மாணிக்க மூக்குத்தி


இன்று காலையிலிருந்து மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்.. என்ற திரைப்படப் பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

சில பாடல்கள் அப்படித் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும். எதனால் என்று விளக்க முடியாது. பாடலின் வழியே மனது எதையெதையோ நினைவு கொள்கிறது.

இயக்குநர் பி. மாதவன் இயக்கி தயாரித்த படம் “முகூர்த்த நாள். அப்படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடலை எழுதியிருக்கிறார். பி. சுசீலா அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

பாடலைத் தனியே கேட்கையில் ஏற்படும் அனுபவம் காட்சிகளோடு பார்த்தால் கிடைப்பதில்லை.

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் பார்த்தவர்களுக்கு இந்தப் பாடல் முற்றிலும் வேறு அனுபவம் தரும் என்பதே உண்மை.

பாடலைக் காட்சிப்படுத்தும் போது மலைப்பிரதேசத்தில் ஆடி ஓடுவதாக அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாடலை ரேடியோவில் நிறைய முறை கேட்டிருக்கிறேன். அப்போது இந்தப் பாடல் மனதில் உருவாக்கிய காட்சிகள் வேறு.

எங்கள் பகுதியில் திருமணப் பத்திரிக்கையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் படம் முகப்பில் அச்சிட்டு இருப்பார்கள். முதற்பத்திரிக்கை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வைப்பதும் வழக்கம். மீனாட்சி கல்யாணம் என்பது ஊரே கூடி தெய்வத்தின் திருமணத்தில் கலந்து கொள்வதாகும். இந்தத் திருக்கல்யாணத்தைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள். சுவையான திருமண விருந்தும் உண்டு.

சில பாடல்கள் நம் நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. காலத்தின் பின்னே அழைத்துப் போய்விடுகின்றன.

மாணிக்க மூக்கு மதுரை மீனாட்சிக்கு என்று சுசீலா பாடலைத் துவங்கியவுடன் மனது மீனாட்சியின் திருக்கோலத்திற்குச் சென்றுவிடுகிறது. தோளில் கிளியோடு நிற்கும் மீனாட்சி என்றும் இளம் பெண்ணாக இருப்பவள். பேரழகின் அடையாளம்.

என் சிறுவயதில் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகையில் கிளிகளின் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருப்பேன். எவ்வளவு கிளிகள். பொற்றாமரைக் குளத்தில் நிழல்கள் நடனமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.

புதுச்சேரியில் வசிக்கும் கவிஞர் இரா. மீனாட்சி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்

மதுரை நாயகியே!

மீனாட்சித்தாயே!

படியேறி

நடை தாண்டி

குளம் சுற்றி

கிளி பார்த்து

உன்னருகே ஓடிவரும்

உன்மகளை

உன்மகனே ஏ

வழிவம்பு செய்கின்றான்

கோயிலிலும் காப்பில்லை

உன் காலத்தில்-

அழகி நீ!

எப்படி உலாப்போனாய்

இந்தக் கவிதையினை வாசிக்கையில் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் படியேறி நடை தாண்டி குளம் சுற்றி கிளி பார்த்த அனுபவம் அப்படியே கிட்டும்

தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவதென்பது பாதுகாப்புச் சோதனைகள் கட்டுப்பாடுகளைத் தாண்டி பாராளுமன்றத்திற்குள் போவது போலிருக்கிறது. கோவிலிலிருந்த தனிமையும் ஏகாந்தமும் காணாமல் போய்விட்டது.

ஆனால் இந்தப் பாடலின் வழியே பழைய மதுரையும், மீனாட்சி திருக்கல்யாண கொண்டாட்டமும் மனதில் அலையாடுகிறது.

பி.சுசீலாவின் தங்க குரலுக்கு நிகரேயில்லை.

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு

காணொளி

https://youtu.be/uuGHetzS400

0Shares
0