மார்க்வெஸின் வாழ்க்கை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் வாழ்க்கை வரலாறு நான்கு வேறுபட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிறது, SUSAN MUADD DARRAJ, PELAYO RUBEN, GERALD MARTIN, ILAN STAVANS ஆகிய நால்வரில் ஜெரால்ட் மார்ட்டின் எழுதிய வாழ்க்கை வரலாறே அதிகாரப்பூர்வமானது. 642 பக்கங்கள் கொண்ட விரிவான புத்தகம்.

மார்க்வெஸ் தனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை Living to Tell the Tale என்று வெளியிட்டிருக்கிறார். அந்த நூல் முழுமையானதில்லை. அதன் இரண்டாவது பகுதி வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மார்க்வெஸ் இறுதி நாட்கள் வரை அது வெளியாகவில்லை. Living to Tell the Tale நூலின் அட்டைப்படத்தில் மார்க்வெஸின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருக்கும். அது எப்போது எடுத்தபடம். எங்கே எடுத்தார்கள் என்ற விபரங்களைத் தேடியே ஜெரால்ட் மார்டின் நூலை வாங்கினேன்.

மார்க்வெஸ் என் விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவரது எல்லா நூல்களையும் வைத்திருக்கிறேன். இதில் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் ஸ்பானிய பதிப்பும் வைத்திருக்கிறேன். ஸ்பானிஷ் படிக்கத் தெரியாத போதும் என் விருப்பத்திற்குரிய படைப்பாளியின் மூலவடிவம் என்பதற்காக வைத்திருக்கிறேன்.

ஜெரால்ட் மார்டின் மார்க்வெஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காகப் பதினேழு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். மார்க்வெஸ் குடும்பத்தினர் மற்றும அவரது சொந்த ஊர். நண்பர்கள். சக படைப்பாளிகள். மார்க்வெஸ் பயணித்த இடங்கள். பணியாற்றிய அலுவலகங்கள். உடன் வேலை செய்தவர்கள் என்று தேடித்தேடி ஆய்வு செய்திருக்கிறார். ஏழாயிரம் அடிக்குறிப்புகள் உள்ளதாக நூலை எழுதினேன். திருத்தம் செய்து திருத்தம் செய்து இறுதி வடிவம் உருவாக்கப்பட்டது என்கிறார் ஜெரால்ட் மார்டின்.

எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பொறுத்தவரை தஸ்தாயெவ்ஸ்கியை பற்றி ஜோசப் பிராங் எழுதியது தான் மிகச்சிறப்பான புத்தகம். அதை விஞ்ச இதுவரை ஒரு புத்தகம் எழுதப்படவில்லை. ஆனால் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல்கள் வரிசையில் இடம்பெறத் தகுதியுள்ளதாக ஜெரால்ட் மார்டின் தனது நூலை எழுதியிருக்கிறார். இந்த வாழ்க்கை வரலாற்றின் சிறப்பு மார்க்வெஸ் போன்ற மொழிநடையிலே எழுதப்பட்டிருக்கிறது

காலத்தின் முன்பின்னாகச் சென்று எப்படி மார்க்வெஸ் கதைகள் எழுதுவாரோ அது போலவே அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. கூடுதலாக அவரது புனைவுலகிற்கும் வாழ்க்கைக்குமான தொடர்புகள் அழகாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

மார்க்வெஸின் புனைவுகளை வாசிக்கும் போது இத்தனை விசித்திரமாக எப்படி அவரால் எழுத முடிகிறது என்ற வியப்பே மேலோங்கும். ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் இந்த விசித்திரங்கள் யாவும் அவரது வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களிலிருந்தே உருமாற்றப்பட்டிருக்கிறது. யதார்த்தமான நிகழ்வுகளைத் தான் அவர் மாயமாக மாற்றியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது

தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் வரும் அர்காதியா குடும்ப வரலாறு மார்க்வெஸ் குடும்ப வரலாற்றின் மறு உருவாக்கமே. யுனைடெட் புரூட் கம்பெனி என்ற வாழைப்பழ நிறுவனமும் அவரது சொந்த ஊரில் இருந்த நிறுவனமே. தனது பால்ய காலத்தைத் தாத்தா வீட்டில் கழித்த மார்க்வெஸ் தாத்தாவின் ஆளுமையை வியந்து பேசுகிறார். அது போலவே தாத்தா வீடு அவரது மனதில் ஆழமான படிமமாகப் பதிந்து போயிருக்கிறது. அவரது முதல் நாவலே அந்த வீட்டைப்பற்றித் தான் எழுத விரும்பினார். அவரது தாத்தா ஒய்வு பெற்ற ராணுவ வீரர். தாத்தாவின் ரகசிய காதலிகளையும் அந்தக் காதலிகள் வழியாக அவருக்குப் பிறந்த கள்ளக்குழந்தைகளையும் மார்க்வெஸ் பள்ளி நாட்களிலே அறிந்திருக்கிறார். அவை தான் பின்னாளில் அவரது புனைவெழுத்திலும் வெளிப்பட்டன.

மார்க்வெஸின் அப்பா அவரது அம்மாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கதையைத் தனி நூலாக லீ ஆண்டர்சன் எழுதியிருக்கிறார். அதில் தந்தி அலுவலகத்தில் வேலை செய்த மார்க்வெஸின் அப்பா எப்படி அவரது அம்மாவை உருகி உருகி காதலித்தார் என்பது அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

மார்கவெஸிற்கு அவரது தந்தையின் மீது பெரிய ஈடுபாடு இல்லை. அவரே எழுதிய வாழ்க்கை வரலாற்றில் கூட அம்மா தான் முக்கியப் பங்கு வகிக்கிறார். தந்தி அலுவலகத்தை விட்டு விலகிய அவரது தந்தை ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றினார். அத்துடன் பார்மசி ஒன்றிலும் பணியாற்றியிருக்கிறார். மருத்துவராகப் பணியாற்றிய நாட்களில் நோயாளிகளாக வந்த இளம்பெண் ஒருத்தியோடு நெருக்கமாகப் பழகி வன்புணர்ச்சி செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கிறார். அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு தான் உறவு கொண்டேன் என்று மார்க்வெஸின் தந்தை ஒத்துக் கொண்டு அந்தப் பெண்ணிற்கு உரிய நஷ்ட ஈடு தர ஒத்துக் கொண்டதால் விஷயம் அத்தோடு முடிந்து போனது.

தனது நேர்காணல் ஒன்றில் தாத்தாவைத் தவிர வேறு எவரது ஆளுமையும் தன்னைப் பாதிக்கவில்லை. தந்தை என்பது வெறும் பெயராக மட்டுமே மனதில் பதிந்து போயிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் மார்க்வெஸ்.

தாத்தா வீட்டிலிருந்த அத்தைகள். வீட்டுவேலைக்காரப் பெண்கள். உறவினர்கள். ஊருக்கு வந்த சர்க்கஸ். அதிலிருந்த கோமாளிகள். உள்ளூர் சினிமா தியேட்டர். ஊரில் நடந்த கொலைகள். இவையே தன்னைப் பாதித்த விஷயங்கள். என்கிறார்

மார்க்வெஸின் முழுப்பெயர் கேபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் , இவரது மனைவி மெர்செடஸ். பள்ளி நாட்களிலிருந்து அவரை மார்க்வெஸிற்குத் தெரியும். நீண்ட காலக் காதலின் பிறகு அவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்தக் காதலை ஜெரால்ட் மார்டின் விரிவாக விளக்கியிருக்கிறார்

கொலம்பியாவின் அராக்கடகா தான் அவரது சொந்த ஊர். 1927 ஆம் அண்டு மார்ச் 6 ம் தேதி கேப்ரியல் எலிஜியோ கார்சியா மற்றும் லூயிசா சாண்டியாகா மார்க்வெஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

தாத்தா கர்னல் நிகோலாஸ் ரிக்கார்டோ மார்க்வெஸ் தான் அவரது ஆதர்சம். வேலை காரணமாக அவரைத் தாத்தா வீட்டில் வளர விட்டுப் பெற்றோர்கள் வடக்குக் கொலம்பியாவில் உள்ள நகராட்சியான பராகிராவில்லாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். தனது ஆறாவது வயதில் தான் அம்மாவை மறுபடி சந்தித்தார் மார்க்வெஸ். 1937 இல், அவரது தாத்தா இறந்ததையடுத்து மார்க்வெஸின் குடும்பம் பராகிராவில்லாவில் வசிக்கத் துவங்கியது.

மார்க்வெஸின் பள்ளி வாழ்க்கையும் போட்டிகளில் கலந்து கொண்டு அவர் பரிசுகள் பெற்றதும் பள்ளி இறுதி படிக்கையில் கவிதைகள் எழுத துவங்கியதும் தனது காதலி மெர்சிடிஸை பற்றி எழுதிய காதல்கவிதைகளை வேறு புனைபெயரில் வெளியிட்டதையும் மார்டின் பதிவு செய்திருக்கிறார்

சட்டம் படிக்கப்போன நாட்களும் அரசியல் ஈடுபாடும் லத்தீன் அமெரிக்காவின் சமூக அரசியல் மாற்றங்களும் நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

மார்க்வெஸ் பள்ளி இறுதி படிக்கையில் தஸ்தாயெவ்ஸ்கியின் The Double நாவலைப் பரிசாகப் பெறுகிறார். அந்த நாவல் அவருக்குள் ஆழமான பாதிப்பை உருவாக்கியது. பின்னாளில் காப்காவின் சிறுகதை தொகுப்பான The Metamorphosisயை வாசித்த போது தஸ்தாயெவ்ஸ்கியும் காப்காவும் ஒரு மனிதனின் இரட்டை நிலை பற்றிப் பேசுவதை உணர்ந்த மார்க்வெஸ் புனைவின் ஆதாரம் எதுவென்று அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். காப்காவின் கதைகள் தனது பாட்டி சொல்லும் கதைகள் போல இருப்பதாக அவருக்குத் தோன்றியது. காரணம் அவரது பாட்டி விசித்திரமான கதைகள் சொல்லக்கூடியவர். ஆவிகள் மற்றும் விநோத உருவங்கள் பற்றிப் பாட்டி நிறையக் கதைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த நினைவும் புனைவும் காப்காவை வாசிக்கையில் உணர முடிந்ததாக மார்க்வெஸ் கூறுகிறார்.

மார்க்வெஸின் சிறுகதைகள் அவரது சொந்த வாழ்வின் நிகழ்வுகளில் இருந்தே உருவாகின. ஒட்டுமொத்த அவரது படைப்புலகினை எடுத்துக் கொண்டால் அதில் எழுபது சதவீதம் அவரது குடும்பத்திலும் ஊரிலும் நடந்த விஷயங்களில் இருந்தே புனைவை உருவாக்கியிருக்கிறார். வழக்கமாக எழுத்தாளர்கள் நடந்தவற்றை அப்படியே பதிவு செய்யும் போது மார்க்வெஸ் தனது கற்பனையின் வழியே நடந்த நிகழ்வுகளுக்குப் புதியதொரு பரிமாணமும் மாயமும் உருவாக்குகிறார். அதுவே அவரது தனிச்சிறப்பு.

தாத்தா வீடும் அங்கிருந்த கொய்யா மரங்களும் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த பணியாளர்களும், வரி வசூல் செய்ய வந்தவர்களும், தேவாலயத்தில் நடந்த நிகழ்வுகளும் யுனைடெட் பழக்கம்பெனியில் நடந்த துப்பாக்கிச் சூடும் தன்னால் ஒரு போதும் மறக்கமுடியாதது. ஒருவகையில் அது தான் தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலாக உருவானது என்கிறார்

மார்க்வெஸின் தாத்தா தான் No One Writes to the Colonel நாவலில் வரும் ஒய்வு பெற்ற கர்னல். தனது யுத்தசேவைக்கான பென்சன் வருகிறதா என்று காத்துக் கொண்டிருக்கும் கர்னல் அவரது தாத்தாவின் மறு உருவமே. ஒவ்வொரு வியாழன் அன்றும் தாத்தா கர்னல் நிகோலாஸ் ரிக்கார்டோ மார்க்வெஸ் தபால்நிலையத்திற்குப் போய்ப் பென்சன் வந்துள்ளதாக என்று விசாரித்து வருவதை வழக்கமாக வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். தாத்தாவிற்கும் சண்டை சேவல்கள் மீது ஈடுபாடு இருந்தது.

மார்க்வெஸ் புகழ்பெறத்துவங்கிய பிறகு பணம் கொட்டத்துவங்கியது. ஒரு எழுத்தாளராக அவர் அளவிற்குப் பணம் சம்பாதித்தவர்கள் குறைவு. தனது வாழ்நாளில் அவர் ஏழு வீடுகளை வாங்கியிருந்தார். ஒவ்வொன்றும் ஒரு நாட்டில். எல்லா வீட்டிலும் அவரது எழுதும் அறை ஒன்று போலவே உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு நேர்காணலுக்கு ஐம்பதாயிரம் டாலர் பணம் கேட்டார் மார்க்வெஸ். இன்னொரு புறம் அமெரிக்க அதிபர். பிரான்ஸ் அதிபர். கியூபாவின் அதிபர் என்று அவரது நண்பர்களின் பட்டியல் மிகவும் உயர்வானது. காஸ்ட்ரோவிற்காகப் பலமுறை தூதுவராகப் பணியாற்றியிருக்கிறார். 23 மொழிகளில் இவரது நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் 45 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. கள்ளபிரதிகளின் எண்ணிக்கை இதில் பாதி இருக்கக் கூடும். அது கணக்கில் சேர்க்கப்படவில்லை. தனது ராயல்டி மற்றும் திரைப்பட உரிமை, நாடக உரிமை, தொலைக்காட்சி உரிமை போன்றவற்றிலிருந்து ஆண்டுக்கு முப்பது கோடிக்கும் அதிகமாக வருவாய் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெரால்ட் மார்டின் எழுதிய வாழ்க்கை வரலாறு மார்க்வெஸை புரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்தின் பின்புலத்தைத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவி செய்கிறது. அத்துடன் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என்ற ஆளுமை எப்படி உருவானார் என்பதையும் அழகான சித்திரமாகக் கண்முன்னே விரித்துக் காட்டுகிறது

தமிழில் முக்கியமான படைப்பாளிகளுக்குக் கூட வாழ்க்கை வரலாறு கிடையாது. தி.ஜானகிராமனைப் பற்றி நூலின் பின்னட்டை குறிப்புகள் தவிர வேறு எதையும் நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. சம்பத்தின் பெயர் தான் நமக்கு அறிமுகம். சம்பத் என்ன செய்தார். என்ன படித்தார். யார் அவரது ஆதர்ச படைப்பாளிகள் எதுவும் நமக்குத் தெரியாது.

மார்க்வெஸின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் ஒரு ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. GABO: THE CREATION OF GABRIEL GARCIA MARQUEZ என்ற அந்த ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அந்த ஆவணப்படம் சமகால விஷயங்களை முதன்மைப்படுத்தி அங்கிருந்து கடந்தகாலத்திற்குள் செல்கிறது. அதைவிடவும் ஜெரால்ட் மார்டின் நூல் நமக்கு அதிக நெருக்கத்தைத் தருகிறது என்பதே நிஜம்.

••

0Shares
0