மூடிய கண்கள்

புதிய சிறுகதை

•••

கவிஞர் டேனியல் விநோதனுக்காக நிதி திரட்டுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அது ரமணாவிற்கு ஏற்புடையதாகயில்லை என்றாலும் ஒத்துக் கொண்டான்

மூன்று வாரத்திற்கும் மேலாக விநோதன் சிறுநீரகம் செயலற்றுப் போனதன் காரணமாக மருத்துவமனையிலிருந்தார். ஐம்பது வயதைக் கடந்திருந்த போதும் அவரது தோற்றம் எழுபது வயது போலாகியிருந்தது. அதுவும் சவரம் செய்யப்படாத நரைத்த தாடி கொண்ட முகமும் அழுக்கடைந்து போன வேஷ்டியும் வெளிர் நீல அரைக்கை சட்டையும் அணிந்திருந்த அவரது நிலையைக் காணும் போது வருத்தமாக இருந்தது.

மருத்துவர்கள் அவருக்கு மாற்றுசிறுநீரகம் பொருத்தவேண்டும் என்றார்கள். அதற்குக் குறைந்தபட்சம் எட்டு லட்சம் நிதி தேவைப்பட்டது. விநோதன் எந்த வேலையும் செய்யாதவர். திருமணம் செய்து கொள்ளாதவர். ஒரேயொரு தங்கை மட்டுமே உண்டு. ஆனால் அவருடனும் நல்ல உறவில் இல்லை

அவருக்குத் தெரிந்ததெல்லாம் கவிதைகள் மட்டுமே. முப்பது ஆண்டுகளில் இரண்டே கவிதைத்தொகுப்புகள் மட்டுமே வெளியிட்டிருக்கிறார். அந்தக் கவிதைத்தொகுப்புகளைக் கூட அவரது நண்பர்களே வெளியிட்டார்கள். நூறு பிரதிகள் விற்றிருக்ககூடும் என்று சொல்வார். ஆனால் அவர் பிடிவாதமாகக் கவிஞனாக மட்டுமே வாழுவேன் என்பதில் உறுதியாக இருந்தார். தமிழ் சூழலில் ஒருவர் கவிஞனாக மட்டுமே வாழுவேன் என்பது தற்கொலை முயற்சிக்கு சமம்.

கவிதைகளைக் கொண்டாடும் தமிழ் சமூகம் ஒரு போதும் கவிஞனை வாழவைப்பதில்லை. கவிஞர்களை எல்லா இழிவுகளுக்கும் உட்படுத்தி ஆனந்தம் கொள்வதில் ஒரு சமூகம் ஏன் இவ்வளவு சந்தோஷப்படுகிறதோ.

விநோதன் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால் அது பற்றிப் புகார் சொன்னதில்லை. அவரது உலகம் சிறியதொரு வட்டம். அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் நாலே பேர். அவர்களிடம் மட்டுமே தான் படித்த விஷயங்களைத் தனது கவிதைகளைப் பகிர்ந்து கொள்வார். சில நேரம் அவரைத் தேடி யாராவது இளைஞர்கள் வருவதுண்டு. அவர்களுடன் மிகவும் வாஞ்சையாக இருப்பார். தோளில் கைபோட்டுக் கொண்டு நடப்பார்.

ஒரு முறை விநோதனைச் சந்தித்த மூத்த எழுத்தாளர் ஒருவர் அவரைத் தனக்குத் தெரிந்த ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்த்துவிடுவதாகச் சொன்னார். டேனியல் சிரித்தபடியே அதுக்கு உன் வீட்ல வந்து பாத்திரம் துலக்குகிறேன். எனக்குச் சம்பளம் தர மாட்டாயா என்று கேட்டார். இது மூத்த எழுத்தாளருக்குக் கோபத்தை உருவாக்கியது. அவர் கோபத்தில் கண்டபடி திட்டினார்.

டேனியல் அவசரமாக ஒடிப்போய் எதிரே பூ விற்கும் பெண்ணிடமிருந்து ஒரு ரோஜாப்பூவை வாங்கி வந்து மூத்த எழுத்தாளர் முன்னால் நீட்டி மன்னித்துவிடுங்கள் பிரபு என்றார். அது மூத்த எழுத்தாளரை அசிங்கப்படுத்தியது போலாகியது. அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பிறகு விநோதனை பிராடு, திருடன். மோசடி செய்பவன் என்று எத்தனையோ கதைகளை அவர் உருவாக்கி உலவவிட்டார். விநோதன் அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

விநோதனிடம் ஒரு பழக்கமிருந்தது. தனக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றி யாராவது பேச ஆரம்பித்தால் உடனே கண்களை மூடிக் கொண்டுவிடுவார். எவ்வளவு நேரம் என்றாலும் கண்களை மூடிக் கொண்டேயிருப்பார். அப்படியே நடந்து போய்ச் சாலையில் ஆட்களை இடித்துத் தள்ளியதும் உண்டு.

இதைப் பற்றிக் கேட்டபோது அவரது அம்மாவிற்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தது. அவரது தந்தை ஒரு வக்கீல். அம்மாவைக் கோபத்தில் திட்டும் போது அம்மா கண்ணை மூடிக் கொள்வார். அது ஏன் என்று யாருக்கும் தெரியாது. அந்தப் பழக்கம் தனக்கும் வந்துவிட்டது என்பார்

இதைப் பற்றியே இன்னொரு முறை பேசிக் கொண்டிருந்த போது ரமணாவிடம் சொன்னார்

“ஆணின் கண்களும் பெண்ணின் கண்களும் ஒன்றில்லை. நான் கண்களை மூடிக் கொண்டவுடன் பெண்ணாகிவிடுகிறேன். உறக்கத்திலும் அழும் பெண்ணைக் கண்டிருக்கிறேன். ஆனால் உறக்கத்தில் அழும் ஒரு ஆணைக் கூடக் கண்டதில்லை“

“ஆண்கள் அழுவது பலவீனம் என்பார்கள்“ என்றான் ரமணா

“அது ஒரு பொய். அழுவதில் ஆண் என்ன பெண் என்ன. மனதின் வேதனையை வெளிப்படுத்த முடியாத போது தானே அழுகை வருகிறது. கண்ணீர் தான் கவிதையை உயிர்ப்பிக்கிறது. சிரிப்பை விடவும் கண்ணீரை பற்றித் தான் அதிகம் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன“

“நீங்கள் ஒரு போதும் அழுவதில்லையே“ என்றான் ரமணா

“காரணத்தோடு அழுவதில்லை. ஆனால் காரணமில்லாமல் தனியே நிறைய அழுதிருக்கிறேன். பொய் கண்ணீருக்கும் நிஜ கண்ணீருக்கும் வித்தியாசமிருக்கிறது. சில கவிதைகளை வாசித்து முடிக்கும் போது தானே கண்ணீர் கசிந்திருக்கிறது. சில நேரம் சந்தோஷமும் கண்ணீரை வரவழைக்கும் தானே“ என்றார்

டேனியல் விநோதன் சிறிய அறை ஒன்றில் வாழ்ந்தார். அந்த அறையின் வாடகையை ரமணாவும் இரண்டு நண்பர்களும் பகிர்ந்து கொண்டார்கள். காலையில் அவர் ஊறவைத்த அவல் மட்டுமே சாப்பிடுவது வழக்கம். மதியம் பல நாள் சாப்பிடவே மாட்டார். இரவில் ரமணா அவரைச் சாப்பிட அழைத்துக் கொண்டு போவான். ரமணா வராவிட்டால் சாப்பிடப் போகமாட்டார். பட்டினி தான்.

பல நாட்கள் பசியில் கிடந்து அவரது வயிறு சுருங்கிப் போயிருந்தது. வாரம் ஒருமுறை யாராவது ஒரு நண்பர் தன் வீட்டிற்கு அவரை மதிய உணவு சாப்பிட அழைத்துப் போவார்.

இலையில் போடப்பட்ட சோற்றினைக் கையெடுத்துக் கும்பிடுவார் டேனியல். அப்போது அவரை அறியாமல் கண்ணீர் கசிந்துவரும்.

எதுக்கு இப்படிச் சோற்றைக் கும்பிடுறார் என்று நண்பரின் மனைவி பலமுறை கேட்டிருக்கிறாள்

டேனியல் அதற்குப் பதில் சொன்னதில்லை. தனிப்பட்ட உரையாடலின் போது

“பசி என்னை ஜெயிக்க விடமாட்டேன். பட்டினி கிடந்தா தான் உடம்பில சொரணை வருது“ என்று சிரித்தபடியே சொல்வார். அது தான் அவரது வைராக்கியம்

அவரது அறையில் ஒரு மடக்குக் கட்டில் கிடந்தது. அதன் அடியிலும் கட்டிலைச் சுற்றிலும் புத்தகங்கள். அத்தனையும் பழைய புத்தகங்கள். பெரும்பாலும் கவிதை தொகுதிகள். காலை தூங்கி எழுந்தவுடன் ஒரு கவிதை புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்துவிடுவார்.

டேனியல் முறையாக தமிழ் படித்தவர். செந்தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம். ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதுவார். பேசுவார். அழகான கையெழுத்து. அவர் ஒரு போதும் பேனாவை பயன்படுத்தியதில்லை. பென்சில் தான். அதுவும் முழுப்பென்சிலை பயன்படுத்தமாட்டார். பென்சிலை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்வார். அதில் தான் எழுதுவார். குறிப்புகள் எடுப்பார். கவிதைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர வேறு எதுவும் அவருக்கு விருப்பமானதில்லை. ஆனால் கவிதைகளைப் பற்றிப் பேச யார் வரப்போகிறார்கள். பல நாட்கள் அறையை விட்டு வெளியே வரவேமாட்டார்

டேனியலின் தங்கை பரங்கிமலையில் இருந்தாள். எப்போதாவது ஒரு முறை அவளைத் தேடிப் போவது வழக்கம். அவள் வீட்டின் வாசலில் நின்றபடியே தான் பேசுவார். ஒரு போதும் வீட்டின் உள்ளே போனதில்லை. ஒரு வேளை அவள் வீட்டில் சாப்பிட்டதில்லை.

“அண்ணனா நான் அவளுக்கு எதையும் செய்ததில்லை. பிறகு எப்படி அவ வீட்ல சாப்பிட முடியும். எங்கம்மா ஞாபகம் வந்தா என் தங்கச்சியைத் தேடிப் போய்ப் பார்த்துட்டு வருவேன். ஒரே முகச்சாடை. அந்த முகத்தைப் பார்த்தா போதும் மனசு நிறைஞ்சி போயிடும். “ என்பார்

சில நேரம் டேனியல் தனது தங்கைக்கு மிக நீளமான கடிதம் எழுதுவதும் உண்டு. டேனியலின் ஆசைகளும் கனவுகளும் விநோதமானவை. திடீரென ஒரு நாள் காலை எழுந்தவுடன் பசுமாட்டைப் பார்க்க வேண்டும் என்று தெருத்தெருவாகச் சுற்றினார். சென்னையில் பசுமாட்டினை எங்கே போய்த் தேடுவது. மந்தைவெளியில் உள்ள ஒரு பால் வியாபாரியிடம் மடிவற்றிப் போன பசுமாடு இருந்தது. அதைத் தேடிப் போய்ப் பார்த்து வந்தார். எதற்காக ஒரு மனிதர் இப்படி அலைந்தார் என யாருக்கும் புரியவில்லை.

விநோதனை சந்தோஷப்படுத்திய ஒரே விஷயம் பள்ளிச் சிறுவர்கள். காலை எட்டு மணிக்குத் தபால் அலுவலகத்தை ஒட்டியபடியே நின்று கொள்வார். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கு ஆசையாகக் கையசைப்பார். சில வேளை அவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவி செய்வார். அந்தச் சிறுவர்களில் பலரது பெயர்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். யாராவது வராவிட்டால் ஆதங்கமாக விசாரிப்பார். சிறுவர்களின் சந்தோஷம் நிஜமானது. பெரியவர்களைப் போல அவர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்வதில்லை என்று சொல்லுவார்.

வேலை செய்யாமல், பணம் சம்பாதிக்காமல் இருப்பதைப் பற்றி அவருக்கு ஒரு குற்றவுணர்வும் கிடையாது. சென்னையில் வசித்த போதும் அவர் சினிமா எதையும் பார்த்தது கிடையாது. நூலகத்திற்குப் போவது மட்டுமே அவரது வழக்கம். அல்லது பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போய் ஏதாவது புத்தகம் வாங்கி வருவார். ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொண்டு ஏன் படிக்கிறார். கவியாக வாழுவது என்பது சாபம் தானா என்று ரமணாவிற்குத் தோன்றும்.

“ஐரோப்பிய நாடுகளில் கவிஞர்கள் அரசர்களைப் போலச் சகல சௌகரியங்களுடன் வாழுகிறார்களே“ என்று ரமணா ஆதங்கப்படும் போது “கம்பனை, பாரதியை வறுமையில் கைவிட்ட தேசம் தானே இது “என்பார் டேனியல்.

ஒரு சாபம் போலத் தலைமுறையாகக் கவிஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவமதிக்கப்படுகிறார்கள். எந்த அங்கீகாரமும் இல்லாமல் இறந்து போகிறார்கள். ஆனால் தமிழ் மொழியோ கவிதையைத் தனது பொற்கிரீடமாகப் பெருமை பேசுகிறது.

ஒருமுறை அவரது அறையில் ஒரு பிரெஞ்சுக்காரனோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் டேனியலுக்கு பிரெஞ்சும் பேச வரும் என்பது தெரிந்தது. பிரெஞ்சுக்காரன் ஒரு கவிஞன் என்றும் தற்செயலாக அவனை ம்யூசியத்தில் சந்தித்து பேசியதாகச் சொன்னார். ஒரு வார காலம் அவன் டேனியலுடன் தங்கியிருந்தான். அவனை திருவாலங்காடு அழைத்துக் கொண்டு போய் காரைக்கால் அம்மையாரின் பதிகங்களை பாடிக் காட்டினார் டேனியல். டேனியலுக்கு காரைக்கால் அம்மையார் மீது பக்தி. அவரை அன்னை என்றே கூறுவார்.

ஆண்டிற்கு ஒரு முறை இரண்டு மாதகாலம் டேனியல் விநோதன் காணாமல் போய்விடுவார். அறையைப் பூட்டிக் கொண்டு செல்லும் அவர் எங்கே போவார். என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. கேட்டாலும் சொல்ல மாட்டார். திடீரென ஒரு நாள் சென்னைக்குத் திரும்பி வந்து தனது அறைக்கதவைத் திறந்து வழக்கம் போல வாழ ஆரம்பிப்பார். ஏன் இப்படிக் காணாமல் போகிறார் என்று தெரியாது.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஒரு போதும் மருத்துவமனைக்குப் போக மாட்டார். பார்மசி ஷாப்பில் கேட்டு ஏதாவது மாத்திரைகள் வாங்கிப் போட்டுக் கொண்டு அறைக்கதவை மூடி படுத்தே கிடப்பார். ஒரு முறை மஞ்சள் காமாலை வந்து முற்றிய நிலையில் மயங்கி கிடந்தார். அவரை பக்கத்து வீட்டுக்காரர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு போய் அனுமதித்தார்.

ரமணா தான் உடனிருந்து பார்த்துக் கொண்டான். பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அந்த நாட்களில் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்களுக்கு நல்வாக்குகள் சொல்லி அவர்களின் நட்பினை பெற்றிருந்தார். செவிலியர்கள் கூட அவரிடம் நல்லாசிகள் பெற்றதை ரமணா கண்டிருக்கிறான்.

“சொற்களால் செய்யமுடியாத விந்தைகள் எதுவும் கிடையாது ரமணா “என்பார்

அடுத்தவேளை சோறு கிடைக்குமா எனத் தெரியாத கவிஞர் தான் உலகிற்கே நல்லாசிகள் தருகிறார். அது தான் கவியின் மனது.

இந்த முறை அவர் நோயுற்ற போது ரமணா அலுவல் விஷயமாகப் பெங்களூர் போயிருந்தான். இரண்டுமுறை தொலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அவன் கிடைக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்தான். சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார்கள். வாரம் ஒருமுறை இதற்காக மருத்துவமனைக்கு அவரை அழைத்துக் கொண்டு போய் வரவேண்டும். அதற்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய்ச் செலவாகும் என்றார்கள்.

ரமணா தான் அதையும் ஏற்றுக் கொண்டான். பெரும்பாலும் காலை ஆறுமணிக்கு தான் டயாலிசிஸ் செய்ய அழைத்துக் கொண்டு போவான். கையில் ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு தான் டேனியல் வருவார். டயாலிசிஸ் முடியும் வரை புத்தகம் படித்துக் கொண்டேயிருப்பார். மழைக்காலத்தின் இரவு ஒன்றில் அவருக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் ரமணாவிற்குப் போன் செய்து அழைத்தார். அவன் போன போது அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடந்தார

ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். மருத்துவர்கள் அவருக்குச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். அதற்கான கட்டணத்தைக் கேட்டபோது ரமணாவிற்கு மலைப்பாக இருந்தது. அவனால் எட்டு லட்சங்களைப் புரட்ட முடியாது.

அப்போது தான் நிமிஷம் இதழின் ஆசிரியர் கோவிந்தன் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டிக் கொடுப்பது என முடிவு செய்தார்கள். டேனியலின் உடல்நிலையை விளக்கி நிதி கொடுக்கும்படி ஒரு நோட்டீஸ் அச்சடித்தார்கள். அதை ரமணா விரும்பவில்லை.

“இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது“ என்றான்

“ஒவ்வொருத்தருக்கும் விளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்கமுடியாதுல்ல. நோட்டீஸை படிச்சி நிதி கொடுத்தா கொடுக்கட்டும்“ என்றார் கோவிந்தன்

அவர்கள் ஒவ்வொரு எழுத்தாளர் வீடாகப் போய் நிதி கேட்டார்கள். அதிகபட்சம் நூறு ரூபாய்க்கும் மேல் ஒருவரும் எழுதவில்லை. தொழிலதிபர்களில் ஒருவர் ஆயிர ரூபாய் கொடுத்தார். வாசகர்கள் ஒன்று சேர்ந்து நூறு இருநூறு எனச் சேகரித்து எட்டாயிரம் கொடுத்தார்கள். எழுத்தாளர்களுக்கான சங்கம் ஒன்று இருக்கிறது. அவர்கள் மருத்துவ உதவி செய்வார்கள் என்று கேள்விபட்டு ரமணா அந்த முகவரிக்குச் சென்றான்

“அவரு எங்க மெம்பர் இல்லை. நான்மெம்பர்னா இரண்டாயிரம் தரமுடியும். அதுக்கும் டாக்டர்கிட்ட ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வரணும். ரேஷன் கார்டு ஜெராக்ஸ் வேணும். பேங்க் அக்கவுண்ட் தரணும். அப்போ தான் பொதுக்குழுவில கேட்டு அந்த நிதியை வாங்கித் தரமுடியும்“ என்றார் அதன் நிர்வாகி

“அவருக்கு ரேஷன் கார்டு கிடையாது. பேங்க் அக்கவுண்ட்டும் கிடையாது“ என்றான் ரமணா

“அப்போ ஒண்ணும் பண்ண முடியாது. மெம்பருக்கே ஐந்தாயிரம் தான் நிதி தர முடியும். எழுத்தாளர்களுக்கு வேற நலநிதி ஒண்ணும் கிடையாது. அரசாங்கமும் உதவி செய்யாது. வயசான எழுத்தாளர்களுக்குப் பென்ஷன் கேட்டு பத்து வருஷமாச்சி. ஒண்ணும் நடக்கலை. சிவதாசனை உங்களுக்குத் தெரியும் தானே. எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவருக்குக் குடியிருக்க வீடு இல்லை. ஹவுசிங் போர்ட்ல வாடகைக்கு ஒரு வீடு கேட்டு பத்து வருசமா அலையுறார். கிடைக்கலை. ஆயிரம் தமிழ் சங்கங்கள் இருக்கும். எதுவும் எழுத்தாளர்களோட மருத்துவதேவைக்குப் பத்து ரூபா தர்றதில்லை. முன்னாடி எழுத்தாளர்கள். தமிழ் அறிஞர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்க இன்ஜினியரிங் காலேஜ்ல கோட்டா கூட இருந்துச்சி. அதையும் இப்போ இல்லேனு கையை விரிச்சிட்டாங்க. எழுத்தாளன்னா ஒரு பேங்க் லோன் கொடுக்காது. இவ்வளவு ஏன் சார் எழுத்தாளர்களுக்கு ஒரு பஸ் பாஸ் குடுக்கலாம்லே அது கூடக் கிடையாது“ என்று புலம்பி தீர்த்தார் அந்த நிர்வாகி

ரமணா திரும்பவும் அவரிடம் சொன்னான்

“எட்டு லட்ச ரூபாய் வேணும் சார். உங்க சங்கத்துல இருந்து ஒரு லட்சம் தரக் கூடாதா“

“சங்கத்தோட இருப்பே அவ்வளவு தான். நீங்க மினிஸ்டர் கிட்ட நேரா போயி கேட்டு பாருங்க. ஒருவேளை கிடைச்சாலும் கிடைக்கும்“

“அது நடக்காத வேலை சார்“

“அப்போ பேப்பர்ல ஒரு விளம்பரம் குடுத்து பாருங்க. நிதி கிடைக்கும்“ என்றார் நிர்வாகி

ரமணாவிற்கு வேறுவழி தெரியவில்லை. தனக்குத் தெரிந்த கதிரேசன் என்ற பத்திரிக்கையாளர் மூலம் டேனியலுக்கு நிதி வேண்டி ஒரு விளம்பரத்தைக் கொடுத்தான். விளம்பரம் வெளியாகி ஒருவார காலத்தில் முந்நூறு ரூபாய் மட்டுமே வந்திருந்தது. அதை வாங்கிக் கொள்ள ரமணாவிற்கு மனசேயில்லை.

ஒரு பிரபல நடிகரின் பெயரைச் சொல்லி அவரிடம் அழைத்துப் போவதாகச் சொன்னார் பத்திரிக்கையாளர் கதிரேசன்

ரமணா அவருடன் அந்த நடிகரின் வீட்டிற்கு ஒரு நாளிரவு சென்றான். அவர் டேனியல் விநோதனின் கவிதைகளைப் பாடச் சொன்னார். ரமணா நினைவிலிருந்து சொன்னான்.

“சினிமாவுல ஏதாவது பாட்டு எழுதியிருக்கிறாரா“ என்று கேட்டார்

“இல்லை“ என்றான் ரமணா

மறுநாள் நேரில் வந்து மருத்துவமனையில் பார்த்து நிதி தருவதாகச் சொன்னார் அந்த நடிகர்

“வேண்டாம் சார். டேனியல் சார் கூச்சப்படுவார்“ என்றான் ரமணா

“எடுக்கிறது பிச்சை இதுல கூச்சம் என்ன வேண்டியிருக்கு“ என்று கேட்டார் நடிகர்

“பிச்சை கேட்டு வரலை சார்“ என்று கோபமாகச் சொன்னான் ரமணா

“ நான் எதுக்கு இந்த ஆளுக்குக் காசு குடுக்கணும். எனக்கு மட்டும் பணம் என்ன ஆகாசத்துல இருந்து கொட்டுதா. உழைச்சி தானே சம்பாதிக்கிறேன். அவ்வளவு சுயகௌரவம் பார்த்தா ஏன் என்கிட்ட கையேந்தி நிக்குறீங்க“ என்று கேட்டார் நடிகர்

ரமணா விடுவிடுவென வெளியேறி வந்தான். அவனால் அந்த ஆத்திரத்தை தாங்க முடியவில்லை. அதன்பிறகு. ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள். என்ஜிஏ அமைப்புகள் என்று யார் யாரையோ ரமணா சென்று பார்த்தான்.

பதினைந்து நாளின் முடிவில் இருபத்திரெண்டாயிரம் மட்டும் சேகரிக்க முடிந்தது. இதைக் கொண்டு நிச்சயம் அறுவை சிகிட்சை செய்யமுடியாது.  ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க எவ்வளவு செலவு செய்கிறார்கள். முதற்காட்சியில் ஒரு சினிமா பார்க்க ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் ஒருவன் ஒரு கவிஞனுக்காக நூறு ரூபாய் தர முன்வருவதில்லை. அறிந்தே ஒரு கவிஞனை சாகவிடுகிறார்கள் என்று ஆத்திரமாக வந்தது.

மருத்துவமனையில் இருந்த டேனியலுக்கு யார் நிதி திரட்டும் தகவலைச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவர் ரமணா போனதும் கண்ணை மூடிக் கொண்டார்.

வேண்டும் என்றே தன்னைப் பார்க்க மறுக்கிறார் என்பது வேதனையாக இருந்தது

“வேற வழியில்லாம்மா தான் நிதி திரட்டுறோம்“ என்றான்

“அந்த பணம் எனக்கு வேணாம். நான் கௌவரமாகச் சாகணும்னு நினைக்கிறேன்“ ரமணா

“ஏன் சார் இப்படிப் பேசுறீங்க“ எனக்கேட்டான் ரமணா

“நீங்க எல்லோரும் சேர்ந்து என்னை அசிங்கபடுத்துறீங்க. நல்லா இருந்தப்போ யார் கிட்டயும் நான் கை நீட்டியதில்லை. இப்போ எனக்காக ஏன் பிச்சை எடுக்குறீங்க“ என்றார் டேனியல்

“மருத்துவ உதவி தானே “ என்றான்

“ஒரு மயிரும் வேணாம். இப்படி நிதி திரட்டி நான் உயிர் வாழணும்னு ஆசைப்படலை. சாகுறதை பத்தி நான் கவலைப்படலே. “

“பிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து தான் முடிவு பண்ணினோம். ஏன் சார் கோவிச்சிகிடுறீங்க“ என்று கேட்டான் ரமணா

“உங்க யாரையும் நான் இனிமே பார்க்கவே மாட்டேன். போயிடுங்க“ என்று கையெடுத்துக் கும்பிட்டார் டேனியல்

“ப்ளீஷ் சார். கண்ண திறங்க “என்று கெஞ்சினான் ரமணா

அவர் கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். ரமணா செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தான். அந்தப் பணத்தை என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவரது படுக்கையோரம் இருந்த அலமாரியில் பணத்தை வைத்துவிட்டு வெளியே வந்தான். அன்றிரவு அவனால் தூங்கமுடியவில்லை. நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து டேனியல் விநோதன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தான். அவனை அறியாமல் கண்ணீர் வந்தது

மறுநாள் மருத்துவமனைக்குப் போன போதும் அவர் ரமணாவை காணமறுத்துக் கண்களை மூடிக் கொண்டார். செவிலியர்களைத் தவிர வேறு எவரையும் அவர் கண் கொண்டு பார்க்கவேயில்லை என்றார்கள்.

இது நடந்த ஒரு வாரகாலத்தில் டேனியல் தானே மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். எங்கே சென்றார் என்று எந்தத் தகவலும் தெரியவில்லை. அவன் வைத்த பணம் அப்படியே அலமாரியில் இருந்தது என்றும் அந்தப் பணத்தைத் தவிர அவரது மருத்துவச் செலவிற்காகக் கூடுதலாக முப்பதாயிரம் தர வேண்டும் என்றும் மருத்துவமனை ரமணாவிடம் கேட்டது. அதையும் கடன் வாங்கிக் கட்டிவந்தான்.

தன் அறையைக் காலி செய்து அங்கிருந்த புத்தகங்களை எடுத்துக் கொள்ளும்படி ரமணாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் டேனியல் விநோதன்.

அந்தப் புத்தகங்களைத் தன் வீட்டிற்குக் கொண்டுவந்து எங்கே வைப்பது என அவனுக்குத் தெரியவில்லை. பழைய புத்தகக் கடைக்காரர் ஒருவருக்கே அவ்வளவு புத்தகங்களையும் கொடுத்துவிட்டான். டேனியலின் ஒரு புகைப்படத்தையும் சில குறிப்பேடுகளையும் மட்டும் அவன் வைத்துக் கொண்டான்.

ஒரு நாள் தற்செயலாக டேனியலின் தங்கையைச் சிவன் கோவில் முன்பாக ரமணா சந்தித்தான். அவள் “தனது அண்ணன் ஒரு வாரத்தின் முன்பு இறந்து விட்டதாகவும் உடல் நலிந்த நிலையில் அவர் வேங்காடு என்ற கிராமம் ஒன்றில் போய்த் தங்கியிருந்ததாகவும் அங்கேயே இறந்து புதைத்துவிட்டார்கள்“ என்றும் சொன்னாள்.

ரமணாவால் அந்தத் துயரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கியது அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவசரமாக வீடு திரும்பினான். அன்றெல்லாம் டேனியலுக்காக அழுதான்.

பின்பு ஒரு ஞாயிற்றுகிழமை வேங்காடு கிராமத்திற்குப் பயணம் மேற்கொண்டான். ஊரின் மேற்கேயிருந்த இடுகாட்டில் அவரது உடலைப் புதைத்திருந்தார்கள். சிறிய புதைமேடு. புல் முளைத்துப் போயிருந்தது. அதன் முன்பாக அமர்ந்து தியானிப்பவன் போலக் கண்களை மூடிக் கொண்டான்

கண்ணை மூடியதும் டேனியலின் முகம் நினைவில் ததும்ப ஆரம்பித்தது

அந்தப் புதைமேட்டில் ஒரு அடையாளமும் இல்லை. சிறுபுல்லின் அசைவு மட்டுமே மிச்சமிருந்தது. கவிஞனாக மட்டுமே வாழுவேன் என்பவரின் முடிவு இவ்வளவு தானா என்று வருத்தமாகயிருந்தது.

“வாழும் போதும் சரி, வாழ்ந்த பிறகும் சரி அடையாளமற்று போவது தான் தமிழ் கவிஞனின் நிலையா“ என்று உள்ளுற ஆத்திரமாகவும் வந்தது.

புதைமேட்டின் முன்னால் அமர்ந்தபடியே ரமணா டேனியலின் கவிதை ஒன்றைச் சப்தமாகச் சொல்லத் துவங்கினான். பாதிக்கும் மேல் சொல்லமுடியாமல் தொண்டையை அடைத்தது.

எங்கிருந்தோ ஒரு கரிச்சான் சப்தமிட்டு அவனது வேதனையை மேலும் அதிகப்படுத்தியது.

••

0Shares
0