மீட்கப்படும் உண்மைகள்

.

The Dig என்ற புதிய பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். ஜான் பிரஸ்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு சைமன் ஸ்டோன் இயக்கிய படம்

1939 ஆம் ஆண்டு நடைபெற்ற சுட்டன் ஹூ அகழ்வாராய்ச்சியின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு இத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருப்பது வியப்பளிக்கிறது. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. படத்தொகுப்பு மற்றும் சிறந்த நடிப்பு படத்தோடு நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது. நிறைய நேரங்களில் நாம் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்த அளவு படம் நெருக்கம் தருகிறது.

உண்மையில் கதை மனித உறவுகளுக்குள் புதைந்திருக்கும் அன்பை, தனிமையை, புரிந்துணர்வை, மரபான அறிவை, ஆசைகளையே ஆய்வு செய்கிறது. வாழ்க்கை நாடகத்தில் நாம் நிறைய விஷயங்களை, ரகசியங்களை மறைத்துக் கொண்டிருக்கிறோம். அவை ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் வெளிப்படத்துவங்குகிறது. அதை எதிர்கொள்வதும் புரிந்து கொள்வதும் எளிதானதில்லை. அதைத் தான் படம் பேசுகிறது.

புற அளவில் ஆங்கிலோ சாக்சன் காலத்திய சுட்டன் ஹூ கல்லறை தளத்தைப் பற்றியதாக இருந்த போதும் அதை மட்டும் படம் கவனம் கொள்ளவில்லை.

சுட்டன் ஹூ என்பது இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள வூட்ரிட்ஜ் அருகே 6 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையிலான இரண்டு ஆங்கிலோ சாக்சன் கல்லறை தளமாகும். அதை அகழ்வாய்வு செய்யும் பணி தற்செயலாகவே துவங்கியது.

படத்தின் துவக்கத்தில் நாம் சஃபோல்க்கிலுள்ள 526 ஏக்கர் தோட்டம் ஒன்றில் ஆங்காங்கே பெரிய மண்மேடுகள் இருப்பதைக் காணுகிறோம். அதனுள் ஏதோ புதையல் இருக்கக் கூடுமென நினைக்கிறார்கள். இந்தப் பண்ணையின் உரிமையாளரான எடித் மண்மேடுகளைத் தோண்டி அதனுள் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயல்கிறாள்

எடித் தனது இருபது வயதுகளில் குடும்பத்தினருடன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார், ஆஸ்திரியா-, கிரீஸ் மற்றும் எகிப்துக்குச் சென்ற அவர் தனது பயணத்தின் போது பல்வேறு அகழ்வாராய்ச்சிகளைக் கண்டார். அந்த ஆசையின் காரணமாகவே தனது தோட்டத்திலுள்ள மண்மேட்டை ஆய்வு செய்ய விரும்பினார்.

இதற்காக அவள் பசில் பிரவுனை அழைக்கிறாள். அவர் பூமியைத் தோண்டும் கலையை மரபாக அறிந்தவர், எளிய விவசாயி. அமெச்சூர் அகழ்வாய்வாளர்.

அவருக்கு விவசாய கூலிகளுக்கான சம்பளம் தரவே எடித் முன்வருகிறாள். அவர் சம்மதிக்க மறுக்கிறார். இந்த இடத்தைத் தோண்ட வாரத்திற்கு 30 ஷில்லிங் வேண்டும் என்று கறாராகப் பேசி வேலையை ஒத்துக் கொள்கிறார். எத்தனை பேர் உதவிக்குத் தேவை எனக்கேட்கும் போது தான் ஒருவனே அதைச் செய்யமுடியும் என்கிறார். அதன்படியே பணியைத் துவங்குகிறார். மழை நாளில் அந்தப் பணியை எடித் பார்வையிடுகிறாள். என்ன அழகான காட்சி.

மண்குன்றை தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் தோண்டும் பணியின் போது பாசில் மண்ணிற்குள் சிக்கிக் கொண்டுவிடுகிறார். அவரைப் பலரும் சேர்ந்து மீட்கிறார்கள்.. அந்தக் காட்சி படத்தில் மிக உண்மையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு அவரது உதவிக்கு எடித்தின் உறவினர் ரோரி லோமாக்ஸ் வந்து சேருகிறான். துடிப்பான இளைஞன். விமானப்படையில் சேருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவன் அகழ்வாய்வு பணிகளை முழுமையாகப் படம்பிடிக்கிறான். அவனுக்கும் எடித்திற்குமான வெளிப்படாத காதல். எடித்தின் மகன் மீது பசில் கொண்ட அன்பு எனப் படத்தில் அழகான இழைகள்.

மண்மேட்டிற்குள் பழைய காலப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது. அது ஒரு மன்னரின் கல்லறை மேடு என்பதைப் பாசில் கண்டறிகிறார். அந்த உண்மையை உலகிற்கு அறிவிக்கிறாள் எடித்.

அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தைப் பொதுமக்கள் பலரும் பார்வையிடுகிறார்கள். இதை அறிந்த கலாச்சார நிறுவனங்கள் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் உடனே அந்த இடத்தைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள முயலுகின்றன.

இப்ஸ்விச் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள். அரசின் அனுமதியில்லாமல் தோண்டியது தவறு என்று வாதிடுகிறார்கள். படிக்காத விவசாயி எனப் பசிலை வேலையை விட்டுத் துரத்தி அனுப்புகிறார்கள். இதை எடித் விரும்பவில்லை. விஷயம் அவள் கையை மீறிப் போகிறது .

அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை தேசிய கலாச்சாரச் சின்னமாக அறிவித்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவுடன் ஆய்வுப் பணி கைமாறிப் போகிறது. இப்ஸ்விச்சிலிருந்து இளம் ஆய்வாளர்கள் களத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யப் பாசில் நியமிக்கப்படுகிறார்.

ஆய்வாளர்களான ஸ்டுவர்ட் மற்றும் அவரது மனைவி பெக்கி இருவருக்குள்ள உறவு. பெக்கியின் சஞ்சலங்கள் அழகாக வெளிப்படுத்தப்படுகின்றன. ரோரியுடன் அவள் கொள்ளும் காதல் நிஜமானது. அந்த அகழ்வாய்வின் வழியே அவள் தன்னை அறிந்து கொள்கிறாள்.

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் கடந்தகாலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியின் வழியாக நிகழ்கால வாழ்வின் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். மறைத்துவைக்கபட்ட ஆசைகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அது தான் படத்தின் சிறப்பு.

படத்தின் துவக்கத்தில் பணக்கார விதவை எடித் அவர்களின் சஃபோல்க் வீட்டிற்குப் பசில் பிரவுனை அழைக்கிறார். முதற்சந்திப்பிலே நாம் இருவரின் ஆளுமைகளையும் முழுமையாக அறிந்து கொண்டுவிடுகிறோம். கண்ணால் பார்த்தே அந்த நிலத்தை மதிப்பிடுகிறார் பசில். அவர் சொன்னது தான் கடைசியில் ஆய்வாளர்களால் கண்டறியப்படுகிறது. மரபான ஞானம் கொண்ட பசில் போன்றவர்கள் எந்தக் கல்லூரியிலும் போய்ப் படிக்கவில்லை. அந்த ஒரே குறையால் அவர்களின் அனுபவ அறிவை உலகம் அங்கீகரிக்க மறுக்கிறது. எடித் போர் சூழலின் ஊடாகவும் அந்த நிலத்தைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுகிறாள். உலகின் கவனம் யுத்தகளத்தை நோக்கியிருக்கும் போது அவள் வரலாற்றின் வேறு புள்ளியைக் கண்டறிய முயல்கிறாள்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்து வரும் பசிலை ஒரு நாள் தன்னோடு சாப்பிட எடித் வீட்டிற்கு அழைக்கும் காட்சி சிறப்பானது. அது போலவே உடல் நலமற்ற எடித்தை மருத்துவமனைக்குப் பசில் கொண்டு செல்லும் காட்சியும், எடித்தின் மகன் பசிலின் வீடு தேடி சைக்கிளில் வரும் காட்சியும், பெருமழையின் போது அகழ்வாய்வு நடந்த இடத்தைப் பசில் மூடி பாதுகாக்கும் காட்சியும் மறக்கமுடியாதவை.

அகழ்வாய்வுப்பணிகளின் பின்னால் உள்ள அரிய உழைப்பினை காட்சிப்படுத்தியிருப்பதுடன் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள நடக்கும் அதிகாரப் போட்டியினையும் படம் பேசுகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தத் தொல் சின்னங்களைப் பிரிட்டிஷ் ம்யூசியத்திற்கு எடித் வழங்கிவிட்டாள் என்ற தகவல் இடம்பெறுகிறது. அத்தோடு இந்தக் களப்பணியில் உதவிய பசிலின் பெயர் அதில் இடம்பெறவில்லை. சமீபமாகவே அவரது பெயரை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம்.

வரலாற்று உண்மைகள் பூமியில் புதைந்திருக்கின்றன. அவை வெளிப்படும் போது அதுவரை நாம் நம்பிவந்த தகவல்கள். எண்ணங்கள் மாற ஆரம்பிக்கின்றன. தற்போது கீழடியில் நடப்பதும் இது போன்ற பணி தான்.

உலகின் முக்கிய அகழ்வாய்வுகளைத் தனிநபர்களே முன்னெடுத்திருக்கிறார்கள். முடிவில் தான் அந்த ஆய்வு அரசின் கைவசம் சென்றிருக்கிறது. அகழ்வாய்வின் போது சேகரிக்கப்பட்ட பொருட்களை யாரிடம் வைத்திருப்பது என்ற போட்டி எல்லாக் காலத்திலும் நடந்திருக்கிறது. இன்றும் அந்த நிலை தொடரவே செய்கிறது.

வரலாற்று உண்மைகளுக்கு மிக நெருக்கமாகப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் காதலும் மட்டும் தான் படத்தின் சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்பட்டன என்கிறார் இயக்குநர். பொழுதுபோக்குச் சினிமாவில் இது போன்ற புதிய களங்கள் புதிய கதைகள் வெளிப்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது

••

0Shares
0