மழைமான்

– சிறுகதை

தேவபிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

தனது மேஜையில் ஆத்தியப்பன் ரிஜிஸ்தரை வைத்து விட்டுப் போகும்வரை அந்த யோசனை தோன்றவேயில்லை. திடீரென்று தான் மனதில் உருவானது.

எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் மனதில் மானைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகக் கொப்பளிக்கத் துவங்கியது. இப்படி யாருக்காவது விசித்திரமான எண்ணம் வருமா என்ன… தன்னைச் சுற்றிலும் இருந்த சக ஊழியர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

மின்வாரியத்தின் நிர்வாகப் பிரிவு அலுவலகமது. காரை உதிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய ஹாலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

வலது புறம் நேராக நடந்து போனால் உயரதிகாரிகளின் அறைகள். அதை ஒட்டியது போல காப்பறை. கடந்து போனால் கீழும் மேலுமாகச் செல்லும் சிமெண்ட் படிக் கட்டுகள். அலுவலகத்தில் மொத்தம் முப்பத்தியெட்டு படிகள் இருக்கின்றன.

தேவபிரகாஷ் பலமுறை அப்படிகளை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப்போய்விடுகின்றன. ஒருவேளை தன்னைப் போல புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

இடது பக்கம் நீளும் வழி எப்போதுமே இருட்டடிந்து போயிருக்கிறது. மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமர மிருக்கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசிபடிந்து, வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளி யைப் போல அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டமானது. யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின் மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள்.  மூன்றாவது மாடியில் வேலைசெய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன. அந்த மரத்தில் இருந்து ஒரு அணில் அலுவலகத்திற்குள் வந்துவிடுகிறது என்று சொல்லி புனிதவல்லி எரிச்சல்பட்டு பெரிய கிளை ஒன்றை வெட்டிவிடச் செய்தாள். அதன் பிறகு அந்த அணில் வருவதும் நின்று போய்விட்டது.

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அது போலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒருநாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன. சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது. ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை இது போன்ற மதிய நேரம் அந்த எண்ணம் அவரை உந்தத் துவங்கியது.

உடனே கிளம்பி சுந்தரவதனியைப் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனக்குரல் ஆவேசமாகச் சொல்லத் துவங்கியது. ஏடிஎம் போய் பணம் எடுத்துவர வேண்டும் என்று உயரதிகாரியிடம் பொய் சொல்லிவிட்டு அன்பு பீறிட சுந்தரவதனி வீடு இருந்த ராமாவரத்திற்கு ஆப்பிள் பழங்களுடன் போயிருந்தார்.

அலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு கடுமையான முகத்தோடு தானிருப்பாள்.  ஒரு மழை நாளில் அவர் ஏறிய ஷேர் ஆட்டோவில் அவளும் உடன் பயணம் செய்தாள். அப்போது தனது வீடு ராமாவரத்தில் உள்ளதாகத் தெரி வித்திருந்தாள். அதைத் தவிர அவளோடு அதிகம் பேசிப் பழகியதில்லை.

ராமாவரத்தில் அவளது வீட்டை விசாரித்துக் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்தது. இரும்பு கேட் போட்ட பெரிய வீடு. வீட்டின் முகப்பில் எண்டோவர் கார் நின்றது. இவ்வளவு வசதியானவள் என்பதை அவள் காட்டிக் கொள்ளவேயில்லையே என்று தோன்றியது. காலிங்பெல்லை அடித்தபோது சுந்தரவதனி நைட்டியுடன் வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வரக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்த மாத்திரம் திகைத்துப் போனவளாக சோபாவில் உட்காரச் சொன்னாள்.

‘என்ன பேசுவது?’ என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என விருப்பமற்ற குரலில் கேட்டாள்.

‘சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ என்றார் தேவபிரகாஷ்.

அவள் அதை நம்பமுடியாதவள் போல ‘ஏதாவது கடன்கிடன் வேணுமா?’ என்று நேரடியாகக் கேட்டாள்.

‘அதெல்லாமில்லை. ஆறுமாதமாக நீங்க ஆபீஸ் வரவில்லையே… அதான்’ என்று சமாளித்தார்.

தன்னை வேவு பார்க்க வந்திருக்கிறாரோ என நினைத்து அவள் கடுமையான முகத்துடன் ‘நான் சிக் லீவுல இருக்கேன்’ என்றாள். பிறகு அவரிடம் ‘இது போல போன் செய்யாமல் பார்க்க வருவது தனக்குப் பிடிக்காது. இனிமேல் இப்படி வராதீர்கள்’ என்று சொல்லி ஆப்பிள் பழத்தை அவரையே திரும்பி எடுத்துக் கொண்டு போகும்படியாகச் சொன்னாள்.

ஆத்திரத்தில் அவள் வீட்டின் வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் அந்தப் பழங்களைப் போட்டுவிட்டு அலுவலகம் போகாமல் வீட்டிற்குப் போய் படுக்கையிலே கிடந்தார். யோசிக்க யோசிக்க  சகல மனித உறவுகளும் அர்த்தமற்றுப் போய்விட்டதாகத் தோன்றியது. யாரும் யாரையும் நம்புவதில்லை. காரணமில்லாமல் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது கூட ஏன் இயலாமல் போயிற்று? பணம் தவிர உலகில் வேறு எதுவுமே முக்கியமானதில்லையா?  ஏன் இப்படி மனக்குரலின் பேச்சைக் கேட்டு நாம் அவமானப்பட்டுப் போகிறோம்? இது என்ன நோய்? ஏன் நம் இயல்பு வாழ்க்கை இப்படி அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்து வேதனை கொண்டார்.

அலுவலகத்தில் அவருக்கு விருப்பமான-வர்கள் என்றோ நண்பர்கள் என்றோ யாருமேயில்லை. மதிய சாப்பாட்டைக் கூட தனியாகத் தனது மேஜையில் வைத்தே சாப்பிட்டு முடித்து விடுவார். அலுவலகத்தில் மட்டுமில்லை.,ஒரு கோடி பேருக்கும் மேலாக வசிக்கும் இந்த மாநகரில் கூட அவருக்கு நண்பர்கள் என்று எவருமில்லை.  முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டே பிரிவுதான்.

ஐம்பதாவது வயதில் நுழையும் வரை அவருக்கு ஒருநாளும் இப்படியான உணர்வுகள் ஏற்பட்டதேயில்லை. இப்போது தான் ஏதேதோ கொந்தளிப்புகள் மனதில் தோன்றுகின்றன. திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றத்துவங்கி முழுவதும் ஆக்ரமித்துவிடுகிறது. வேறு எந்த வேலை செய்தாலும் மனது அடங்குவதில்லை.

ஒரு குரல், அழுத்தமான ஒரு குரல் அந்த எண்ணத்தை நிறைவேற்றும் படியாக அவரை வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அக்குரலைக் கண்டு-கொள்ளாமல் விடும்போது மனது வேறு எந்த வேலையிலும் கவனம் கொள்ள மறுப்ப-தோடு, உடலிலும் மெல்லிய படபடப்பு உருவாகிவிடுகிறது.

இன்றைக்கும் அப்படியான ஒரு குழப்பமான எண்ணமாகவே மானைக் காண வேண்டும் என்று மனதில் உதயமானது. மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. இதற்கு முன்பு எப்போது எங்கே வைத்து மானைப்பார்த்தோம் என்ற நினைவுகள் மனதில் குமிழ்விடத் துவங்கின.

பதினைந்து வருஷத்தின் முன்பு ஒரு முறை தேக்கடியில் வைத்து அவர் மானைக் கண்டிருக்கிறார். அப்போது அவரது  மகள் விலாசினிக்கு ஐந்து வயது. மான்கள் உலவும் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. கம்பிமீது ஏறியபடி அவள் மானைக் கையசைத்துக் கூப்பிட்டாள். புல்வெளியில் உலவிக் கொண்டிருந்த மான்கள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

‘அப்பா, மானை எப்படிக் கூப்பிடுவது?’ என்று விலாசினி கேட்டாள்.

மானை என்ன சொல்லிக் கூப்பிடுவது என்று அவருக்கும் தெரியவில்லை. அதை மறைக்க விரும்பி-யவரைப் போல “கையசைத்துக் கூப்பிடு. வரும்” என்றார்.
அதற்குள் அவளாகப் ‘பூசி பூசி’ என்று அர்த்தமற்ற ஒரு சொல்லைக்  கொண்டு குரல் கொடுத்தாள்.

ஒரு மான் தலை திரும்பியது.

“அப்பா, நான் கூப்பிடுறது அதுக்குக் கேட்குது. புள்ளி புள்ளியா மான் ரொம்ப அழகா இருக்குல்லே! நாம இந்த மானை வீட்டில கொண்டு போய் வளக்கலாமா?” என்று கேட்டாள்.

“இல்லை விலாசினி, மானை வீட்ல வளர்க்கவிடமாட்டாங்க” என்றார்.

“யாரு?” என கேட்டாள்.

“கவர்மெண்ட்” என்றார்.

மானை ஆசையாகப் பார்த்தபடியே மறுபடியும் கேட்டாள்.

“ஏன்பா விடமாட்டாங்க?”

“அதுக்கு நாம் கவர்மெண்ட்ல பெர்மிஷன் வாங்கணும்மா” என்றார்.

“நீங்க கவர்மெண்ட்ல தானே வேலை பாக்குறீங்க, அப்போ பெர்மிஷன் வாங்க வேண்டியது தானே” என்று சொன்னாள்.

“இல்லைடா, மானை வீட்ல வளர்க்க முடியாது. மான் வளரணும்னா காடு வேணும்ல.” என்றார்.

அவள் ஆதங்கத்துடன் “அப்போ நம்ம வீட்டைச் சுற்றிக் காடு வளர்த்திட்டா, பிறகு மான் வளர்க்க விடுவாங்களா?” என்று கேட்டாள்.

“முதல்ல நாம ஒரு காடு வளர்க்கலாம். பிறகு மானை வாங்கிடலாம்” என்று சமாதானம்  சொன்னார். ஊர்வரும்வரை மான் வளர்ப்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் விலாசினி. அதன்பிறகு மானை மறந்து போய்விட்டாள். குழந்தைகள் தனது ஆசையை எளிதாகக் கைவிட்டுவிடுகிறார்கள். அவரும் அதன்பிறகு மானை மறந்து போயிருந்தார்.

இப்போது எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மறுபடி வந்தது எனப் புரியவேயில்லை. ஆனால் அந்த எண்ணம் மனதைக் கொஞ்சம் கொசமாக வதைக்க ஆரம்பித்திருந்தது.

மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்த பெரிய டெலிபோன் டைரக்டரியைத் தேடி எடுத்து வந்து புரட்டத் துவங்கினார். மானைப் பற்றி எதில் தேடுவது என தெரியாமல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.  எப்போதோ ஒரு முறை பரங்கிமலைச் சாலையில் மான் ஒன்று அடிபட்டுக் கிடந்ததாக பேப்பரில் செய்தி ஒன்றை வாசித்த நினைவு வந்தது,

பரங்கிமலைக்குப் போனால் மானைப் பார்க்க முடியுமா என்ன… யாரைக் கேட்கலாம்?  இருபத்திநாலு மணி நேர இலவச சேவையான ஹலோ சிட்டி நம்பருக்கு போன் செய்து கேட்டால் சொல்லிவிட மாட்டார்களா என்று நினைத்தபடியே அலுவலக போனில் இருந்து ஹலோ சிட்டியைத் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் ஒரு இளம்பெண் மென்மையான குரலில் பேசத் துவங்கினாள். தயங்கித் தயங்கி அவளிடம் இந்த நகரில் மான்கள் எங்கேயிருக்கின்றன என்ற விபரம் தனக்குத் தெரிய வேண்டும் என்றார்.

அவள் குறிப்பாக ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்த மானைப் பற்றிக் கேட்கிறாரா அல்லது பொதுவாக மான்களைக் காண விரும்புகிறாரா என்று கேட்டாள்.

தனது மகளை அழைத்துப் போய் வேடிக்கை காட்ட விரும்புவதாக அவர் பொய் சொன்னார்.

அவள் இதற்கான  பதிலைத் தருவதற்குள் அவரது சுயவிபரங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்லி அவரது வயது, வேலை, முகவரி என ஆறு கேள்விகளைக் கேட்டாள். முடிவில் வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மான்கள் இருக்கின்றன.  ஆனால் இன்று விடுமுறைநாள் என்றாள். நாளை வரை தன்னால் காத்திருக்க முடியாது. வேறு எங்காவது  மான்கள் இருந்தால் சொல்லுங்கள். தூரத்தில் நின்று பார்த்தால் போதும் என்றார்.

வேறு எங்கும் மான்கள் இருப்பதாகத் தகவல்மையம் தெரிவிக்கவில்லை. உங்கள் மகளுக்காக ஒரு ஆலோசனை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு கிண்டி கவர்னர் மாளிகை தெரியுமில்லையா? அதன் உள்ளே பாதுகாப்பு பணிக்காக வசிப்பவர்களுக்கான குடியிருப்பு இருக்கிறது. அதில் யாரையாவது தெரியும் என்று பொய் சொல்லி உள்ளே போய்விடுங்கள். அங்கே மான்களை எளிதாகக் காண முடியும். நான் அப்படி ஒரு முறை என் தோழிகளை அழைத்துப் போயிருக்கிறேன் என்றாள்.

இதைச் சொல்லும்போது அவள் சிரித்தாள். அது சந்தோஷத்தின் வெளிப்பாடா அல்லது தன்னை மாட்டிவிட முயற்சிக்கிறாளா என புரியாமல் இருந்தது. குரலை வைத்து அந்தப் பெண்ணின் இயல்பைக் கற்பனை செய்துக்கொள்ள முடியாது. ஒரு வேளை அந்த சிரிப்பு இயந்திரக் குரலாகக்கூட இருக்கக் கூடும்.

கிண்டிக்குப் போய் மானைக் காண முயற்சி செய்ய வேண்டியதுதான் என்றபடியே  தனக்குக் குளிர் சுரம் போல இருப்பதாகச் சொல்லி அலுவலகத்தில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டார். கொண்டு வந்திருந்த மதிய சாப்பாட்டை பையில் வைத்து  எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து விடைபெற்றபோது மணி பனிரெண்டரையாகி இருந்தது. கிண்டி செல்வதற்கான பேருந்திற்காகச் சாலையில் காத்துக்கிடந்த போது அவரது வயதில் யாராவது இப்படி திடீரென மானைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு போவார்களா எனத் தோன்றியது. தான் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறோமா? என்ன மனநிலையிது. . . மனது வேறு எதையும் யோசிக்க மறுத்தது.

மான் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  உலகில் வேறு எந்த மனிதனும் இப்படி தனது அலுவலகத்தைப் பாதியில் போட்டுவிட்டு மானைப் பார்க்கப் போக மாட்டான். தனக்கு ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது தன்னை ஏதோ பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சே, என்ன சிந்தனையிது.

இதிலிருந்து உடனே விடுபட வேண்டும். இல்லா-விட்டால் மனது துவண்டு போய்விடுகிறது, தலையைத் திருப்பிச் சாலையைக் கவனித்தார்.

அவரது வயதை ஒத்த பலர் பரபரப்பாக பைக்கிலும், காரிலும் போய்க் கொண்டிருந்தார்கள். பொதுவாக அவரது கண்ணில் சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே தென்படுகிறார்கள். இளைஞர்கள், அதிலும் குறிப்பாக பதின்வயது பையன்கள், பெண்களைக் காணும்போது மனதில் தேவையில்லாத பொறாமையுணர்வு அல்லது கோபம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலும் அவர்களைக் கண்டுகொள்ளாதவரைப் போலவே நடந்து கொள்கிறார். ஆனால் உலகில் இளைஞர்கள்தான் அதிகமாக நடமாடுகிறார்கள். கூடிப்பேசுகிறார்கள். சிரிக்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். கனவுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது வயதை ஒத்தவர்களுடன்  பேசப் பழக அவருக்குப் பிடிப்பதில்லை. அதே நேரம் அவரை விட மிகவும் வயதானவர்களுடன் பேசும்போது சலிப்பாக இருக்கிறது. ஈரமில்லாமல் சுண்ணாம்பு உலர்ந்து உலர்ந்து பொக்காகி உடைந்து சிதறுமே, அப்படித்தான் தானும் மாறிக் கொண்டிருக்கிறோமா என தோன்றும். இல்லை, வெடித்துப்போன பலூன் இனி எவருக்கும் உபயோகமில்லாமல் கிழிந்து கிடப்பது போன்றதுதான்  தனது வாழ்க்கையா? அவருக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் தன்னை அப்படித் தாழ்மையாக உணர்கிறோம் என்ற மறுயோசனையும் அவருக்குள் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
கிண்டி செல்லும் நகரப்பேருந்து வந்து நின்றது. ஏறிக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். இந்தப் பேருந்தில் யாராவது மானைப் பார்க்கப் போகிறவர் இருப்பாரா என்ன… அவர் டிக்கெட் எடுத்து பையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

***

போனவாரம்  இது போன்ற ஒரு காலை நேரத்தில் மனதில் பென்சில் சீவி எவ்வளவு நாளாயிற்று என்று ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. பகல் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

பென்சில் திருகிகள் வந்த பிறகு பிளேடால் பென்சிலை சீவுவது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. அன்றாடம் பென்சிலை உபயோகிப்பதே அரிதாகிப் போன பிறகு பென்சிலை ஏன் பிளேடால் சீவ வேண்டும். வீட்டில் மூத்தமகள் ஓவியம் வரைவதற்கு வண்ணமயமான பென்சில்களை வைத்திருக்கிறாள். ஆனால் சாதாரண மஞ்சள், பச்சை நிறப் பென்சில்கள் அவளிடமும் கிடையாது.

அவரும் பள்ளி வயதிற்குப் பிறகு பென்சிலை விலை கொடுத்து வாங்கியதே கிடையாது. பிறகு எதற்கு அந்த யோசனை வந்தது எனப் புரியவில்லை. அலுவலக மேஜையைக் குடைந்து ஏதாவது பென்சில் கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தார். உடைந்துபோன ரெனால்ட்ஸ் பேனாக்கள், அழிரப்பர்கள், ரெவின்யூ ஸ்டாம்ப், நூல்கண்டு, துளையிடும் கருவி, ஜெம்கிளிப் என ஏதேதோ இருந்ததேயன்றி பென்சிலைக் காணோம்.

உடனே பென்சிலை வாங்கி சீவ வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடையத் துவங்கியது. சே, என்ன இழவு யோசனை… ஏன் நம்மை இப்படிப் படுத்துகிறது என்று நினைத்தபடியே அலுவலக பியூன் பழனியை வரவழைத்து ரத்னா பென்சில் ஒன்றை வாங்கிக் கொண்டு வரும்படியாகச் சொன்னார்.

‘சார், அதெல்லாம் இப்போ கிடையாது. நட்ராஜ் பென்சில் இருக்கும், வாங்கிட்டு வரவா?’ என்று பழனி கேட்டான்.

‘அப்படியே ஒரு புது பிளேடு ஒன்றும் வேண்டும்’ என்று சொல்லி இருபது ரூபாயை நீட்டினார்.

“பிளேடு எதற்கு சார்!  பென்சில் சீவி இருக்கு, நானே சீவிக் கொண்டுட்டு வர்றேன்” என்றான்,

அதுதான் அலுவலக நடைமுறை. உயர் அலுவலர், ஊழியர்கள் அனைவரின் பேனாவிற்கு மை ஊற்றுவது, பென்சிலை சீவித் தருவது, கழற்றிய பேனாவின் மூடியை மாற்றி விடுவது, தபாலைப் பிளேடால் பிரித்துக் கொடுப்பது, ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒற்றித் தருவது, கீழே விழுந்த குண்டூசியைப் பொறுக்கி எடுத்துத் தருவது, இதெல்லாம்தான் பியூனின் வேலைகள், இதுவரை ஒரு உயர் அலுவலர் கூட தானாகக் கீழே விழுந்த குண்டூசியைக் குனிந்து எடுத்த சரித்திரமே கிடையாது.

“வேணாம் பழனி, நானே சீவிக்கிடுவேன். நீ பென்சில், பிளேடு மட்டும் வாங்கிட்டு வா” என்றார்

இது போன்ற அற்ப எண்ணம் யாருக்காவது வருமாயென்ன…  சிறுவயதில் பென்சிலை சீவும்போது பிளேடு கையில் பட்டு பெருவிரலில் ரத்தம் வந்த நாட்கள் நினைவில் வந்து போனது. பழனி வரும்வரை மனது கொதிப்பிலே இருந்தது.

பழனி பென்சிலையும் பிளேடையும் நீட்டினான். அரக்கு வண்ணக் கோடு போட்ட பென்சிலது. அதை முகர்ந்து பார்த்தபோது வாசனையேயில்லை. வழக்கமாக புதுப்பென்சிலில் ஒரு மணமிருக்குமே. அது ஏன் இந்தப் பென்சிலில் இல்லை என்று ஆழமாக நுகர்ந்து பார்த்தார். ஒரு வாசனையும் இல்லை.

பிளேடைப் பிரித்து பென்சிலை  சீவ ஆரம்பித்தார். ஆப்பிள் பழத்தின் தோலை உரிப்பது போல கவனமாக, மெதுவாக, வளைய வளையமாக அவர் பென்சிலை சீவத் துவங்கினார். அந்த நிமிசம் மனம் மெல்ல சந்தோஷம் கொள்ளத் துவங்கியது. பென்சிலை சீராக சீவச்சீவ மனது தீவிரமாக உற்சாகம் கொள்ளத் துவங்கியது.

பென்சில் முனையைக் கூர்மையாகத் தீட்டினார். அழகாகச் சீவப்பட்டு பென்சில் எழுதத் தயாராக இருந்தது. ஏதாவது வரையலாமா என்று யோசித்தார். என்ன வரைவது?  ஒரு முட்டை போல வரைந்து அதற்கு இரண்டு கண்கள் வைத்தார். மூக்கை எப்படி வரைவது என்று யோசிப்பதற்குள் படம் வரையும் ஆசை வடிந்துவிட்டிருந்தது.

மனதில் அதே குரல் மீண்டும் எழுந்தது.

பென்சில் சீவு.  நன்றாக பென்சில் சீவு.

‘என்ன இம்சை இது’ என்றபடியே அவர் பென்சில் நுனியை மேஜையில் அழுத்தி உடைத்தார். மறுபடியும் பிளேடை எடுத்து பென்சிலை சீவத்துவங்கினார். அன்று மாலை வரை அது ஒரு முடிவில்லாத விளையாட்டு போலவே நடந்தேறியது. அலுவலகம் விடும்போது அவர் கையில் சுண்டுவிரல் அளவு பென்சிலே மீதமிருந்தது.

சீவிச்சீவிப் போட்ட பென்சில் வளையங்கள் அவரது மேஜையடியில் சிதறிக்கிடந்தன. மனதில் அந்தக் குரல் அடங்கியிருந்தது. என்ன விளையாட்டு இது, யாராவது தனது செய்கையைக் கவனித்திருப்பார்களா? சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். ஒருவேளை அவர்களும் தன்னைப் போல விசித்திர விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று தோன்றியது.

மீதமான பென்சிலைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். பென்சிலை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். மனைவி துணி துவைக்கும்போது கவனமாக அதை வெளியே எடுத்து வைக்கிறாளா எனப் பரீட்சை செய்து பார்க்க வேண்டியதுதான் என தோன்றியது. இதை வைத்து அவள் தன்மேல் கொண்டிருக்கிற அக்கறையை முடிவு செய்துவிடலாம் என்றபடியே பென்சிலை சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

அன்றிரவு வேண்டுமென்றே அவராக சட்டையைக் கழட்டி அழுக்குக் கூடையில் போட்டுவந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவி துவைத்து தேய்த்து வைத்த சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்த சட்டையைக் கண்டார். உடனே மனைவியை அழைத்து “இதில் ஒரு பென்சில் இருந்ததே, அதைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.

அவள் “அப்படி எந்தப் பென்சிலையும் தான் பார்க்கவில்லை” என்றாள்.

“சட்டைப் பையில்தான் வைத்திருந்தேன். அதைக் கூட கவனிக்கவில்லையா?: என்று கடுமையான குரலில் சொன்னார்.

அவளோ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல “சட்டையை அப்படியே எடுத்து வாஷிங் மிஷினில் போட்டு இருப்பேன். இப்போ எதுக்கு அந்தப் பென்சில்!” என்று முறைத்தபடியே கேட்டாள்.

அவருக்கு ஆத்திரமாக வந்தது. இவ்வளவுதான் தனது இடம். வீட்டில் தன் மீது யாருக்கும் எவ்விதமான அக்கறையும் கிடையாது. தனது சம்பாத்தியத்திற்காக மட்டுமே தன்னை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலை இப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது என்று கோபம் பொங்கியது.

“சட்டையில் என்ன இருக்குனு பாக்கவே மாட்டாயா?” என்று கோபப்பட்டார்.

“அதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னு தெரியலை.  வாஷிங் மிஷின்ல கதவு சரியில்லாமல் தண்ணி ஒழுகுது. இதுல உங்க இம்சை வேறயா? ஒருநாள் நீங்க பக்கத்தில இருந்து துணி துவைச்சிப் பாருங்க, அப்போ தெரியும்” என்றாள்.

தாங்க முடியாத ஆத்திரத்துடன் அன்று காலை உணவை வீட்டில் சாப்பிட மறுத்துப் பசியோடு அலு வலகம் வந்து சேர்ந்தார். அலுவலக பாத்ரூமிற்குள் போய் நின்றுகொண்டு தனது முகத்தை தானே பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்கள் ஒடுங்கியிருந்தன. புருவம் தளர்ந்திருந்தது. கண் இரைப்பைகள் ஊதி தொங்கிக் கொண்டிருக்கின்றன. நெற்றி, கன்னம் இரண்டும் உலர்ந்து போயிருக்கிறது. உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு உதிர்ந்து விட்டிருக்கிறது.  தன்னிடமிருந்த யௌவனம் முற்றிலுமாகப் போய்விட்டது. இனி தன் முகத்தில் ஒருபோதும் இளமையில் கண்ட பொலிவு திரும்ப வரப்போவதில்லை. தான் தோற்றுவிட்டோம். இளமையை இழந்துவிட்டோம். அதுதான் இது போன்ற கிறுக்குத்தனமான எண்ணங்களை உருவாக்குகிறது. இனி தான் ஒரு காலிபாட்டில் மட்டுமே… நினைக்க நினைக்க தன்மீதே ஆத்திரமாகவும் கோபமாகவும் வந்தது.

சே, என்ன வாழ்க்கையிது… முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல பேருந்து பயணம். அலுவலகம், மதிய உணவு, வேலை முடிந்து வீடு திரும்புதல், டி.வி.பார்ப்பது, இரவு உணவு, உறக்கம், விடிகாலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்ளுதல், குளிப்பது, சாப்பிடுவது, மறுபடி பேருந்துப் பயணம் என ஓடிக் கொண்டேயிருப்பது தாங்க முடியாத சலிப்பூட்டுகிறது.

அதே பற்பசை, அதே சோப்பு, அதே சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி, அதே இட்லி, தோசைகள், அதே கோடு போட்ட சட்டை, கைக்குட்டை, செருப்பு, அலுவலக மரமேஜை, குண்டூசிகள், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது.

மாற்றம் வேண்டும். ஏதாவது செய்து உடனே தனது வாழ்வை மாற்றியாக வேண்டும் என்ற குரல் ஆழமாக எழுந்தது. என்ன செய்வது, எப்படி மாற்றுவது, யாரிடம் கேட்பது, அவர் குழப்பத்தினுள் ஆழ்ந்துபோய்க் கொண்டிருந்தார்.

என்ன செய்து இதை மாற்றுவது என்று புரியவில்லை. ஆனால் மாறிவிடு மாறிவிடு என்ற அந்தக் குரல் மண்டைக்குள் சதா கேட்டுக் கொண்டேயிருந்தது. அதுவரை நிம்மதியாக உலவி வந்த தினசரிவாழ்வின் இயல்பிற்குள் அடங்கவிடாமல் அக்குரல் அவரைத் திணறடித்துக் கொண்டிருந்தது.

அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. இந்த ஆதங்கம் பற்றியோ, வேதனை குறித்தோ மனைவியோ, பிள்ளைகளோ கவலைப்படவேயில்லை. அவர்களிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாளிரவு படுக்கையில் கிடந்தபடியே மனைவியிடம் கேட்டார்:

“சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, டி.வி. பார்ப்பது, உறங்குவது என இதையே  திரும்பத் திரும்பச் செய்வது அலுப்பாகயில்லையா?”

“அலுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி ஒன்றும் இல்லையே” என்றாள்.

“நீ ஏன் இப்போது  இரட்டை சடை பின்னிக் கொள்வதில்லை? நிறைய நேரங்களில் பவுடர் கூட போட்டுக் கொள்வதில்லையே” என்று கேட்டார்.

“பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனிமேல் எதற்கு பவுடர்? ஜடைபின்னல்? வரவர கண்ணாடி பார்க்கவே அலுப்பாக இருக்கிறது. நிறைய நேரங்களில் கண்ணாடி பார்க்கும்போது அழுகை வந்துவிடுகிறது” என்றாள்.

அது நிஜம். தன்னாலும் இருபது வயதில் கண்ணாடியை ரசித்தது போல இன்று ரசிக்க முடியவில்லை. ஆழமான குற்றவுணர்ச்சி மேலோங்கிவிடுகிறது. கண்ணாடி மௌனமாகப் பல உண்மைகளை நமக்குப் புரிய வைத்து விடுகின்றது.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். காதோரம் நிறைய நரைமயிர்கள் வந்துவிட்டிருக்கின்றன. அதை மைபூசி மறைக்க விரும்பாதவள் ஆகிவிட்டாள். உடலில் இருந்த பெண்மையின் நளினங்கள் மறைந்து போய்விட்டன. தொடர்ச்சியாக ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பதன் மூலம் தனது அலுப்பைக் கடந்து போய்விடுகிறாளோ என்று தோன்றியது.

நரை மயிர்கள் பெண்களுடன் பேசும் என்று அம்மா சொல்வாள். இவளிடம் அவளது நரைமயிர் என்ன பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.

மாற வேண்டும் என்று நீ நினைக்கவில்லையா என்று கேட்க நினைத்தார். ஆனால் அதை அவளிடம் கேட்கவில்லை. அவள் தலையணையால் முகத்தை மூடியபடியே உறங்கத் துவங்கியிருந்தாள். இதே போலத்தான் இத்தனை ஆண்டுகாலமாகத் தூங்குகிறாள். அது அவளது இயல்பு. ஒருவர்  போல இன்னொருவரால் உறங்கவே முடியாது. அன்றிரவு குழப்பமான சிந்தனைகள் அவரை வாட்டி எடுக்க ஆரம்பித்தன.

சொந்த வீடு வாங்கியாகிவிட்டது. பேங்க் சேமிப்பு இருக்கிறது. பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்கிறார்கள். உடம்பில் சக்கரை நோய் வந்துவிட்டது. இனி என்ன மிச்சமிருக்கிறது. ஆனால் வாழ்வின் பாதியில் தானே வந்துநிற்கிறேன். சைக்கிள் சுற்றுபவன் ஒரே வட்டத்திற்குள் ஓய்வேயில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பது போன்றதுதான் மிச்சமிருக்கும் வாழ்க்கையா? அதுதான் நிஜமென்றால் அது எவ்வளவு பெரிய தண்டனை!

இதை அனுமதிக்கக் கூடாது, மாறிவிட வேண்டும்.

ஒருநாள் பேருந்தில் போவதற்குப் பதிலாக ஆட்டோ வில் அலுவலகம் போய் பார்த்தார். வீட்டு உணவைச் சாப்பிடாமல் பீட்சா கார்னரில் போய் பீட்சா சாப்பிட்டுப் பார்த்தார். கோடு போட்ட சட்டைக்குப் பதிலாக டீசர்ட் போட்டார். வழக்கமாகக் கேட்கும் பழைய பாடல்களுக்குப் பதிலாக ராப் பாடல்கள் கேட்கத் துவங்கினார். விடுப்பு எடுத்து ஊட்டிக்குப் போய் தனியே இருந்து வந்தார். ஆனால் இந்த மாற்றங்கள் எதுவும் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. மாறாக, மனம் பழைய விஷயங்களை ஆழமாகப் பற்றிக் கொள்ளத் துவங்கியது.

இவ்வளவுதானா வாழ்க்கை, இதற்காகவா ஓடியோடி வேலை செய்தோம். அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்கோ ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தவறை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. எதிலும் ஒன்ற முடியாத தத்தளிப்பு அவரை இப்படிக் காரணமில்லாத எண்ணங்களாகத் துரத்தியது.

***

பேருந்து கிண்டி வந்து நின்றதும் இறங்கி அவர் ராஜ் பவனை நோக்கி நடந்து போகத் துவங்கினார். பலமுறை பேருந்தில் இதைக் கடந்து போயிருக்கிறார். ஒருமுறை கூட ராஜ்பவன் உள்ளே போனது கிடையாது. இப்போது யார் கவர்னர் என்று கூட அவருக்குத் தெரியாது.

ஆர்ச் உள்ளே நடந்தபோது வெள்ளையும் காக்கியுமாக யூனிபார்ம் அணிந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை நிறுத்தி யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் மின்சாரத்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார்.  அவரை உள்ளே செல்வதற்கு அனுமதித்தார்கள். இவ்வளவு பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி சென்னைக்குள் தானிருக்கிறது என்பது வியப்பாக இருந்தது. கவர்னரின் மாளிகை என்பது பழங்கால அரண்மனை போல இருந்தது. அதைக் கடந்து உள்ளே போனபோது ஒரு இளம்பெண் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேச்சின் ஊடாகவே அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை செய்தாள்.

அவர் நடந்து உள்ளே சென்றபோது சிவப்பு ஓடு வேய்ந்த குடியிருப்புகள் தெரிந்தன. முதுமலையில் பார்த்த வனசரகர்களுக்கான குடியிருப்புகள் நினைவிற்கு வந்தன. பசுமையின் ஊடாக அமைந்த அந்த வீடுகளும் அதன் முகப்பில் பீச்சியடிக்கும் தண்ணீர்க் குழாயும்  சாலை முழுவதும் உதிர்ந்து கிடக்கும் பூக்களும் விட்டு விட்டுக் கேட்கும் குயிலின் குரலும் அந்த இடத்தை மிகுந்த ஈர்ப்புடையதாக்கியது.
மான்கள் எங்கேயிருக்கின்றன என ஒரு நடுத்தர வயது ஆளிடம் கேட்டதும் அவன் தெற்குப்பகுதியை நோக்கி கையைக் காட்டினான்.

அந்த மண்சாலையில் உள்ளே நடந்தபோது காய்ந்து போன சருகுகள் பழுத்து மக்கியிருந்த வாசனை அடித்தது. கவர்னர் மாளிகையின்  புறத்தோற்றத்திற்கு மாறாக உட்புறம் அடர்ந்த காடு ஒன்றின் பகுதி போலவே இருந்தது. அவரது காலடிச் சப்தம் கேட்டு எங்கிருந்தோ ஒரு பறவை சடசடவென சிறகடித்துப் பறந்து போனது.

அவர் ஈரம் படிந்த மண்ணில் நடந்து திரும்பியபோது காய்ந்துபோன புற்களின் ஊடாக நாலைந்து மான்கள் வெயில்பட படுத்துக் கிடப்பதைக் கண்டார். அந்த மான்கள் சோர்வுற்றிருந்தன. அதன் கண்களில் அச்சம் மேலோங்கியிருந்தது. அவை வாகனங்களின் சிறுசப்தத்திற்குக் கூட திடுக்கிட்டு எழுந்தன. நகரம் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை. சூழ்நிலைக்குப் பழகிப் போய்விடுவதுதான் மான்களின் பிரச்சினை.  தனக்கு விருப்பமான சூழ்நிலையை மான்களால் உருவாக்கி கொள்ள முடியாது.  வாழ்நாள் முழுவதும் துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான் அதன் வாழ்க்கை, எவ்வளவு பெரிய அவலமது.

மான்களைப் பார்க்கப் பார்க்க அதன் உடலில் இருந்த புள்ளிகள் உதிர்ந்து போய் அவை வெறும் ரப்பர் பொம்மைகள் போல தோன்றின. தான் காணவிரும்பியது இது போன்ற சலிப்பூட்டும் மான்களையில்லை. இவை நகரவாசிகள் வேடிக்கை பார்ப்பதற்காக  வளர்க்கப்படும் மான்கள்.

இந்த நகரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது என்பதை நினைவூட்டுவதற்காக மிச்சமிருக்கும் மான்கள். இவை குற்றவுணர்வின் சின்னங்கள். மனசாந்தியை அளிப்பதற்குப் பதிலாக இவை குற்றவுணர்வைத் தூண்டுகின்றன.

ஒரு மான் வீசி எறியப்பட்ட காகிதம் ஒன்றினை முகர்ந்து பார்த்துவிட்டு மூக்கால் உரசத் துவங்கியது. எரிச்சலூட்டும் இந்த மான்களை ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். போய்விடலாம் என்று தோன்றியது.

நிழல் விரிந்து கிடந்த மரங்களுக்கு இடையில் நடந்து வந்தபோது சிவப்பு ஓடு வேய்ந்த வீடுகள் தென்பட்டன. அதன் ஊடாகவே நடந்தார்.  ஒரு வீட்டின் வாசலில் கோடுபோட்ட ஜிப்பா அணிந்த ஒரு முதியவர் கையில் ஒரு மான்குட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது,

ஆச்சரியத்துடன் அவரை நெருங்கிப் போய் நின்றார்.

அந்த முதியவர் சிறிய பால்புட்டி ஒன்றினை மானுக்குப் புகட்டி விட்டுக் கொண்டிருந்தார். மான் புட்டிப்பால் அருந்துவது வியப்பாக இருந்தது. மான் குட்டியைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. வய-தானவர். சும்மா தொடுங்க என்றார். அவர் மான்குட்டி-யின் உடலில் கை வைத்தபோது மிருதுவாக, கோரைப் புல்லைத் தடவுவது போல இருந்தது. மானின் மூச்சுக் காற்று சீராகக் கையில் பட்டுக் கொண்டிருந்தது.

“இந்த மான்குட்டியோட தாய் ரோட்டை கிராஸ் பண்றப்போ கார்ல அடிபட்டுச் செத்துப்போச்சி. அதான் குட்டியைத் தூக்கிட்டு வந்து நான் பால்குடுத்து வளக்கேன். தானாக இரை எடுக்கிற வரைக்கும் வளர்த்து விட்டுட்டா அப்புறம்  அது புல்லைத் தின்னு வளர்ந்துக்கிடும். இப்படி எது மேலயாவது நாம அக்கறை காட்டாட்டி நாம வாழ்ந்து என்ன பிரயோசனம்? சொல்லுங்க” என்றார்.

அவர் மௌனமாக அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

இது முதுமையில் ஏற்படும் மனப்பக்குவம். மிச்சமிருக்கும் வாழ்க்கையை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அன்பைப் பற்றி பேசச் செய்கிறது. அதிகாரியாக இவர் வேலை செய்த காலத்தில் தனது அலுவலகத்தை விட்டுவிட்டு இப்படி மான்குட்டிக்குப் புட்டிப்பால் கொடுப்பாரா என்ன… சூழ்நிலையைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்கிறார். அவ்வளவே. நாளை இந்த மான்குட்டியைப் பற்றி இவர் ஒரு கட்டுரை எழுதுவார். மான்குட்டியை அணைத்தபடியே உள்ள தனது புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டி சந்தோஷப்படுவார். சுயநலம் கலந்த அன்பிது.
அவர் வெளியேறிச் சாலையில் நடந்தபோது வெயில் உச்சிக்கு வந்திருந்தது. வீடு செல்லும் பேருந்தில் ஏறிய போது ஒரு பள்ளிச் சிறுவன் அருகே இருக்கை காலியாக இருந்தது. அதில்  போய் உட்கார்ந்து கொண்டார்.

அந்த சிறுவன் சாலையை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அவனிடம் “நீ மானைப்  பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

அவன் டி.வி.யில் பார்த்திருப்பதாகச் சொல்லியதோடு, தன்னால்  நன்றாக மானை வரையமுடியும் என்றான்.

தான் ஒரு அதிசயமான நீலப்புள்ளிகள் கொண்ட மழைமானைப் பார்த்து வந்ததாகவும், அந்த மான் அமேசான் மழைக்காடுகளில் மட்டுமே வாழக்கூடியது என்றும், அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு தண்ணீரை அருந்தாது என்றும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லத் துவங்கினார். சிறுவன் வியப்போடு “அப்படியான மான் எங்கேயிருக்கிறது” என்று கேட்டான்.

தான் இப்போது தான் அதை கவர்னர் மாளிகையினுள் கண்டதாகவும், அதை மெக்சிகோவில் இருந்து கொண்டு வந்திருப்பதாகவும் கதைவிடத் துவங்கினார். அந்த சிறுவன் நீலநிறப் புள்ளிகள் எது போல இருந்தன என்று கேட்டான். அது எரியும் சுடர் போல ஒளிர்ந்தன என்று சொன்னார். அந்த சிறுவன் கண்ணை மூடிக் கொண்டு நீலப்புள்ளி கொண்ட மழைமானைப் பற்றிக் கற்பனை கொள்ளத் துவங்கினான். அதன்பிறகு அச்சிறுவன் மானைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்தை விட்டு இறங்கும்போது சிறுவனை ஏமாற்றியது மிகவும் வருத்தமாக இருந்தது. தான் நிஜமாக நீலப்புள்ளி உள்ள ஒரு மழைமானைக் கண்டிருக்கக் கூடாதா என ஆதங்கமாக இருந்தது.
வீடு வந்து சேரும்போது திடீரெனத் தோன்றியது, எதையுமே நாமாக கற்பனையில் நினைத்துக் கொள்வது தான் சுகம். நிஜம் ஒருபோதும் ருசிப்பதில்லை. தேவையில்லாமல் நம்மை நாம் அலைக்கழித்துக் கொள்கிறோம் என்று.

வீடு வந்த சேர்ந்தவுடன் அவரது மனைவி  அலுவலகப் பையை வாங்கி வைத்துவிட்டு “முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? கிட்ட வாங்க, கண்ல ஏதோ ஒட்டியிருக்கு” என்றாள்.
சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டபடியே சொன்னார்:

“அது மானோட உடம்புல இருந்து உதிர்ந்த புள்ளியாக இருக்கும். இன்னைக்குத் திடீர்னு ஆபீஸ்ல இருந்து கவர்னரைப் பார்க்கப் போகச் சொல்லிட்டாங்க. அங்கே ஒரு மழைமானைப் பார்த்தேன். அப்பா, என்ன ஒரு ஜொலிப்பு! நீ பாக்கணுமே. அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு எதையும் குடிக்காதாம்” என்று கடகடவென தனக்குத் தோன்றிய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவள் அதைக்கேட்டு சிரித்தபடியே சொன்னாள்:

“போதும் உங்க கதை. நான் ஒண்ணும் பச்சைப்பிள்ளையில்லை, எனக்கும் வயசாகுது.”

“எனக்கும்தான்” என்றபடியே அவர் சிரித்துக் கொண்டார். பிறகு அப்படி சிரித்ததற்காக மிகவும் வருத்தமாக உணர்ந்தார். அந்த வருத்தமான மனநிலையின் அடியாழத்தில் மழைமான் ஒன்று பெரும் சிறகுகளுடன் பசுமையான வனத்தில் பறந்து கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

***

0Shares
0