மார்க்ஸின் மகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸின் இளமைக்காலத்தை முதன்மைப்படுத்தி The Young Karl Marx என்றொரு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்ல் மார்க்ஸின் இளைய மகள் எலினார் வாழ்க்கையை மையப்படுத்தி Miss Marx என்ற இத்தாலியப் படம் வெளியாகியுள்ளது.

2020ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் பெண் இயக்குநர் சுசனா நிச்சியாரெல்லி. படம் எலினார் தனது தந்தை மார்க்ஸின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலின் முன்பாக நின்றபடியே அவரைப்பற்றியும் தனது தாய் ஜென்னி பற்றியும் நினைவுகொள்வதில் துவங்குகிறது.

தனது தந்தையின் காதலை வியந்தோதும் எலினார் தாயும் தந்தையும் திருமணம் செய்து கொள்ள ஏழு ஆண்டுகள் காத்து கிடந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு போதும் ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ ஏற்படவில்லை. தாயின் மரணம் தனது தந்தையை மிகவும் பாதித்தது. அவரால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவரது உடல் நலம் கெட்டதற்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம். கடினமான, நெருக்கடியான, சூழலுக்குள் வாழ்ந்தபடியே அவர் தான் விரும்பிய கனவுகளைப் பூர்த்தி செய்தார். படிப்பதற்கும் ஆய்விற்குமாகத் தனது நாட்களைக் கழித்தார். இந்தத் தருணத்தில் அவருக்குத் துணை நின்ற நண்பர்கள் ஏங்கெல்ஸ். ஹெலன் டெமுத் மற்றும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன் என எலினார் உணர்ச்சிப்பூர்வமாக உரையை நிகழ்த்துகிறார்

எலினார் 1855 ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்தார். அவருக்கு இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மார்க்ஸின் குடும்பமே ஷேக்ஸ்பியர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. ஆகவே எலினார் நாடகம் நடிப்பதிலும் விருப்பம் கொண்டிருந்தார்.

மூன்று வயதிலே எலினார் மனப்பாடமாக ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சொல்லக்கூடியவர். தனது மகளுக்கு ஜெர்மன் மற்றும் பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக் கொடுத்தார் மார்க்ஸ். தனது பதினாறு வயதில் எலினார் மார்க்ஸின் உதவியாளராகச் செயல்பட்டார். தந்தையோடு இணைந்து கூட்டங்களுக்குச் சென்றார். 

தனது பதினேழாவது வயதில் தந்தையின் நண்பரும் தன்னைவிடப் பல வருஷங்கள் வயதில் மூத்த தோழருமான ஹிப்போலைட் லிசாகரேயை காதலித்தார். அதை மார்க்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சில ஆண்டுகள் குடும்பத்தை விட்டு வெளியேறி எலினோர் பிரைட்டனில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார்

1880 ஆம் ஆண்டில் மார்க்ஸ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி தந்த போதும் எலினார் தன் காதல்உறவை மறுபரிசீலனை செய்வதாகக் கூறி அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை

பிரெஞ்சிலிருந்து மேடம்பவாரி நாவலை எலினார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவர் இப்சனின் பொம்மை வீடு நாடகத்தை மொழியாக்கம் செய்து மேடையேற்றுகிறார்

தனது தந்தையின் வழியில் தொழிலாளர்கள் நலனுக்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடுகிறார் எலினார். படத்தின் துவக்க காட்சியில் அவெலிங்கோடு அமெரிக்காவிற்குப் பயணம் செய்து அங்குள்ள பல்வேறு தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டறிகிறார். அவர்களின் உரிமை. மற்றும் பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதுகிறார்.

இந்த நாட்களில் அவெலிங்கோடு ஏற்பட்ட காதல் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அவர்களின் அமெரிக்கப் பயணத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சியே பணஉதவி செய்கிறது. கட்சி செலவில் ஆடம்பரமாகப் பூக்களை வாங்கிக் குவித்துத் தன்காதல் விளையாட்டினை நிகழ்த்திய அவெலிங் மீது விசாரணை நடக்கிறது. அது எலினாரை குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது.

படம் 1883 இல் தொடங்கி 1898 இல் முடிவடைகிறது, இதன் ஊடாக எலினோரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் தீவிரம் காட்டிய எலினார் அதற்காகப் இருண்ட உலகமாக கருதப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு குழந்தை உழைப்பிற்குத் தடைவிதிக்கும்படியான கோரிக்கைகளை முன்வைக்கிறார். அதனை ஏற்க மறுத்து பெற்றோர்களும் ஆலை நிர்வாகிகளும் அவருடன் சண்டையிடுகிறார்கள்.

எட்வர்ட் அவெலிங் வசீகரமானவர் மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஆதரிக்கக் கூடியவர் ஆனால் ஊதாரி மற்றும் அபின் அடிமை..ஏற்கனவே திருமணமானவர் இவற்றை அறிந்தும் அவர் மீது கொண்ட காதலால் அவருடன் இணைந்து வாழுகிறார். கடைசிவரை எலினார் திருமணம் செய்து கொள்ளவேயில்லை.

ஊதாரித்தனமான வாழ்க்கையால் அவெலிங்கிற்குக் கடன் அதிகமாகிறது. ஏங்கெல்ஸ் உதவி செய்ய முன்வருகிறார். ஆனால் அதை எலினார் ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் அவெலிங்கின் உடல்நிலை மோசமாகிறது. இந்த நெருக்கடிகள் எலினாரை பாதிக்கின்றன. உடனிருந்து பணிவிடை செய்யும் நாளில் அவெலிங்கால் ஏமாற்றப்பட்ட பெண்ணை சந்திக்கிறாள் எலினாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற உண்மையை ஆழ்ந்து உணருகிறாள்.

படத்தின் ஒரு காட்சியில் அவெலிங கவிஞர் ஷெல்லி உயிரோடு இருந்திருந்தால் அவர் இந்நேரம் இடதுசாரி இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டிருப்பார் என்கிறார். அது சரியானதே என்றும் எலினாரும் சொல்கிறார். ஷெல்லியே அவர்கள் இருவரையும் இணைக்கும் புள்ளி.

எலினாரின் சொந்தவாழ்க்கை.. அதில் அடைந்த ஏமாற்றம். அவெலிங்கால் ஏமாற்றப்பட்ட பெண்கள். இதையே படம் அதிக அளவில் விவரிக்கிறது. மார்க்ஸின் ஆளுமையோ, அவரிடமிருந்து எலினார் பெற்றுக் கொண்ட விஷயங்களோ அதிகமில்லை. இது போலவே ஏங்கல்ஸ் உடன் எலினாருக்கு இருந்த ஆழ்ந்த நட்பு. ஏங்கெல்ஸ் செய்த உதவிகள். அதிகம் சித்தரிக்கப்படவில்லை. ஆனால் ஏங்கெல்ஸின் கடைசி நாட்கள் படத்தில் இடம்பெறுகின்றன. ஹெலன்டெமூத்தின் மகன் பிரெடரிக்  பற்றி அவர் சொல்லும் உண்மை, அதை அறிந்த எலினார் கொள்ளும் பரிதவிப்பு என அக்காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கபட்டிருக்கிறது.

தந்தையின் நிழலில் வாழ்ந்த எலினார் காதலின் நிழலில் வாழும் போது அடைந்த ஏமாற்றத்தையே படம் பெரிதும் விவரிக்கிறது. இந்தத் துயர வாழ்க்கையின் கசப்பினால் எலினார் தனது 43 வயதில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

படம் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்துடன் அன்றைய கால வீதிகளை, தொழிற்சாலைகளை வீடுகளைச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் புத்தகங்களும் காகிதங்களும் இறைந்து கிடக்கும் மார்க்ஸின் படிப்பறை வெகு அழகாக இருக்கிறது. ஆவணக்காட்சிகளின் உதவியோடு கடந்தகால நிகழ்வுகளை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்..

படத்தின் ஒரு காட்சியில் எட்வர்ட் அவெலிங் சுயநலமானவர். உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரைத் தூக்கி எறிந்துவிடு என்று ஆலிவ் ஆலோசனை சொல்கிறாள். அவள் சொல்வது சரி என உணர்ந்தபோதும் எலினார் எட்வர்டை விட்டுப்பிரியவில்லை.

ஒரு காட்சியில் எட்வர்ட் முன்பாக அவனது பொய்களை எலினார் சுட்டிக்காட்டுகிறார். அவனோ தன் காதல் நிஜம் என்று பொய்யாக நடிக்கிறான். அறிந்தே எலினார் இந்த மாயவலையினுள் சிக்கிக் கொள்கிறாள்.

போராட்ட குணமும் சுயசிந்தனையும் கொண்ட எலினார் போன்றவர்களும் ஏன் இப்படி ஏமாந்து தன் வாழ்க்கையை இழந்தார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.

எலினாரின் தனிமையும் ஏமாற்றம் நிறைந்த காதல் வாழ்க்கையும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. எலினாராக நடித்துள்ள Romola Garai சிறப்பாக நடித்திருக்கிறார்,

எலினாரின் வாழ்க்கை பல்வகையில் மேடம் பவாரியை நினைவுபடுத்துகிறது. மேடம் பவாரியின் முடிவும் இப்படி தானிருக்கும்.

0Shares
0