மாயா லின்

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வியட்நாம் யுத்த நினைவகத்தை வடிவமைத்தவர் மாயா லின் . இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சிறந்த பத்து கட்டிடக் கலைஞர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படுகிறார். அமெரிக்கர் அல்லாத ஒருவர் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஒரு நினைவுச்சின்னத்தை வடிவமைத்தது மிகவும் வியப்பானது.

எப்படி இந்தப்பணி சாத்தியமானது என மாயா லின்னைப் பற்றி Maya Lin: A Strong Clear Vision. ஆவணப்படத்தைப் பார்த்தேன். கட்டிடக்கலைஞரான லின் வியட்நாம் யுத்த நினைவுச்சின்னத்தை வடிவமைப்பதற்கான வரைபடம் தீட்டுவதில் துவங்கி அது புகழ்பெற்ற நினைவுசுவராக உருவானது வரையான போராட்டத்தை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

இன்று உலகமே கொண்டாடும் இச்சாதனையின் பின்னே வலியும், ஏமாற்றங்களும் நிரம்பிய நீண்ட போராட்டத்தை எப்படி மாயா லின் எதிர்கொண்டார் என்பதை அறிந்து கொள்ளும் போது ஒரு பக்கம் நெகிழ்வும், மறுபக்கம் நாம் நம்பும் விசயங்களுக்காக இடைவிடாமல் போராட வேண்டும் என்ற உத்வேகமும் ஒருங்கே உருவாகிறது. வாழ்க்கையில் எதையாவது சாதித்துவிட முடியும் என்று நம்பும் ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தனது பிரதான துணை போல உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றே சொல்வேன்.

மாயா லின்னின் பெற்றோர் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபுகுந்தவர்கள். அப்பா ஒரு செராமிக் கலைஞர் . அம்மா பல்கலை கழகப்பேராசிரியர். சீனாவின் முதல் பெண் கட்டிடக்கலை நிபுணரான லின் ஹ÷வானின் உறவினர் மாயா. யேல் பல்கலைகழகத்தில் படித்து இளம்வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் மாயாலின்.

1981ம் ஆண்டு வியட்நாம் யுத்ததில் இறந்து போன வீரர்களுக்கான நினைவுசின்னம் அமைப்பது என்று முடிவு செய்து அதற்கான வடிவமைப்பிற்கு உலக அளவிலான ஒரு போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு தனது வடிவமைப்பை லின் அனுப்பி வைத்தார். இவர் மனதில் இருந்த நினைவுச்சின்னத்தின் வடிவம் மிக எளிமையானது. புல்வெளியின் நடுவில் நீண்ட சுவர் எல் வடிவத்தில் அமைந்திருப்பது போல வடிவமைப்பு செய்திருந்தார்.

அது ஒரு நீண்ட சுவர். போரில் இறந்து போன ராணுவ வீரர்களின் இழப்பு காரணமாக பூமியில் உருவாக்கிய ஒரு வெடிப்பு அல்லது காயம் போல இந்த சுவர் இருக்க வேண்டும் என்று வடிவமைத்தார். நீண்ட அந்தக் கிரானைட் சுவர் முழுவதும் இறந்து போன 58261 ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பல்லாயிரம் வடிவமைப்புகளுக்கு நடுவில் தன்னை எங்கே தேர்வு செய்யப்போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு தனது மேற்படிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார்.  போட்டியின் நடுவர்களாக செயல்பட்டவர்கள் கட்டிடக்கலையின் உன்னத சாதனையாளர்கள், கலைவிமர்சகர்கள் மற்றும் யுத்த நினைவு குழுவின் பொறுப்பாளர்கள். அவர்கள் ஒன்று கூடி எளிமையும் புதுமையும் உள்ள மாயா லின்னின் வடிவமைப்பைத் தேர்வு செய்தனர்

மாயாவால் அதை நம்ப முடியவில்லை. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அதன் பின்னே பூதாகரமாகப் பிரச்சனைகள் வெடிக்க இருப்பதை அவர் அன்று உணரவேயில்லை. அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்த வடிவத்தை உருவாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற முதல்பிரச்சனை உருவானது. அதன் பிறகு இந்த வடிவம் வியட்நாம் யுத்தத்தில் இறந்து போன ராணுவ வீரர்களின் தியாகத்தை சரியாக வெளிப்படுத்தவில்லை, இது ஒரு ஏமாற்றுவேலை, சிறுபிள்ளைதனம் என்று கடுமையான சர்ச்சைகள் உருவாகின. லின் அத்தனை பிரச்சனைகளையும் எதிர் கொண்டு சந்தித்தார். இந்த விவாதங்கள், எதிர்ப்புபிரச்சாரங்கள், வாக்குவாதங்கள், ஆவணப்படத்தில் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆவேசமான எதிர்ப்பாளர்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பெண்ணான மாயாலின் மிக அமைதியாக கலைக்கு எந்த தேசமும் கிடையாது. மொழியும் கிடையாது. மனிதர்கள் தங்கள் வாழ்நாளிற்கும் பிறகும் உலகில் தங்கள் இருப்பை நிலைநிறுத்திப்போவதற்குப் பெயர் தான் கலை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தன் தரப்பு நியாயங்களைச் சொல்கிறார்.

மாயாலின்னிற்கு அப்போது வயது 21. மொத்த அமெரிக்காவே அவருக்கு எதிராக சேர்ந்து குரல் கொடுக்கிறது. இன அடையாளங்களைக் காட்டி அவமானப்படுத்துகிறார்கள். இளம் பெண் என்று பரிகசிக்கபடுகிறாள். வியட்நாம் யுத்தத்தின் ரத்த சரித்திரம் அறியாதவள் என்று அவளை ஏளனம் செய்கிறார்கள். ஆனால் அத்தனையும் தாங்கிக் கொண்டு அவள் மணிக்கணிக்கில் தனது வேலை தொடர்பான ஆவணங்கள், புத்தகங்களைப் படிக்கிறாள். முடிவில் அவள் உருவாக்கிய மாடலை சில திருத்தங்கள் செய்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். 

நினைவுசின்னம் என்பது வேடிக்கைப் பொருள் இல்லை. அதை ஒரு பகட்டான கண்காட்சி போல மாற்றுவதை தான் அனுமதிக்கமுடியாது. தனது வடிவமைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டால் மட்டுமே தான் இந்தப் பணியைத் தொடர முடியும் என்று பிடிவாதமாக இருந்தார். அது அடுத்த சர்ச்சையாகிறது. மாயா லின் அசைந்து கொடுக்கவேயில்லை. தனது படைப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருந்தார். முடிவில் அவருக்கு எதிராக உருவான எதிர்ப்பு அலை தானே அடங்கியது. அவளே வென்றாள்.

நினைவுசின்னம் கட்டுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. அது வெறும்காடு. அதைத் திருத்தி சமதளமாக்கி அதில் தன் மனதில் இருந்த நீண்ட சுவரை உருவாக்க நாட்கணக்கில் அங்கேயே இருந்தார் லின். அந்தச் சுவர் ஒரு நீண்ட கிரானைட் கல்லில் உருவாக்கபட வேண்டும் என்பதற்காக தரமான கிரனைட் கற்களைத் தேடி சேகரித்து கூடவே இருந்து அறுத்து சோதனை செய்து பார்த்திருக்கிறார். ஒரு காட்சியில் கிரனைட் கல்லை அவர் தடவிப்பார்க்கும் போது ஒரு குழந்தையை கொஞ்சுவது போலவே இருக்கிறது.

பொம்மை போல சிறிய உருவம் கொண்ட மாயாலின் மாபெரும் இயந்திரம் ஒன்றின் பற்சக்கரத்தின் ஊடாகச் சென்று கற்களைப் பரிசோதிக்கும் காட்சி மனித உழைப்பின் உன்னதத்தை அடையாளம் காட்டும் காட்சித் துணுக்கு என்றே சொல்வேன். மாயா உழைக்கிறார். இந்த இரண்டு சொற்கள் சொல்வதற்கு எளிமையாக இருக்கின்றன. ஆனால் அந்த வலி, சிரத்தை. அக்கறை. சொல்லில் அடங்காதது. தனது ஒரு கனவை நனவாக்க ஒரு பெண் படும் இடையில்லாத போராட்டம் என்பதாக அந்தப்பணியிருக்கிறது.

அடுத்த சர்ச்சை உருவாகிறது. இந்த கல்லில் எந்த வரிசையில் பெயர்களைப் பதிவு செய்வது. ஐம்பதியெட்டாயிரம் பெயர்கள் இருக்கின்றன. அதை எப்படி எழுதுவது. என்ன அச்சுஉரு அதற்கு தேர்வு செய்வது. பெயர்ப்பட்டியல் எப்படித் துவங்கி எப்படி முடிவடைய வேண்டும் என்று இதன் முன்பாக உள்ள நினைவுசின்னங்களை தேடித்தேடி பார்த்து, அதிலிருந்து தனக்கான ஒரு வரிசையை அவர் உருவாக்குகிறார்.

உடனே வியட்நாம் யுத்ததில் கலந்து கொண்ட வீரர்கள் இது குறித்து எதிர்ப்பை ஏற்படுத்துகிறார்கள். மாயா மிக அமைதியாக உங்கள் சகோதரன், தந்தை, நண்பன் என்று இறந்து போன மனிதருக்காக நீங்கள் இரண்டு நிமிசம் செலவழிக்க கூட தயராக இல்லையா என்று கேட்கிறாள். அது பலரின் மனசாட்சியைத் தொடுகிறது. நினைவுச்சின்னத்தின்  நுழைவு வாயிலில் ஒரு முகப்பு புத்தகம் உள்ளது. அதில் சுவரின் எந்த இடத்தில் எந்த வீரரின் பெயர் உள்ளது என்ற பட்டியல் இடம்பெற்றிருக்கிறது. அதைப் பார்த்து அந்த இடத்தில் நின்று உரிய அஞ்சலி செலுத்தும்படியாக அவர் நினைவு சின்னத்தை வடிவமைத்தார்.

இந்தப்பணிக்கு ஏராளமான பொருட்செலவு. காத்திருப்பு. ஏமாற்றம், சோர்வு,  ஆனால் லின் புதியதாக ஒன்றினை உருவாக்குவதில் உள்ள ஈடுபாட்டை உடனிருந்தவர்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு அவள் அதை விரும்பிய படியே அதைச் செய்ய முடிக்க போராடுகிறார்கள். காலக்கெடு நெருக்குகிறது. ஒரு இருபத்தியோறு வயது பெண் ஆயிரம் பேர்களை வேலை வாங்குகிறாள். ஒருவரிடம் கூட ஒரு சுடுசொல் பேசவில்லை. தானும் உழைப்பாளியின் உடையை அணிந்து கொண்டு அவர்களோடு ஒரு ஆளாக ஒடுகிறாள். சேர்ந்து வேலை செய்பவர்கள் அவளது அக்கறை மற்றும் தீவிரத்தை புரிந்து கொண்டு முழுஈடுபாட்டுடன் வேலை செய்கிறார்கள்.

நினைவுசின்னம் கட்டி முடிக்கப்படுகிறது. அதை பார்வையிட வந்த யுத்த நினைவுக்குழுவினர் அதை கண்டு கண்ணீர் விடுகிறார்கள். உணர்ச்சி பெருக்கில் லின்னை கட்டிக் கொள்கிறார்கள். பொதுமக்களின் பார்வைக்காக நினைவுசின்னம் திறக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள். உணர்ச்சி பொங்க அந்த கல்லைத் தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள். மாயாலின்னிற்கு பாராட்டுவிழா நடக்கிறது. கால்கள் இல்லாத ஒரு ராணுவ வீரன் அவளை பார்த்து தாரை தாரையாக கண்ணீர் விடுகிறான். பெரும் திரளான கூட்டம் கூடி அவளை வாழ்த்துகிறது. அங்கே உரை நிகழ்த்த வருகிறாள் மாயாலின். இது நினைவுச்சுவர். தன்னால் உருவாக்கபட்டது என்பதை விட தானும் அந்த நினைவின் ஒருபகுதியாக இருக்கிறேன் என்பது சந்தோஷம் தருகிறது. இந்த பணியில் என்னோடு சேர்ந்து உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். என்று ஐந்து நிமிசத்தில் பேசி முடித்து அமர்கிறாள். அவள் கண்கள் கலங்கியிருக்கின்றன.

மாயா லின் அன்றிலிருந்து நவீன கட்டிடக்கலையின் புதிய சாதனையாளராக வலம் வரத் துவங்குகிறார். அதன் பிறகு அவர் உருவாக்கிய புதிய கலை அரங்குகள், ஒவியக்கூடங்கள், அலுவலக கட்டிடங்கள் என்று ஒவ்வொன்றும் ஒரு தனித்துவத்துடன் இருக்கின்றன.  லின் அத்தனை சவால்களையும் எதிர் கொண்டு ஜெயித்துவிட்டு எதுவும் அறியாத சிறு பெண் போல குடுகுடுவென ஒடியாடிக் கொண்டிருக்கிறாள். தனது வீட்டிற்குள் அவர் வடிவமைத்துள்ள காட்சிகலைப்பொருட்களும், கண்ணாடித்தூள்களை கொண்டு அவள் உருவாக்கிய மாபெரும் சிற்பமும்  வியப்பு அளிக்கின்றன.

கட்டிடங்களை இயற்கையோடு இணைந்த எளிய வடிவமைப்பாகவே அவர் உருவாக்குகிறார். தனது கலையின் பின்னே பௌத்தமும் மரபும், வாழ்க்கை குறித்த ஆழ்ந்த தத்துவப்பார்வையும் இருக்கிறது. எனும் மாயாலின் ஒரு கட்டிடக்கலைஞர் கவித்துவ ஈடுபாடும் தத்துவப் பரிச்சயமும், தூய எண்ணங்களும் கொண்டவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் உருவாக்கிய கட்டிடம் வெறுமையின் அடையாளமாகவே இருக்கும் என்று சொல்கிறார்.

தற்போது நியூயார்க்கில் தனது சொந்த நிறுவனத்தை நடத்திவரும் மாயாலின்  இன்னும் தன்னுள் நிறைய கனவுகள் மீதமிருக்கின்றன என்று சொல்வதோடு இந்த ஆவணப்படம் நிறைவுபெறுகிறது. சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற இந்தப்படம் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு மலையேறுபவர்கள் மேற்கொண்ட சாகசப்படத்தை விடவும் அதிக விறுவிறுப்பும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது.

நமது வாழ்வெளி என்பது  நம்மைச் சுற்றி வாழும் பல்லுயிர்கள், இயற்கைவளம், சகமனித வாழ்வு யாவும் குறித்த அக்கறையும் கவனிப்பும் கொண்டதாகவே உருவாக்கபட வேண்டும்.  இது வெறும் மண்ணோடு தொடர்புடைய பிரச்சனை மட்டுமில்லை. நமது மன சந்தோஷத்தோடு கூடிய பிரச்சனை. ஆகவே வீடு, கட்டிடம், கலைக்கூடம் என்று எந்த வடிவமாக இருந்தாலும் அது தனக்கான வாழ்வைக் கொண்டிருக்கிறது. அதற்குரிய மரியாதையும் அக்கறையும் நாம் அவசியம் கொடுத்தாக வேண்டும் என்கிறார் மாயா லின்.

இன்று சென்னை போன்ற பெருநகரச்சூழலில் நாம் மறந்து போன முக்கிய விசயம் இது தானே

***

0Shares
0