மூன்று சிறுமிகள்

டச்சு ஓவியரான வாலி மோஸ் (Wally Moes)ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவர். ஆகஸ்ட் அலெபே மற்றும் ரிச்சர்ட் பர்னியர் ஆகியோரிடம் ஓவியம் பயின்றிருக்கிறார். உணர்ச்சிகரமான ஓவியங்களை வரைவதில் பெயர் பெற்றவர் வாலி மோஸ். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளை வரைவதில் தனித்துவம் கொண்டவர்.

1880ம் ஆண்டின் கோடையில் மோஸ், ஓவியர் தெரேஸ் ஸ்வார்ட்ஸை சந்தித்தார், அவர் வழியாக கலையுலகிற்கு அறிமுகமானார். ஜெர்மனியில் சிறிது காலம் தங்கிய மோஸ் பின்பு  ஆம்ஸ்டர்டாமிற்குத் திரும்பினார். 1884 இல் பாரிஸுக்குச் சென்றார், அங்குள்ள கலைக்கூடங்களில் தனது ஓவியம் இடம்பெற வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது ஒரேயொரு ஓவியம் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டது. அதுவும் பெரிய வரவேற்பு பெறவில்லை. அவர் பாரீஸில் சில மாதங்களே வசித்தார். 1898 இல் அவர் லாரனுக்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்தபடி தொடர்ச்சியாக ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார்.

1908 ஆம் ஆண்டில் இடைவிடாத மூட்டுவலி காரணமாக அவரால் ஓவியம் வரைய முடியாமல் போனது. ஆகவே கதைகள் எழுத துவங்கினார். அதில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

வாலி மோஸ் பின்னல் வேலை செய்யும் பெண்களைப் பற்றி மூன்று ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1890 வரையப்பட்ட Knitting girls என்ற நீர்வண்ண ஓவியம் மிகச்சிறப்பானது இதில் மூன்று சிறுமிகள் நடந்தபடியே பின்னல் வேலை செய்கிறார்கள். அவர்களின்  முகபாவங்களைப் பாருங்கள். சாந்தமும் அமைதியும் கொண்ட முகங்கள். அவர்கள் பின்னல்வேலையை புதிதாக கற்றுக் கொண்டவர்கள். அதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் ஈடுபாட்டிலே தெரிகிறது. அந்த சாலை மிகவும் அழகாக வரையப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாலையோர மலர். அதன் ஒளிர்வு. சிறுமிகளின் காலடியில் விழும் நிழல். அவர்கள் பயிற்சிபள்ளியிலிருந்து வீடு திரும்பும் பகல் நேரமது.

வலது மணிக்கட்டின் இயக்கம், கையில் நூலை வைத்திருக்கும் விதம். நூல் சுண்டு விரல் வழியாகச் செல்வது, இடதுகையின் பிடிமானம். என ஓவியம் மிகவும் நுட்பமாக வரையப்பட்டிருக்கிறது.

சிறுமிகளின் தோற்றம் அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மூவரும் சமவயதுள்ளவர்கள் போலத் தெரியவில்லை. நடுவில் உள்ள பெண் கடைசியில் உள்ள பெண்ணின் சகோதரியைப் போலவே தெரிகிறாள். இருவரின் முகச்சாடையைப் பாருங்கள்.

சிறுமிகளின் எளிய உடையின் வண்ணமும் சாலையோரப் பூக்களும் அழகாக உள்ளன. உறக்க நடையாளர்களைப் போல அந்த சிறுமிகள் நடக்கிறார்கள்.

அவர்களுக்குள் போட்டி நடப்பது போலிருக்கிறது. யார் விரைவாகப் பின்னல் வேலையை முடிக்கப்போவது என்று போட்டியிடுகிறார்கள். அந்தப் பாதை அவர்கள் வழக்கமாக வந்து போகும் பாதை என்பதால் பின்னல் வேலையில் கவனம் செலுத்தியபடியும் அவர்களால் நடக்க முடிகிறது. சிறுமிகளின் கண்கள் நிலை கொண்டுள்ள விதம். அவர்களின் சற்றே சரிந்த முகம், நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டு நெதர்லாந்தில் வீடு தோறும் பெண்கள் பின்னல் வேலை செய்தார்கள்.  பிள்ளைகளுக்கு வீட்டிலே பின்னல் கற்றுக் கொடுத்தார்கள். பின்னல் வேலையில்​​ வித்தியாசமான ஸ்டைல்கள் உள்ளன. அதில் கான்டினென்டல் பின்னல் அப்போது பிரபலமாக இருந்தது.

வாலி மோஸின் Knitting school in Huizen ஓவியத்தில் பயிற்சி பள்ளியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒன்றாக அமர்ந்து பின்னல் செய்துகொண்டிருக்கிறார்கள். அறைஜன்னலின் வழியாக வரும் ஒளி உடைகளில் பிரதிபலிக்கும் அழகு, மரத்தாலான தரையின் வண்ணம், வெளியே தெரியும் வெள்ளை துணியின் படபடப்பு அழகாக வரையப்பட்டிருக்கிறது. தியானம் செய்வது போல ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அவர்கள் பின்னலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறுமியின் கவனமும் அவளது முகபாவமும் உடைகளும் நேர்த்தியான வரையப்பட்டுள்ளன. தரையில் வைக்கப்பட்டுள்ள நூற்கண்டுள்ள கூடை தனித்த அழகைக் கொண்டிருக்கிறது. அறையிலுள்ள மௌனத்தை நம்மால் உணர முடிகிறது.

14 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் பின்னல் வேலை புகழ்பெறத் துவங்கியது. இங்கிலாந்தில், பின்னல் வேலை செய்த  கம்பளித் தொப்பிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த தொப்பி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

17 ஆம் நூற்றாண்டில் கையால் பின்னல்வேலை செய்வது பணக்கார பெண்களின் களமாக மாறியது. இதற்கென சிறப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டன. கையுறைகள், காலுறைகள் மற்றும் தொப்பிகள் செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அனாதை இல்லங்கள் மற்றும் ஏழை வீடுகளில் பின்னல்வேலை கற்பிப்பது அவர்களுக்கான வருவாய் தரும் பணியாக  உருமாறியது.  19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பின்னல் வேலை கற்றுத்தரும் வீட்டுப் பள்ளிகள் நிறைய இருந்தன.

இந்த ஓவியமும் அப்படியான ஒரு வீட்டுப்பள்ளியில் பெண்கள் பின்னல் வேலை செய்வதையே சித்தரிக்கிறது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு காட்சியை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது, 17 ஆம் நூற்றாண்டில் டச்சு ஓவியர்கள் இந்த வகை ஓவியங்களை சிறப்பாக உருவாக்கினார்கள். அதன் தொடர்ச்சியானதே வாலி மோஸின் ஓவியம்.

0Shares
0