முப்பது வயதுச் சிறுவன்

புதிய சிறுகதை.

சேதுராமனின் அப்பா கனவில் வந்திருந்தார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மனிதர் இப்போது ஏன் கனவில் தோன்றினார் என்று முரளிதரனுக்கு வியப்பாக இருந்தது.

கண்விழித்த பிறகும் அவரைப் பற்றிய நினைவே மேலோங்கியது. படுக்கை அருகேயிருந்த இரவு விளக்கைப் போட்டார். ஆரஞ்சு வெளிச்சம் பரவியது. சுவரில் இருந்த கடிகாரம் மணி மூன்றரை என்று காட்டியது.

இப்போது இந்தியாவில் பகல்நேரம். டென்வரில் பின்னிரவு. விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.

முதுமையில் தான் பள்ளி பற்றிய கனவுகள் நிறைய வருகின்றன. அதிலும் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது எழுதக் கைவராமல் போவது போன்ற குழப்பமான கனவுகள்.

அந்தக் காலத்தில் இவ்வளவு புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையின் சாட்சியமாக ஐந்தே புகைப்படங்கள் அவரிடமிருந்தன. ஒன்றோ இரண்டோ அதிகம் எடுத்திருக்கக் கூடும். அவை தொலைந்துவிட்டிருந்தன.

எவ்வளவு காலம் மாறினாலும் சிலரது முகம் மறப்பதேயில்லை. அப்படியான ஒருவர் தான் சேதுராமனின் அப்பா. அவரது பெயர் செல்வம்.

மொட்டைநாக்கு என்பதால் அதைச் சொலவம் என்றே எப்போதும் சொல்வார்.

சேதுராமன் அவருடன் ஐந்தாம் வகுப்பில் படித்தான். ஆறாம் வகுப்பிலிருந்து முரளிதரன் ஊர் மாறிவிட்டார்.. ஆகவே சேதுராமனை சந்திக்கவேயில்லை. இப்போது உயிருடன் இருக்கிறானா என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவருக்கில்லை. ஆனால் அப்படி அவனது அப்பாவைப் பற்றி நினைக்க முடியவில்லை.

••

முரளிதரன் படித்த பள்ளி மிகவும் பழமையானது. சிவப்பு நிறக் கட்டிடம் கொண்டது. பெரிய வகுப்பறைகள். தரையில் பதிக்கப்பட்ட உறுதியான மரபெஞ்சுகள். பேரின்பதாஸ் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

அப்பாவின் இடமாற்றத்தால் அவர்கள் மதுரைக்குப் புதிதாக வந்திருந்தார்கள். ஐந்தாம் வகுப்பில் அவரது பக்கத்துப் பெஞ்சில் சேதுராமன் அமர்ந்திருந்தான்.

ஆசிரியர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல மாட்டான். அப்படிச் சொல்வது கூடத் தவறு. பதிலே சொல்லமாட்டான். தரையை வெறித்துப் பார்த்தபடி நின்றிருப்பான்.

“வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருக்கே.. தடிமாடு“ என்று ஆசிரியர் திட்டுவார். ஒரே வசையை ஏன் அத்தனை ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்கள் என்று  புரியாது.

சொக்கலிங்கம் சார் திட்டும் போது வகுப்பில் சிரிப்பொலி எழும். ஆனால் சேதுராமன் தலைகவிழ்ந்தபடியே நின்றிருப்பான்.

ஆசிரியரின் கோபமான பிரம்படிக்குப் பின்னால் தயங்கித் தயங்கி தவறான பதிலைச் சொல்வான். மீண்டும் அடி விழும். அப்படி அடிவாங்கியதற்காகச் சேதுராமன் ஒரு நாளும் அழுததில்லை.

ஆனால் அவனது அப்பாவை யாராவது கேலி செய்தால் உடனே அழுதுவிடுவான். அதுவும் ஏதாவது ஆசிரியர் பிச்சைக்கார பய என்று சொல்லிக்காட்டிவிட்டால் தேம்பித்தேம்பி அழுவான்.

••

சேதுராமனின் அப்பாவிற்கு மனநிலை பேதலித்திருந்தது. அதை அவரது கண்களைப் பார்க்கும் போது மட்டுமே உணர முடியும். முப்பது வயதிருக்கும். ஐந்தடிக்கும் குறைவான உயரம். சிக்குப்பிடித்த தாடி. அழுக்கான வேஷ்டி. கோடு போட்ட சட்டை. அதில் இரண்டு பொத்தான் இருக்காது. ஒரு பொத்தானை மாற்றிப் போட்டிருப்பார். கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டு நிற்பார்.. சில சமயம் தெருவில் கிடக்கும் மண்ணை அள்ளி தன்னுடைய தலையில் போட்டுக் கொள்வார். கேட்டால் மண்குளியல் என்பார்.

அவர் தினமும் காலை பதினோறு மணிக்கு பள்ளி இடைவேளை விடும் போது இரண்டாவது கேட்டில் வந்து நிற்பார். அந்த இரும்புக் கதவின் இடைவெளி வழியாகப் பாட்டி விற்கும் இலந்தைபழம். நெல்லிக்காய். குச்சிமிட்டாயை மாணவர்கள் முண்டியடித்துக் கெண்டு வாங்குவார்கள். இனிப்பு வடை மற்றும் கார வடை விற்கும் காதர்பாயிடம் வடை வாங்கித் தின்பார்கள்.

சைக்கிளில் ஐஸ் பெட்டியுடன் வந்து நிற்கும் இன்பசேகரிடம் “இன்பாண்ணே, சேமியா ரெண்டு. பால்ஐஸ் ஒண்ணு“ என்று மாறி மாறி கைநீட்டி வாங்குவார்கள்.

சேதுராமனின் அப்பா அதே இடைவெளி வழியாகத் தனது மயிர் அடர்ந்த கையை நீட்டி மாணவர்களிடம் காசு கேட்பார். பையன்கள் காசு தரமாட்டார்கள். காசு… காசு என்று சொல்லியபடியே கையை ஆட்டிக் கொண்டேயிருப்பார்.

அப்படி யாசிக்கும் போது அவரது முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். மாணவர்களில் எவராவது சில்லறைக் காசு கொடுப்பதுண்டு. அதை இன்பசேகரிடம் நீட்டி “எனக்குச் சேமியா குடு“ என்று வாங்கிக் கொள்வார்

வாயில் எச்சில் ஒழுக அவர் ஐஸைச் சப்பிச் சப்பிச் சாப்பிட்டிக் கொண்டிருப்பதை முரளிதரன் கண்டிருக்கிறார்.

தாடையில் வழியும் ஐஸை அப்படியே இடதுகையால் முகத்தில் தடவிவிட்டுக் கொண்டு சில்லுனு இருக்கு என்று சிரிப்பார் சேதுராமனின் அப்பா.

••

ஒரு நாள் கூட இடைவேளையின் போது சேதுராமன் வகுப்பைவிட்டு வெளியே வந்ததில்லை. அவனது அப்பா கைநீட்டிக் காசு கேட்பதை அவன் அறிவான். அதைப்பற்றி மாணவர்கள் கேலி செய்யும் போது கோபம் கொள்வான். சில நேரம் அது மல்லுக்கட்டு சண்டையாகியும் விடும்.

பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்த கணித ஆசிரியர் பழனிச்சாமி ஒரு முறை அவனிடம் கேட்டார்

“உங்க அப்பா என்னடா லூசா“

“அதெல்லாமில்லை சார்“

“பிச்சைக்காரன் மாதிரி ஸ்கூல்கேட்டுல கையை நீட்டி காசு கேட்குறார்“

“அது அவரு இஷ்டம். உங்க கிட்ட ஒண்ணும் காசு கேட்கலையே“ என்று கோபமாகச் சொன்னான் சேதுராமன்

“நான் வேற அந்த லூசுக்கு காசு தரணுமா.. நாளைல இருந்து உங்கப்பா ஸ்கூல் கேட்ல வந்து நிக்கக் கூடாது, சுத்த நியூசென்ஸ். “

“நான் சொன்னா அவரு கேட்கமாட்டாரு. “

“அப்போ நானே போலீஸ்ல பிடிச்சி குடுத்துருவேன் பாத்துக்கோ“

“எங்கப்பாவை போலீஸ் பிடிக்காது சார்“ என்று உறுதியாகச் சொன்னான் சேதுராமன்

ஏன் அப்படிச் சொன்னான் என்று புரியவில்லை. ஆனால் சேதுராமனின் அப்பா பள்ளிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

சில நேரம் மாணவர்கள் காசு கொடுப்பதற்குப் பதிலாக உடைந்த ஓட்டுத்துண்டினை அவரிடம் கொடுத்து “இதுல ஐஸ் வாங்கிக்கோ“ என்று கேலி செய்வார்கள். அப்போது அவர் கெட்டவார்த்தையால் அவர்களைத் திட்டுவார். கோபத்தில் எச்சில் துப்புவார்.

அதை ஜெயந்தி டீச்சர் பார்த்திருக்கிறாள். அசிங்கமாகப் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை ஆசிரியரிடம் புகாரும் செய்திருக்கிறாள். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

••

அன்றாடம் காலையில் சேதுராமனைப் பள்ளிக்குக் கொண்டு வந்துவிடுவதும் மாலையில் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதும் அவரது வேலை.

மாலை நாலரை மணிக்கு பள்ளிவிடும் போது சேதுராமனின் அப்பா மெயின்கேட்டில் வந்து நின்றிருப்பார். அவன் படியிறங்கி வந்தவுடன் அவனது புத்தகப்பையை வாங்கிக் கொள்வார். தனது தோளில் போட்டுக் கொண்டு நடப்பார். இவரும் சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வீட்டிற்குப் போவார்கள். அப்போதெல்லாம் சேதுராமனின் அப்பா பள்ளியில் படிக்கிறவர் போலவே தோன்றுவார்.

இவ்வளவு பொறுப்பாக மகனை பள்ளிவிட்டு அழைத்துக் கொண்டு போகிறவர் எப்படி மனநிலை பேதலித்தவராக இருக்க முடியும்.

சேதுராமனின் வீடு தம்புராயன் தெருவில் இருந்தது. அதே தெருவில் தான் முரளிதரனும் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஒன்றிரண்டு முறை அரைத்த கோதுமை மாவைக் கொடுப்பதற்காக சேதுராமனின் அப்பா அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

காந்தி சிலையை ஒட்டி சேதுராமனின் தாத்தாவிற்குச் சொந்தமான மாவுமில் இருந்தது. சிவப்பு கொல்லத்து ஒடு போட்ட கட்டிடம். முன்னால் ஒற்றை வேப்பமரம். அந்த மில்லை சேதுராமனின் அம்மா சாந்தி நடத்திவந்தாள். அவர்கள் வீடு. மாவுமில் உள்ளிட்ட சொத்து முழுவதும் சேதுராமனின் அப்பாவிற்கு உரியது என்றும் அதைச் சொல்லியே அவனது அம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.

சேதுராமனின் அம்மா எப்போதும் சோகமான முகத்துடனே இருப்பார். அவளது சேலையில் மாவு படிந்து போயிருக்கும். தலையில் புறங்கையில் கூட மாவு திட்டாகப் படிந்திருக்கும்.

தினமும் காலையில் சேதுராமனை பள்ளியில் விட்டவுடன் அவனது அப்பா மாவுமில்லிற்கு வந்து சுத்தமாகத் தரையைக் கூட்டுவார். பின்பு பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு போய் அடிபம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டு வருவார். சாமி படத்திற்கு மணியடித்துச் சூடம் காட்டுவார். பிறகு சப்தமாக “சாந்தி.. நான் வீட்டுக்கு போகட்டுமா“ என்று கேட்பார்.

“வீட்டுக்கதவை திறந்து போட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிராதே. உனக்கு ஐஸ் வாங்க காசு வேணும்னா நான் தர்றேன்“ என்று சொல்லுவாள் சாந்தி

“அதெல்லாம் நான் பாத்துகிடுவேன்“ என்று சொல்லுவார். அது நான் பாத்துகிதுவேன் என்பது போலவே கேட்கும்

சில நாட்கள் மாவு மில்லில் இருந்து வீட்டிற்குக் கிளம்பும் அவரது கையில் நாலணாவைக் கொடுத்து “ஐஸ் வாங்க வச்சிக்கோ“ என்பாள் சாந்தி

அந்தக் காசை பெரும்பாலும் வீதியில் வீசி எறிந்துவிடுவார். ஒருமுறை தெருநாயின் முன்பாக நீட்டி வடைவாங்கித் தின்னு என்று சொன்னார். அதற்கும் சாந்தி கோவித்துக் கொண்டாள்.

அன்றாடம் அவர் பள்ளி மாணவர்களிடம் காசு கேட்டு வாங்குவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இதற்காக அவருக்கு இரண்டு முறை அவரது காலில் சூடு வைத்திருக்கிறாள்

அப்போது வலி தாங்க முடியாமல் புறங்கையால் கண்ணீரை துடைத்தபடி “சாந்தி நீ சரியில்லை“ என்றார். தன்னைக் கோவித்துக் கொள்ளவும் தெரியாத அந்த மனிதனைப் பார்த்து சாந்தி அழுவாள்.

“பாத்தியா நீ அழறே. இதுக்குத் தான் எனக்குச் சூடு போட வேணாம்னு சொன்னேன்“ என்றார் சேதுராமனின் அப்பா.

அவரும் சிறுவயதில் எல்லோரையும் போல தான் இருந்திருக்கிறார். வீட்டிற்கு ஒரே பையன்.  ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பவில்லை. மகனை காணோம் என்று அவரது அம்மா தேடியிருக்கிறாள். பள்ளியின் கழிப்பறைக்குள் அமர்ந்திருந்த அவரைக் கண்டுபிடித்து வாட்ச்மேன் இரவில் வீட்டு அழைத்துக் கொண்டு வந்தான். மறுநாள் முதல் அவர் இப்படி ஆகிவிட்டார் என்றார்கள்.

பள்ளியில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அவரும் எதையும் சொன்னதில்லை. ஏதோ ஒரு அதிர்ச்சி இப்படியாக்கிவிட்டது என்று பேசிக் கொண்டார்கள்.

சில நேரங்களில் ஹபா, ஹபா . ஹபா என ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார். திடீரென ஆடை எதுவும் இல்லாமல் அம்மணமாகப் படுத்துக்கிடப்பார். சில நாட்கள் அகோரப்பசியில் பொங்கி வைத்த மொத்த சோற்றையும் ஒரே ஆளாகச் சாப்பிட்டுவிடுவார்.

யாராவது அவரிடம் சேதுராமனை காட்டி “இது யாரு“ என்று கேட்டால் “எங்க அய்யா“ என்று சொல்லுவார்.

சேதுராமனை எப்போதும் “சேதய்யா“ என்றே அழைப்பார்.

சேதுவிற்குத் தன் அப்பா ஏன் இப்படி இருக்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அதே நேரம் மற்ற பையன்களின் அப்பா போலத் தன்னிடம் அவர் கோவித்துக் கொள்வதில்லை, கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் அவர் ஏன் சிறுவனாகவே இருக்கிறார் நடந்து கொள்கிறார்.

தினமும்  அப்பாவும் அவனும் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். கிட்டி விளையாடுவார்கள். அவனைப் போலவே அப்பாவும் ஒரு பம்பரம் வைத்திருந்தார். அவனோடு ஒன்றாக விளையாடினார். ஆனாலும் சேதுராமன் மற்ற அப்பாக்களைப் போலத் தன்னுடை அப்பா இருக்க வேண்டும் என்றே விரும்பினான்.

ஒருமுறை அப்பாவிடம் கோபமாகச் சொன்னான்

“நீ ஏன் கண்டவன்கிட்டயும் காசு கேட்குறே“

“ஸ்கூல் பசங்க கிட்ட தானே காசு கேட்குறேன்“

“அது தப்புப்பா. உனக்குச் சொன்னா புரிய மாட்டேங்கு“

“உனக்கு தான் புரிய மாட்டேங்கு. நான் ஐஸ் வாங்கத் தானே காசு கேட்குறேன்“

“அதை நான் தர்றேன். நீ யார் கிட்டயும் கேட்கக் கூடாது“

“உன் காசு எனக்கு வேண்டாம். அவங்க காசு தான் வேணும்“

“நீ இப்படிப் பேசுனா. நான் பள்ளிக்கூடத்துக்கே போகமாட்டேன் பாத்துக்கோ“

“நான் ஸ்கூலுக்குப் போவேன். எனக்கு ஐஸ் வாங்கித் திங்கணும்“

“பசங்க எல்லாம் உன்னைப் பிச்சைக்காரன்னு சொல்றாங்க“

“நல்லா சொல்லட்டும் எனக்கென்ன“

“கை நீட்டி காசு வாங்கினா நீ பிச்சைக்காரன் தான்“ என்று கோபமாகச் சொன்னான்

“மில்லுல சாந்தி கூடக் கையை நீட்டி தான் காசு வாங்குறா. அவ பிச்சைக்காரியா“

“அது நம்ம காசுப்பா. “

“இதுவும் நம்ம காசுதான்“

எனச் சிரித்தார். அவருக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் சேதுராமன் விழித்தான்

••

அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஐஸ்காரனிடம் அவர் கேட்டால் ஐஸ் தர வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள். அன்றைக்குக் காசை கையில் நீட்டியபடி அவர் ஐஸ் கேட்டபோது இன்பா தர மறுத்துவிட்டான்.

கையில் காசுடன் அவர் அழுத அழுகையைக் கண்டு இன்பசேகர் கலங்கிப் போய்விட்டான். ஒன்றுக்கு இரண்டாகச் சேமியா ஐஸ் கொடுத்தான். அதன்பிறகு அவர் காசு கொடுக்காமல் கைநீட்டினாலும் ஐஸ் கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டான்.

ஒருமுறை சேதுராமன் மஞ்சள்காமாலை வந்து மிகவும் அவதிப்பட்டான். பள்ளிக்குப் போகவில்லை. ஆனால் அவனது அப்பா எப்போதும் போல அவனது புத்தகப்பையைத் தனது தோளில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு சென்றார். அவனது வகுப்பு மாணவர்களிடம் சேதய்யா இடத்துல வச்சிருங்க என்றார். மாலையில் அந்தப் பையை ஒரு மாணவன் எடுத்து வந்து கொடுத்த போது திரும்ப வாங்கிக் கொண்டு போனார்.

இந்தச் செயலுக்குப் பிறகு ஆசிரியர் எவரும் அவரைக் கேலி செய்யவில்லை.

சித்ரா டீச்சர் ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது கம்பி வழியாக நீட்டிய அவரது கையில் காசு கொடுத்தாள். அவர் உற்சாகமாக இரண்டு சேமியா ஐஸ் வாங்கிவந்து டீச்சர் உங்க ஐஸ் என்று அதே கேட் வழியாக நீட்டினார்.

“இதுவும் உங்களுக்குத் தான்“

“ரெண்டு ஐஸ் தின்னா பல் விழுந்துரும்“ என்று சொல்லி சிரித்தார் சேதுராமனின் அப்பா. அதை டீச்சர் வகுப்பில் வந்து சொன்ன போது அவளது கண்கள் கலங்கியிருந்தன.

••

முரளிதரன் ஐந்தாம் வகுப்பின் கோடை விடுமுறைக்குப் போத்தனூரில் இருந்த பாட்டி வீட்டிற்குப் போனார். அந்த விடுமுறை முடிவதற்குள்ளே அவரது அப்பாவிற்குக் கோவைக்கு மாறுதல் வந்திருந்தது. அதன் பிறகு சேதுராமனையோ, அவனது அப்பாவையோ பார்க்கவேயில்லை.

கோவை, சென்னை, ஜெர்மன் எனப்படித்து அமெரிக்காவில் வேலை செய்யத் துவங்கி இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். எப்போதாவது தனது பள்ளி நாட்களை நினைத்துக் கொள்வார். அப்படி கூட அவர் சேதுராமனின் அப்பாவை நினைத்ததேயில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இன்றைய கனவில் ஏன் சேதுராமனின் அப்பா தோன்றினார் என்று புரியவேயில்லை.

அந்தக் கனவு விநோதமாக இருந்தது. திருவிழாக் கூட்டம். அங்கே பொருட்காட்சி நடக்கிறது. முரளிதரன் ஜெயிண்ட்வீல் ராட்டினத்தின் பெட்டியில் அமர்ந்திருக்கிறார். ராட்டினம் சுழலத் துவங்குகிறது. திடீரென அவரருகில் சேதுராமனின் அப்பா உட்கார்ந்திருக்கிறார். அவர் எப்படி அருகில் வந்தார் என்று புரியவில்லை.

ராட்டினம் மிக வேகமாகச் சுழலும் போது சேதுராமனின் அப்பா உற்சாகமாகச் சப்தமிட்டபடி கையைக் காற்றில் வீசினார். அவரது கையிலிருந்து பொற்காசுகள் தெறித்து விழுந்தன. ஆம். பொற்காசுகளே தான்.

திருவிழாக் கூட்டம் அந்தப் பொற்காசுகளைப் பொறுக்க முண்டியடித்தது. சேதுராமனின் அப்பா அவரிடம் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் கனவு கலைந்துவிட்டது.

விழிப்பு வந்து கண்ணைத் திறந்தபிறகும் அவரது கையிலிருந்து தங்க காசுகள் தெறித்து விழுந்தது மறக்கவேயில்லை.

என்ன கனவிது.

கனவு எதையோ உணர்த்தும் என்பார்களே. இக்கனவு எதை உணர்த்துகிறது.

யோசனையோடு எழுந்து சமையல் அறைக்குச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வந்தார்.

படுக்கையில் கிடந்த போது தோன்றியது.

அவர் பள்ளியில் ஒரு நாள் கூடச் சேதுராமனின் அப்பாவிற்கு காசு கொடுத்ததில்லை.

எத்தனையோ நாள் அவரை வேடிக்கை பார்த்திருக்கிறோம். ஏன் அவருக்கு ஒருமுறை கூட காசு தரவில்லை என்று யோசனையாக இருந்தது.

திடீரென அது குற்றவுணர்வாக மாறியது.

அந்தக் குற்றவுணர்வு தான் கனவாக வந்திருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டார். ஆணி அடிக்கும் போது சுத்தியல் விரலில் பட்டு ஏற்படும் வலி போன்ற ஒரு உணர்வு அவருக்குள் உருவானது. இதை என்ன செய்வது.

சிறுவயதின் தவறுகளை இப்போது எப்படிச் சரி செய்வது என்று அவருக்குப் புரியவில்லை.

0Shares
0