மேகம் போல வாழ்க்கை

போலந்தில் வாழ்ந்த ஜிப்ஸி இனக்குழுவைச் சார்ந்த கவிஞர் பபுஸ்ஸாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Papusza திரைப்படத்தைப் பார்த்தேன். 2013ல் வெளியான படமிது.

கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட காவியம் என்றே இதைச் சொல்வேன். ஓவியங்களில் காணப்படுவது போல அகன்ற நிலக்காட்சியினை வெகு நேர்த்தியாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

முடிவற்ற நிலவெளியில் ஜிப்ஸிகள் குதிரைவண்டிகளில் பயணம் செய்வது, முகாமிட்டுத் தங்குவது. அவர்களின் இரவு வாழ்க்கை, நடனம், வாழ்க்கை நெருக்கடிகள். இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பி அலைந்த போராட்டம் என ரோமா வாழ்க்கையைப் பேரழகுடன் படம்பிடித்திருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து 11ம் நூற்றாண்டில் அகதிகளாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் பரவிய ஜிப்ஸிகள் கட்டுப்பாடற்றவர்கள் என்ற காரணத்தால் கம்யூனிச நாடுகளின் ஆட்சியாளர்களால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். பாசிச ராணுவத்தால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது நான்காவது ஆணியை ஜிப்ஸிகள் திருடிச்சென்றுவிட்டார்கள் கிறிஸ்துவை வலியிலிருந்து காப்பாற்ற அது உதவியது என்றொரு கதையுமிருக்கிறது.

ஆடல், பாடல், இசை என உற்சாகமான வாழ்க்கையைக் கொண்டவர் ஜிப்ஸிகள். அவர்களுக்குக் கடந்தகாலத்தைப் பற்றிய ஏக்கம் கிடையாது. வருங்காலம் பற்றிய பயமும் கிடையாது.

சொந்தமாகப் பாடல் புனைந்து பாடும் திறமை கொண்டிருந்த போதும் ஜிப்ஸிகள் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டதில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு பெறும் உரிமை கிடையாது. ஆணுக்கு நிகராகச் சண்டையிடவும் குதிரையேற்றம் செய்யவும் கூடிய ஜிப்ஸிப் பெண்கள் கூட கல்வி கற்றுக் கொள்ளவில்லை.

ஜிப்ஸி இனத்தை ரோமா என்று அழைக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகியவை மிகப்பெரிய அளவில் ரோமா மக்களைக் கொண்டிருந்தன.

பபுஸ்ஸாவின் இயற்பெயர் ப்ரோனிசாவா வாஜ்ஸ், அவள் தன்னுடைய சிறுவயதில் கோழிகளை திருடி, அதைக் கட்டணமாகக் கொடுத்து யூத கடைக்கார பெண் ஒருத்தியிடம் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டாள். புத்தகம் படிக்கத் துவங்கினாள். ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி அவள் படிக்கும் காட்சியில் அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷம் நிகரற்றது.

ப்ரோனிசாவா தனது குடும்பத்தினருடன் நாடோடி முறையில் வளர்ந்தவள். பேரழகி. தைரியமான பெண். பதினைந்து வயதில் அவளை விட இருபது ஆண்டுகள் வயதில் மூத்த டியோனிஸி வாஜ்ஸ் என்ற இசைக்கலைஞனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.

அந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் கட்டாயமாக மணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஒரு பையன் பிறக்கிறான். ஊர் ஊர்விட்டு மாறி போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.  சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து மீளுவதற்குப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார்

தனது தனிமை மற்றும் ஏக்கம் குறித்த வெளிப்பாடாக அந்தக் கவிதைகள் அமைந்தன. உண்மையில் அவருக்குக் கவிதையின் இலக்கணங்கள் எதுவும் தெரியாது. தானே எழுதித் தானே இசையமைத்துப் பாடினார்.

தண்ணீர் தன் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என அவரது கவிதையொன்று துவங்குகிறது. பபுஸ்ஸா கவிதைகளின் கையெழுத்துப் பிரதியை வாசித்த போலந்து கவிஞர் ஜெர்சி ஃபிகோவ்ஸ்கி அவரை அங்கீகரித்து உடனடியாக அந்தக் கவிதைகள் வெளியாவதற்கு உதவிகள் செய்தார்.

ஒரு காட்சியில் ஃபிகோவ்ஸ்கி ஒரு பேனாவை அவளுக்குப் பரிசாக அளிக்கிறார். அதே பேனாவை பின்பு ஒரு நெருக்கடியான சூழலில் அடமானம் வைத்து குழந்தைக்கான மருந்துகளைப் பெறுகிறாள் பபுஸ்ஸா

ஹிட்லரின் நாஜி ராணுவம் யூதர்களைப் போலவே ஜிப்ஸிகளையும் வேட்டையாத் துவங்கியது. அவர்கள் இடம் விட்டு இடம் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மீறியவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது நாஜி ராணுவம்.

அது போலவே ஜிப்ஸிகளின் முகாம்களைத் தாக்கி பெண்களை வன்புணர்வு செய்தார்கள். அவர்கள் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில் கட்டாயத்தின் பெயரால் ஜிப்ஸிகள் வீடுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது..

அதை டியோனிஸியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவரும் அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கேயும் ஆடல் பாடல் என உற்சாகமாக இருந்தார்கள். வீட்டின் மீதான கோபத்தில் டியோனிஸி அதைக் கோடாரி கொண்டு உடைந்து சிதறடிக்க முயன்றதும் உண்டு.

இந்த நிலையில் ஜெர்சி ஃபிகோவ்ஸ்கி ரோமாக்களின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் ஜிப்ஸிகளுடன் ஒன்றாக வாழ்ந்தவர் என்பதால் நேரடி அனுபவங்களைப் பதிவு செய்திருந்தார். அவரது தோழியாக விளங்கியவர் பபுஸ்ஸா. ஆகவே அவரையும் ஜிப்ஸிகளின் சமூகம் துரோகியாக என்று கருதத் தொடங்கியது,

ஜிப்ஸிகளின் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பொதுவான சட்டம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதாக அவர் மீது விசாரணை நடைபெற்றது. அதில் குற்றம் உறுதிப்படுத்தப்படவே பபுஸ்ஸா இனக்குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்த ஆத்திரத்தில் அவர் தான் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தீயிட்டு எரித்துவிட்டதோடு எல்லா உறவுகளையும் விட்டு விலகி கணவருடன் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார்

கணவன்-மனைவியான ஜோனா கோஸ்-க்ராஸ் மற்றும் க்ரிஸ்ஸ்டோஃப் க்ராஸ் இயக்கியுள்ள இந்தப் படம் கோழியைத் திருடியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட பபுஸ்ஸா அவரது கவிதை நிகழ்விற்காகச் சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படுவதில் துவங்குகிறது

சிறையின் சாவித்துவாரம் வழியாகக் காட்டப்படும் ஒரு ஷாட் மிகப்பிரமாதமாகவுள்ளது. கேமிராகோணங்கள் படம் முழுவதும் வியப்பளிக்கின்றன. பபுஸ்ஸாவின் கடந்தகால வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது.

1900 களின் முற்பகுதியில் போலந்து நாட்டில் ஜிப்ஸிகள் இலக்கற்று குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். ஜிப்ஸிகள் வெளியாட்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை ,ஜிப்ஸி அல்லாதவர்களைக் காட்ஜோ என்கிறார்கள். ஊர் ஊராகச் சென்று ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் ஜிப்ஸிகள் வாழ்ந்தார்கள்.

பபுஸ்ஸா என்பதற்கு ரோமானிய மொழியில் “பொம்மை” என்று பொருள். மரப்பொந்தினுள் ஒளித்துவைக்கபட்ட லென்ஸ் மற்றும் பணத்தைச் சிறுமியான பபுஸ்ஸா ரகசியமாக எடுக்கும் காட்சி அழகானது. ஜிப்ஸிகளுடன் இணைந்து பயணித்த காட்ஜோவான ஃபிகோவ்ஸ்கி அவள் மீது அன்பு காட்டுகிறான். அவள் படிப்பதற்குப் புத்தகங்கள் தருகிறான். அவளைப் புரிந்து கொண்ட ஒரே ஆண் அவன் மட்டுமே

ஜிப்ஸிகளின் கூட்டத்தைப் பிரிந்து வார்ஸா செல்ல முயலும் ஃபிகோவ்ஸ்கியை ஒரேயொரு முறை தான் பபுஸ்ஸா முத்தமிடுகிறாள். அது தான் அவள் காதலின் அடையாளம். பபுஸ்ஸாவின் கவிதைகள் பத்திரிக்கையில் வெளியாகியிருப்பதைக் கண்ட அவளது மகன் சந்தோஷமாக வீட்டிற்குக் கொண்டு வருகிறான். பபுஸ்ஸா அதைக் கையில் வாங்கியபடியே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொள்கிறாள். அற்புதமான காட்சியது. ஜிப்ஸிகளின் உலகம் Krzysztof Ptak ஆல் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது

பபுஸ்ஸா கவிதைகள் எழுதுவதன் மூலம் பெற்ற பணத்தை அவள் கணவன் பிடுங்கிக் கொள்கிறான். குடித்துவிட்டுப் போதையில் அவளுடன் சண்டையிடுகிறான். அவன் கடைசி வரை பபுஸ்ஸாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவனது மரணத்தின் போது அமைதியாக அருகில் நின்று அந்த உடலை பபுஸ்ஸா வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சொல்லப்படாத ஆயிரம் கதைகள் அவள் முகத்தில் தோன்றி மறைகின்றன.

முன்பின்னாக மாறிமாறிச் செல்லும் படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமானது. ஜிப்ஸிகளின் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமான வகையில் படம் சித்தரித்துள்ளது. குறிப்பாக ரோமா சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு ஜிப்ஸி பெண்கள் மற்றும் குழந்தைகள் யாசிப்பதற்காக நகரங்களுக்குச் செல்வது, ஆருடம் சொல்வது. திருட்டில் ஈடுபடுவது மற்றும் குதிரை வணிகம் செய்வது போன்றவை படத்தில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வானத்தின் கீழுள்ள மொத்த உலகமும் தனக்கானது தான் என நினைத்த ஜிப்ஸிகள் சிறிய இருட்டறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளைப் போல வேட்டையாடப்பட்ட துயர வரலாற்றைப் படம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. சுதந்திர உணர்வின் வெளிப்பாடாக அவர்களின் இசை இருந்தது. இன்றும் அந்த இசையின் தொடர்ச்சியினைக் காணமுடிகிறது.

தங்களின் சந்தோஷத்தைக் கண்டு ஹிட்லருக்குப் பொறாமை, அதனால் தான் தங்களை வேட்டையாடுகிறான் என்று ஒரு காட்சியில் ஒரு ஜிப்ஸி சொல்கிறார். அது உண்மையே.

பொருள் தேடுவதை மட்டுமே வாழ்க்கை என நினைக்காமல் சுதந்திரமாக, சந்தோஷமாக இசையும் பாடலும் இன்பமுமாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையை அதிகாரத்தால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கலை தரும் சுதந்திர உணர்வை வளரவிடாமல் தடுப்பது அதிகாரத்தின் இயல்பு. அது தான் ஜிப்ஸிகளின் விஷயத்திலும் நடந்தது.

பபுஸ்ஸா கவிதைகள் தற்போது தனி நூலாக வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு இனத்தின் வரலாற்றுச் சாட்சியமாக மாற்றியதே இயக்குநரின் வெற்றி என்பேன்

••

0Shares
0