பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே (Claude Monet – 1840-1926) இயற்கையை துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஒவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் கண்டிருக்கிறேன்
Water Lilies என்ற ஒவிய வரிசை அபாரமானது.
இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. இயற்கையை நேரில் காணும் போது பெரிய பொருட்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. அவற்றையே மனம் பிரதானமாக அவதானிக்கிறது. உள்வாங்கிக் கொள்கிறது.
காற்றினால் தண்ணீரில் ஏற்படும் அலைகளையோ, ஒளி ஊடுருவி விளையாடுவதையோ. பூக்களின் திறந்த இதழ்களையோ நாம் நுட்பமாக அவதானிப்பதில்லை.
மோனே தனது ஒவியங்களின் வழியே அதை நமக்குத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறார், அவரது ஒவியத்தில் காணப்படும் வண்ணங்கள் பிரித்து அறிய முடியாத இசைக்கோர்வையைப் போலிருக்கின்றன
‘இம்ப்ரஷனிசம்’ எனும் ஒவிய வகையைச் சேர்ந்த இந்த ஒவியங்கள் இயற்கைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலாக உள்ளன.
மோனேயின் ஒவியத்தில் வெளிப்படும் களங்கமின்மையும், தனிமையும் நம்மைக் கவர்ந்திழுக்க கூடியவை.
மோனே மிகுந்த வறுமையில் நெருக்கடியில் வாழ்ந்தவர். அவ்வளவு பொருளாதார நெருக்கடி உள்ள மனிதர் எப்படி இயற்கையை இவ்வளவு ரசித்து நுணுக்கமாக வரைந்தார் என்பது வியப்பளிக்கிறது. ஒருவேளை இந்த நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்குத் தான் இயற்கையிடம் ஒப்புக் கொடுத்துக் கொண்டாரோ என்னவோ.
மனைவியின் நகைகளை அடமானம் வைத்து வாழ்க்கை நடத்தியவர் மோனோ. கர்ப்ப புற்றுநோயால் மனைவி இறந்த போது அவரது சவ அடக்கத்திற்குள் மனைவியின் விருப்பத்திற்குரிய நெக்லஸை எப்படியாவது மீட்டு திரும்ப அணிந்துவிட முடியாதா என்று போராடியிருக்கிறார். பின்னாளில் அவரது ஒவியங்களின் வழியே கிடைத்த பணத்தைக் கொண்டு சற்று சந்தோஷமான ஒரு வாழ்க்கையை மோனே வாழ்ந்தார்.
மே 1889 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மொனட் மற்றும் அவரது குடும்பத்தினர் வடக்கு பிரான்சிலுள்ள கவேர்னி என்ற ஊரில் ஒரு வீடு மற்றும் இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கேயே ஒரு ஸ்டூடியோ, பழத்தோட்டம் மற்றும் ஒரு பூந்தோட்டத்தை அமைத்துக் கொண்டார்கள்..
தான் உருவாக்கிய பூந்தோட்டத்திற்குள் நாளின் பெரும்பான்மை நேரத்தை மோனே செலவிட்டார். மாறாத அகத்துயரிலிருந்தே அவரது புகழ்பெற்ற ஒவியங்கள் பிறந்திருக்கின்றன.
பூக்களை மோனே வரைந்தது போல எவராலும் வரைய முடிந்ததில்லை.. ஒவ்வொரு பூவும் ஒரு ரகசியம் என்பது போலவே வரைந்திருக்கிறார். மலர்ந்து ஒரு நாளில் வாடிவிடப்போகிற பூக்களை அவர் தனது ஒவியத்தின் வழியே நித்யமானதாக உருமாற்றினார்.
தியானத்தின் போது மனம் ஒருமுகப்படுவது போல ஒவியங்கள் வரைவதன் மூலம் ஒருவித தியானநிலையை, மோனத்தை அடைந்திருக்கிறார். தண்ணீரில் தெரியும் பிம்பங்கள். காற்றின் அசைவு. நீர் அல்லிகளின் சரிந்த நிலை. எனக் கனவில் ஒளிரும் காட்சிகளைப் போல அவரது ஒவியங்கள் காணப்படுகின்றன.
மோனையின் ஒவியத்தில் பரபரப்பான நிகழ்வுகளோ, மனிதர்களோ கிடையாது. உலகமே ஒரு பெரும் தியானவெளியை போலக் காட்சியளிக்கிறது. கடல்புறத்தை மோனே தீட்டிய ஒவியங்களில் உணர்ச்சிகளின் சீற்றமாகக் கடல் காட்சியளிக்கிறது.
ஜப்பானிய ஒவியங்கள் 1876 களில் பிரெஞ்சில் மிகவும் புகழ்பெற்றிருந்தன. மோனே ஜப்பானிய வுட்கட் ஒவியங்களை விரும்பி ரசித்தார். ஜப்பானிய ஒவியங்களின் பாதிப்பில்La Japonaise-என்ற ஒவியம் ஒன்றை மோனே வரைந்திருக்கிறார். அந்த ஒவியத்தில் இருப்பவர் அவரது மனைவி கமிலே. அவரைக் கிமோனா உடையில் வெகு அழகாக வரைந்திருக்கிறார். ஜப்பானிய விசிறியும் அதைப்பிடித்து நிற்கும் அழகும் தனிச்சிறப்பாகவுள்ளன
For me, a landscape does not exist in its own right, since its appearance changes at every moment; but the surrounding atmosphere brings it to life – the light and the air which vary continually. For me, it is only the surrounding atmosphere which gives subjects their true value.
என்கிறார் மோனே.
உலகின் காட்சிகள் ஒவ்வொரு நிமிஷமும் ஒளியால், காற்றால் உருமாறிக் கொண்டேயிருக்கின்றன. அந்த மாயத்தையே மோனே பதிவு செய்கிறார். கொண்டாடுகிறார்.
மோனேயின் ஒவியத்தை ஆழ்ந்து ரசிக்கும் ஒருவர் அந்த ஒவியங்களின் உன்னத ஆற்றலை உணர்ந்து நிச்சயம் தன்னை மீறி கண்ணீர் விடவே செய்வார்.
சீனாவில் ஒரு மன்னன் சிறுவயதிலிருந்து ஒவியத்தின் வழியாகவே இயற்கை காட்சிகளை அறிந்து வந்தான். அவன் வளர்ந்து பெரிய ஆள் ஆகி பயணம் போகும் போது கண்ணில்பட்ட இயற்கை காட்சிகள் எதுவும் அவனை வசீகரிக்கவில்லை. மிகுந்த ஏமாற்றமாகயிருந்தது. ஒவியத்தில் உள்ளது போல இயற்கை வெளியே அழகாகயில்லை என்று அவன் நினைத்து நினைத்து வருந்தியதாக சொல்கிறார்கள்.
மோனேயின் ஒவியங்களின் வழியே இயற்கையை அறிந்து கொண்டவர்களுக்கும் இதே அனுபவம் ஏற்படும் என்பதே நிஜம்.