ரகுராஜ்பூர் போயிருந்தேன்

ஒதிஷா மாநிலத்திலுள்ள சிறு கிராமம் ரகுராஜ்பூர், பூரியிலிருந்து சந்தன்பூர் வழியாக இருபது நிமிச பயணத்திலுள்ளது,

கிராமம் முழுவதும் ஒவியக்கலைஞர்கள் வாழ்கிறார்கள், சென்னையில் நவீன ஒவியர்களுக்கென உள்ள சோழமண்டலம் கடற்கரைகிராமத்தை கண்டிருக்கிறேன்,  இது பராம்பரியக் கலைஞர்களின் வசிப்பிடம்,

ஒடிசி நடனத்தின் தாய்வீடு இக்கிராமமே. ஒடிசி நடனக்கலைக்கு உலகப்புகழ் தேடி தந்த கேளுசரண் மொகபத்ராவின் ஊரிது, அவரது வீட்டிற்குப் போயிருந்தேன், சின்னசிறிய வீடது, முகப்பில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்,

பார்வை குறைந்த அவரது துணைவியார் வரவேற்று ஆசிர்வாதம் செய்து கொட்டிபுவா என்ற அரிய நடன நிகழ்வு ஒன்றினை காணுவதற்கு ஏற்பாடு செய்தார்,

கொட்டிபுவா தான் ஒடிசி நடனத்தின் முன்னோடி என்கிறார்கள், பதினான்கு வயதுக்கு உட்பட்ட பையன்கள் முறையாகப் பயிற்சி கொடுக்கப்பட்டுப் பெண் வேஷமணிந்து ஆடுகிறார்கள், நளினமும், துள்ளலும் நிரம்பிய நடனமது, இந்த நடனக்குழு பல்வேறு உலகக் கலைவிழாக்களில் பங்கேற்றிருக்கிறார்கள்,

ரகுராஜ்பூருக்குள் நுழையும் போது பத்தொன்பதாம் நூற்றாண்டு கிராம்ம் ஒன்றுக்குள் போவது போன்றேயிருக்கிறது, அழகான தாமரை குளம், நீண்டுசெல்லும் வீதிகள், நடுவில் சிறிய கோவில், நிறையத் தென்னை, மா, பலாமரங்கள், வெயில்படாத வீடுகள், ஒரு திறந்த வெளி ம்யூசியத்திற்குள் நுழைவது போன்று எங்குப் பார்த்தாலும் ஒவியக்காட்சிகள்,

குறிப்பாகக் கிராமத்தின் நுழைவாயிலில் துவங்கி எல்லா வீடுகளின் முகப்பிலும் சுவர்களிலும் அழகிய ஒவியங்கள் ஒளிர்கின்றன, படச்சித்ரா எனும ஒவியவகைக்குப் புகழ்பெற்றது ரகுராஜ்பூர், துணியில் அல்லது பனையோலையில் நீண்ட காட்சிகளை ஒவியமாக வரைவதே படச்சித்ரா எனப்படுகிறது, நீண்ட சுவரோவியமரபின் பாதிப்பில் உருவாக்கப்பட்டதே படச்சித்ரா, பூரி ஜெகனாதரின் லீலைகளையும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் முதன்மைபடுத்தி இயற்கையான வண்ணத்தில் ஒவியங்கள் வரைகிறார்கள்,

இன்று வரையப்படும் படச்சித்ரா ஒவியங்களும் உருவங்கள் அதே பராம்பரிய முறையில் தான் வரையப்படுகிறார்கள்,ஒரே வேறுபாடு உடைகளில் மொகலாய ஒவியமரபின் சாயல்களை அதிகமாகக் காணமுடிகிறது என்பதே, இந்த ஒவியத்தை ஒருவர் தனித்து உட்கார்ந்து தீட்டுவதில்லை, குடும்பமே இணைந்து வேலை செய்கிறார்கள், குறிப்பாகப் பெண்கள் தான் கோட்டு ஒவியத்திற்கு வண்ணம் தீட்டுகிறார்கள், ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள், அடர்நீலம் ஆகிய நிறங்கள் தான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன

அத்தோடு கலை நேர்த்திமிக்கச் சிற்பங்கள், காகிதமுகமூடிகள், மரச்சிற்பங்கள், செதுக்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் எனப் பல்வேறு கலைப்பொருட்களைத் தயாரிக்கிறார்கள், ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒரு கலைஞர் வேலை செய்து கொண்டிருக்கிறார்,

ஒவியங்களின் அடர்ந்த வண்ணமும், கோடுகளின் உன்மத்த வேகமும்வியக்க வைக்கின்றன, பராம்பரிய முறையும் நவீன வெளிப்பாடும் கொண்ட ஒவியங்கள் இவை, கிருஷ்ணன் ராதை பற்றிய ஒவியங்கள் மட்டுமில்லாது இயேசுவின் வாழ்க்கையும் கூடப் படச்சித்ராவில் வரையப்பட்டிருக்கிறது

தலைமுறை தலைமுறையாகக் கலைஞர்கள் வாழுகின்ற ஊர் என்பதால் நிறைய வெளிநாட்டு பயணிகளைக் காண முடிகிறது, ஊரின் முகப்பிலே ஒரு கலைக்கூடம் அமைத்து முக்கிய ஒவியங்களைக் காட்சிபடுத்தியிருக்கிறார்கள், அத்தோடு கலைநிகழ்ச்சிகள் நடத்தவும், தங்கி ஒவியம் பயிலவும் அங்கே வசதி செய்துதரப்பட்டுள்ளன்

ரகுராஜ்பூரில் லலித் கலா அகாதமி, சங்கீத நாடக அகாதமி பரிசு பெற்றவர்கள், பத்மஸ்ரீபட்டம் பெற்றவர்கள்  நிறைய இருக்கிறார்கள், ஆகவே முதியவர்கள் எவரை சந்தித்தாலும்  ஒரு விருதைக் காட்டுகிறார்,

வரிசை வரிசையாக ஒவியக்கூடங்களைப் பார்த்துப் போவது போல ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவியங்களையும் பார்த்து முடிப்பதற்கு நான்கு மணி நேரமாகி விட்டது, எல்லா வீட்டு திண்ணையிலும் ஒவியங்களும், கலைப்பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன,

யுனெஸ்கோவினால் ஒரு முழுமையான கலைகிராமமாக அங்கீகரிக்கபட்டுள்ள இந்தச் சிறிய ஊர் நீண்ட நெடிய கலைவரலாறு கொண்டது,

ஒருவீட்டில் முதியவர் ஒருவர் படம் வரைவதை பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் ஒரு மானை வரைந்து கொண்டிருந்தார், கோடுகளின் மீது வண்ணத்தை அவர் உபயோகிக்கும் வேகம், ஒடும் மானின் வேகத்தை ஒவியத்தில் கொண்டுவர அவர் முயற்சிக்கும் சிறு திருத்தங்கள், மானின் கண்களைத் திருத்தமாக எழுதிவிட்டு அவர் என்னைப் பார்த்து புன்சிரிப்புடன் எப்படி எனக் கண்ஜாடையிலே கேட்டார், சிறப்பாக இருக்கிறது எனத் தலையாட்டினேன்,

அவர் சிரித்தபடியே ஒரு துண்டு காகித்த்தை எடுத்து அதில் தூரிகையால் மேலும் கீழும் கோடுகளைப் போட்டு என்னிடம் கொடுத்தார், கையில் வாங்கிப் பார்த்தேன், அதே மான், அச்சு மாறாமல் அப்படியே வரையப்பட்டிருந்த்து, வைத்துக் கொள்ளுங்கள் எனச் சிரித்தார்,

அப்போது தான் கவனித்தேன், ஒவியத்தில் அவர் தனது பெயரை எழுதவில்லை, மாறாக முத்திரை போல அடையாளம் ஒன்றை பதித்திருக்கிறார், அதே முத்திரை அடையாளம் தான் படச்சித்ராவிலும் இருந்தது, தனது அடையாளத்தையும் ஒரு கலையாகவே வெளிப்படுத்தும் அவர்களது திறனை வியந்தபடியே ஊரைப்பிரிந்து வந்தேன்

•••

0Shares
0