யாமம்- வாசிப்பனுபவம்

சௌந்தர்.G

ஒரு நாவலுக்குள் , வரலாற்று தடயங்கள் , காலக்கணக்குகள், தத்துவார்த்த நிலைகள் , மனித அவலங்கள் , தீர்வும் , தீர்வற்ற முடிவுகள்.  என பல படிகள் கட்டமைக்கப்பட்டு , ஒரு உச்சத்தில்,  கதையை அந்தரத்தில் மிதக்க விடுவதோ , சரித்து கீழே தள்ளி, கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்ப்பதோ, அந்த படைப்பாளியின்  தேர்வாக இருக்கலாம்.

  வாசகனுக்கு அந்த நாவல் மிச்சம் வைப்பது என்ன? என்பதுவே  அந்த  நாவலின்  வெற்றி.  தொடர்ந்து பேசப்பட்ட, அப்படியான  நாவல் வரிசைகளில் முக்கியமான ஒன்று  ‘யாமம்’.

நாலைந்து கதைகளையும் வெவ்வேறு காலகட்ட வாழ்க்கையையும் சொல்லி சென்றுகொண்டிருக்கும் பொழுதே நாவல் முடிந்து விடுகிறது .  எனினும்  படித்து முடித்தபின்  நாவலை பின்னோக்கி சென்று பார்த்தால் , அனைத்தும் இரவில் தொடங்கி அல்லது இரவில் ஒரு உச்சத்தை அடைந்து, முழுமை கைகூடி இருக்கும்.

இந்திய மரபில்  மனித இருப்பை பற்றி பேசுகையில் ,  ஜாக்ரத்,{ விழிப்பு }ஸ்வப்ன{ கனவு } , சுஷுப்தி {உறக்கம்}, என்ற மூன்று நிலைகளையும் , ”துரியம்” எனும்  பிரபஞ்ச இயக்கத்துடன் ஒன்றிய நிலையையும் குறிப்பிடுகிறது. 

இந்த மரபார்ந்த பார்வை பெரும்பாலும் கவிகளால் கவிதைக்குள் அவ்வப்பொழுது எடுத்தாளப்படுவது , பாரதி முதல்  நவீன கவிதைகள் வரை, வாசிக்கும் எவரும் அறியக்கூடியதே.  எனினும்  பெரும் நாவல்களுக்குள் , கதைகளுக்குள், மிக சொற்பமாகவே  வெளிப்பட்டுள்ளது.

அந்த வகையில்  ‘யாமம்’ முதல் மூன்று நிலைகளையும்  நாவல் முழுவதும்  பேசுகிறது .  இச்சையும், பெரும்களியாட்டமும், மனிதர்களை  மூன்று நிலைகளுக்குள்ளும் அலைக்கழித்து, முட்டி மோதி இறுதியில்  எதுவுவே நிறைவை , அமைதியை , மகிழ்வை தராத, இருளில் கொண்டு விடுகிறது. அதற்கு இரவு எனும் காலம் கச்சிதமான கருவியாக  இருக்கிறது .

நாவல்,  ”யாமம் ” எனும் நறுமணம் மிக்க ஒரு அத்தரை மையமாக கொண்டது ,

16ஆம் நூற்றாண்டு முதல்  19ம் நூற்றாண்டு வரை,  தொடரும் ஒரு நறுமணம்  மனிதர்களை கட்டிபோடுகிறது , அவர்களின்  இச்சைக்கு, தூண்டுகோலாக இருக்கிறது , அவர்களின் வாழ்க்கை வழியாக ஊடுருவி , அவர்களின் உயர்வு ,வீழ்ச்சிகளில் சாட்சியென , ஒரு ஓரமாக நின்று கமழ்ந்து கொண்டிருக்கிறது . 

பொதுவாக , குலதெய்வ வழிபாடு என்பது நம் மண்ணில் அதிமுக்கியமான ஒரு அங்கம். சிலருக்கு குலதெய்வம் தெரியவில்லையெனின்,  அல்லது  அந்த  தெய்வம் நம்மை கைவிட்டதெனில்,  தனது முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் ஒரு கைப்பிடி மண் எடுத்துவந்து துணியில் முடிச்சிட்டு வைத்தால், முன்னோர்கள் அல்லது ஏதேனும் ஒரு தெய்வம்  கனவில் வந்து குலதெய்வத்தை காட்டிக்கொடுக்கும் என்பது  இங்குள்ள  நடைமுறை.

சிக்மண்ட் பிராய்ட் ”கனவுகளின் விளக்கம் ” நூலில் நம் அகம், புறம் அனைத்தும் எப்படி கனவுக்குள் ஊடுருவுகிறது, நம்மை கடடமைக்கிறது என விரிவாக பேசுகிறார்.

இந்நாவலின்  அடிநாதமான ‘அத்தர் ”.  கரீம் எனும் வாசனை திரவியம் தயாரிக்கும் ஒருவருக்கு கனவில் தோன்றி ஒரு மெய்ஞ்ஞானி’பக்கீர்’  சொல்லும் மறைஞான விஷயம். என்றே சொல்லப்படுகிறது.  இந்த ஞானம் வழிவழியாக அவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது .  கிட்டத்தட்ட குலதெய்வ வழிபாட்டிற்கு இணையான ஒன்று.  ஆகவே அந்த தெய்வமே  இந்த குடும்பத்தை கைவிடுவது, என தீர்மானிக்கிறது. ஆண்வாரிசு பிறப்பதை நிறுத்துகிறது. கரீமை தீய வழி நோக்கி செலுத்துத்திறது, குடும்பத்தை பிரிகிறது. மறைந்து விடுகிறது. இந்த  மாபெரும் வளர்ச்சியிலிருந்து,  ஒரு கல்யாண பந்தலை சரிப்பது போல, சரித்து விடும், இந்த  ஆடலுக்கு முன் மனித அகங்காரம் , தன்முனைப்பு ,அறிவு,  என அனைத்தும் இடிந்து விழுந்து, மண் மூடி போவதை கரீமின் கதை என  நாவல் சொல்லிமுடிக்கிறது.

இதை அடுத்து சொல்லப்படும் கதை  தாய்,தந்தை இன்றி சித்தியால் வளர்க்கப்படும்  சகோதரர்கள் பத்ரகிரி ,திருச்சிற்றம்பலத்தின்  கதை, கணிதமேதை ராமானுஜம் போல உடல், உயிர், உள்ளுணர்வு, என அனைத்திலும் கணிதம் மட்டுமே ஊறிப்போன திருச்சிற்றம்பலம், இளம்மனைவியை அண்ணனின் பாதுகாப்பில் விட்டுவிட்டு , மேற்படிப்புக்கும் , ஆய்விற்கும்  லண்டன் செல்ல ,  உயிர்களின் அடிப்படை விசையான  ‘காமம்’ மொத்தமாக  இரண்டு குடும்பங்களின் வாழ்வை சிதைத்து போடுவதும் , முறையற்ற, எல்லையற்ற, காம நுகர்ச்சிக்கு ஆரம்பத்தில்  எவ்வளவு தான்  சமாதானமும், தன்னளவிலான நியாயங்களை, சொல்லிக்கொண்டாலும், விழைவுகள் அனைத்தும் இட்டுச்செல்வது மாபெரும் இருளை நோக்கி மட்டுமே. என்கிற புள்ளியில் அவர்கள் கதை முடிகிறது. இதில்  கணித மேதையின் கனவில் இரண்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது  ஒன்று அவன் காணும் ”கணித சூத்திரங்கள்” அதன் மூலம் மேற்குலகை வியப்பிற்கு உள்ளாக்குதல். இரண்டாவது  அவனுடைய தந்தையின் குரல் ” செத்துப் போறதோட எல்லாம் முடிஞ்சு போறதில்லடா” எனும் வரிகளில் இந்த பிரபஞ்ச ஆடலின்  தனிமனித ஜனன ,மரண தொடர்வரிசை சித்தத்தில் உறைகிறது. என்கிற இடத்தில எஸ் .ராவின் உள்ளிருந்து வேறு ஒரு குரல் ஒலித்துவிட்டு செல்கிறது .

அடுத்தது மத்திம வயதை கடந்து விட்ட, கிருஷ்ணப்பா ,  மற்றும் எலிசபெத்தின் கதை, தத்துவார்த்த கதைகளில் மேடை அலங்காரத்திக்காக சொல்லப்படும் கதை ஒன்று உண்டு.  ஒரு  பருந்து உணவை கவ்விக்கொண்டு பறக்க , அதை மற்ற பறவைகள் அனைத்தும் விரட்டி விரட்டி கொத்த, ஒரு கட்டத்தில் துன்பம் தாளாது, அலகில் கொத்தி இருக்கும் உணவை கீழே போடுகிறது , துரத்திய அனைத்து பறவைகளும்,அந்த இரையை நோக்கி பாய்கிறது, பருந்து நிம்மதியாக வானில் வட்டமிடுகிறது’ – இந்த கதை கிட்டத்தட்ட கிருஷ்ணப்பாவின் கதை,வெள்ளையர் காலத்திலேயே லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியான அவர்,பங்காளி சண்டையால் அலைக்கழிக்கப்பட்டு கோர்ட்,  வழக்கு, என தன் நிம்மதி அனைத்தயும் இழக்கிறார்,  அவருக்கு சொந்தமான காடும், மலையும்  ஒரே நாளில் அத்தனை இன்னல்களில் இருந்து அவரை விடுதலை கொள்ள செய்கிறது.

நாவலை படித்து முடித்தபின் தோன்றியது, நமது மரபு முன்வைக்கக்கூடிய அறம் , பொருள் , இன்பம், வீடு ,  எனும் நாலு நிலைகளின், பரிணாம வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி மிகக்கச்சிதமாக கையாளப்பட்டு இருக்கிறது.

நாவலின் நான்காவது கதை பண்டாரத்தின் கதை,  ஒரு நாயின் பின்னால் செல்வதை தன் ஆன்மீக பயணமாக , தேர்ந்த பின்,   அந்த நாய், பண்டாரத்தை அனைத்து கீழ்மைகளுக்கும் உள்ளாக்குகிறது,  சந்நியாசியாக இருந்தவனை  சம்சாரியாக மாற்றுகிறது , சம்சாரியானவனை மீண்டும்  சுழற்றி அடித்து சித்தனாக மாற்றுகிறது, பரிகசித்து சிரிக்கிறது,  அவன் வாழ்வின் அனைத்திலும் சாட்சியாக இருந்துவிட்டு, அவனையும் ஆன்ம நிலையை அடைய வைத்துவிட்டு மறைகிறது .

மேலே சொன்ன கதைகளில் , அறம் சார்ந்த உயர்வு மற்றும் வீழ்ச்சியை, பத்ரகிரி , திருச்சிற்றம்பலத்தின் கதையும் ,

பொருள் சார்ந்த உச்சங்களும் , வீழ்ச்சியும் , கரீமின், கதையிலும் ,

இன்பம் சார்ந்த உயர்வு,  தாழ்வு  கிருஷ்ணப்பாவின்  கதையிலும், வீடுபேறு அல்லது ஆன்மிக  உச்சங்கள் , அவலங்களை, பண்டாரத்தின் கதை  என  கச்சிதமாக  பொருந்தியிருக்கிறார், நாவலாசிரியர் .

நுகர்தலுக்கும் அதன் மூலமாக மூளையில் ஏற்படும் தூண்டுதலுக்குமென  செயல்படும் நரம்பு மண்டலம்  சற்றே பழுதடைந்தாலும்,  ஒரு மனிதருக்கு முதலில் ஏற்படுவது , ”உணவில் ருசியின்மை, எதையும் உட்கொள்வதற்கான நாட்டமின்மை”  என்கிறது நரம்பியல்.

எனில் நுகர்தல் என்பதே இங்குள்ள வாழும் ஆசைகள்  அனைத்திற்கும் அடிப்படை, தாகத்திற்கு பருகும் நீரில் கூட நாம் அப்படியான ருசி-{வாசனை}  ஒன்றை நாக்கின் அடியில் தேடுகிறோம் .  நாவலில் வரும் ‘அத்தர்’  வெறும் வாசனை திரவியம் மட்டுமல்ல, காமத்தில் பெண் உடலில் ஆணுக்கும் , ஆண் மீது பெண் பொழிவதும். சூதாட்டத்தில் செல்வம் என கொட்டுவதும் , நஷ்டத்தில் துன்பம் என எழுவதும், வாசனையான அத்தரின் பல்வேறு வடிவங்களே.

எனெனில் வாசனை என்பது நம்மை நிலத்துடன் , காற்றுடன் பிணைத்து வைத்துள்ளது, நீங்கள் கையில் வைத்திருக்கும்  பாட்டில், தரையில் கொட்டி வாசனை என பரவுகையில் தான் தெரிகிறது, அது அத்தர் என்றும் மூத்திரம் என்றும். நம்மை அவை மண்ணில் பிணைப்பவை , வெறுப்பும் விருப்பம் கொள்ள வைப்பவை.

இரவில் அதன் அடர்த்தி இன்னும் அதிகமாகிறது . இந்த நாவலை போல

***

0Shares
0