மிதக்கும் காதலர்கள்

மார்க் சாகலின் ஓவியங்கள் கதை சொல்லக் கூடியவை. அச்சிடப்பட்ட கதைகளை வாசிப்பதைப் போல அவரது ஓவியத்தில் மறைத்துள்ள கதைகளையும் நம்மால் படிக்க முடியும். அவை நினைவின் சிதறிய வடிவங்கள்.

மார்க் சாகலை மகிழ்ச்சியின் ஓவியன் என்றே சொல்வேன். பிராயத்தின் கனவுகள் போன்ற காட்சிகளையே தொடர்ந்து வரைந்திருக்கிறார். தனது நினைவுகளையும் கனவினையும் ஒன்று சேர்த்து ஓவியமாக்குகிறார்.

அவரது ஓவியத்தில் பசு நீலநிறமாக இடம்பெறுகிறது. ஆடு வயலின் வாசிக்கிறது. மனிதர்கள் வானில் பறக்கிறார்கள். ஆகாசமும் பூமியும் இடம் மாறியிருக்கின்றன. அவரது உலகம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறது.

நேரடியாக அவர் எதையும் காட்சிப்படுத்துவதில்லை. மாறாக உருவங்களை மிதக்கவிடுகிறார். துயரமும் நெருக்கடியும் கொண்ட சொந்த வாழ்க்கையை அனுபவித்த போது அவரது ஓவியங்களில் அவை வெளிப்படவில்லை. மாறாக உலகின் மீது பெரும் நம்பிக்கையும் காதலும் கொண்டதாகவே அவரது ஓவியங்கள் உள்ளன

ஒருவர் ஓவியத்தின் முன் நிற்கும் போது என்ன நடக்கிறது.

முதலில் அவர் உருவங்களையும் அது வரையப்பட்ட விதத்தையும் அதற்கு பயன்படுத்தபட்ட வண்ணத்தையும் காணுகிறார். பின்பு ஓவியத்தினுள் ஒரு இயக்கம் இருப்பதை உணருகிறார். ஓவியத்திலுள்ள அமைதி அவரைக் கவருகிறது. ஓவியத்தின் ஏதோ ஒரு இடம், அல்லது பொருள், மனிதர் அவருடன் ஒன்றிணைவதாக உணருகிறார். பின்பு ஓவியத்துடன் அவர் உரையாட ஆரம்பிக்கிறார். அது மொழி கடந்த உரையாடல். தனது கற்பனையின் துணையோடு ஓவியத்தினை மலர வைக்கிறார். அந்த விரிவு கொள்ளுதலில் அவரது மனமும் ஓவியமும் இணைந்து இயங்குகின்றன. அவருக்குள் மாற்றம் உருவாகிறது. திடீரென புறஉலகை அவர் வியப்போடு பார்க்க ஆரம்பிக்கிறார். காலமும் வெளியும் தான் ஓவியத்தின் பிரதான களங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். ஓளி தான் ஓவியத்தின் மாயத்திரவம் என அறிகிறார். இயற்கையை ஓவியங்கள் நகலெடுப்பதில்லை. மாறாக நுண்மையாக்குகின்றன. பிரம்மாண்டமானதாக்குகின்றன. பொருளின் தோற்றம் என்பதில் அதன் வடிவம் நிறம் ஒளியில் அது தெரியும் விதம். இன்னொரு பொருளுடன் கொண்டுள்ள உறவு என்று பலநிலைகள் இருப்பதை உணருகிறார். ஓவியம் அவருக்குக் கற்றுத் தருகிறது. ஓவியத்தின் உள்ளிருக்கும் இசையை அவர் கேட்க ஆரம்பிக்கிறார். ஓவியம் மாற்றுஉலககென உணருகிறார். அப்படி மார்க் சாகலின் ஓவியங்களைக் காணும் போது நாம் முதலில் உணருவது அவரது விளையாட்டுதனத்தை. அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே எப்போதும் அமைகிறது.

சாகலின் பிறந்தநாள் ஓவியத்தில் நாம் காணுவது காதலுற்ற இருவரின் பறத்தலை. அந்தப் பெண்ணை முத்தமிடும் காதலன் பறந்த நிலையில் காணப்படுகிறான். அவர்கள் காதலின் சுழற்காற்றால் நிச்சயமற்ற முறையில் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவனது தலை சூரியகாந்திப் பூ போல வளைந்து திரும்பியிருக்கிறது. பரவசத்துடன் அவளை முத்தமிடுகிறான்.

பிறந்த நாள் கொண்டாடும் பெண் மகிழ்ச்சியோடு காணப்படுகிறாள். அவளது கையில் மலர்க்கொத்து உள்ளது. அந்த வீடு. உடைகள். காலணிகள் யாவும் துல்லியமாக வயைரப்பட்டுள்ளன.

ஓவியத்தில் காணப்படுவது மார்க் சாகலின் காதலி பெல்லா ரோசன்ஃபெல்ட்.,

காதல் புவியீர்ப்பு விசையைத் தாண்டியது. ஆகவே தான் இதில் காதலன் காற்றில் மிதக்கிறான்.

இந்த ஓவியத்திலுள்ள தருணம் பற்றிச் சாகல் சிறிய குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்

“அந்தச் சிறிய அறையால் உன்னை அடக்க முடியாது என்பது போல் நீ ஒற்றைக் காலில் நின்றாய். உனது தலை என்னை நோக்கித் திரும்பியது, என்னுடைய தலை உனக்கானதாக மாறியது.. நாங்கள் பூக்கள், மூடப்பட்ட வீடுகள், கூரைகள், முற்றங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் மீது பறந்தோம்“

அவரது ஓவியத்தில் பெல்லா எப்போதும் வெள்ளை அல்லது கறுப்பு உடையே அணிந்திருக்கிறாள். அவளை வானுலகிலிருந்து தன்னை மீட்க வந்த தேவதையாகவே சாகல் சித்தரிக்கிறார். அவரும் பெல்லாவும் திருமணம் செய்து கொள்வதற்குச் சில வாரங்களுக்கு முன்பு இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார்.

சாகல் தனது காதலி பெல்லாவை 25 ஜூலை 1915 அன்று திருமணம் செய்து கொண்டார். யூத கிராமத்தில் வளர்ந்த சாகல், தனது படைப்புலகின் ஆதாரமாக ஸ்லாவிக் மரபைக் கொண்டிருந்தார். இந்த மரபைத் தெரிந்து கொள்ளும் போது அவரது ஓவியங்களில் உள்ள வெவ்வேறு குறியீடுகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகச் செல்வது என்பது அந்த வீட்டிற்குள் பறப்பது என்றும் அர்த்தம் தொனிக்கும். அப்படியான மறைவான பொருள் இருக்கிறது. அதையே சாகல் தனது ஓவியத்தில் வெளிப்படுத்துகிறார்.

சாகல் தனது ஓவியங்களில் ஒரு கூட்டு வாழ்வினை உருவாக்கினார். அவரது ஓவியத்தில் இடம்பெற்றுள்ள கோழி, சேவல் மாடு, செம்மறி ஆடு, பன்றி ,குதிரை போன்ற விலங்குகள் யூத மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை மற்றும் ஆன்மீக குறியீடாகவும் அறியப்படுபவை.

அவரது ஓவிய பாணி கிழக்கு ஐரோப்பிய யூத கலாச்சாரத்தின் கதைசொல்லலிலிருந்து பிறந்தது.

ஹென்றி மேட்டிஸ்ஸேக்குப் பிறகு வண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு பிரயோகிக்கும் ஒரே கலைஞர் சாகல் மட்டுமே என்கிறார் பிக்காசோ.

அது உண்மை என்பதை அவரது நிறத்தேர்வே அடையாளப்படுத்தும். குறிப்பாகச் சாம்பல். நீலம், சிவப்பு. நிறங்களை அவர் பயன்படுத்துவது விதம் அழகானது. மனிதனின் அகநிலையின் வெளிப்பாடாகவே சாகல் வண்ணங்களைத் தேர்வு செய்கிறார்.

ரஷ்யாவின் வைடெப்ஸ்க் என்ற சிறிய நகரத்தில் வசித்த யூதக்குடும்பத்தில் பிறந்தவர் மார்க் சாகல், முதலாம் உலகப் போரின் வெடிப்பும் பின்னர் ரஷ்யப் புரட்சியும் அவரைப் பாதித்தன. அவர் நாட்டை விட்டு வெளியேறி பாரிஸ் மற்றும் பெர்லினில் வசித்திருக்கிறார். ஐரோப்பாவின் அரசியல் சூழ்நிலை காரணமாக, அவர் 1941 இல் நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்தார்.

சாகலும் அவரது மனைவியும் 1923 இல் பாரிஸுக்குச் சென்றார்கள்.அங்கே, வளர்ந்து வரும் நாஜி அச்சுறுத்தல் மீண்டும் சாகலை நெருக்கடியின் விளிம்பிற்குத் தள்ளியது. அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் நாஜிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் நான்கு சீரழிந்த கலையின் அடையாளமாக நாஜிகள் நடத்தி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. சாகலும் அவரது மனைவியும் ஐரோப்பாவில் யூதர்களுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடியை உணர்ந்தார்கள். தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற நிலையில் தான் அவர் இடம்பெற முடிவு செய்தார்.

அரசியல் நெருக்கடிகளால் அவரது வாழ்க்கை துரத்தப்பட்டது. ஆயினும் மகிழ்ச்சியின் தடயங்களையே அவர் வரைந்தார். சர்ரியலிஸ்டுகள் தங்கள் இயக்கத்தின் முன்னோடி என்று சாகலைக் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் சாகல் தனது சொந்தக் கலாச்சாரம் மற்றும் பின்னணியிலிருந்தே தான் வரைவதாகவும், டாலி போன்ற சர்ரியலிஸ்டுகளிடமிருந்து தான் மிகவும் வேறுபட்டவர் என்றும் சொல்கிறார்

சர்க்கஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்த சாகல் அதன் நினைவுகளை ஓவியமாக வரைந்திருக்கிறார். சர்க்கஸ் போலவே நமது தினசரி வாழ்க்கையினைச் சாகசக்காட்சிகளாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.

மொசார்ட் தனது இசையால் உலகை சந்தோஷப்படுத்துவது போல நான் வண்ணங்களால் உலகைச் சந்தோஷமாக்குகிறேன் என்கிறார் சாகல். அவரது பெரும்பான்மை ஓவியங்களில் காதலர்கள் ஒரு மர்மமான நீல நிறத்தால் சித்தரிக்கப்படுகிறார்கள். தனது வண்ணத்தேர்வு பற்றிச் சாகல் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்

In our life there is a single color, as on an artist’s palette, which provides the meaning of life and art. It is the color of love . . . If I create from the heart, nearly everything works; if from the head, almost nothing

நீல நிறம் பெரும்பாலும் அமைதி மற்றும் சோகத்துடன் தொடர்புடையது என்றாலும் சாகல் அந்த வண்ணத்தை முழுமையான மகிழ்ச்சி மற்றும் நிலையான அழகின் வண்ணமாக்கிவிடுகிறார். காதலின் நிறம் நீலம் என்கிறார் சாகல். அந்தத் தனித்துவமே அவரை நிகரற்ற கலைஞராகக் கொண்டாட வைக்கிறது.

0Shares
0