மொழிபெயர்ப்பு விருதுகள்

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன

விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றினேன். என்னோடு பேராசிரியர் பழனி கிருஷ்ணசாமி, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.

இந்த விருது வழங்கும் விழா நேற்று சென்னை, ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.

விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

டேவிட் கிராஸ்மேன் எழுதிய ‘நிலத்தின் விளிம்புக்கு’ நாவலை மொழியாக்கம் செய்த அசதாவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல்பரிசு வழங்கப்பட்டது.

மமாங் தய் எழுதிய ‘கருங்குன்றம்’ நாவலை மொழி பெயர்த்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் சதாசிவம் எழுதிய ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ நூலை மொழியாக்கம் செய்த கமலாலயன் ஆகியோருக்கு இரண்டாம் பரிசு ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது.

தெலுங்கு எழுத்தாளர் பி.அஜய் பிரசாத் எழுதிய ‘அத்தங்கி மலை’ சிறுகதை தொகுப்பினை மொழிபெயர்த்த குப்பம் பல்கலைழகப் பேராசிரியர் க.மாரியப்பன், கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் எழுதிய ‘எனது ராணுவ நினைவலைகள் நூலை மொழியாக்கம் செய்த ப.கிருஷ்ணன், மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்’ எனக் கொரிய கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் ரவிக்குமார், ப.கல்பனா. கேரளப் பழங்குடி கவிதைகள் நூலை மொழிபெயர்த்த நிர்மால்யா ஆகியோருக்கு மூன்றாம் பரிசு இருபத்தைந்தாயிரம் வழங்கப்பட்டது,

டாக்டர் ம.மாணிக்கம் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. மொழி பெயர்ப்பு மையம் சார்பில் கவிஞர் சிற்பி வாழ்த்துரை வழங்கினார். அருட்செல்வர் நா.மகாலிங்கம் குறித்த பேருரையை  சுகிசிவம் வழங்கினார்.

இந்த விழாவில் அண்ணல் காந்தியடிகளின் ஹரிஜன் இதழ் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இதனைக் கிருங்கை சேதுபதி மற்றும் சொ. அருணன் தொகுத்துள்ளார்கள். முல்லை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

0Shares
0