தங்களது கவிதையும் கோவிலும் கட்டுரையை வாசித்தேன். கபிலருக்கு விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூரில் ஒரு கோவில் உள்ளது. கபிலர் வடக்கு இருந்து உயிர் துறந்த குன்று அது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த குன்றில் கபிலருக்கு தனியான கோவில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது அக்கோவில். அதை கபிலர் குன்று என்று கூறுகிறார்கள்.
அன்பிற்குரிய ராமகிருஷ்ணன்
Nandakumar K
***
அன்பின் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஏராளமான வாசகர்களின் நானும் ஒருவன் என்ற முறையில் தங்களிடம் ஒரு விண்ணப்பம்.
நேரடியாய் விஷயத்திற்கு வருகிறேன். உங்களின் உலக சினிமா நான் விரும்பிப் படிக்கும் ஒரு பகுதி. தற்சமயங்களில், எங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், ஏதாவதொரு சினிமாவைப்பற்றி நீங்கள் முன்வைக்கும் கருத்துகளை சிலாகித்து விவாதிப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது.
ஒரு சில படங்களைப் பற்றிய தங்களின் எழுத்துக்களைப் படிக்கையில் பிரமிப்புடன் அப்படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற உந்துதல் தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால், அதற்கான வழிவகைகள்தான் என் மனக்குறை.
இங்கு பெங்களுரில் ஒரு சில பிரபலமான கடைகளில் கூட அத்தகைள படங்கள் விற்பனைக்கு வருவதில்லை. இணையத்திலும் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. உங்களின் மிகச் சமீபத்திய The Rains Came ற்கும் இதே கதைதான்.
உங்கள் பதிவுடனேயே, அந்த திரைப்படம் கிடைக்கும் இடம், அல்லது எப்படிப் பெறலாம் போன்ற விவரங்களையும் இணைத்தால், என் போன்ற வாசகர்கள் இன்னும் பயன் பெறுவர் என்பது என் கருத்து.
சரியென்று பட்டால் கருத்தில் கொள்ளவும்.. நன்றி..
அன்புடன்,
தெ.பாலமுருகன்.
***
அன்பிற்குரிய பாலமுருகன்
உலகதிரைப்படங்கள் இன்று எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. அல்லது இணையத்தில் டோரண்ட் வடிவத்தில் காண்பதற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் எளிதாக கிடைக்கின்றன.
https://www.foriegnmoviesddl.com
என்ற இணையதளத்தில் உலகின் முக்கிய இயக்குனர்களின் திரைப்படங்கள் டோரண்ட் பைலாக உள்ளன. இவை தவிர முக்கிய திரைப்படங்களின் டிவிடிக்களை சென்னையில் வாங்குவதற்கு லேண்ட்மார்க் புத்தககடை, மற்றும் ஜெமினி பார்சன் காம்ப்பௌக்ஸில் உள்ள டிவிடி கடைகள் போன்றவற்றில் வாங்கலாம். பர்மா பஜாரிலும் நிறைய வெளிநாட்டு திரைப்படங்கள் கிடைக்கின்றன.
அன்புடன்
எஸ்.ராமகிருஷ்ணன்.
**
ஐயா இராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய கனிந்த வணக்கங்கள்.
என் பெயர் சதீஷ் குமார், வயது 25. மலேசியாவில் வசிக்கிறேன்.
`நடையால் வென்ற உலகம்` என்ற தங்களுடைய அருமையான கட்டுரையை படித்ததுமே உங்களுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.
சதீஷ் குமார் எனும் 70 வயது முதியவர் உலகை நடந்தே சுற்றி வந்துவிட்டார் என அறியும் பொழுது, என்னையறியாமலேயே எனக்குள் ஒரு புதிய தன்னம்பிக்கை சுடர் விட்டு எழுந்துள்ளது. அவருக்கும் எனக்கும் ஒரே பெயர் என்பதால் எழுந்த தன்னம்பிக்கை அல்ல. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் எனது வலது கால் எலும்பு உடைந்து தற்போது படுத்த படுக்கையாகி கிடக்கிறேன். மீண்டும் நடக்க வேண்டும் எனும் ஆர்வம் தங்களுடைய கட்டுரையை படித்த பிறகு அதிகரித்துள்ளது.
அவர் அறியாமல் செய்த சாதனை, என்னைப் போன்று முடங்கிக் கிடந்தவர்களை மீண்டும் எழுந்து நடக்க முயற்சி செய்ய வைப்பதேயாகும்.
இவ்வேளையில் அம்மாபெரும் மனிதருக்கும், தங்களுக்கும், இப்பதிவைப் பற்றி எனக்குத் தெரிய வைத்த ப்ரியமுடன் கே.பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
Sathis Kumar
**