யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை.


பள்ளிப்பாடப்புத்தகங்களில் பலரும் படித்து மறந்து போன  நூறு பெயர்களில் ஒன்று யுவான் சுவாங். சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி. பருத்து வீங்கிய கழுத்து, வட்டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடலமைப்பு கொண்ட யுவான்சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் யுவான்சுவாங் பற்றிய அறிவு ஐந்து மார்க் கேள்விக்கான விடை மட்டுமே.
ஆனால் இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளத் துவங்கிய போது எளிதில் கடந்து போய்விட முடியாத ஆளுமை யுவான் சுவாங் என்பதை உணர்ந்தேன்.. பண்டைய இந்தியாவின் சித்திரத்தை அவரது எழுத்துக்களின் வழியாக நுட்பமாக அறிந்து கொள்ள முடிகிறது. யுவான்சுவாங் இந்தியாவின் கடந்த கால வாழ்வை, கலாச்சாரத்தை, அறிவை நுண்மையாக புரிந்து கொண்டு பதிவு செய்திருக்கிறார்.

நாடு பிடிக்கும் ஆசையில் ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்டு தனது அதிகாரத்தையும் பொருளாசையும் வெளிப்படுத்திக் கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்ற சாகசபயணிகளைப் போலின்றி அறிவைத் தேடி பல்லாயிரம் மைல் தனியே பயணம் செய்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்த புத்த துறவி யுவான் சுவாங்.

தனது வாழ்நாளில் பதினேழு வருடங்கள் அவர் பயணத்திலே கழித்திருக்கிறார். கழுதையிலும் ஒட்டகங்களிலும் மட்டக்குதிரையிலும் கால்நடையாக நடந்தும் இவர் கடந்து வந்த துரம் இருபதாயிரம் மைல்களுக்கும் மேல் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான்சுவாங்கின் பதின்வயதில் வேர் விடத் துவங்கியது.

யுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்று கொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர் . யுவான் சுவாங்கின் சகோதரர்களும் பௌத்த துறவிகளாகயிருந்தார்கள் ஆகவே தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலே அவருக்கு அறிமுகமானது.

தனது பனிரெண்டாவது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கபட்ட யுவான் சுவாங் அங்கே பௌத்த சாரமும் கன்ப்யூசியசின் சிந்தனைகளும் கற்றார். அதன் பிறகு அவர் பௌத்த அறிவுகளஞ்சியம் என்று அழைக்கபடும் தி கிரேட் லேனிர்ங் டெம்பிள் மடாலயத்திற்கு அனுப்பட்டார். இந்த மடாலயத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட துறவிகளிருந்தார்கள். அவர்களது முக்கிய பணி பௌத்த ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.

அந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவிலிருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்த துறவிகள் தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காக அர்பணம் செய்திருந்தார்கள்.

பௌத்த சமயச் சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழி பெயர்க்கபட்டப் பிரதிகளை மூத்த துறவிகள் அதை இருமுறை திருத்தம் செய்து பார்ப்பார்கள். பின்பு அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலபிரதியோடு வார்த்தை வார்த்தையாக ஒப்பீடு செய்யப்படும்.

முழுமையாக திருத்தம் செய்து ஏற்றுக் கொள்ளபட்ட பிறகு அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக நாற்பது துறவிகள் வேலை செய்தார்கள். அவர்கள் ஏடுகளை பிரதி எடுத்து சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இப்படி தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்ற துவங்கிய யுவான் சுவாங் இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் துவங்கினார்.

இதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழி பெயர்க்க முடிந்தது.

629 ம் ஆண்டு மடாலயத்தில் தங்கியிருந்த ஒரு இரவு இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் அருகில் தான் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாக யுவான்சுவாங்கிற்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாக புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை கண்டு கொண்டார் யுவான் சுஹ்ங்.

ஆகவே இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு பகவான் புத்தர் பிறந்த இடத்தை கண்டு வர வேண்டும் என்பதோடு இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவிற்கு கொண்டு வர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவை சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் யுவான் சுஹ்ங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்..

ஆனால் அந்த நாட்களில் தாங் அரசு யுத்தத்தைச் சந்தித்து கொண்டிருந்த காரணத்தால் எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ, உள்ளே வருவதற்கோ அனுமதிக்க படவில்லை. சூழலைப் பொருட்படுத்தாமல் யுவான் சுவாங் தன்னுடைய அடையாளத்தை மாற்றியபடியே குதிரையில் பயணம் செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தியாவிற்கு செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாக பிரித்துக் கொண்டார்.

மேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடியே துவங்கிய அவரது பயணம் எண்ணிக்கையற்ற பிரச்சனைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும் வழிப்பறியும் பசியும் நோயும் அவரை தாக்கியது. ஆனாலும் அவர் தன் கனவின் பாதையில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டபடியே இருந்தார்

சீனாவி்ன் எல்லையைக் கடக்கும் போது அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யபட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டு போய் சேர்த்து விடும் படியாக ராணுவ அதிகாரி கட்டளையிட்டதும் அப்படி தன்னை செய்வதாக இருந்தால் அந்த இடத்திலே தான் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து போவேன் என்று யுவான்சுவாங் அறிவித்ததோடு தனது கத்தியை கையில் எடுத்துக் கொண்டார்.

அவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தனர். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தை கடக்க முயன்ற போது வெயிலும் தாகமும வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்து போன யுவான் சுவாங் இந்தப் பாலைவனத்திலே தான் இறந்து போய்விடக்கூடும் என்று நம்பினார். இனி தனது முயற்சியால் எதுவும் நடக்க போவதில்லை என்று உணர்ந்தவராக தன்னை குதிரையோடு சேர்த்து கட்டிக் கொண்டார்.

குதிரை பாலைவனத்தில் தனது போக்கில் நடக்கத் துவங்கியது. எந்த திசையில் செல்கிறது என்று தெரியவில்லை . ஆனால் குதிரை வழி தன் கண்ணில் தெரிவது போல சீராக போய் கொண்டேயிருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் கண்விழித்த போது தன் எதிரில் பெரிய பாலைவன சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர் பொய்கையும் இருப்பதையும் கண்டார்.

அவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஒடிப்போய் தண்ணீரை அள்ளியள்ளி குடித்தார். அங்கே விளைந்திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரை தன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளது என்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான்சுவாங் அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்தியதோடு முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நகருக்கு வந்து சேர்ந்தார்.

அந்த நாட்டின் அரசர் புத்த துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரைத் தேடிச் சென்றார். அரசரும் யுவான்சுவாங்கின் அறிவுச் செல்வத்தை கண்டு வியந்து தனது ஆஸ்தான குருவாக தன்னோடு வைத்துக் கொண்டார். ஒரு ஆண்டுகாலம் அங்கே கழித்த யுவான் சுவாங் தனது இந்திய பயணத்திற்கு தயரானா போது அரசர் அனுமதி தர மறுத்தார்.

தன்னை இந்திய பயணத்திற்கு அனுமதிக்காவிட்டால் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் துவங்கிய பிறகு அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப்பிரதி என்று முத்திரை ஒலையும் பாதுகாப்பிற்காக ஆட்களும் வழியில் தேவைப்படும் பொருள்களையும் தந்து அனுப்பி வைத்தார்.

ஆனால் ஒரு பள்ளதாக்கினைக் கடந்து செல்லும் போது அவரை யாரோ ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்து கொள்ளைகாரர்கள் வழிமறித்து தாக்கி காவலர்களை கொன்று அவரது உடைமை பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி ஆளாக விடப்பட்ட அவர் அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்

வழி முழுவதும் பௌத்த மடாலயலங்களில் தங்கியும் சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கை முறை கலாச்சாரச் செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதி கொண்ட யுவான் சுவாங் வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் துவங்கினார்.

இந்தியாவில் அவர் காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி பனாரஸ்,வைசாலி, கனோஜ் என்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கி பௌத்த ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக யுவான்சுவாங் நாலந்தா பல்கலைகழகத்திற்குச் சென்று தனது விருப்பத்தினை தெரிவித்தவுடன் அங்கேயே தங்கிக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் அனுமதித்தார்கள்.

யுவான்சுவாங் நாலந்தாவில் யோகசாஸ்திரங்களை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த நாட்களில் நாலந்தா பல்கலைகழகத்தில் பத்தாயிரம் மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தார்கள். அங்கே 18 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயிற்று விக்கபட்டார்கள். இதற்காக 1541 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். இந்தப் பல்கலைகழகத்திற்கு தேவையான வருமானத்திற்காக  நூறு   கிராமங்கள் வழங்கபட்டிருந்தன. அத்தோடு இருநூறு வீடுகளில் இருந்து தினமும் பாலும் தேவையான பழங்களும் தானமாகத் தரப்பட்டு வந்தன .

அங்கேயே தங்கியிருந்து மகாயான பௌத்த சாரங்களை முழுமையாகக் கற்று அறிந்தார். அதன் பிறகு அங்கிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்த யுவான் சுவாங் இங்கிருந்த பௌத்த பல்கலைகழகத்தில் தங்கி சிறப்புரையாற்றியிருக்கிறார். பிறகு இங்கிருந்தும் புறப்பட்டு இலங்கைக்குச் சென்றார் என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.

இந்தியாவில் புத்தர் பிறந்த இடமான லும்பினியில் இருந்து புத்தர் மெய்ஞானம் பெற்ற கயா வரையுள்ள எல்லா பௌத்த ஸ்தலங்களையும் நேடியாக பார்வையிட்ட யுவான் சுவாங் அதைப் பற்றி விரிவான குறிப்புகளாக பதிவு செய்தார்.

பதினேழு வருடங்களுக்கு பிறகு நாடு திரும்ப அவர் முடிவு செய்த போது அவரோடு இருபது குதிரைகளில் 657 தொகுதிகளாக்கபட்ட 520 பௌத்தப் பிரதிகள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள். 192 தொகுதிகள் தர்க்க சாஸ்திரங்கள்.

இந்தியாவிற்குள் வரும் போது சந்தித்த பிரச்சனைகளை விடவும் சீனாவிற்குத் திரும்பிச் செல்வதற்கான பயணம் மிகுந்த போராட்டமாக அமைந்தது. முடிவில் அவர் சீனா சென்று சேர்ந்து தனது சேகரிப்பு அத்தனையும் ஒன்று சேர்ந்து அறிவாலயம் ஒன்றை உருவாக்கினார்..

சீன மாமன்னர் யுவான் சுவாங்கின் பயணத்தைப் பாராட்டி அவர் கொண்டு வந்த நூல்கள் அத்தனையும் சீன மொழியில் மொழியாக்கம் செய்தவற்காக சிறப்பு நிதி உதவி அளித்துஉதவி செய்தார்.

இந்த அறிவாலயத்தில் இளந்துறவிகள் பலரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிகளை சீன மொழியில் மொழிபெயர்ப்பு செய்தனர். யுவான் சுவாங் தனிநபராக 74 புத்தங்களின் 1335 அத்யாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அது மட்டுமின்றி நான்கு தொகுதிகளாக தனது நினைவுகுறிப்புகளையும் எழுதியிருக்கிறார். அந்த நினைவு குறிப்புகளின் வழியாக பண்டைய இந்தியாவின் அறிவியல், வானவியல் கணிதம் விவசாயம் கலைகள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.

குப்தர்கால இந்தியாவில் இருந்த சாதிய முறைகள் பற்றியும் அன்றைய பௌத்த மதப் பிரிவுகள் மற்றும் இந்து மத சடங்குகள், கோட்பாடுகள் பற்றியும் யுவான்சுவான் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

664 ஆண்டு மார்ச் 10 நாள் தனக்கு விருப்பமான பௌத்த சூத்திரம் ஒன்றை மொழியாக்கம் செய்து முடித்துவிட்டு கடந்து போன தனது பயண நாட்களைப் பற்றிய கனவுகளுடன் உறக்கத்திற்கு சென்ற யுவான் சுவாங் அப்படியே இறந்தும் போனார். இன்றும் அவரது அறிவாலயம் சீனாவில் முக்கிய பௌத்த காப்பகமாக உள்ளது.

நுற்றாண்டுகளைக் கடந்து யுவான் சுவாங்கின் சாகசபயணம் தொடர்ந்து நாட்டார்கதை போல மக்களால் திரும்பத் திரும்ப சொல்லபட்டு எண்ணிக்கையற்ற கிளைக்கதைகள் கொண்டதாகி விட்டது. சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி தொடராக எடுக்கபட்ட யுவான் சுவாங்கின் வாழ்க்கை கதையில் மாயம் செய்யும் குரங்களும் டிராகன்களும் அவருக்கு உதவி செய்வதற்காக புத்தரால் அனுப்பட்டன என்று கதை விரிகிறது. யுவான் சுவாங்கின் வாழ்வைச் சுற்றிலும் புனைவு தன் நெசவை நுட்படமாக நெய்து விட்டிருக்கிறது.

இன்றும் பௌத்த யோக சூத்திரங்களைப் பற்றி ஆராயும் அனைவரும் யுவான்சுவாங்கின் ஞானத்தையும் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ள புத்தங்களையும் மிக உயர்வாகவே மதிப்பிடுகிறார்கள்.

ரிச்சர்டு பெர்ன்ஸ்டைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்ப பயணம் செய்து தி அல்டிமேட் ஜர்னி என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதில் யுவான் சுவாங் தன் எழுத்தில் பதிவு செய்து வைத்துள்ள ஆப்கானில் உள்ள பிரம்மாண்டமான பௌத்த சிலைகள் தாலிபான்களால் இன்று எப்படி உடைத்து சிதைக்கபட்டுள்ளன என்பதை விவரிக்கிறார்

அன்று எவ்விதமான வரைபடமும் வாகனமும் இன்று யுவான் சுவாங்கால் சுதந்திரமாக பயணம் செய்ய முடிந்திருக்கிறது. இன்று எல்லா வசதியிருந்தும் பாதுகாப்பாக எவரும் ஆப்கானிற்குள் பயணம் செய்ய முடியவில்லை. அன்று ஆற்றைக் கடப்பதற்கு பாலம் இல்லாமல் பல மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது இன்று உறுதியான இரும்புப் பாலமிருக்கிறது. ஆனால் கடந்து போக அரசு அனுமதி மறுக்கபடுவதால் பல வருடம் காத்து இருக்க வேண்டியிருக்கிறது என்று தனது நூலை முடிக்கிறார்


காலம் காட்டும் உண்மை இப்படிதானிருக்கிறது.

0Shares
0