மாஸ்கோ நினைவுகள்

கல்வியாளர். நெ.து.சுந்தர வடிவேலு இரண்டு முறை சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பயண அனுபவங்களைச் சோவியத் மக்களோடு, நான் கண்ட சோவியத் ஒன்றியம் என இரண்டு பயண நூல்களாக எழுதியிருக்கிறார். இரண்டும் இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது.

இன்றைய தலைமுறைக்குச் சோவியத் ஒன்றியம் பற்றியோ அதன் வாழ்க்கை முறை குறித்தோ அதிகம் தெரியாது. அவர்கள் இந்த நூலை வாசித்தால் நிச்சயம் வியந்து போவார்கள். இந்தியாவிலிருந்து சோவியத் சென்று வந்த எழுத்தாளர்கள் பலரும் தனது பயண அனுபவத்தை நூலாக்கியிருக்கிறார்கள். நெ.து.சு கல்வியாளரின் பார்வையில் ரஷ்ய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நெ.து.சுந்தர வடிவேலு காமராஜர் ஆட்சியில் பொதுக்கல்வி இயக்குநராக இருந்தவர். இலவச மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட இவரது முயற்சி முக்கியமானது.

சோவியத் யூனியனுக்கு இந்தியத் தூதுக்குழுவாக அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். டெல்லியிலிருந்து விமானம் கிளம்பியது முதல் மாஸ்கோ வரை  நடந்த நிகழ்வுகளை அவர் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

மாஸ்கோவில் அவர் சந்தித்த மனிதர்கள். கலந்து கொண்ட நிகழ்வுகள். சுற்றிப்பார்த்த இடங்கள் என விரிவான அனுபவத்தொகுப்பாகவுள்ளது.

சோவியத் ஒன்றியம் பற்றிய அவரது அவதானிப்பில் மூன்று விஷயங்களை ரசித்தேன். சர்க்கஸ் பார்ப்பதற்காக அவரை அழைத்துப் போகிறார்கள். நம் ஊரைப் போலச் சர்க்கஸ் என்றால் பெரிய கொட்டகையிருக்கும் என நினைத்துக் கொண்டு போனவருக்குச் சர்க்கஸ் பெரிய கட்டிடம் உள்ளே நடக்கிறது என்பதும். அங்கே உள்ள சர்க்கஸ் கலைஞர்கள் அனைவரும் முறையாகப் பயின்றவர்கள். இவர்களுக்கெனத் தனியே சர்க்கஸ் கல்லூரி இருக்கிறது என்பது வியப்பளிக்கிறது.  சோவியத் அரசே சர்க்கஸை நடத்துகிறது. சர்க்கஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்குத் தனியான கல்வி நிலையத்தை உருவாக்கியிருக்கிறது என்பதை வியப்பாக பதிவு செய்திருக்கிறார். .

இது போலவே எழுத்தாளர்கள். நாடக ஆசிரியர்கள். இசைக்கலைஞர்களின் சிலைகள் அவர்களது படைப்புகளைக் கொண்ட தனி ம்யூசியம் சோவியத் ஒன்றியம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பதைப் பெருமையாகச் சொல்கிறார். அங்கே சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எழுத்தாளர்களின் ஆள் உயரச் சிலைகளைத் தான் கண்டதாகவும் அவர்களின் முக்கிய நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

அது போல முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் பயிலும் மாஸ்கோ பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே இருபத்திரண்டாயிரம் வகுப்பறைகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான வளாகமது. அதில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். இவ்வளவு பெரிய பல்கலைகழகத்திற்குத் தேசத்தலைவர் பெயர் சூட்டப்படவில்லை. மைக்கேல் லொமனசன் என்ற அறிவியல் அறிஞர் பெயரே வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நெ.து.சு வியப்போடு எழுதுகிறார்.

பண்ணையில் வேலை செய்கிறவர்கள் இரவுப்பள்ளியில் ஆங்கிலம் ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். ஐம்பது வயதில் ஒருவர் இரவுப்பள்ளியில் படித்து ஜெர்மன் மொழி பேசுவது ஆச்சரியமளிக்கிறது. கற்றுக் கொள்ளும் விருப்பம் உள்ளவர்களுக்கு அரசு சகல வசதிகளையும் செய்து தந்திருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேலு. ஆசிரியர்களின் மூளை துருப்பிடித்துப் போகாமல் இருக்கச் சிறப்புப் பயிற்சி நிலையங்கள் உள்ளன. அவை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து ப/யிற்சி அளித்தபடியே உள்ளன என்றும் கூறுகிறார்

தூதுக்குழுவினர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள். விமானச் சேவை எப்படி இருந்தது, எங்கே தங்கியிருந்தார்கள். எவ்வாறு வழிகாட்டிகள் உதவி செய்தார்கள் என்பதைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். இதன் ஊடாகச் சோவியத் வரலாற்றையும் நிலவியலையும் மக்களின் பண்பாட்டினையும் சுருக்கமாகக் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு

••

0Shares
0