மேய்ச்சல் மனிதர்கள்.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கசாக் இன மக்களின் மாறிவரும் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் Fade Away Pastoral. ஹதிஷா மற்றும் ஹுமார் குடும்பங்களின் கதையைச் சொல்கிறது. ஹுமார் மேய்ச்சலுக்குச் செல்பவர்களின் வழிகாட்டியாக விளங்குகிறார்.

கசாக்குகள் செம்மறி ஆடுகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் மந்தைகளை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் மேய்ச்சலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். பனிப்பிரதேசத்தில் அவர்கள் மந்தைகளுடன் செல்லும் காட்சிகள் படத்தில் பிரமிப்பூட்டுகின்றன. மிகச்சிறந்த ஒளிப்பதிவு.

கடும்பனிப்புயலில் மந்தையோடு அவர்கள் சிக்கிக் கொள்வதில் தான் படம் துவங்குகிறது. வழியில் ஒரு பெண்ணிற்குப் பிரசவம் நடக்கிறது. பனிக்காற்றின் ஊளைக்கு நடுவே சிறிய தடுப்பை உருவாக்கி அந்தப் பெண் பிரசவிக்கிறாள். பிறந்த குழந்தைக்குப் பனிமலர் என்றே பெயரிடுகிறார்கள்.

மேய்ச்சலுக்குச் செல்லும் ஆணும் பெண்ணும் ஆங்காங்கே கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். பனிப்புயலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் அவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார் அவர்களின் தலைவர் ஹுமார். கூடாரத்தைப் பிய்த்துத் தூக்கி எறிவது போலப் பனிப்புயல் வீசுகிறது. மிக நெருக்கமான சூழலைச் சமாளித்து இடம்பெயர்கிறார்கள். நாடோடி வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தையும் படம் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது

குறிப்பாக ஆடுகளுடன் மலையின் குறுகலான பாதையில் அவர்கள் பயணிக்கும் போது கால் தவறி ஆடுகள் மலையிலிருந்து கீழே விழுந்து சாகின்றன. குதிரையில் ஏற்றிச் செல்லும் சுமைகளில் ஒன்று சரிந்துவிடவே அதைத் தாங்கிப் பிடிக்கச் சென்ற இருவர் நிலைதடுமாறி மலையுச்சியிலிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். ஹுமாரின் மனைவியால் அந்த மரணத்தைத் தாங்க முடியவில்லை. ஆனால் ஹுமார் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிக் கொண்டு போக வேண்டும். அங்கேயே தங்க முடியாது என்று அவளைத் தன்னோடு அழைத்துப் போகிறார். இந்த விபத்தால் ஹதிஷா மற்றும் ஹுமார் குடும்பங்களுக்குள் கருத்துவேறுபாடு உருவாகிறது. விபத்துக்குக் காரணம் ஹுமார் எனக் குற்றம் சாட்டி சண்டையிடுகிறார்கள்.

தவறி விழுந்து செத்த ஆடுகளின் தோலை உரித்து விற்பனை செய்யும் ஒருவனையும் படம் அறிமுகம் செய்கிறது. அவன் காட்டாற்றின் கரையிலிருந்தபடியே தவறி விழுந்த ஆடுகளை இழுத்து அதன் தோலை உரிக்கிறான். அதுவும் நாடோடி வாழ்க்கையின் ஒரு அங்கமே

ஆடுகளைக் கொன்று தின்னும் ஓநாயை விரட்டி வேட்டையாடும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. மிக அழகான காட்சியது. அவர்கள் ஒன்றாக ஓநாயைச் சுற்றிவளைக்கிறார்கள். ஓநாயின் கண்கள் அவர்களை வெறித்துப் பார்க்கிறது. கூரான ஈட்டிகள் மூலம் ஓநாயை அவர்கள் குத்திக் கொல்கிறார்கள்.

வசந்தகாலம் வருகிறது. அவர்கள் ஆட்டு ரோமங்களைச் சேகரித்து விற்பனை செய்கிறார்கள். ரோமங்களை எடைபோட்டு வாங்குகிறவன் அவர்களை ஏமாற்றுகிறான். அவனை ஹுமார் கண்டிக்கிறார். ஆனால் அவனைவிட்டால் வேறு ஆள் கிடையாது என்பதால் அவன் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு ரோமங்களை விற்கிறார்கள்.

ஹுமார் வழிகாட்டுவதற்காக எப்போதும் ஒரு கழுகைக் கூடவே வைத்திருக்கிறார். அது மேய்ச்சலில் தப்பிய ஆடுகளைக் கண்டறிந்து வர உதவி செய்கிறது. நாடோடி வாழ்க்கையிலும் பெண்கள் தான் அதிகச் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் கூடாரத்திற்குள்ளாகவே சமைத்து பிள்ளைகளை வளர்த்து, குடும்பத்திற்குத் தேவையான உணவுப்பொருட்களைச் சேகரித்து வருகிறார்கள்.

துசாவ் கேசு என்பது கசாக்கிய பாரம்பரியமாகும், அதன்படி குழந்தை நடக்கத் துவங்கும் போது அதன் காலைக்கட்டி அழைத்துவருகிறார்கள். பெரியவர் ஒருவர் அந்தக் கால்கட்டினை அவிழ்த்து குழந்தையை நடைபழகச் செய்கிறார். பெரியவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல் குழந்தைகள் நடக்கமுடியாது என்பதன் அடையாளமாக அந்தச் சடங்கு நடைபெறுகிறது

அது போலவே நல்ல செய்தி கொண்டுவருபவருக்குப் பரிசு தரப்பட வேண்டும் என்பதும் அவர்களின் மரபு. ஒன்றாகக் கூடி குடிப்பது. நடனமாடுவது. விருந்தினர்களை அழைப்பது சேர்ந்து உண்பது தேநீர், குமிஸ், இறைச்சி விருப்பமாகப் பரிமாறிக் கொள்வது ஆகியவை கசாக்குகளின் வழக்கங்களாகும்..

ஒருவர் வீட்டிற்கு வந்தால், அவர் நிச்சயமாக உட்கார்ந்து அல்லது மண்டியிட்டே உரையாட வேண்டும். நின்றபடியே பேசுவது குற்றமாகக் கருதப்படும். அதை அவமரியாதையைச் செயலாக எடுத்துக் கொள்வார்கள்..

நீண்ட காலமாகச் சந்திக்காத இருவர் திரும்பச் சந்தித்துக் கொள்ளும் போது ஒருவருக்கொருவர் மறக்கமுடியாத பரிசு ஒன்றை தரவேண்டும் என்பது வழக்கம். இது போலவே ஒருவன் தனது கத்தி மற்றும் நாயை இன்னொருவருக்குக் கொடுக்கக்கூடாது. அது பகையை உருவாக்கிவிடும் என்ற நம்பிக்கையும் அவர்களிடமிருந்தது.

கடுங்குளிர், தீராத பசி, நடந்து சோர்ந்து போன கால்கள். எதிர்பாராத ஆபத்து ஆகியவற்றால் நிறைந்த அவர்களின் நாடோடி வாழ்க்கையை அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். நகரத்திற்குப் போய் மற்றவர்களைப் போல வேலை செய்து சம்பாதிக்கலாமே. நாம் ஏன் இப்படி மந்தைகளை ஒட்டி கஷ்டப்பட வேண்டும் என்று சண்டையிடுகிறான் ஒரு மகன். ஆனால் மற்றவனோ தங்கள் இனத்தின் பூர்வீக தொழிலைக் கைவிடக்கூடாது என்கிறான்.

அவர்களுக்குள் சண்டை வருகிறது. இளையமகன் வீட்டை விட்டு ஒடி நகரிற்குப் போகிறான். அவன் மனைவியின் உறவினர்கள் உதவி செய்கிறார்கள். ஆனால் மூத்தவன் ஹுமாருடன் மேய்ச்சலுக்குச் செல்கிறான். காலம் மாறுகிறது. பெரும் புல்வெளியாக இருந்த அவர்களின் வசிப்பிடம் மெல்ல உருமாறுகிறது. வேட்டைக்காக அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்கிறது அரசாங்கம். பசுமை மறைந்து போய்ப் புதிய குடியிருப்புகள் வருகின்றன. சுற்றுலா ஸ்தலம் போல மக்கள் கூடுகிறார்கள். புகைப்படம் எடுக்கிறார்கள்

இத்தனை அழகான புல்வெளிக்கு வந்துவிட்டு இன்னமும் மக்கள் அதை ரசிக்காமல் கடைகளில் போய் நேரத்தை வீணடிக்கிறார்களே என்று ஒரு காட்சியில் ஹுமார் கோபம் கொள்கிறார்.

நாடோடி வாழ்க்கையில் குடும்பமே உலகம் என்றிருந்த பெண்களின் நிலை மாறுகிறது. ஹுமாரின் மகள் கல்லூரிக்குப் படிக்கச்செல்கிறாள். அவளுக்காகச் சிறந்த குதிரை ஒன்றை பரிசாகத் தருகிறார் ஹுமார். புல்வெளியில் நீண்ட சாலை அமைக்கப்படுகின்றன வாகனங்கள் வந்து போக ஆரம்பிக்கின்றன. ஒரு காட்சியில் காரை குதிரையில் துரத்திப் போய்த் தடுத்து நிறுத்துகிறார்கள். ஹுமார் கடைசிவரை குதிரையில் போகவே ஆசைப்படுகிறார். அவரது குதிரை வயதாகி இறக்கும் காட்சி நெகிழவைக்கக்கூடியது..

கசாக் இனமக்களின் நாடோடி வாழ்வின் 40 ஆண்டுகளைப் படம் சித்தரிக்கிறது. காலமாற்றம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றுகிறது. ஹுமார் அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தடுமாறுகிறார். பணம் தான் உலகம் என்று நம்பி அதைத் துரத்திச் செல்வது கசாக்குகளின் வாழ்க்கையில்லை என்று இளந்தலை முறையிடம் சொல்கிறார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறுவயதிலிருந்தே கசாக் இனக் குழந்தைகள் தங்கள் மூப்பர்களுடன் நட்பாகவும், கட்டுப்பாடாகவும், நடந்து கொள்ளக் கற்பிக்கப்படுகிறார்கள், மேலும் வயதானவர்களின் ஞானத்தைக் கேட்டு அறிந்து கொள்ளும்போது முரட்டுத்தனமாகப் பேசுவதையும் நடந்து கொள்வதையும் கைவிடுகிறார்கள். மாறிவரும் வாழ்க்கையில் அந்த மரபு கைவிடப்படுவது ஹுமாருக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

முதுமையில் வாழ்க்கை ஹுமாருக்குச் சுமையாக மாறிவிடுகிறது. வீட்டைப்பூட்டிக் கொண்டு மரணத்தினை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். ஆனால் வாழ்வின் அழைப்பு அவரை மீண்டும் இடம்பெயர வைக்கிறது. தனக்கு விருப்பமான கழுகைச் சுதந்திரமாகப் பறக்கவிடுகிறார். ஆனால் அது பழக்கம் காரணமாக அவரிடமே திரும்பி வந்துவிடுகிறது. மாறிவரும் தலைமுறையோடு இணைந்து வாழவேண்டியது தான் சரியானது என்று ஹுமார் முடிவு செய்கிறார்

புல்வெளி வாழ்க்கையை விட்டு வெளியேறி பேரன்களுடன் நகரில் வாழ்வதற்கு இடம்பெயருகிறார். வசதியான ஒரு வீட்டில் பெரிய தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அவர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.

ஹுமார் மறக்கமுடியாத கதாபாத்திரம்.

ஹுமாரின் கதை வழியாகக் கசாக் மக்களின் நாடோடி வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை மிக அழகாகப் படம் சித்தரித்துள்ளது. மாறிவரும் பருவ காலங்களுக்கு ஏற்ப நிறத்தைத் தேர்வு செய்து படமாக்கியிருக்கிறார்கள். அகன்ற திரையில் ஆடுகளை ஒட்டிக் கொண்டு அவர்கள் செல்லும் காட்சியைக் காண அத்தனை அழகாகயிருக்கிறது.

கசாக்குகளின் மேய்ச்சல் வாழ்க்கையைப் பிரமிப்பூட்டும் வகையில் படம் சித்தரித்துள்ளது. சிறந்த ஒளிப்பதிவும் இசையும் படத்திற்குப் பெருந்துணையாக இருக்கின்றன.

எதிர்காலத்தில், கசாக்குகளின் நாடோடி வாழ்க்கை பற்றி மக்கள் புத்தகங்கள் அல்லது சினிமாவில் மட்டுமே அறிந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்தப் படம் அவர்களின் வரலாற்றைப் பாதுகாக்கும் முயற்சி என்று இயக்குநர் கூறுகிறார். கசாக்குகளின் வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளைத் துல்லியமாகப் பதிவு செய்த விதத்தில் இந்தப்படம் முக்கியமானது என்றே சொல்வேன்.

••

அக்டோபர் 6/ 2020

0Shares
0