பிடிக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையில் கிடைக்கும் நிராசைகள், மகிழ்ச்சிக்காக ஏங்கும் மனம், சமூகச் சூழல், பெண் பாதுகாப்பு இவை அனைத்தையும் எஸ்.ரா அவர்கள் மனதை மயக்கும் வரிகளில் அழகுபட விவரித்து மனதை கரைக்கின்றார்.

#மழைமான் இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பைக் கொண்ட சிறுகதை. எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் குழந்தை தனம், சின்னச் சின்ன ஆசைகள், எத்தனை வயது கடந்தாலும் அது நம்மிலிலேயே கிடக்கிறது. அது மீண்டும் எழும் பொழுது நம் மனது என்ன நிகழ்வுகளைச் சந்திக்கின்றது என்பதை ரசனையாக இக்கதையில் கூறியுள்ளார், எஸ்ரா அவர்கள். இக்கதையைப் படிக்கும் பொழுது எவ்வொரு வாசகனுக்கும் அடிமனதில் உள்ள எண்ணற்ற ஆசைகள் மீண்டும் துளிர் விடத் தொடங்கிவிடும் என்பதே நிதர்சனம்.

#வெறும்_பிரார்த்தனை என்ற கதையைப் படிக்கும் பொழுது, எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு பீறிட்டது. உண்மை தான். இக்கதையில் வரும் அப்பா கதாபாத்திரம் போலப் பல்வேறு நபர்களை நாம் இச்சமூகத்தில் நித்தம் கண்டு வருகின்றோம். யாருக்காக வாழ்கின்றோம், எதற்காக வாழ்கின்றோம், தனக்காகத் தான் வாழ்கின்றோமா என எந்தச் சிந்தனையும் அற்ற மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும். இக்கதை அதற்கான ஒரு சிறு துளியாய்.

#எதிர்_கோணம் இக்கதையில் வரும் சவரிமுத்துவை போல எத்தனையோ நபர்கள் இன்னமும் கடந்தகால நிறைவேறாத ஆசைகள் மற்றும் அது அடைய வேண்டிய இலக்குகளுக்காகக் காத்திருக்கின்றார்கள். காலம் கடந்து விட்டாலும் ஒருவனின் சிறுபிள்ளைத்தனமான ஆழ்மன நிறைவேறாத ஆசைகள் இன்னமும் மூர்க்கத்தனமாகவே இருக்கும். அது மீண்டும் கிடைக்கும் தருணம் வந்தும் கிடைக்காமல் செல்லும் பொழுது மனம் படும் தத்தளிப்புகள் இவற்றை எஸ்.ரா. அவர்கள் மயக்கும் வார்த்தைகளில் விவரித்துள்ளார்கள்.

#இன்னொரு_ஞாயிற்றுக்கிழமை இக்கதை வேலைக்காக அலைகின்ற இளைஞர்களின் வாழ்க்கையில் ஞாயிற்றுக்கிழமை எப்படிக் கழிகின்றது. அவர்கள் அன்றைய தின உணவுக்காக என்னென்ன செய்கின்றனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார் ஆசிரியர் அவர்கள். இதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனின் மனதும் கரைந்து மனமற்ற வெற்று உடலாய் போய் விடுவது போல் ஆகின்றது. தாமோதரன், மீனாம்பாள் பாட்டியிடம் பெற்று வரும் பார்சலை பிரித்து, உள்ளே உள்ள கடிதத்தைப் படித்து முடிக்கும் பொழுது வாசகனையும் குற்ற உணர்ச்சி தொற்றிக் கொள்கின்றது.

#ஓலைக்கிளி – சூழல் என்பது ஒரு மனிதனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கின்றது. இளமையில் இருக்கும் துடிப்பும் மிடுக்கும், வயது ஆன பின்பு என்ன ஆகின்றது என்பதை இக்கதையில் வரும் சவட்டி கதாப்பாத்திரம் உணர்த்துகின்றது.

தான் செய்திடும் தவறுக்காக, ஒவ்வொரு முறையும் யாரிடம் தவறிழைத்தோமோ அவர்களுக்கே ஏதோ ஒரு வகையில கைமாறு ஒன்றை செய்து வருகின்றான் அவன். ஒரு மனிதன் தன்னை நம்பியவர்களுக்கு உதவிட எதுவும் செய்வான் என்பது சவட்டி கதாப்பாத்திரம் உணர்த்துகின்றது. ஒருவன் இன்னொரு வர் மனதில் தங்கி நிற்க வேண்டும் என்றால், அதற்கு அவர் மனதில் எதிர்மறையாக எதையும் விதைத்தாலேயே போதும் என்றும், அவர் நம்மை எக்காலமும் மறக்காமலேயே இருப்பார் என்றும் சவட்டி கதாபாத்திரம் சொல்வதை எவரும் மறுக்க முடியாதது தான்.

#மழையாடல் அம்மாவிற்கு நேர்ந்த வாழ்வியல் நிகழ்வினால் ஒரு பெண் துறவு பூண்டது சொல்லப்பட்டுள்ளது. என்றாலும், மழை எப்படி எல்லாம் ஒரு மனிதரோடும், அவர்களின் மனநிலையோடும் கலந்துள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது இச்சிறுகதை.

#தூய_வெளிச்சம் கோச்சடை என்னும் திருடன் அவனுக்குத் தொடர்பு இல்லாத ஒரு வீடு இடிக்கப்பட்டு வருவதைப் பார்த்து வருந்துகின்றான். தனது கடந்த காலத்தில் அந்த வீட்டிற்கு ஒருமுறை திருடச் சென்றுள்ளான். இருப்பினும் அந்த வீடு இவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம், அதன் பொருட்டுத் தன் வாழ்வில் நடந்த நிகழ்வு இவற்றையெல்லாம் எண்ணி ஏங்கும் ஒரு அற்புதமான கதை. இப்படி எல்லோருக்கும் ஏதோ ஒன்றை பறிகொடுக்கும் பொழுதுகளில், கடந்த காலக் காட்சிகள் உள்ளத்தைக் கசக்கியும், கண்ணீரையும் கொண்டு சேர்த்து விடுகின்றது. இதனை இச்சிறுகதையின் மூலம் அற்புதமாக ஆசிரியர் கூறியுள்ளார்.

எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் “மழைமான்” சிறுகதை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் பத்துப் பக்கங்களுக்கு மேல் விவரித்திடலாம். அப்படிப்பட்ட மனித உணர்ச்சிகள் ஒவ்வொரு கதையிலும் கொட்டிக் கிடக்கின்றது. ஏற்கனவே முன்னுரையில் எஸ்.ரா. அவர்களே சொல்லியது போல, அவரை மட்டுமல்ல இக்கதைகள் அனைத்தும் வாசகர்களையும் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றது.

அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான சிறுகதை தொகுப்பு.

0Shares
0