மெய்ம்மைத்தேடிகள்

யாமம் நாவல் வாசிப்பனுபவம்

அரவின் குமார் – மலேசியா

யாமம் நாவலின் வாசிப்பனுபம் நினைவில் இருக்கும் இரவின் மணங்களைக் கொண்டு வரச் செய்தது. மழை பெய்த நாளிரவின்  மணம், வெக்கையான இரவின் மணம், இறப்பு வீட்டு இரவின் மணம் எனப் பலவகையான இரவின் மணம் நினைவிலெழுந்தது. இரவின் மணமென்பது காண்போரின் மனத்துக்கேற்ப மணத்தை அணிந்து கொள்கிறது. அப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மணத்தை அளிக்கும் இரவின் முடிவற்ற மணத்தை அணிந்து கொள்கிற மனிதர்களின் கதையாகவே யாமம் நாவல் அமைந்திருந்தது.

170 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் அமிர்சாகிப் பேட்டையில் அத்தர் வியாபாரி கரீமிலிருந்து கதை தொடங்குகிறது. 15 ஆம் நூற்றாண்டில் தன்னுடைய மெய்மைத் தேடலில் இரவின் மணத்தை அளிக்கும் யாமம் அத்தரின் வழிமுறையைப் பக்கீர் ஒருவரின் வாயிலாகக் கண்டுபிடிக்கிறார் மீர் காசிம். அதிலிருந்து அவர் குடும்பத்தின் மூத்த ஆண்வாரிசுகள் தலைமுறைதோறும் யாமம் அத்தரின் செய்முறையை அடைகின்றனர்.   அந்தப் பின்னணியிலே, இந்தியாவில் காலனியாதிக்கம் மெல்ல காலூன்றுகிறது. ஷாஜகானின் மகள் தாராவுக்கு ஏற்பட்ட தீப்புண்ணை வடுவின்றி ஆற்றப் பயன்படும் ஆங்கில மருத்துவத்துக்கான ஈடாக கிழக்கிந்திய கம்பெனிக்கான தடையில்லா வணிக உரிமை வழங்கப்படுகிறது. பிரான்சிஸ்டேவின் மனைவி கிளாரிந்தாவுக்கான சிகிச்சை செய்த மக்களின் வாழ்விடம் பறிக்கப்பட்டு மசூலிப்பட்டணம் எழுகிறது. அதன் நீட்சியாகவே சென்னைப்பட்டிணமும் உருவாகிறது. துரோகத்தின் சாயையிலே காலனியாதிக்கம் எழுகிறது.

தனக்கு ஆண்வாரிசு இல்லாததால், தன்னோடு அத்தர் செய்முறை முடிந்துவிடும் என கரீம் அஞ்சுகிறான். மூன்றாவது மனைவியாகச் சுரையா என்கிற 15 வயது சிறுமியைத் திருமணம் புரிகிறான். குதிரைப்பந்தயத்தில் ஈடுபட்டுச் செல்வமெல்லாம் இழந்து பெருங்குடிகாரன் ஆகி தலைமுறைதோறும் தொடர்ந்த அத்தர் வணிகத்தை விட்டுக் காணாமற்போகிறான். மெய்ம்மைத் தேடலின் முடிவாகக் கிடைத்த இரவின் மணத்தை விட்டு இன்னொரு நாளிரவில் தொலைத்து விட்டுச் செல்கிறான். அவன் மனைவிகளான ரஹ்மானி, வகிதா, சுரையா ஒருவருக்கொருவர் உதவியாகத் தனியாகச் சென்னையில் ஒண்டு குடித்தனமொன்றில் வாழ்கின்றனர். அத்தர் கடையில் வேலை செய்து வந்த சந்தீபா குடும்பத்துக்கு நெருக்கமானவனாக மாறி விடுகிறான். ஏழ்மையில் இருக்கும் சந்தீபாவும் ஆதரவற்ற பெண்களும் ஒருவரையொருவர் அன்பு செலுத்துகின்றனர். சென்னையில் ஏற்படும் காலராவால் ரஹ்மானியும் சந்தீபாவும் இறந்து போகிறார்கள். ரஹ்மானியின் குழந்தையை எடுத்துக் கொண்டு வகிதாவும் சுரையாவும் தங்கள் பிறந்தகத்துக்கே திரும்புகின்றனர். பலரின் இன்பத்துக்குக் காரணமாக இருந்த அத்தரின் சாட்சியாக வாசனைத் தோட்டத்தின் செங்கல்லொன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உப்பள வேலைக்குச் செல்கிறாள் வகிதா.

இந்த நாவலின் கதைமாந்தர்களின் உடலிலிருக்கும் இன்பத்தின் ஊற்றை இரவின் கண் கொண்டு யாமம் திறக்கச் செய்கிறது, லண்டனுக்குப் படிக்கச் செல்லும்  திருச்சிற்றம்பலம் தன் மனைவி தையலை அண்ணன் பத்ரகிரி ஆதரவில் விட்டுச் செல்கிறான்.  இருவரின் உடலில் இருக்கும் காமத்தின் விழைவை யாமம் வளர்த்தெடுக்கிறது. தையல்நாயகியுடன் கூடி குழந்தையும் பெறுகிறான். பத்ரகிரியின் மனைவி விசாலம் பிரிந்து செல்கிறாள். தையலின் மனத்தில் தோன்றும் குற்றவுணர்வு நோயாக மாறுகிறது. குழந்தையும் இறந்தபின் அனைத்தையும் துறந்து சித்தியின் சிதைந்து போயிருக்கும் வீட்டில் தனியனாகக் குடியேறுகிறான். யாமம் விழைவு எனும் மணத்தையே அளிக்கிறதெனலாம். பங்காளிச் சண்டையில் சொத்தைப் பாதுகாக்க போராடும் கிருஷ்ணப்ப கரையாளர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து இருந்த சொத்தையும் எலிசபெத் எனும் ஆங்கிலோ இந்திய பெண்ணுக்கு எழுதி வைக்கிறார். யாமம் அணிந்த எலிசபெத் கிடைத்த மேல்மலையைத் தேயிலைத் தோட்டமாக்குகிறாள்.

இதைத்தவிர, உலகின் மாயத்தைப் புரிந்து கொள்ள முயலும் பண்டாரத்தின் பாத்திரம் சித்தர் மரபின் நீட்சியாக இருந்தது. சிறுவயதிலே பண்டாரமாக மாறியிருக்கும் சதாசிவம் நாயொன்றில் பின்னால் அலைந்து திரிகிறார். இறைவனே நாயாக மாறி உலக விழைவுகள் அத்தனையிலும் சதாசிவத்தை அலைகழிய வைத்து மெய்ம்மைக்கான வழியைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஓரிடத்தில் திருமணம் செய்து குழந்தை பெறச் செய்த பின் அனைத்தையும் உதறச் செய்வதும், சும்மா இருக்கச் செய்து வசை வாங்கச் செய்தும் உலகியல் விழைவுகள் அத்தனையிலிருந்தும் சதாசிவத்தை விலக்கி அழைத்துச் செல்கிறது. சதாசிவத்துக்கு நேரான பாத்திரம் திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம். மகத்தான கணித அறிவைக் கொண்ட திருச்சிற்றம்பலம் எந்நேரமும் கணிதத்திலே மூழ்கிக் கிடக்கிறான். அத்தனையும் உதறி இரவின் முன்னால் நடந்தவற்றுக்காக அழுகிறான். சூபி மரபின் நீட்சியாக வரும் பக்கீரும் காசிமும் சித்தர் மரபின் நீட்சியாக வரும் சதாசிவமும் கணிதக்கலையின் வாயிலான மெய்ம்மை அடைய முயலும் திருச்சிற்றம்பலமும் என மெய்ம்மைத்தேடிகள் அமைந்திருக்கிறார்கள்.

காலனித்துவச் சென்னையின் செய்திகள் நாவலில் சம்பவங்களாக அமைந்திருக்கின்றன. சர்க்கஸ், காலரா, நில அளவைப்பணி, புதிய குடிகளின் வருகை, பனிக்கட்டியின் மீதான வியப்பு என சென்னையின் பின்னணி அமைந்திருக்கிறது. அந்நிய ஆட்சியில் புதிய நகரொன்று மெல்ல எழுந்து வருவதன் சித்திரம் சிறப்பாக வெளிப்படுகிறது. இரவைப் போல நிதானமான மொழியில் வரலாறின் ஒழுக்கும் மெய்ம்மைக்கான தேடலும் மனித விழைவுகளும் நாவலில் பிணைந்திருக்கிறது.

0Shares
0