மாற்ற முடியாத விஷயங்கள்

இஸ்ரேலிய எழுத்தாளர், அமோஸ் ஓஸின் நேர்காணல்கள் தொகுப்பு. What Makes an Apple?: Six Conversations about Writing, Love, Guilt, and Other Pleasures

 இந்த நேர்காணல்களில் தனது எழுத்து, பால்யகால நினைவுகள். காதல் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நேர்காணலை எடுத்துள்ள ஷிரா ஹதாத் அமோஸை ஆழ்ந்து வாசித்துச் சரியான கேள்விகளை முன்வைக்கிறார். ஓஸின் பதில்களை ஏற்றுக் கொள்ள முடியாது என முகத்துக்கு நேராக மறுக்கிறார். அத்துடன் அவரது முந்தைய நேர்காணல்களில் சொன்ன பதிலை இடைவெட்டி நினைவுபடுத்துகிறார்.

அமோஸ் ஓஸ் பெரிதும் அசோகமித்ரனை நினைவுபடுத்துகிறார். குறிப்பாகத் தனது குடும்பம் மற்றும் அன்றாட வாழ்க்கை பற்றிய அசோகமித்ரனின் பதிவுகளில் காணப்படும் அதே கேலி. கிண்டலை ஓஸிடமும் காணமுடிகிறது.

அமோஸ் ஓஸின் ஹீப்ரு இலக்கியப் பேராசிரியராகவும் இருந்தவர். அவரது புகழ்பெற்ற நாவல் A Tale of Love and Darkness . தனது அன்னையின் தற்கொலையை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதியிருக்கிறார்.

அந்த நாவலின் ஒரு இடத்தில் சிறுவனான ஓஸ் தனது அன்னையிடம் நான் பொய் சொல்லலாமா அம்மா என்று கேட்கிறார். அம்மா அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு சில நேரங்களில் பொய் சொல்லலாம் என்கிறார். பொய் குறித்த குற்றவுணர்விலிருந்து அந்தச் சிறுவன் விடுபடுகிறான். இந்த நேர்காணலில் அமோஸ் பொய் சொல்வது படைப்பாற்றலின் முக்கிய அம்சம் என்று குறிப்பிடுகிறார்.

காதல், பாலுறவு சார்ந்த விருப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசும் ஒஸ் தனது பெயரை மாற்றிக் கொண்டது மற்றும் ஜெருசலேம் நகரினைப் பற்றிய நினைவுகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

ஒரு எழுத்தாளராகத் தனது அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் எழுதும் முறை அவர் குறிப்பிடுவது முக்கியமானது. தினமும் காலை நாலரை மணிக்கு எழுந்து இருண்ட வீதியில் நடைபயிற்சிக்குச் செல்லும் அவரது மாறாத பழக்கம் எழுதுவதற்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை விளக்குகிறார். தான் ஒரு போதும் அலாரம் வைத்து எழுந்து கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட இந்தப் பழக்கம் மாறாதது என்கிறார்.

 கிட்டதட்ட இது போன்ற பழக்கத்தையே ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாமியும் கைக்கொள்கிறார். எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்குவது. அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ஓஸ் அழுத்தமாக வலியுறுத்துகிறார்

ஒரு நாள் விடிகாலையில் அப்படி நடைபயிற்சிக்குச் செல்லும் போது ஒரு வீட்டில் எரியும் விளக்கையும் இருட்டில் நின்றபடி சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணையும் காண்கிறார். அந்தக் காட்சி ஒரு கதையில் வருவது போலிருந்தது என்கிறார்.

அந்தப் பெண் எதற்காக இருட்டில் நிற்கிறாள். என்ன பிரச்சனை என்று அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததாகவும் கூறும் ஓஸ் அவளைப் பற்றி உடனே கதை எதையும் எழுதவில்லை. ஆனால் ஒரு நாள் அவள் நிச்சயம் என் படைப்பினுள் வெளிப்படுவாள். அப்படித் தான் நிஜவாழ்க்கை புனைவாக மாறுகிறது என்கிறார்.

ஓஸின் தந்தை, மாமனார். மைத்துனி என அவரது குடும்பத்தில் பலரும் நூலகர்கள். ஆகவே புத்தகங்களுடன் உள்ள உறவு மரபாகத் தொடரக் கூடியது என்கிறார். தான் சிறுவயதாக இருந்த போது ஒரு புத்தகமாக மாற வேண்டும் என்பதே தனது ஒரே ஆசையாக இருந்தது என்கிறார்.

தன்னைச் சுற்றி நடக்கும் இயக்கங்களை அவதானிப்பதே எழுத்தாளின் முதன்மையான வேலை. தான் மருத்துவமனையிலோ, ரயில் நிலையத்திலோ, விமான நிலையத்திலோ வரிசையில் நிற்கும்போது ஒருபோதும் செய்தித்தாளைப் படிப்பதில்லை அதற்குப் பதிலாக, மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கிறேன், சில வேளை அவர்களின் உடையைக் கவனிக்கிறேன். அவர்களின் காலணிகளைப் பார்க்கிறேன் – ஒருவர் அணிந்துள்ள காலணியை வைத்து அவரை மதிப்பிட்டுவிட முடியும். காலணிகள் எப்போதும் எனக்கு நிறையச் சொல்கின்றன என்கிறார் ஓஸ்.,

ஒரு பறவையைக் காணும் சிறுவன் அது எப்படிப் பறக்கிறது எனத் தெரிந்து கொள்ளப் பறவையைப் பிய்த்துப் பார்க்க விரும்புகிறான். உலகம் அவனைப் புரிந்து கொள்வதில்லை. கண்டிக்கிறது. குரூரம் என நினைக்கிறது. உண்மையில் அது குரூரமில்லை. தேடல். உள்ளார்ந்த ஆசை என்கிறார் அமோஸ்.

தனது வீட்டைக் கடந்து செல்லும் தனது நண்பர்களில் ஒருவர் வீட்டின் முன்பாக வந்து நின்று கலைந்த தலையைச் சீப்பால் வாறிச் சரிசெய்து கொள்வது வழக்கம். காரணம் ஒருவேளை அவரை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டியது வந்தால் கலைந்த தலையோடு இருக்கக் கூடாதில்லையா எனக் கேலியாகச் சொல்கிறார் ஓஸ்.

உண்மையில் மனிதர்கள் கதாபாத்திரங்ளாக மாற விரும்புகிறார்கள். கதாபாத்திரங்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறார்கள். கதாபாத்திரங்களின் பெயரை தனக்கு வைத்துப் பார்த்து ரசிக்கிறார்கள்.

எழுத்தாளர்களின் தலை பின்னால் திரும்பக் கூடியது. சாதாரண மனிதர்களால் அது இயலாது. எழுத்தாளனின் தலை எப்போதும் கடந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. கடந்தகாலத்திலிருந்தே கதைகளைப் பலரும் உருவாக்குகிறார்கள். அது தனிப்பட்ட ஒருவரின் கடந்தகாலமாக இருக்கலாம் அல்லது தேசத்தின், இனத்தின், பண்பாட்டின். ஊரின், வீதியின், வரலாற்றின் கடந்தகாலமாகவும் இருக்கலாம். எழுத்தாளன் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அவசரம் படைப்பைக் கொன்றுவிடும்.

பாலுறவின் மீதான விருப்பம் பற்றிக் குறிப்பிடும் ஓஸ் difference between animal sexuality and human sexuality is the story என்கிறார். உண்மை விலங்குகளின் பாலின்ப வேட்கையில் கதை கிடையாது. மனிதர்களுக்குக் கதை வேண்டும். மனிதர்களின் பாலுறவு ஒரு கதையுடன் தொடர்புடையது. அந்தக் கதை நம் மனதினுள் ஆழப் பதிந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்பே, ஒரு குறிப்பிட்ட கதை அவர்கள் மனதில் விழித்துக் கொள்கிறது. எல்லா இன்பங்களும் கதைகளாகவே மிஞ்சுகின்றன.

பலசரக்குகடைக்காரன் தனது கடையைத் திறந்து வைத்து காத்திருப்பவன் போல எழுத்தாளனும் தனது எழுதும்மேஜையின் முன்பாக நாள் தவறாமல் அமர்ந்திருக்க வேண்டும். சில வேளை பத்துப் பக்கம் எழுத நேரிடும். சில நாட்கள் எதையும் எழுத முடியாமலும் போய்விடும். பலசரக்கு கடைக்காரன் எப்படி குற்றவுணர்வில்லாமல் காத்திருக்கிறானோ அப்படி எழுத்தாளனும் பொறுமையாகக் காத்துகிடக்கவே வேண்டும் என்கிறார் ஓஸ்

என்னை விடச் சிறப்பாக எழுதும் ஒரு எழுத்தாளன் மீது நான் பொறாமை கொள்ளக்கூடும். ஆனால் என்னை விடப் புகழ்படைத்த ஒரு எழுத்தாளன் மீது ஒரு போதும் பொறாமை கொள்ள மாட்டேன். பணமோ, புகழோ, புத்தக விற்பனையோ ஒரு எழுத்தாளனை முடிவு செய்துவிடாது. குறைவான பிரதிகள் விற்பனையாகின்றன உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் பலரை நான் அறிவேன் என்கிறார்

இந்த நேர்காணலின் ஊடாகத் தஸ்தாயெவ்ஸ்கி, வில்லியம் பாக்னர். காஃப்கா எனத் தனக்குப் பிடித்தமான இலக்கியவாதிகளைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார் ஓஸ்.

literature is actually the cousin of gossip, of the human thirst to know what is happening behind other people’s shuttered blinds, to know what their secrets are என்று ஓஸ். குறிப்பிடுவது உண்மையே.

0Shares
0